சிங்கப்பூரில் தமிழ் தமிழர்

சிங்கப்பூரில் தமிழ் தமிழர்



புத்தகங்கள் அறிவின் வாசல்களைத் திறக்கும் காலக் கண்ணாடிகள். அவற்றின் ஒவ்வொரு வார்த்தைகளும் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை எடுத்து வைக்கும் உயிர் பிம்பங்கள். பிரபல எழுத்தாளர்களின், தனித்துவம் கொண்ட படைப்பாளிகளின் படைப்புகள் எல்லாம் அவர்களின் வாழ்வனுபவத்தை ஜீரணித்து வாசகர்களின் மனக் கண்ணில் பரவசத்தை மட்டுமல்ல, வாழ்வையும் கற்றுத் தருகின்றன.

ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு மலர் என்றால், அவற்றை நந்தவனமாக்குவது பதிப்பகங்கள். இன்று ஒவ்வொரு நொடியிலும், உலகின் எல்லா மூலைகளிலும் புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன; அவற்றின் தளங்கள் வெவ்வேறு அடுக்குகளில் வாசகனை மயங்க வைக்கின்றன. கதை, கவிதை, நாவல், கட்டுரைகள், நாடகங்கள் என முன் வைத்த புத்தகங்களின் பரப்பளவு இன்று இன்னும் இன்னும் பல்வேறு துறைகளிலும் விரிந்து கொண்டிருக்கின்றன.

சமயம், பக்தி, ஆன்மிகம், நாத்திகம், தொழில்நுட்பம், வணிகம், பங்குச்சந்தை, மருத்துவம், விவசாயம், தொழில், கம்ப்யூட்டர், விஞ்ஞானம், ஃபேஷன்... ஏன் சமையல் கலை, திரைப்படக் கலை, ஊடகம், காமிக்ஸ், கார்ட்டூன், சுட்டிகள் உலகம் என விஸ்தரித்துக் கொண்டே இருக்கின்றன பதிப்பகங்களின் உலகம். மாபெரும் இந்த முகத்தின் ஒரு சாயல்தான் குமுதம் குழுமத்தின் ‘குமுதம் பப்ளிகேஷன்’!

முதல் அடியில் தவழும் எம் பதிப்பகம் விரைவில் தளிர் நடை தாண்டி பெரும் பாய்ச்சலில் பறக்கும். படைப்பாளிகளின் ஒத்துழைப்பும் வாசகர்களின் கனிவான ஆதரவும் இந்தப் பாய்ச்சலுக்கு உதவவேண்டும்; நிச்சயம் உதவுவீர்கள். இதுதான் எமது நம்பிக்கை. கனவு.

மனமுவந்து எழுத்தாளர்களும், வாசகர்களும் கைகோர்த்தால் உலகம் சின்னத் துளிதானே !

- பா. வரதராசன்
பதிப்பாசிரியர்
சேர்மன் மற்றும்
நிர்வாக இயக்குநர், குமுதம்.

ஆதியிலிருந்தே சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருந்து வருவது ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. ஆக, சிங்கப்பூரில் தமிழ் என்பது ஒரு கடல். சிங்கப்பூரில் தமிழ், தமிழர் எனும் இந்தப் புத்தகம் அதில் ஒரு சிறு துளி.

நான் சிங்கப்பூரில் பார்த்தவற்றை, கேட்டவற்றை, ஒரு தமிழ்ப் பெண்ணாக, என்னுடைய அனுபவங்களை, குமுதம் 'தீராநதி' வாசகர்களுக்காக ஏப்ரல் 2010 முதல் டிசம்பர் 2010 வரை, தொடர் கட்டுரையாகச் 'சிங்கப்பூரில் தமிழ், தமிழர்' என்ற தலைப்பில் எழுதினேன்.

சிங்கப்பூரில் தமிழ் பற்றி எடுத்துக்காற தகவல்கள் ஏராளம் உள்ளன. சிங்கப்பூரில் சாதனை படைத்த தமிழ் அரசியல் வாதிகள் முதல் சான்றோர்கள் வரை இந்தப் புத்தகத்தில் தனிப்பட்ட முறையில் இடம்பெறவில்லை. திரு.கோ.சாரங்கபாணியின் தமிழுக்கான அரிய சேவையைப் பற்றி மட்டுமே ஒரு தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் விட்டுப்போன தகவல்களையும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் எடுத்துக் கூறினால் மறுபதிப்பில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். எல்லா தகவல்களையும் ஒரே புத்தகத்தில் அடக்கிவிட முடியாது. ஆக இது என் முயற்சியின் முதல்படிதான்.

இந்தக் கட்டுரைகளில் அவர்களுடைய கருத்துக்களையும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் கூறிய முனைவர் திரு. சுப. திண்ணப்பன், முனைவர் ஏ.ஆர்.எ.சிவகுமாரன், திரு. அமலதாசன், திருமதி மீனாட்சி சபாபதி, திரு. இலியாஸ், திரு செ.ப.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.

பல வருடங்களாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் திரு இராம. கண்ணபிரான் அவர்கள், பலமுறை இந்தக் கட்டுரைத் தொடரை வாசித்து திருத்தங்கள் செய்து என்னுடன் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதை இங்கு குறிப்பிட வேண்டும். சிறந்த புத்தகமாக செப்பனிடுவதற்கு அவர் அளித்த ஆதரவு எனக்கு மிகவும் ஊக்கமளித்தது. அவருக்கும் என்னுடைய நன்றி!

இந்த அரிய வாய்ப்பை நல்கி, புத்தகமாக கொண்டு வர இசைந்த ‘குமுதம்’ நிர்வாகத்தினருக்கும், குமுதம் நிறுவன சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. பா. வரதராசன் அவர்களுக்கும், ‘தீராநதி’ ஆசிரியர் முனைவர் இரா. மணிகண்டன் அவர்களுக்கும் என் நன்றி! நான் எழுதத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் என் குடும்பத்தினருக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் என்னுடைய நன்றி.

திருமதி சௌந்திர நாயகி வயிரவன்,

E-Mail - vairavan@singnet.com.sg

8.1.2012, சிங்கப்பூர்.

தூய்மை, பசுமை, விண்ணை முட்டும் கட்டடங்கள், தூங்காத்துறைமுகம், நவீனத்தின் அடையாளங்கள், அமைதியான மக்கள், எங்கும் எதிலும் ஒழுங்கு. அரசாங்கத்தை மதிக்கும் மக்கள், மக்களை மதிக்கும் அரசாங்கம். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்தால், அதுதான் தென்கிழக்காசியாவில் அமையப்பெற்றுள்ள நவநாகரிக நாடான சிங்கப்பூர்.

தமிழ்மொழி எதிர்காலத்தில் அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் தமிழ் மொழியை வாழ வைக்கவும், மக்களை நடைமுறையில் தமிழைப் பேச வைக்கவும் சான்றோர்கள் பலர் முயற்சிகள் எடுத்துவரும் வேளையில், சிங்கப்பூரில் விண்ணிலும் (விமானம்), மண்ணிலும் (நாடாளுமன்றம்) தமிழைக் கேட்கமுடிகிறது என்றால், அது ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமை.

சிங்கப்பூரில் கடைகள், அரசாங்க அறிவிப்புகள், சிங்கப்பூர் நாணயம், பொது இடங்களில் தமிழில் எழுதியிருப்பதை நாம் காணலாம். அதற்குக் காரணம், சிங்கப்பூரின் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று.

ஆதியிலேயே ஏற்பட்ட உறவு

சிங்கப்பூரின் வரலாற்றை நாம் பார்த்தால், கி.பி. 33ஆம் நூற்றாண்டிலேயே சிங்கப்பூர் இருந்ததற்கான செய்திகள் சீன நூல்களில் உள்ளன. 133ஆம் நூற்றாண்டில் இத்தீவிற்கு வந்த ஒரு அண்டை நாட்டு இராஜகுமாரர், ஒரு சிங்கம் போன்ற உருவத்தைப் பார்த்தார். ஆதலால் இத்தீவிற்குச் சிங்கப்பூர் எனப் பெயர் வந்தது எனவும் நாம் அறிகிறோம்.

மேலும், செஜராமலாயு எனும் மலாய வரலாற்று தொகுப்பு நூல் சிங்கப்பூர் நாட்டைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ‘சங்கநீல உத்தமா’ எனும் இராஜகுமாரர் இராஜராஜ சோழனின் மகன் எனக் கூறுகிறது.

உலகில் பழமை மொழியான தமிழின் காப்பியமான சிலப்பதிகாரத்தில் ‘சிங்கப்புரம்’ எனும் சொல் வடஇந்தியாவில் உள்ள ஒரு நகரத்தைக் குறிப்பதாகவும், அந்தச் சொல்லுக்கும் சிங்கப்பூருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை என்று

ஒரு கட்டுரையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்கள் கூறுகிறார். இந்தியா சிங்கப்பூருடன் வாணிபம், சமயம் இவற்றைச் சார்ந்து தொடர்பு கொண்டிருந்ததை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விக்கிப்பிடியா இணையதளம் ஸ்ரீவிஜயா, மஜாபாஹித் போன்ற இந்திய மரபில் வந்த மன்னர்கள் சிங்கப்பூரை ஆண்டதாகத் தெரிவிக்கிறது.

இஸ்லாமிய மதம் பரவுவதற்கு முன்னர், சிங்கப்பூர் மற்றும் மலாயாவில், ஹிந்து மற்றும் புத்த மதத்தின் செல்வாக்கே இருந்தது எனவும், தொல்பொருள் ஆய்வுகளில் ஹிந்து மற்றும் புத்த மதம் சார்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டற்கான ஆதாரங்களும் உள்ளன எனவும் அந்த இணையதளம் மேலும் தெரிவிக்கிறது.

சிங்கப்பூரில் 'சிங்கப்பூர் கல்' தொல்பொருள் ஆய்விற்கான மிக முக்கிய ஆதாரம். அதில் இந்திய எழுத்துக்கள் அந்தக் காலத்திலேயே இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்தியர் மற்றும் தமிழர்களின் வருகை

1819ஆம் ஆண்டு சர் ஸ்டம்ஃப்பர்ட்ஸ் ராஃபிள்ஸ் எனும் ஆங்கிலேய அதிகாரி கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியதன் விளைவாக நவீன சிங்கப்பூர் உருவாயிற்று.

இவர்களில், முதன் முதலில் நாராயணப்பிள்ளை என்ற தமிழரும் வந்ததாக வரலாறு கூறுகிறது.

முதன் முதலில் சர் ஸ்டம்ஃப்பர்ட்ஸ் ராஃபிள்ஸ் இங்கு வந்தபொழுது, அவருடன் 1203 இந்திய இராணுவத்தினரும் வந்ததாக திரு.கே.எஸ்.சாந்து கூறுகிறார்.

தமிழகத்தின் அனேக பகுதியிலிருந்து பல சமுதாயத்தினர் சிங்கப்பூருக்கு அந்தக் காலத்திலேயே வந்திருந்து, மற்ற இனத்தவரைப் போல சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கு இவர்களும், பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றனர். இருப்பினும் ஆய்வுகள் மூலம், எளிதாக சில சமூகத்தினரின் வருகையை தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிட முடிகிறது.

சிங்கப்பூரில் 1824ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் மக்கள் கணக்கெடுப்பின்படி 756 இந்தியர்கள் இருந்திருக்கின்றனர்.

'நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு' என்ற புத்தகத்தை எழுதிய திரு.அ.ராமநாதன் செட்டியார், தமிழகத்தின் ஒரு சமூகமான நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாணிபம் செய்வதற்காக 18242ஆம் ஆண்டு பாய்மரக்கப்பலில் பினாங்கிற்கும், அதைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கும் வந்ததாகக் கூறுகிறார். இவர்கள் சிங்கப்பூரின் மையப்பகுதியான 'மார்க்கெட் ஸ்த்ரீட்டில்' தொழில் தொடங்கி நடத்தியுள்ளனர்.

தமிழ் முஸ்லீம் சமூகத்தினர் 19ஆம் நூற்றாண்டில் சிராங்கூன் ரோடு பகுதிகளில் சொந்தத் தொழில் நிறுவனங்கள் நடத்தியுள்ளனர். இவர்கள் சிறிய கடைகளைக் குடும்பத் தொழிலாக நடத்தியதோடு, வியாபாரமும் செய்ததாக இணையதளங்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலப் புலமை வாய்ந்த இலங்கைத் தமிழர்கள் அரசாங்க வேலைகளில் வேலை செய்வதற்கு வந்ததாகவும் திரு. கே.எஸ்.சந்து கூறுகிறார். (p 782)

குற்றஞ்சாட்டப் பெற்ற இந்தியக் குற்றவாளிகளின் முதற் குழு சுாத்ராவிலிருந்து, சிங்கப்பூருக்கு 1825ஆம் ஆண்டு வந்ததாக திரு.கே.எஸ்.சந்து தெரிவிக்கிறார். பலர் இந்தியாவிலிருந்து நேரடியாக வந்துள்ளனர். இப்படி வந்தவர்கள் தங்களுடைய தண்டனைக் காலங்களில் பொதுப்பணித் துறைகளிலும், மற்ற துறைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர் (p 774,775)

தமிழ்நாட்டுடன் சிங்கப்பூருக்கு அதிகத் தொடர்பு இருந்ததாக ஓர் ஆய்வு தெரிவிப்பதால், இப்படி வந்த இந்தியர்களில் அதிகமானோர் தமிழர்களாக இருந்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

ஆக, 1980-ல் சிங்கப்பூரில் வசித்த இந்தியர்களில் 62% தமிழர்கள். (p 777)

தமிழர்கள் சிங்கப்பூர் வந்ததற்கான காரணம்

சிங்கப்பூர் அந்தக் காலத்தில் சொர்க்க பூமியாகக் கருதப்பட்டது. நல்ல வேகமாக வளர்ச்சியடையும் சாத்தியக் கூறுகள் அதிகம் நிலவிய காரணத்தாலும், பொருளாதார வளர்ச்சி நன்கு இருந்ததாலும் மற்ற நாட்டைவிட இங்கு சம்பளம் கூடுதலாக கிடைக்கப் பெற்றதாலும் தமிழர்கள் அதிகம் சிங்கப்பூர் வந்ததற்கான காரணங்கள் என திரு.கே.எஸ்.சந்து கூறுகிறார். (p777)

மேலும் தமிழகத்துக்கு அருகாமையில் சிங்கப்பூர் அமைந்திருப்பதும், தமிழர்கள் சிங்கப்பூர் வருவதற்கு மிக எளிதாக இருந்திருக்கலாம். வேகமாக வளர்ந்து வரும் நாட்டில் எல்லா தரப்பினருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவது சாத்தியம் என்பதனால், சிங்கப்பூர் நாட்டிற்கு பலரும் வருவதற்குக் காரணமாக அமையப்பெற்றிருக்கலாம்.

தமிழர்களின் நிலை

அக்கால கட்டத்தில் வந்த தமிழர்கள் தங்கள் குடும்பங்களை தமிழ்நாட்டில் விட்டுவிட்டு ஆண்கள் மட்டுமே முதன்முதலில் வந்திருக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களை நடத்த போதுமான வசதி வாய்ப்பு வந்தபிறகே, அவர்கள் தங்கள் குடும்பங்களை அழைத்து வந்திருக்க வேண்டும்.

நல்ல உழைப்பாளிகள். ஆனால், தமக்கு என்று தனி இடத்தைத் தேடாத மக்கள். குறைந்த ஊதியம் பெற்றாலும், அதை வைத்துக்கொண்டு, நிறைவோடு வாழ்ந்த சமுதாயம்.. அதிகம் படிக்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை இல்லாது வாழ்ந்த மக்கள்.

அன்றைய சிங்கப்பூர் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழர்கள்

1936-ல் கிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘இந்தியன்ஸ் இன் மலேயா’ புத்தகத்தில் சிங்கப்பூர், பினாங்கு, மலாக்கா ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இந்தியர்கள் பேருதவியாக இருந்திருக்கின்றனர் என்று கூறுகிறார். (p.15)

செயின்ட் ஆன்ட்ரூயுஸ் தேவாலயம், அரசாங்கக் கட்டடங்கள், நார்த் பிரிட்ஜ், சௌத்பிரிட்ஜ் சாலைகள், சிராங்கூன், தாம்சன் சாலைகள் கட்டுவதற்கும், சிங்கப்பூரின் பழமையான கோயில்களில் ஒன்றான மாரியம்மன் கோயிலை 18282இல் உருவாக்குவதிலும், இவர்கள் பெரும்பங்கு வகித்ததாகக் கூறுகிறார்.

இவர்கள் நல்ல திறமை வாய்ந்த வேலைப்பாடுகள் செய்ததாலும், மற்றவர்களைவிட இவர்களின் கூலி குறைவாக இருந்ததாலும், பல நல்ல வாய்ப்புகள் இவர்களைத் தேடி வந்துள்ளன.

சிங்கப்பூரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்ட செம்பவாங் கப்பல் துறை, ஜோஹோர் காஸ்வே (Johore causeway), அப்போதைய காலங் விமானநிலையம் முதலியவற்றைக் கட்டுவதிலும் இந்தியர்கள் அரிய பங்கை ஆற்றியிருப்பதாக திரு.கிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடுகிறார். (p 363, p252)

மஹராஜனி (1960) என்பவர் தமிழர்கள் அக்காலத்தில் காவல்துறையில் அரிய பங்கை ஆற்றியதாகக் கூறுகிறார். (p 112)

மேலும் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தினர் சிறிய மற்றும் பெரிய வாணிப நிலையங்கள் நடத்தியதன் மூலம் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.

நகரத்தார்களின் பங்கு சிங்கப்பூர் பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாக அமைந்துள்ளதை பலரும் ஒப்புக்கொள்கின்றனர். இவர்களின் அரிய பங்கை ஆமோதிப்பதன் நிலைப்பாடாக இவர்களின் பெயர்களில் இங்கு வீதிகள் அமையப் பெற்றுள்ளன. குறிப்பாக, பொத்தோங் பாசீரில் உள்ள ‘மெய்யப்பச் செட்டியார் தெரு,’ சிங்கப்பூரின் மையப்பகுதியில் உள்ள ‘முத்துராமன் செட்டியார் தெரு,’ ‘நாராயணன் செட்டி தெரு’ போன்றவை இவர்களின் பெருமையை எடுத்துக் கூறுவதாக உள்ளன.

நிதி நிறுவனங்கள் அதிகம் இல்லாத காலகட்டத்தில் வங்கிகளுக்கு இணையாக நகரத்தார்கள் ஏழை, எளிய மக்களுக்கும், மற்றவர்களுக்கும் கடன் கொடுத்து உதவியிருக்கின்றனர். இவர்கள், தங்களது குலத்தொழிலான வட்டித் தொழிலை நடத்தி பணம் ஈட்டியவர்கள்.

அவர்கள் முதலில் மார்க்கெட் ஸ்த்ரீட்டிலும், பிறகு கன்டோன்மெண்ட் ஸ்த்ரீட்டிலும், கிளமென்சி அவென்யூவிலும் தங்களது தொழிலை நடத்தியுள்ளனர். இவர்களுடைய தொழில் நடத்தும் இடம் ‘கிட்டங்கி’ என்று அழைக்கப்பட்டது. இவர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக சிங்கப்பூரில் நகரத்தார்களின் மேற்பார்வையில் கியோங் செய்க் ரோட்டில் அமையப்பெற்றுள்ளது, ‘லயன் சித்தி விநாயகர் ஆலயம்” மற்றொன்று டேங் ரோட்டில் அமையப்பெற்றுள்ள ‘ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம்.’

ஆங்கிலேயர்கள் நகரத்தார்களின் மீது அதிக நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்திருக்கின்றனர். நகரத்தார் எழுதும் கணக்குமுறை இன்றும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. ஆக, சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டில், அக்காலத்திலிருந்தே தமிழர்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகவே கருதப்படுகிறது.

சிங்கப்பூர் இன்று உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்று. ஆனால், அக்காலத்தில் சிங்கப்பூர் ஒரு சிறிய மீன்பிடி நகரம். இன்று காணும் நவீனத்தின் அடையாளம் அன்று இல்லை.

சிங்கப்பூரில் இன்று எங்கு திரும்பினாலும் அழகிய கட்டடங்கள், நாகரிகத்தின் உச்சம். மக்கள் மட்டுமின்றி வாகனங்களும் அழகாக வரிசையாகச் செல்லும் ஓவியம். ஆனால், அன்றைய சிங்கப்பூரில் இந்த நவீனம் ஏதும் இல்லை.

இன்றைய சிங்கப்பூரில் 25 மாடிகள் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகப்பேட்டை வீடுகளின் மேல்தளத்திற்குச் சென்றால் ஜகஜோதியாக முழுக்க முழுக்க மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிங்கப்பூரில் முழுச் சந்திரன்கூட ஒரு மூலையில் இருப்பதைப்போல் தோன்றும்.

ஆனால் அன்று நகரத்தின் மையப் பகுதியில் மட்டுமே மின்சார விளக்குகள் இருந்ததாகவும், மாலை நேரங்களில் எண்ணெய் ஊற்றி விளக்குகளை ஏற்றி வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வைத்து விடுவர் என்றும் கூறுகிறார் சிங்கப்பூரிலேயே வாழும் ஒரு மூதாட்டி.

இன்று, சிங்கப்பூரில் பெரும்பாலான தமிழர்கள், வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர். தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால், அந்தக் காலத்தில், பெரிய எதிர்பார்ப்பு ஏதுமின்றி தங்கள் குழந்தைகளை சிறு ஊதியம் கிடைக்கும் சில்லறை வேலைகளுக்கு அனுப்பினர் தமிழ் மக்கள்.

இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை தலைநிமிர்ந்த சமுதாயமாக, முற்பட்ட சமுதாயமாக மாற்றப் பாடுபட்டோரில் மிக முக்கியமானவர், ‘கோ.சா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கோ. சாரங்கபாணி அவர்கள்.

தமிழ் மக்களின் தந்தை, காவலன், தலைவன் என்று பலராலும் பலவாறு வர்ணிக்கப்பெறும் கோ.சா. வாழ்க்கையும், சாதனைகளும், சொல்லால் அடங்காத ஒரு பெரிய வரலாறு.

சமுதாயத்தின் ஒரு பகுதியினர் மட்டும் பயன்பெற பாடுபடாமல், தமிழினம் மொத்தமாகப் பயன்பெற அவர் வழி வகுத்துள்ளார்.

கோ.சா. சிங்கப்பூர் வரக் காரணம்

1923-ம் ஆண்டு தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஒரு முற்போக்கு வாதியாகத் தம்மை மாற்றிக்கொள்ள முனைந்தார்.

1924-ம் ஆண்டு எல்லோரையும் போல ஒரு வேலையைத் தேடியே அவர் சிங்கப்பூருக்கு வந்து ஒரு வணிகக்கடையில் வேலை பார்த்திருக்கிறார். ஆனால், அன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் நிலை அவரை வாட்டியது. ஏனைய சமுதாயம் போல் நம் மக்களும் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பிய அவருக்குக் கை கொடுத்தது பத்திரிகைத் தொழில்.

அவருடைய பொது வாழ்வு, 16.1.19292இல் ‘முன்னேற்றம்’ எனும் வார இதழில் துணையாசிரியராகப் பணியில் சேர்ந்ததிலிருந்து ஆரம்பமாகி விட்டதாகத் ‘தமிழவேள் சாரங்கபாணி’ எனும் நூலை எழுதியிருக்கும் திரு. எம். இலியாஸ் அவர்கள் கூறுகிறார்.

பெரியாரின் தாக்கம்

திரு. கோ.சா. அவர்களின் சமூகப் பார்வைக்கு அடித்தளம் அமைத்தது பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளே. 19292-ம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் ஈப்போ நகரில் நடைபெற்ற ‘தமிழர் சீர்திருத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த பொழுது, “மலேசியா, சிங்கப்பூரிலும் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

திரு. கோ.சா. அவர்கள் 19302ஆம் ஆண்டு தமிழர் சீர்திருத்தச் சங்கத்தை’ உருவாக்கினார். அச்சங்கத்தின் சார்பாக ‘சீர்திருத்தம்’ எனும் மாத இதழும் வெளியிடப்பட்டது.

இதன் வழி அனைத்து மக்களுக்கும் சம உரிமை, மூட நம்பிக்கை அற்ற சமுதாயம், கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் போன்ற கொள்கைகளை அவர் பரப்ப முயன்றார்.

அடித்து திருத்தாமல், காலத்திற்கு ஏற்ப கொள்கைகளைக் கொண்டு மக்களை அரவணைக்க முயன்ற கோ.சா.வுக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. மூடப் பழக்கவழக்கங்களில் மூழ்கியிருந்த மக்கள் மிளகாய்ப் பொடி தூவி, ஒருமுறை கூட்டத்தைக் கலைக்க முயற்சித்திருக்கின்றனர்.

ஆனால் மனம் தளராது தமிழர் சீர்திருத்தச் சங்கம் மேற்கொண்டு வெற்றியடைந்த பல முயற்சிகளில், மாரியம்மன் கோயிலில் ஆடு வெட்டுவதை நிறுத்திப் பூசணிக்காய் வெட்டச் செய்ததும், கோப்பிக் கடைகளில் ஹரிஜன மக்களுக்குத் தகரக் குவளைகளில் தண்ணீர் தரும் பழக்கத்தை நிறுத்தியதும் சான்றுகளாகக் கூறலாம்.

கவிஞரேறு திரு. அமலதாசன் அவர்கள், அக்காலத் தமிழர்கள் சிங்கப்பூரை தன் சொந்த நாடாகக் கருதாமல், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என வாழ்ந்த கட்டம் அது என்று கூறுகிறார்.

“நான் எங்கே வாழ்ந்தாலும், என் கட்டை (உடம்பு)

இந்தியாவில்தான் சாகும்” என்று தமிழர்கள் முழங்கிய கால கட்டம். ஒரு நாட்டில் பிரஜா உரிமை எடுத்து, அந்த நாட்டை சொந்த நாடாகக் கருதினால்தான், மக்களும், சமுதாயமும், நாடும் முன்னேறும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் திரு.கோ.சாரா. அவர்கள். ஆக, இன்று பல தமிழ்க் குடும்பங்கள் ‘என் சொந்த ஊர் சிங்கபுரம்தான்’ என்று வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு அடித்தளம் அமைத்துத் தந்ததில், திரு.கோ.சா.வுக்கு பெரும் பங்கு உண்டு. தமிழக மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம், சிறந்த பேச்சாளர்களை அழைத்துச் சென்று மக்கள் பிரஜா உரிமை பெறவேண்டிய அவசியத்தை மக்களிடையே எடுத்துச் சொல்லச் செய்தார்.

தமிழர்கள் பிரஜா உரிமை எடுத்து சிங்கப்பூரிலேயே வாழ வழிவகுக்காவிட்டால், தமிழ்ச் சமுதாயத்திற்காக பாடுபடுவதே வீண் என்று அவர் கருதினார். அப்படிப் பேசி மக்களை பிரஜா உரிமை எடுக்க வைத்த அக்காலத்துப் பேச்சாளர்களில் ஒருவரான திருமதி நாச்சம்மை அருண் ஆச்சி அவர்கள், பிரஜா உரிமை எடுத்தால், நீங்கள் உங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கலாம் என்று பேசி, பலரை பிரஜா உரிமை எடுக்கச் செய்ததை,ன்றும் பெருமையாகக் கூறுகின்றார்.

திரு.கோ.சா. அவர்களும் பத்திரிகைகளில் தொடர்ந்து மக்கள் பிரஜா உரிமை எடுக்கச் சொல்லி, வலியுறுத்தி எழுதினார். சீர்திருத்தச் சங்கத்தில் ஒரு தனிப்பகுதியை ஏற்பாடு செய்து மக்கள் பிரஜாயுரிமை பெறுவதற்குத் தேவையானவற்றை அறிய வழிவகுத்தார். அப்படி இவரது முயற்சியில் எத்தனையோ தமிழர்கள் பிரஜா உரிமைபெற்று, சிங்கப்பூரில் தமிழ்ச் சமுதாயம் நிலையாக வாழ வழிவகுத்தார். தமிழ்ச் சமுதாயம் நிலையாக வாழ வழிவகுத்ததோடு மட்டுமல்லாது, சிதறிக் கிடந்த சமுதாயத்தை சம அந்தஸ்தோடும், மொழிப் பற்றோடும், கலாச்சாரத்தோடும் வாழ வழி செய்யாவிட்டால் எப்படி என்று எண்ணி அவற்றிற்கும் அவர் வழிவகுத்ததால் அவர் ‘முத்தமிழ்க் காவலர்’ என்று போற்றப்படுகிறார்.

கல்விச் செல்வம் பெற வழி செய்தார்!

பாமர மக்களை, நெறிப்படுத்துவதற்குக் கல்விச் செல்வத்தைத் தவிர வேறு எதுவால் முடியும்? ஆக மக்கள் நிலையான தமிழ்க் கல்வி கற்பது மிக இன்றியமையாததாக அவர் கருதினார். இன்று சிங்கப்பூரில் மாணவர்கள் பள்ளிகளில் ஆங்கிலத்தோடு தமிழையும் கற்பதற்கு, அன்று கோ.சா. சரியான அடித்தளம் அமைத்தார்.

1948ஆம் ஆண்டு சில நண்பர்களுடன் சேர்ந்து ‘தமிழ்க் கல்விக் கழகத்தை’ நிறுவினார். அதன்மூலம் சரியான பாடத்திட்டம், முறையாகத் தமிழ் பயின்ற ஆசிரியர்களை நிலையாக பணியில் அமரச் செய்தல், அவர்களுக்குச் சரியான சம்பளம் பெற்றுத் தருதல் என்று தமிழ்ப் பள்ளிகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பைக் கல்விக்கழகம் பெற்றது.

1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி’ சிங்கப்பூர் தமிழ் மாணாக்கர்களின் வாழ்வில் ஒரு மைல்கல். அந்தப் பள்ளியில் உயர்நிலை கல்வி கற்பிப்பதற்கு ஏதுவாக அந்தக் கட்டடத்தை விரிவுபடுத்த எண்ணினர்.

அந்தக் கட்டடத்திற்கான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டபோது ஆயிரம் தொண்டர்களைத் திரட்டி 19,514.48 சிங்கப்பூர் வெள்ளியை பொதுமக்களிடம் உண்டியல் மூலம் திரட்டிக்கொடுக்க வழி செய்தார்.

அதேபோல கலைமகள் தொழிற்பள்ளிக் கட்டட நிதிக்காகப் பல தொண்டர்கள் மூலம் ஏறத்தாழ முப்பதாயிரம் சிங்கப்பூர் வெள்ளி திரட்டிக் கொடுத்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் பகுதி அமைய அவர் பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார். ஆக தமிழகத்திற்கு இணையாகப் பாலர் கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரை ஒரு மாணவனால் தமிழ் கற்கக்கூடிய நாடாக சிங்கப்பூர் இன்று உள்ளது என்றால், அதற்கு முக்கிய காரணம் திரு.கோ.சா. அவர்கள்.

பெண்கள் நலனில் அவரின் சீர்திருத்தம்

அந்தக் காலகட்டத்தில் இந்துக்களின் திருமணங்கள் பெரும்பாலும் கோயில்களிலேயே நடைபெற்றன. ஆகையால் பெண்களின் வாழ்க்கை பாதுகாப்பு இன்றிப் பல ஏமாற்றங்கள் நிரம்பியிருந்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துப் பெண்களின் வாழ்வில் நிலையான பாதுகாப்பு ஏற்பட நினைத்து திரு. கோ.சா. அவர்கள் அத்திருமணங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, அதற்காக அரசுடன் தொடர்பு கொண்டு, அதற்கு வழிவகுத்துக் கொடுத்தார். விதவைத் திருமணத்துக்கும் அவர் குரல் கொடுக்கத் தயங்கவில்லை.

திரு.கோ.சா. கண்ட தமிழர் திருநாள்

சமுதாய சீர்திருத்தத்தில் ஈடுபட கோ.சா.வுக்குப் பெரிதும் துணை புரிந்தது பத்திரிகைத் துறை என்றாலும், எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடம் தம் கொள்கைகளை எப்படிப் பரப்புவது என்றும் சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவாக உயரிய கருத்துகள் மக்களிடையே ரசனை வடிவில் போய்ச் சேர்ந்தால் எளிது என்று எண்ணி ‘தமிழர் திருநாள்’ என்று தமிழர்களுக்கே உரியதைத் திங்கள் முதல் நாளை 1952இல் துவக்கினார்.

தமிழகத்தில் தமிழ் வருடப் பிறப்பு தை முதல்நாள்தான் என்று அறிவிக்கப்பட்டது நினைவிற்கு வருகிறது. ஆனால் கோ.சா. அவர்கள் அந்தக் காலத்திலேயே ‘தைத் திங்கள் ஒரு சிறந்த நாள்; தமிழர்களுக்கே உரிய நாள்’ என்று அந்நாளைத் ‘தமிழர் திருநாள்’ என்று ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால், அந்நாள் மட்டு மல்லாது தொடர்ந்து பல நாட்கள் தமிழர் திருநாள் நடைபெற்றுள்ளது. அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத காரணத்தினால், ஒரே நாள் ஒரே இடத்தில் விழா நடத்தினால் மக்கள் அனைவரும் வருவது கடினம் என்ற காரணத்தால் தமிழ் மக்கள் எங்கெல்லாம் வசித்தார்களோ அங்கெல்லாம் சென்று தொடர்ந்து தமிழர் திருநாள் நிகழ்ச்சி நடைபெறச் செய்தார்.

இப்பொழுது ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் சென்னையில் ஒருவர் காண்பவற்றை கோ.சா.அவர்களின் முயற்சியில் சிங்கப்பூரில் அன்றே மக்கள் கண்டுகளித்திருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து அறிஞர்கள், சான்றோர் வரவழைக்கப்பட்டனர். பேச்சுப்போட்டி, குறள் மனனப்போட்டி, கதை, கவிதை, கட்டுரைப் போட்டி போன்றவை மாணவர்களின் மொழி ஆர்வத்தை ஊட்டுவதாக அமைந்தன.

“இனிய பாடல்கள், இன்ப ஆடல்கள், கும்மி கோலாட்டம், பின்னல் கோலாட்டம் முதலியன பழந்தமிழ்ப் பெண்களின் விளையாட்டுகளை நினைவுக்குக் கொண்டு வந்தன. சிலம்புச்சுழற்றல், கனம் தூக்குதல், மற்போர் இவை மறத்தமிழரின் மாண்பினை உணர்த்தின” என்று கூறுகிறார், ‘தமிழவேள் சாரங்கபாணி’ எனும் புத்தகத்தை எழுதிய திரு. இலியாஸ் அவர்கள்.

பெருநடைப் போட்டி, சடுகுடு, கிளித்தட்டு, பல்லாங்குழி, சிலம்பம், பாரி, வழுக்குமரம் ஏறுதல் போன்ற மறைந்துவரும் கலைகளும் தமிழர் திருநாளில் இடம்பெற்றிருந்தன.

இவை மட்டுமல்லாது, கட்டழகர் போட்டி, சேலை கட்டும் போட்டி, பூக்கட்டும் போட்டிகளும் இடம்பெற்றுள்ளன. ஆக, சமுதாயத்தின் அனைத்து வயத்தினரும் பங்குபெற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கலாச்சாரத்தோடும், மொழியோடும் இயைந்து வாழவும் தமிழர் திருநாள் வழிவகுத்தது.

தமிழர்கள் தன்னம்பிக்கையோடும், ஒற்றுமையோடும் வாழவும் தமிழர் திருநாள் வழிவகுத்தது.

தமிழ் முரசும் அதன் வழி சமூக சேவையும்

சிங்கப்பூரில் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே நாளிதழ் ‘தமிழ் முரசு.’ கோ.சா.வால் தொடங்கப்பட்ட தமிழ் முரசு பல எழுத்தாளர்களை உருவாக்கியது. கோ.சா. அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர். அவருடைய எழுத்துக்கள் சுவை மிகுந்ததாக இருந்ததால், செய்திகள் மக்களை எளிதாகச் சென்றடைந்தன.

தமிழ் முரசு 1935ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் வார இதழாக வெளிவந்தது. நாளுக்கு நாள் நல்ல வளர்ச்சியடைந்த தமிழ் முரசு பின்னர், 1.12.1937 முதல் நாளிதழாக வெளிவந்தது. அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு, அனைவரும் பயன்பெறும் வண்ணம் அது வெளிவந்தது.

மாணவர்கள், சமுதாயத்தின் எதிர்காலம், அவர்களிடம் மொழிப்பற்றை உருவாக்குவது மிக அவசியம் எனக் கருதி ‘மாணவர் மணி மன்றம்’ என்ற பகுதியை திரு கோ. சா. அவர்கள் தொடங்கினார். அதன்மூலம் பயன்பெற்ற மாணவர்கள் பலர். அதில் தொடர்ந்து கட்டுரை, கதை, கவிதைகள் எழுதி தங்கள் மொழி ஆர்வத்தை வளர்த்துக்கொண்டனர்.

மேலும் வளரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ‘எழுத்தாளர் பேரவை’ தொடங்கப்பட்டது. இதன் வழி பல எழுத்தாளர்களுக்கு எழுதும் கலையை அவர் பயிற்றுவித்தார். இப்படி நல்ல பல எழுத்தாளர்கள் நாட்டில் வளர்வதற்கு தமிழ் முரசு வழி கோ.சா. அவர்கள் அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

மேலும் தலைப்பைக் கொடுத்து வாரந்தோறும் ‘சிறுகதைப் போட்டிகளை’ நடத்தினார். இதில் பலரும் പങ്കுகொண்டு சிறுகதைகள் எழுதி அனுப்பினர். இப்படி மக்களின் தன்னார்வத்தையும் சிந்திக்கும் திறனையும் தூண்டுவதாக தமிழ் முரசு அமைந்தது.

தமிழர் பிரதிநிதித்துவ சபை!

சிங்கப்பூரில் பல சமயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பொழுதும், மொழி மட்டுமே அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று. ஆனால் அவர்களின் மதங்கள், பழக்கவழக்கங்கள் வேறுபட்டதால், தம் மதத்தினருடன் மட்டுமே அவர்கள் ஒன்றுகூடி இருந்தனர்.

இப்படிப் பல மதத்தினரையும் ஒன்றுசேர்க்க ஒரு சபை வேண்டும் என்று கருதி ‘தமிழர் பிரதிநிதித்துவ சபை’ ஒன்றைத் துவக்க கோ.சா. அவர்கள் முடிவு செய்தார். இதில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட தமிழர் சங்கங்களை உள்ளடக்கியதாக இந்தத் தமிழர் பிரதிநிதித்துவ சபை 1951இல் இயங்க ஆரம்பித்தது. இவ்வாறு சிதறிக் கிடந்த பல சங்கங்களை ‘தமிழர் பிரதிநிதித்துவ சபை’ மூலம் திரு. கோ.சா. அவர்கள் ஒன்றுசேர்த்து ‘நாம் அனைவரும் தமிழ் மக்களே, நாம் மதத்தால் வேறுபட்டாலும், மொழியாலும், மனத்தாலும் ஒன்றுபடுவோம்’ என்று முழங்கினார்.

இந்திய மொழிகளில், தமிழையே சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக்க வேண்டும்!

சிங்கப்பூர், மலேயா பல்கலைக்கழகத்தில் இந்திய மொழி பற்றிய ஓர் ஆய்வுப் பிரிவு துவக்கப்பட்டு, அது எந்த மொழியாக இருக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் யோசித்து, தமிழகத்தோடு தொடர்புகொண்டு ஆவன செய்யும்படி கேட்டுக்கொண்டது.

அதன்படி தமிழக அரசு நீலகண்ட சாஸ்திரி என்பவரைப் பிரதிநிதியாக அனுப்பியிருக்கிறது. நீலகண்ட சாஸ்திரியார் அவருக்கு அளிக்கப்பட்ட எல்லா வரவேற்புகளிலும் ‘இந்திய மொழிகளில் சிறந்ததும், பழமையானதும் சமஸ்கிருதமே’ எனக் கூறியுள்ளார். எங்கு பேசினாலும் அவர் தம்முடைய கருத்தை ஆணித்தரமாகவே வலியுறுத்தியுள்ளார்.

இதைக் கேட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் கொதித்து எழுந்து சிங்கப்பூரில் எதிர்ப்புக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, சிங்கப்பூரில் குடியேறிய மக்களின் 85 சதவீகிகத்தினா் தமிழர்களே; ஆகையால் தமிழ் மொழிதான் இடம்பெற வேண்டும் என்று எடுத்துக் கூறினார். அதுவே சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வில் ஒரு பெரிய மறுமலர்ச்சி. தமிழுக்கு உரிய இடம் கிடைத்து இன்று சிங்கப்பூரில் தமிழ் ஓர் ஆட்சி மொழியாக உள்ளது.

‘தமிழவேள்’ சாரங்கபாணி மிகவும் பொருத்தமான பட்டம்

பிழைப்புத் தேடிவந்த நாட்டில், நம் இனத்து மக்களை ஒற்றுமையான தன்னம்பிக்கையுடைய ஒரு சிறந்த சமுதாயமாக உயர்த்திய கோ.சா. அவர்கள் 16.3.1974ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உயிர் நீத்தார்.

தமிழர்களை நிலையாக சிங்கப்பூரிலேயே வாழத் தூண்டியவர். அவர்களுக்கு நிலையான கல்வி பெற வழி செய்தவர். பல மதத்தினரைத் தமிழ்மொழி மூலம் ஒன்று சேர்த்தவர். அவர்களின் அறிவாற்றலை விரிவாக்கப் பாடுபட்டவர். ஆதலால் இவருக்கு தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் ‘தமிழவேள்’ என்ற பட்டத்தை 1955ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்பித்தார். இன்று சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் கோ.சா. அவர்கள் விதைத்த விதையினால் விளைந்த அருமையான பழத்தைச் சுவைத்துக்கொண்டிருப்பதால் தமிழர்களால் தலைநிமிர்ந்து சொல்லமுடியும், ‘தமிழவேள்’ என்கிற பட்டம் திரு. கோ.சா. அவர்களுக்கு மிக மிகப் பொருத்தமே என்று.

குறிப்பு: தகவலும், புகைப்படமும், திரு. இலியாஸ் எழுதிய ‘தமிழவேள் சாரங்கபாணி’ (1998) நூலில் இருந்து.

தென்கிழக்காசியாவில் உள்ள சிங்கப்பூர், ஓர் அழகான குட்டித் தீவு. பசுமையும் தூய்மையும் நிறைந்த சிங்கப்பூர் ஒரு நவீன நவநாகரிக நாடு. 704.0 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது. நாடு சிறியது என்றாலும், அதன் செயல்பாடு மிக அதிகம். சிறந்த திட்டங்கள், அவற்றை சரியாக செயல்படுத்தும் முறை, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் எனத் திறமையாகச் செயல்படும் நாடு சிங்கப்பூர்.

இப்படி உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் வளர்ச்சிப்பாதைக்கு வித்திட்டவர் சிங்கப்பூரின் திரு.லீ குவான் யூ அவர்கள். சிங்கப்பூரின் முதல் பிரதமரான இவர், 35 ஆண்டுகாலம் பிரதமராகப் பணியாற்றிச் செல்வச் செழிப்பு மிக்க நாடாக சிங்கப்பூரை உருவாக்கினார்.

சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து பிரிந்து 9.8.1965 அன்று சுதந்திரம் அடைந்தது. 1959ஆம் ஆண்டு, பொதுத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ‘மக்கள் செயல் கட்சி’ அன்றிலிருந்து சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறது.

நாடு அன்று பல சவால்களை எதிர்நோக்கியிருந்தது. உற்பத்தித் துறை, மக்கள் தொகை, இயற்கை வளம் அனைத்தும் குறைவாக இருந்தன.

ஒரு சிறிய மீன்பிடி நகரமான சிங்கப்பூர் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. 1950-களுக்குப் பிறகு, பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்கவும், உற்பத்தித்துறையை மேம்படுத்தவும் அரசாங்கம் பல வழிகளை மேற்கொண்டது. ஆக 1961ஆம் ஆண்டு ஜூரோங் தொழிற்பேட்டையும் (Jurong Industrial Estate), பொருளியல் வளர்ச்சிக் கழகமும் (Economic Development Board); 1964-ல் பயணத்துறை வாரியமும் தொடங்கப்பட்டன. இதன் வழி உற்பத்தித் துறை பெருகியது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. நாடு வெகு விரைவாக வளர்ச்சியடைந்தது.

ஆக, அனைத்து மக்களும் நாட்டின் வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ச்சியடைந்தனர். நல்ல வேலை வாய்ப்பு, வசதியான வாழ்க்கை, சுகாதாரம், கட்டுப்பாடு அனைத்தும் பெற்று நாகரிகமான வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். நாகரிகம் வளர்ந்தது; விழிப்புணர்வு அதிகமானது, வசதி வாய்ப்புகள் பெருகின. மக்களிடம் பகுத்துணர்ந்து பார்க்கும் தன்மை அதிகரித்தது.

சிங்கப்பூரின் சுருங்கிய நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு வீவகப்பேட்டை வீடுகள் (Housing Development Board) கட்ட 1964-ல் முடிவு செய்யப்பட்டது. இதன் வழி அழகான வீடுகளை எளிதாக வாங்குவதற்கு வழி பிறந்தது. சிறந்த கல்விக்கூடங்கள் வழி உலகத் தரம் வாய்ந்த கல்வியை மக்கள் பெற முடிந்தது. அரசாங்கத்தின் கடுமையான விதிமுறைகளால், வீதியில் கண்ட இடத்தில் குப்பை போடுபவர்களுக்கு, கட்டணம் (Fine) வசூலிக்கப்படுவதால், சுத்தமாக இடத்தை வைத்துக் கொள்ள மக்கள் பழகினர்.

பார்க்கும் இடமெல்லாம் பசுமையும், தூய்மையும் நிறைந்த ஒரு அழகான சிங்கப்பூர் உருவானது. ஆக, நாகரிகத்தின் உச்சத்தை எட்டிய ஒரு நாட்டின் அங்கத்தினராக சிங்கப்பூர் தமிழர்கள் ஆகினர். ஆனால் தம் தாய் மொழியையோ, கலாச்சாரத்தையோ ‘தமிழன்’ என்ற தனித் தன்மையையோ சிங்கப்பூர்த் தமிழர்கள் ஒரு பொழுதும்
மறக்கவில்லை.

சிங்கப்பூர் ஏறத்தாழ 5.1 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. 1.9.2010 தமிழ் முரசின் செய்திப்படி, சிங்கப்பூரர்கள் 3.23 மில்லியன், நிரந்தரவாசிகள் 0.54 மில்லியன், வெளிநாட்டினர் 1.31 மில்லியன் ஆவர். இதில் சீனர்கள் (74 சதவீதம்) மலாய்க்காரர்கள் (13.4 சதவீதம்) இந்தியர்கள் (9.2 சதவீதம்) மற்ற இனத்தவர் (3.4 சதவீதம்) ஆகிய நான்கு இனத்தவரின் நாகரிகம் உடைய நாடு சிங்கப்பூர்.

இன்று சிங்கப்பூரில் தமிழர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளாகச் சிங்கப்பூரிலே வாழும் ‘சிங்கப்பூர்த் தமிழர்கள்’.

வேலை வாய்ப்புத் தேடி சிங்கப்பூர் நாட்டிற்கு வந்து குடும்பமாக வாழும் நிரந்தர வாசம் அல்லது குடியுரிமை பெற்று இருக்கும் ‘தமிழக சிங்கப்பூரர்கள்’.

வேலை அனுமதிச் சீட்டு பெற்று தமிழகத்திலிருந்து வந்து குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்யும் தமிழர்கள்.

இந்தப் பகுதியில் நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளாகச் சிங்கப்பூரிலேயே வாழும் ‘சிங்கப்பூர்த் தமிழர்களின்’ வாழ்க்கை முறையைப் பற்றிப் பார்ப்போம்.

பல ஆண்டுகளாகக் கடல் கடந்து சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலாச்சாரத்தை மறக்காமல் ‘தமிழ்த்தான் தமிழனுக்கு மிகப் பெரிய அடையாளம்’ என்று எண்ணி வாழ்வதைப் பார்க்கும்பொழுது, பாராட்டாமல் இருக்க முடியாது.

பல ஆண்டுகளாக ஒரு நாட்டில் வாழும் பொழுது, அந்த மக்களுக்கு என்று ஓர் அடையாளம், பேச்சு வழக்கு, பாவனை வந்து விடுகிறது. அப்படி சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு என்று ஓர் அடையாளம், பேச்சு வழக்கு, பாவனை, பழக்கவழக்கம். அது ஒரு தமிழ் சார்ந்த - தமிழை ஒட்டிய கலாச்சாரமே!

சிங்கப்பூர்த் தமிழர்கள் நான்கு, ஐந்து தலைமுறைகளாக சிங்கப்பூரிலேயே வாழ்வதால், அவர்களுக்கு இந்தியாவுடனான தொடர்பு மிகக் குறைவு. இந்தியாவிற்கு நான் இதுவரை சென்றதே இல்லை என்று சொல்பவர்கள் அதிகம் பேர். திருப்பதி, பழனி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்ற பெரிய ஸ்தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காக மட்டும் இந்தியா சென்று சுற்றிப் பார்த்து விட்டு, சிங்கப்பூர் திரும்புபவர்களும் உண்டு. விதவிதமான இந்திய உடைகளைப் பல விதங்களில் மலிவாக வாங்குவதற்காகவும், ஏனைய இந்திய கலாச்சார தொடர்புடைய பொருட்கள் வாங்குவதற்காகவும் இந்தியா சென்று வருபவர்களும் உண்டு.

அதற்குக் காரணம் பல தலைமுறைகளாக அவர்கள் சிங்கப்பூரிலேயே வாழ்வதால், அவர்கள் சொந்த பந்தங்கள் அனைத்தும் இங்கேயே. அவர்கள் திருமணங்கள், மற்ற விசேடங்களும் இங்கேயே. ஆக, சொந்தங்களைத் தேடி, எப்படா இந்தியாவிற்குப் போவோம்? என்று ஏங்க வேலை இல்லை. இந்தியாவுடனான தொடர்பு இவர்களுக்கு குறைவு என்றாலும், நல்ல நேரம் பார்த்து எதையுமே செய்யத் தொடங்குவது, ஜாதகம் பார்ப்பது,
சகுனம் பார்ப்பது, திருஷ்டி சுற்றிப் போடுவது, தாய் மாமன் மடியில் வைத்துக் காது குத்துவது, கண்ணேறு வாராமல் இருக்க வீட்டு வாசலில் பூசணிக்காய் கட்டுவது, மந்திரித்துக் கையில் கயிறு கட்டுவது என்று பொதுவான தமிழ் வழக்கங்களையே மேற்கொள்கின்றனர்.

வயதானவர்கள் ஆங்கிலம் கலக்காத சுத்த தமிழில் உரையாடுவர். ஆங்கிலத்தைவிட மலாய் மொழியில் இவர்கள் நன்கு உரையாடுவர். இளைஞர்கள் தமிழைவிட ஆங்கிலத்தில் அதிகம் உரையாடும்பொழுதும், அவர்களுக்கு தமிழின் மீது பற்றை உண்டுபண்ண அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது.

சுத்தமான தமிழில் ஆங்கிலம் கலக்காமல் இவர்கள் உரையாடுவர். வயதானவர்கள் ஆங்கிலத்தை விட மலாய் மொழியில் சரளமாக உரையாடுவர். ஒருவர்ாதாரணமாக உபயோகிக்கும் சொற்கள் இவர்கள் நடையில் சற்று வித்தியாசப்படும்.

‘சீனாங்கா போயிரலாமா’ என்பார்கள். ‘என்ன, கடைக்கு dress வாங்கப் போறீங்களா?’ என்று கேட்பது தமிழ் நாட்டில் நடைமுறை இவர்கள், ‘என்ன? கடக்கி உடுப்பு வாங்கப் போறீங்களா?’ என்பார்கள். அதேபோல் யாராவது வீட்டிற்குச் சென்றால் ‘என்ன drinks சாப்புடுறீங்க’ என்று கேட்பதற்கு, ‘என்ன தண்ணி சாப்புடுறீங்க’ என்பார்கள் ‘சாப்பிட்டீர்களா?’ என்பதற்கு ‘பசியாறிட்டீங்களா?’ என்பார்கள்.

பெரும் பகுதியான முதிய பெண்கள் ‘சாரோங்’ என்றழைக்கப்படும் கைலி, சட்டையையே அணிந்திருப்பர். வீட்டுக்கு அருகில் இருக்கும் இடங்களுக்கு ‘கைலி, சட்டையுடனே’ சென்றுவிடுவர். பொதுவாகத் தமிழகப் பெண்கள் உடுத்தும் சேலை, சுடிதார், மேற்கத்திய உடைகளே இவர்களின் உடைகள்.

சிங்கப்பூரில், பிள்ளைகள், பெற்றோரைக் கவனித்துக் கொள்வது அவசியம் என்பதாலும், குடும்பப் பிணைப்பின் இன்றியமையாமை கருதியும், பெற்றோர் வீட்டிற்கு அருகில் வீடு வாங்கும் குழந்தைகளுக்குச் சலுகை விலையில் வீடமைப்புக்க் கழகம் வீடுகளை விற்கும். ஆக பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே குழந்தைகள் வசிப்பது வழக்கம். பெரும்பகுதியான கணவன் - மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால் தாத்தா, பாட்டி குழந்தைகளைக் கவனித்துக் கொள்வர்.

தமிழர்களுக்கே உரிய சாம்பார், கூட்டு, பொரியல், பச்சடி வகைகளுடன், மலாய் உணவுகளான சம்பால், ரொட்டி, பரோட்டா, மீசியாம் (ஒரு வகையான Noodles), மற்றும் தவ்வு (Soya) போன்றவையும் இவர்களின் அன்றாட உணவு வகைகள்.

இங்கு வீவக பேட்டை வீடுகளுக்கு மிக அருகாமையில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றை விற்கும் கடைகளை உள்ளடக்கிய ஈரச் சந்தை இருக்கும். இங்கு மலிவான விலையில் கோழி, நண்டு, இறால் என மாமிச வகைகள் கிடைப்பதால் சிங்கப்பூர் தமிழர்களின் வீடுகளில் தினமும் ஒரு மாமிச வகை இருக்கும்.

திருமணங்கள் இங்கு ஜாதி மத வித்தியாசமின்றி பொதுவாக பெரும்பகுதித் தமிழர்களிடையே நடைபெறுகிறது. இதில் காதல் திருமணங்கள்தான் அதிகம்! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மற்ற இனத்தவரைத் திருமணம் செய்துகொள்வதைப் பெரிதும் வரவேற்காவிட்டாலும் அப்படி நடக்கும் திருமணத்தை எதிர்ப்பதும் அரிது.

சிங்கப்பூர் தமிழர்களுக்குத் தெய்வ பக்தி மிக அதிகம். இங்கு தீவு முழுவதிலும் ஆங்காங்கே ஏறத்தாழ 25 தமிழ்க் (ஹிந்து) கோயில்கள் உள்ளன.

குழந்தை பிறந்தவுடன் 16-ம் நாள் வீட்டில் கோழி சமைத்து ஒரு சிறிய விசேடம் நடத்துகின்றனர். முப்பதாம் நாள் பெரியாச்சிக்கு (அநேக கோயில்களில் பெரியாச்சி சன்னதி இருக்கும்) நன்றி செலுத்தும் விதமாக அபிஷேகம் செய்து, கறுப்புச் சேலை வாங்கிச் சாத்தி, அம்மன் காலில் குழந்தையைப் போட்டு எடுப்பர். அன்று குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி பாரம்பரிய உடையில் இருப்பதைக் காணலாம்.

அதேபோல் பூப்பெய்தல், திருமணம், ஈமச்சடங்கு போன்றவற்றையும் உறவினர்கள் ஒன்றுகூடி தமிழ் சம்பிரதாயப்படி நடத்துகின்றனர்.

ஒரு சிறுமி பூப்பெய்தியவுடன் தண்ணீர் ஊற்றி, உறவுக்காரர்கள் விதவிதமாகப் பலகாரம் செய்து வந்து கொண்டாடுகின்றனர். 16-ம் நாள் ஐயரை அழைத்துப்புண்ணியதானம் செய்து விடுகின்றனர். அந்தப் பெண்ணை அலங்காரம் செய்து, பரிசு கொடுத்து இனிதே விசேடத்தைப் பூர்த்தி செய்கின்றனர்.

திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் 7, 9, 11 என்று ஒற்றைப்படையில் தட்டு தூக்குகின்றனர். இதில் பூ, பழம், எலுமிச்சை, பேரீச்சம்பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு போன்றவற்றை எடுத்து வந்து, திருமண மேடையில் பையன் பெண் கழுத்தில் தாலி கட்டுகிறார்.

அதேபோல் ஒருவர் இறந்துவிட்டால், 16-ம் நாள் அன்று புண்ணியதானம் செய்து, சிவன் கோயிலில் உறவுக்காரர்கள் அனைவரையும் அழைத்து விளக்குப் பார்த்து ஆத்ம சாந்தி பூஜை நடத்துகின்றனர்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளையும் சிங்கப்பூர் தமிழர்கள் மிக விமர்சியாகக் கொண்டாடுகின்றனர். பொங்கல் அன்று ‘சர்க்கரைப்பொங்கல்’ மட்டுமே பொங்கலிடுகின்றனர். சிங்கப்பூரில் ‘லிட்டில் இந்தியாவில்’ உள்ள தேக்கா வட்டாரத்தில் கரும்பு முதல் வெல்லம், வாழை என, பொங்கலுக்கான அனைத்துப் பொருட்களும் கிடைக்கின்றன.

ஆக, சிங்கப்பூரில் நேர்த்தியுடன் பொங்கலைக் கொண்டாடுவது சாத்தியம். தீபாவளி அன்று சிங்கப்பூரில் அரசு விடுமுறை ஆதலால் தீபாவளி அன்று சீன, மலாய் மக்களை தம் வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பர். தீபாவளியை முன்னிட்டு ஒரு மாத காலம் முன்னரே, அந்த வேலைகளை ஆரம்பித்துவிடுவர்.

தீபாவளியை முன்னிட்டு வருடா வருடம் வீட்டிற்கு வெள்ளையடித்து புதிய இருக்கைகள் வாங்கி வீட்டை புதுப்பித்து தங்களையும் தங்கள் உள்ளத்தையும் புதுமையாக்க முற்படுகின்றனர்.

புது உடுப்பு உடுத்தி, கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வர். 61 வயது நிரம்பிய இல்லத்தரசி சாத்தாம்பா, சிங்கப்பூரில் வசிக்கும் 2-வது தலைமுறையாளர். தீபாவளி கொண்டாடப்படும் தத்துவம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டதற்கு, “கிருஷ்ணரால் நரகாசுரன் கொல்லப்பட்டதால் நாம தீபாவளி கொண்டாடுகிறோம்”

என்று கூறினார். ஆதலால் நரகாசுரனை நினைத்து முதலில் தீபாவளி அன்று படையல் படைத்து வழிபட்ட பிறகே எண்ணெய் தேய்த்துக் குளித்து கோயிலுக்குச் சென்று வழிபடுவோம் என்றது சற்று வித்தியாசமாக இருந்தது.

பொதுவாகத் தங்களுக்கு ஏதாவது ஒன்று பிடித்து விட்டால் விலைப் பட்டியலை திரும்பிப் பார்க்காமல் வாங்கும் இயல்புடையவர்கள் சிங்கப்பூர்த் தமிழர்கள். சாதாரண நாட்களை விட தீபாவளி சமயங்களில் 60% கூடுதலாக விற்பனையாவதாக தேக்கா வட்டார கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

தேக்கா வட்டாரம் தீபாவளியை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். இங்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர இந்தியாவிற்கு இணையாக சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாடி மகிழலாம்.

பொங்கல் பண்டிகையின் போதும், தேக்கா வட்டாரத்தில் மாடுகள், மாட்டு வண்டி என்று கொண்டு வந்து ஒரு வார காலம் மக்களின் பார்வைக்கு வைத்து பொங்கலின் சாராம்சத்தை உண்டு பண்ணுகின்றனர்.

தமிழ் சினிமா, பாட்டு இவற்றை விரும்பிக் கேட்கும் தமிழக சிங்கப்பூரர்களுக்கு இந்தியா மற்றும் தமிழக அரசியலின் மீது நாட்டம் குறைவு. பொதுவாக மற்ற நாடுகளின் தலைப்புச் செய்தியைப் பற்றி அறிந்திருப்பதைப் போல, முக்கிய தலைவர்கள், முக்கிய அறிவிப்புகள், செய்திகள் மட்டுமே இவர்களுக்குப் பரிச்சயமாக இருக்கும்.

அதேபோல் இங்கு சன் மற்றும் விஜய் ஒளி அலைகளை கண்டுகளிக்கலாம். அதில் வரும் தொடர் நாடகங்கள், மற்ற நிகழ்ச்சிகளை இவர்கள் விரும்பிப் பார்ப்பதாகத் தெரியவில்லை. அதேபோலத்தான் இந்திய பத்திரிகைகள், செய்தி்த்தாள்களின் மீது இவர்களின் நாட்டமும்.

ஆக, சிங்கப்பூர்த் தமிழர்கள் தமிழோடும், அதன் கலாச்சாரத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கின்றனர். சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த என்னுடைய நெருங்கிய தோழி ஆங்கிலத்தில் கூறிய வாசகம் என் நினைவிற்கு வருகிறது.

“we have more bonding with the community and less with the country (India)”

சிங்கப்பூரில் உள்ள ‘லிட்டில் இந்தியா’ தான் சிங்கப்பூர் இந்தியர்களின் ‘மறுவீடு’. பல ஆயிரம் ரூபாய் செலவழித்து சிங்கப்பூரிலிருந்து அடிக்கடி இந்தியா போவது சாத்தியமா என்ன? ஆனால் சில ரூபாய் (சிங்கப்பூர் நாணயம் வெள்ளி) செலவழித்து ஒருவர் தம் வீட்டிலிருந்து சிங்கப்பூரிலேயே உள்ள ‘லிட்டில் இந்தியா’ வருவது மிகவும் எளிதல்லவா? ஆதலால்தான், சிங்கப்பூரில் உள்ள ‘லிட்டில் இந்தியா’ சிங்கப்பூர் இந்தியர்களின் மறு வீடு என்று குறிப்பிடுகின்றேன்.

‘லிட்டில் இந்தியா’வில் திரும்பிய இடமெல்லாம் நம் சாப்பாட்டுக் கடைகள்! துணிக்கடைகள், நகைக்கடைகள், பலசரக்குச் சாமான் கடைகள். எங்கு திரும்பினாலும் கேட்பது தமிழ்! பார்ப்பது தமிழர்கள்! வழி முழுவதும் ஒலிப்பவை திரையரங்குகளைக் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்களின் புதுப்பாடல்கள். ஆகவேதான் கச்சிதமாக இந்தப் பகுதிக்கு ‘லிட்டில் இந்தியா’ என்று பெயர்.

இங்கு வந்தால் இது சிங்கப்பூரா, இந்தியாவா அல்லது தமிழகமா என்ற கேள்வி நம்மிடையே தோன்றும். முழுக்க முழுக்கத் தமிழ் முகங்கள்; தமிழின் அடையாளங்கள்; தமிழகத்தில் ஒருவர் பார்ப்பவற்றை நினைவு கூரும் அம்சங்கள்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சுற்றிப்பார்க்க வரும் பயணிகள் ‘லிட்டில் இந்தியா’ வராமல் சென்றால், அவர்களின் சிங்கப்பூர் பயணம் முழுமையடையாது. கடல் கடந்து வாழும் நாட்டில் நம் மக்களுக்கு ஏற்ற ஓர் இடம் இருக்கிறது என்பதைப் பார்த்து அவர்கள் பூரிப்படைவர்.

சிங்கப்பூரின் பழைமை வீதியான சிராங்கூன் வீதியில்தான் லிட்டில் இந்தியா / தேக்கா வட்டாரம் அமையப் பெற்றிருக்கிறது. சிராங்கூன் சாலையிலும், அதன் அருகாமையிலும் தமிழர்கள் / இந்தியர்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யத் தேவையான அனைத்தும் உண்டு. இதன் வழி நம் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பின்பற்றுவது மிக எளிது. உலகாமாகி வரும் இந்தக் காலகட்டத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் பல மாற்றங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். அதன் மூலம் போக்குவரத்து, தொழில்நுட்பம் அனைத்தும் அதிக வளர்ச்சி அடைந்து வருவதால் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக, தமிழகத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையே அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து, தமிழகத்தையே சிங்கப்பூருக்குக் கொண்டுவந்துவிடுகிறது என்றால் அது மிகையாகாது.

சென்னையில் ஒருவர் காய்கறிகளைக் குறைந்த விலையில் வாங்க வேண்டுமா? அதற்கு சென்னையின் ஒரு பகுதியில் இருக்கும் கோயம்பேடுக்குச் செல்ல வேண்டும். வண்ண வண்ணத் துணிகளை அழகான டிசைன்களில் வாங்க வேண்டும் என்றால் மறுபகுதியில் இருக்கும் தியாகராய நகருக்குச் செல்ல வேண்டும். அழகிய நகைகளை வாங்குவதற்கு வேறு ஒரு பகுதிக்குச் செல்ல வேண்டும். ஆனால் சிங்கப்பூரில் இவை அனைத்தையும் ஒரே சுற்றில் ஒரு சேர, தேக்கா வட்டாரத்திலேயே பூ, பழம், காய்கறி, துணி, நகை என்று வாங்கிவிடலாம்.

‘தேக்காவுக்குப் போய் இரண்டு வாரமாச்சு, நம்ம ஊரு கத்தரிக்காய் வாங்கணும்! எங்க வீட்டுக்குப் பக்கத்துல உளுந்து நல்லாவே இல்லை. ஊரு இட்லி மாதிரி வரவேயில்ல. தேக்காவுக்குப் போய் உளுந்து વાங்காட்டி, இட்லி அவ்வளவுதான்! எங்க வீட்டுப் பிள்ளைங்க எல்லாம் இட்லி நல்லாவே இல்லைன்னு ஒரே தகராறு’. இப்படிப் பட்ட பேச்சுக்கள் இங்கு தமிழர்கள் அடிக்கடி பேசுபவை. ஆக தேக்காவும் லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர்த் தமிழர் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஒன்று.

தமிழக ஊர்களில் ஆங்காங்கே முச்சந்திகளிலும், தெருவோரங்களிலும் காணப்படும் சிறு தையற்கடைகள்; வயதான பெண்கள் துணிகளை விரித்து, பாசி, வளையல், சிறு சிறு பாத்திரங்களை விற்பது போன்று, இந்தியாவிலிருந்து மலிவான விலைக்கு பொட்டு, அணிமணிகள், சுவாமி புத்தகங்கள், சுவாமி படங்களை வாங்கி வந்து இங்கு விற்கும் பெண்கள்; இளநீர் விற்கும் உள்ளூர்க் கடைகள் போன்றவை நவீன சிங்கப்பூரில் ஒரு யதார்த்தத்தை நம்மிடையே ஏற்படுத்தும்.

முடிதிருத்தும் நிலையங்களில் தமிழ் நாட்டு சினிமா ஹீரோக்களின் படங்கள் காணப்படுகின்றன. இளைய தளபதி விஜய் ‘என்னைப் பார், என் முடியின் அழகைப் பார்’ என்பதைப்போல ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் தமக்கே உரிய ஸ்டைலில் அழகாகக் காட்சியளிக்கிறார். இசை வட்டுகள் விற்கப்படும் ஒரு கடையில் கேப்டன் விஜயகாந்த் அவருக்கே உரிய பாணியில் கையை அசைத்தவாறு நிற்கிறார்.

மற்றொரு பக்கம் திரும்பினால், இந்திய நட்சத்திர ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒன்று நடப்பதை அறிவிக்கும் விளம்பரத்தில், உலக அழகி ஐஸ்வர்யாராய்பச்சன் அழகாகக் கையில் விளக்கை ஏந்தி காட்சி தருகிறார். சற்று தூரம் சென்றால் தமிழ்த் திரையுலக பின்னணிப் பாடகர்கள் மைக்கைப் பிடித்தவாறு ‘நாங்களும் வருகிறோம் உங்கள் ஊருக்கு, ஒரு கலை நிகழ்ச்சிக்காக...’ என்று காட்சி அளிக்கும் மற்றொரு விளம்பரம்.

மாதா அமிர்தானந்தமயியின் வருகையையும், வாழும் கலை ஸ்ரீ ரவிசங்கரின் யோக கலையைக் குறிக்கும் அட்டைகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

இணையம் எப்படி ஒரு சிறு பெட்டியில் உலகத்தை அடைத்து வைத்திருக்கின்றதோ, அதைப் போன்று சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதி ஒரு இந்தியாவையே தன்னொள் கொண்டுள்ளது கோயில்கள், கலைக்கூடங்கள் முதலியவை உட்பட.

தீவு முழுவதிலும் பல கலைக்கூடங்கள் இருப்பினும் குறிப்பாக சிராங்கூன் வீதியைச் சுற்றி கலைக் கூடங்கள் பல உள்ளன. ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் கோயில் மூன்றும் சிராங்கூன் சாலையிலேயே அமையப் பெற்றுள்ளன. ஆக, ஒரே நடையில் 3 கோயில்களில் மக்கள் தரிசனம் செய்து வீடு திரும்பலாம்.

சிராங்கூன் ரோட்டிற்கு வருவதற்கு ‘லிட்டில் இந்தியா’ மற்றும் ஃப்ப்ரெர் பார்க் (Farrer Park) விரைவு ரயில் நிலையங்களில் இறங்க வேண்டும். இந்த விரைவு ரயில் நிலையங்களில் சேலை, இந்திய உடைகள் அணிந்து, தலையில் பூ, நெற்றி நிறைய குங்குமத்துடன் கோயிலிலிருந்து திரும்பும் பெண்களையும் கையில் காய்கறி, பருப்பு வகைகளை ஏந்திய இந்தியர்களையும் நிறையவே பார்க்கலாம். அனைவரும் தேக்காவிலிருந்து வீடு திரும்புபவர்களே!

வார இறுதியிலும், இரவு நேரங்களிலும் பல பெண்கள் தங்கள் குழந்தைகளை அருகிலிருக்கும் கலைக்கூடங்களில் இந்தியக் கலைகளைக் கற்க விட்டுவிட்டு, அந்த நேரத்தில் தமக்கு வேண்டியவற்றைக் கடைகளில் வாங்கிக் கொண்டு, வியாழக்கிழமை என்றால் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்குக் கொண்டைக்கடலை மாலை போட்டுவிட்டு, சனிக்கிழமை என்றால் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சிங்கப்பூர்
வாழ்க்கையில் இப்படி வாரம் ஒரு நாள் குடும்பத்துடன் சிராங்கூன் ரோடு பக்கம் வந்து தங்களின் ஷாப்பிங், கோயில் தரிசனம், குழந்தைகளின் வகுப்புகள் அனைத்தையும் முடித்துவிட்டு, கடைகளில் சாப்பாட்டையும் முடித்து வீடு திரும்புவர். இந்தியா சென்று வந்த ஓர் உணர்வை இது ஏற்படுத்தும்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேரை சிராங்கூன் வீதியும் முகமது முஸ்தஃபா பேரங்காடியும் ஈர்க்கின்றன. வேஷ்டி சட்டையுடன், கையில் ஒரு பையுடனும் ஊர் வட்டார வழக்குகளில் உரையாடிக் கொண்டு ஒரு பொருளை எடுத்தவுடன் உடனே ஊர் விலைக்கு அதை பெருக்கிப் பார்த்து ‘இத ஏன் இம்புட்டு விலைக்கு இங்கேயிருந்து வாங்குறோம்? நம்ம ஊருலே அழகுபோல வாங்கிடலாமே!’ ‘இது என்ன கிலோ இருக்கும்? நமக்கு கொண்டுபோக வெயிட் இருக்குமா என்ன?’ என்ற வாசகங்கள், ‘அட நம்ம ஊருக்காரங்கபோல’ என்று உடனே நமக்குச் சொல்லும். ‘என்ன, நீங்க நம்ம ஊரா? எந்த ஊரு?’ என்று விசாரிக்க, நம்ம ஊர்க்காரர்களைப் பார்த்த திருப்தி அவர்களுக்கும். அதேபோல் நமக்கும்.

இதேபோன்று வேலை அனுமதிச் சீட்டு பெற்று தமிழகத்திலிருந்து வேலை செய்யும் இந்தியத் தமிழர்கள் வார இறுதியில் ஒன்று கூடுவதும் இந்த தேக்கா வட்டாரத்தில்தான். அவர்களில் பெரும்பகுதியானோர் கட்டுமானத்துறை வேலை செய்வதால் அவர்களின் தங்குமிடங்கள் சிங்கப்பூரில் தொலைவான பகுதியில் இருக்கும். ஆக வார இறுதியில் ஒரு நாள் சிராங்கூன் பகுதியில் ஒன்றுகூடி, அவர்களின் ஊர்க்காரர்களைப் பார்த்து ஊர் விஷயங்களைத் தெரிந்துகொண்டு, தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வர்.

இப்படி சிங்கப்பூரில் 4 இனத்தவருக்கும் அவரவருக்கு
உரிய இடங்கள் உள்ளன. இந்தியர்களுக்கு லிட்டில் இந்தியா, சீனர்களுக்கு பிரத்யேக இடம் சைனா டவுன், மலாய்க்காரர்களுக்கு கேலாங் பகுதி, மற்ற இனத்தவருக்கு ஆர்சர்ட் பகுதி.

மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்குச் சென்றால் ‘லிட்டில் இந்தியா’ எவ்வாறு இந்தியர்களுக்கான பிரத்யேக இடம் என்பதைச் சுட்டிக்காட்டுமோ, அப்படி அந்தந்த இடங்களும் அவரவரின் தனிச்சிறப்போடு விளங்குகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஆர்சர்ட் ரோடு முழுவதும் ஒரு மாத காலமாகவே அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதேபோல இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஹரிராயா (ரம்ஜானை) முன்னிட்டு கேலாங் பகுதி திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். சீனப் பெருநாளையொட்டி ‘சைனா டவுன்’ மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். தீபாவளியை முன்னிட்டு அச்சமயத்தில் ஓரிரு மாதங்களுக்கு சிராங்கூன் பகுதி, தீபம் ஏந்திய பெண்கள், தீப ஒளி, வண்ண வண்ண விளக்குகள், அழகான அலங்காரப் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

பொதுவாக, அமைச்சர் ஒருவரின் முன்னிலையில் ‘தீபஒளி ஏற்றப்பட்டு அன்று ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமாகும். ஒருவர் சிராங்கூன் பகுதிக்குச் சென்றாலே இந்தியாவில் எப்படி மிக விமர்சியாகத் தீபாவளி கொண்டாடப்படுமோ, அதேபோன்ற ஒரு உணர்வு நம்மிடையே ஏற்பட்டுவிடும். இந்தியாவிலிருந்து விசேஷமாக உடைகள், தின்பண்டங்கள், வெடி, அணிகலன்கள், பட்டுப்புடவைகள் முதலியவை இறக்குமதி செய்யப்படும்.

‘தீபாவளி ஷாப்பிங்’ செய்வதற்காக சிங்கப்பூர்த் தமிழினமே தீபாவளியை ஒட்டி சிராங்கூன் வீதிக்குச் சென்ற வண்ணம் இருக்கும்.

சிங்கப்பூர் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டதால் சிராங்கூன் பகுதியில் உள்ள தெருக்கள் க்ளைவ்ஸ்ட்ரீட் (Clive street), டன்லப்ஸ்ட்ரீட்(Dunlop street), அப்பர் டிக்சன்ஸ்ட்ரீட் (Upper dickson street), பஃப்பலோ (Buffalo Road) என பெயரிடப்பட்டிருந்தாலும், முழுக்க முழுக்க தமிழும் தமிழ் சார்ந்த அடையாளமே இப்பொழுது தென்படுகின்றது. முன்னைய காலத்தில் இப்பகுதியில் நிறைய மாடுகள் கட்டப்பட்டு, பால் கறந்து மக்கள் விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆதலால் இத்தெருவிற்கு பஃப்பலோ (Buffalo Road) என்று பெயர் வந்திருக்கிறது.

‘அபிராமி நகைக்கடை’, மீனா நகைக்கடை’ ‘அணிமணி பொற்சாலை’, ‘சரவணபவன்’, ‘ஆனந்தபவன்’, ‘கோமள விலாஸ்’, ‘கமலா விலாஸ்’, ‘செல்வி ஸ்டோர்ஸ்’ போன்ற தமிழ்ப் பெயர்கள் கொண்ட கடைகளும் உண்டு.

அதேபோல, இங்கு ஊர்ப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட உணவுக் கடைகளையும் பார்க்க முடியும். ‘காரைக்குடி உணவகம்’, ‘ஆந்திரா கறி (Andhra curry), கல்கத்தா பகுதியின் உணவு வகைகள் பரிமாறப்படும் ‘இராஜ் உணவகம்’, ‘முருகன் இட்லி’ என பலவகை உணவுக் கடைகள் உண்டு. தந்தோரி வகை வடஇந்திய உணவுகள், வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவகங்கள் பல வகைகளில் உண்டு. ஆக, வீட்டில் ஏதாவது ஒரு விசேடம் என்றால் பெரும்பகுதி உணவுகளைக் கடைகளிலேயே செய்யச் சொல்லி வாங்கி விடலாம்.

இங்குள்ள ‘முத்து உணவகத்தின்’ மீன் தலைக் கறி சீனர்களிடம் மிகவும் பிரபலம். சீனர்கள் நாம் எண்ணெயில் பொரித்து எடுப்பதைப் போன்று அவர்கள் பொரித்தெடுப்பது கிடையாது. சூப் வகைகள், வேக வைக்கப்பட்ட பச்சைக் காய்கறிகள், கோழி, மீன், வாத்து, முட்டை, நூடுல்ஸ் (Noodles), போரிட்ஜ் என்றழைக்கப்படும் கஞ்சி போன்றவையே சீனர்களின் முக்கிய உணவு வகைகள்.

தமிழர்கள் பயன்படுத்தும் சாம்பார் தூள், மசாலாத் தூள், வரமிளகாய், புளி போன்றவற்றை சீனர்கள் அவர்கள் சமையலில் பயன்படுத்துவது கிடையாது. காரத்திற்கு அவர்கள் மிளகையே உபயோகப்படுத்துகின்றனர்.

முத்து உணவகத்தின் மீன் தலைக் கறியை சீனர்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். முத்து உணவகத்தின் உரிமையாளர்கள் தம் வாடிக்கையாளர்களில் 75% சீனர்களே என்று கூறுகின்றனர்.

‘முகமது முஸ்தஃபா பேரங்காடி’யைப் பார்ப்பதற்காகவே ஒருவர் சிங்கப்பூர் வரவேண்டும். பிறந்த குழந்தை நாளுக்கு நாள் எப்படி வளருமோ, அப்படி நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு, தற்பொழுது மிகப் பெரிய பேரங்காடிகளுள் ஒன்றாக Mohammed Mustafa and Samsudin (Pvt) Ltd உள்ளது.

24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்தக் கடையில் எதை வாங்கலாம்? என்று கேட்பவர்களுக்கு, எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதுதான் பதில்.

ஆக எந்தச் சந்தேகமும் இல்லாமல் சிராங்கூன் ரோடு சிங்கப்பூர் இந்தியர்களின் ‘மறு வீடு’ தான்.

ஒரு நாட்டில் தமிழர்கள் வாழ்வதால் மட்டும் அங்கு தமிழ்மொழி சிறந்து விளங்குவதாகக் கூறமுடியாது. ஒரு மொழிக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கலாம். தமிழ்க் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் அங்கு நிறைந்து இருக்கலாம். கோயில்கள் இருக்கலாம், பூஜைகள் நடக்கலாம், மக்கள் சென்று தரிசனம் செய்யலாம், அதன் வழி கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, வாழ்க்கை நெறிமுறை, தமிழர்களின் பாரம்பரியம், நம் கலாச்சாரம், கடவுள் பக்தி இவற்றை அறிந்துகொள்ளவும் பின்பற்றவும் வழிகள் இருக்கலாம். இருப்பினும், தமிழ் மொழியைப் பேணி பாதுகாக்காவிட்டால் தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் தொடர்ச்சி அங்கு வளர்ச்சி பெறுவது கடினம்.

தமிழர்களுக்கென்று ஒரு பகுதி அவர்கள் வாழும் நாட்டில் இருக்கும்பொழுதும் கடல் கடந்து வாழும் பொழுதும் தாயக நாட்டோடு தொடர்பு துண்டித்து விட்டது போன்ற ஓர் உணர்வு ஏற்படாமல், நமக்கே நமக்கு என்று நம் நாட்டுப் பொருட்களை வாங்கவும், அடடா இன்று பண்டிகை ஆச்சே, இந்தியாவுல இருந்தா எப்படி எல்லாம் நாம் நம்ம பண்டிகையைக் கொண்டாடலாம்? வெளிநாட்டுல இருப்பதனாலதானே நம்ம முறைப்படி பண்டிகையைக் கொண்டாட முடியல? என்று ஏங்கித் தவிப்பதைத் தீர்க்க சிறந்த வழியாக நம் இந்திய மற்றும் தமிழகப் பொருட்களை விற்கும் கடைகள் அமையலாம்.

மொழியே மனிதனின் உண்மையான, மிகப்பெரிய அடையாளம்.

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பதால், தமிழ் மொழி பள்ளிக்கூடங்களில் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆதலால், குழந்தைகள் தமிழ் மொழியோடு சேர்த்து தமிழ்க் கலாச்சாரத்தையும் நன்கு அறிய சரியான வழி பிறக்கிறது. சிங்கப்பூரில் பள்ளிக்கூடங்களில் தமிழைக் கற்றுக்கொடுக்க, ஆரம்பத்திலிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சிங்கப்பூரில் தமிழ்ப் பாடங்களின் ஆரம்ப நிலை.

ஆண்கள் மட்டுமே சிங்கப்பூர் வந்து, முதலில் வேலை செய்தார்கள் எனவும், பின்னர் வசதி வாய்ப்பு பெருகியவுடனே, தங்களது குடும்பங்களை அழைத்து வந்திருக்க வேண்டும் என்பதையும், சென்ற கட்டுரையில் பார்த்தோம். துரைசிங்கம் சாமுயூல் எனும் வரலாற்று ஆய்வாளர், சிங்கப்பூர் தமிழ்ப் பாடங்களின் ஆரம்ப நிலையைப் பற்றிச் சிறந்த ஆய்வு நடத்தியுள்ளார். அவர் ஆய்விலிருந்து தொகுக்கப்பட்டவை பின் வருமாறு: அப்படி அவர்கள் தங்களது குடும்பங்களை அழைத்து வந்தவுடன் பல தனியார், தொழிற்சங்கங்கள், மத நிர்வாகத்தினர் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பிப்பதற்குத் துணை புரிந்திருக்கின்றனர்.

சிங்கப்பூரில், தமிழ் முதல் பள்ளி 1834 ஆம் ஆண்டு 12 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. சரியான பாடப்புத்தகங்கள் இல்லாததால், 1835 ஆம் ஆண்டு மூடப்பட்ட அந்த பள்ளி, 1873 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆரம்பப் பள்ளிகள் தஞ்சோங் பாகார், சிராங்கூன் வட்டாரம், பொத்தோங்க பாசிர் போன்ற இடங்களில் முதலில் தொடங்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் கொண்டு நடத்தப்பட்ட வகுப்பில் தமிழ்க் காப்பியங்கள், தமிழ்க் கலாச்சாரம், பண்புகள் போன்றவை கற்பிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஹிந்து மாணவர்கள் கோலாட்டம் ஆடுவது எப்படி என்பதையும் கற்றுக் கொண்டுள்ளனர்.

பல தனியார் பள்ளிகள் தமிழ் மக்களின் குடியிருப்பு இடங்களின் அருகாமையிலேயே தொடங்கப்பட்டிருந்தது எனவும், நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளி படிப்புப் படிக்க அனுப்பினர் என்றும், திரு.சாமுயூல் கூறுகிறார். அந்த மாணவர்கள், பள்ளி நேரத்திற்குப் பிறகு மாலை நேரங்களில் தமிழ் வகுப்புகளுக்குச் சென்று படித்தனர் என்றும் அவர் கூறுகிறார்.

தீவு முழுவதிலும் நீலாம்பிகை, வாசுகி, தங்கமணி, அரவிந்தன், சரஸ்வதி, தண்டாயுதபாணி, வள்ளுவர், ஔவையார், நாகம்மை, கமலாநேரு போன்ற தமிழ்ப் பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தமிழ் மாணவர்கள் இருந்ததாகவும் திரு.சாமுயூல் கூறுகிறார்.

ஆறுமுகம் என்ற தனியார் ஒருவர் யூ சூகாங் பகுதியில் கலைமகள் தமிழ்ப்பள்ளியைத் தொடங்கினார். விவேகானந்தா ஆண்கள் தமிழ்ப் பள்ளியையும், நோரீஸ் ரோடில் இருந்த சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியையும் அப்பொழுது நடத்தி வந்த ராமகிருஷ்ணாமிஷன் 1960-ல் கலைமகள் தமிழ்ப் பள்ளியையும் எடுத்து நடத்தியது. 1859-ல் ரோமானிய கத்தோலிக்க மிஷனால் தொடங்கப் பெற்றது பிரான்சிஸ் செவியர் மலபார் பள்ளி.

ஆக, இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக சிங்கப்பூரில் 4 மிஷன் பள்ளிகள், 14 தனியார் பள்ளிகள், ஆயிரம் மாணவர்களுடன் இருந்ததாக திரு.சாமுயூல் கூறுகிறார்.

பிறகு ஜப்பானியர்கள் ஆட்சியின்போது, தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய தமிழ்ப் பள்ளிகளின் மூலம் இந்திய விடுதலை இயக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. 1959-க்குப் பின்னர், பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஆங்கிலேய கல்வி கற்க விரும்பியதால், தமிழ்ப் பள்ளிகள் சிங்கப்பூரில், மூடப்பட்டன என்று திரு சாமுயூல் தெரிவிக்கிறார்.

இன்று பள்ளிகளில் குழந்தைகள் தமிழக மாணவர்களுக்கு இணையாக தமிழ்ப் பாடத்தைக் கற்க வாய்ப்பு இருப்பதால் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் தமிழ் என்ற விதை விதைக்கப்படுகிறது. அப்படி விதைக்கப்பட்ட விதை, கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படுவது பாராட்டுக்குரியது. தமிழ் வகுப்புகளில் மாணவர்கள், தமிழில் உரையாட ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆசிரியை நான் கழிப்பறைக்குச் செல்லலாமா? என்று கேட்க பழக்கப்படுகின்றனர். ஆகவே தமிழ் எனும் விதை நல்ல மரமாக வளர பள்ளிகள் எந்த சந்தேகமும் இல்லாமல் உதவுகின்றன.

மேலும் தமிழை வளர்க்கவும் தமிழ் மாணவர்களை ஊக்கப்படுத்தவும் தமிழ்ப் பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடக்க நிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் உயர் தமிழ் கூடுதலாக எடுத்துப் படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இப்படி உயர் தமிழில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் ‘O’ Level (ஒ நிலை 10 ஆம் வகுப்பு) முடிவில், தொடக்கக் கல்லூரியில் சேர்வதற்கு அவர்கள் பெறும் எண்களுக்கு உதவியாக இருக்கும்.

(சிங்கப்பூரில் மாணவர்கள் ‘O’ Level (ஒ நிலை) 10 ஆம் வகுப்பின் இறுதித் தேர்வில் எவ்வளவு சிறப்பாக செய்துள்ளார்கள் என்பதை அவர்கள் பெற்றிருக்கும் எண்கள் கூறும்.)

ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரியில் பட்டப்படிப்பு வரை தமிழில் தேர்ச்சி பெற, சிங்கப்பூரில் வாய்ப்புண்டு.

சிம் (SIM) பல்கலைக்கழகம் பகுதி நேரமாக இளநிலை தமிழ் பட்டப்படிப்பை வழங்குகிறது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின், Centre for Language Studies-ல் தமிழ் அல்லாதவர்கள் சேர்ந்து தமிழைக் கற்க வாய்ப்பிருக்கிறது. இதில் ஒரு வகுப்பில் 15 முதல் 20 மாணவர்கள் படிப்பர் என்று தெரிய வருகிறது. சிங்களர்கள், கொரியர்கள், சீனர்கள் என பல நாட்டினர் இதில் அடக்கம்.

தமிழ்நாட்டில் தமிழைக் கற்காமலேயே ஒருவர் பட்டம் பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் சிங்கப்பூரில், மற்ற இனத்தவர்கூட தமிழ் மொழி கற்க முடிகிறது என்றால், அது தமிழுக்குக் கிடைத்த பெருமை.

சிங்கப்பூரில் ஒருவர் தமிழ் ஆசிரியராகப் பணிசெய்ய விரும்பினால், முதலில் கல்வி அமைச்சுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சில மாதங்கள் பள்ளிகளில் பணிசெய்த பின்னர் ஆசிரியப் பயிற்சிக்காக தேசியக் கல்விக் கழகத்திற்கு அனுப்பப்படுவர். பயிற்சியில் வெற்றிபெற்ற மாணவர்கள் பின்னர் பயிற்சிபெற்ற ஆசிரியராகப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படுவர்.

தேசியக் கல்விக் கழகத்தில் (National Institute of Education, NIE) பட்டயக் கல்வி முதுகலை, முதுகலை கல்வி இயல், முனைவர் பட்டம் முதலியனவும் பெற வழியுண்டு.

தமிழ் அமைப்புகளால் தமிழ்ப் பயிலரங்குகள், சிறப்பு தமிழ் வகுப்புகள், தமிழில் எவ்வாறு சிறப்பாக கட்டுரைகள் எழுதுவது, பிழை இல்லாமல் தமிழில் எவ்வாறு உரையாடுவது போன்ற வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமாகக் கலந்து கொள்வது, சிங்கப்பூரில் தமிழ் மொழி உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் கூறுகிறது. மேலும் சான்றோர், அறிஞர்களுடனான கலந்துரையாடல்கள், இலக்கண வகுப்புகள், சிறுகதை, பயிலரங்குகள் முதலானவையும் நடைபெறுகின்றன.

சிங்கப்பூரில் ஒருவர் தமிழில் முனைவர் பட்டம் பெற வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, முனைவர் சுப, திண்ணப்பன் மேற்பார்வையில், மரபுக் கவிதை, குழந்தை இலக்கியம், நாவல், நாடகம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் - ஒரு திறனாய்வு என்னும் தலைப்பில் முனைவர் ஏ.ஆர். சிவகுமாரன் அவர்களும், கற்றலும் கற்பித்தல் தொடர்பாக, முனைவர் இராமையா அவர்களும் மலேசிய, சிங்கப்பூர் புதுக்கவிதை ஒப்பீடு தொடர்பாக முனைவர் தியாகராஜன் அவர்களும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றனர். முனைவர் சுப, திண்ணப்பன் அவர்கள், முனைவர் இராமையா அவர்கள், இருவரின் மேற்பார்வையில், சிங்கப்பூர்த் தமிழ் ஊடகம் தொடர்பாக முனைவர் சீதாலட்சுமி அவர்களும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழைக் கண்ணெனப் போற்ற பல அமைப்புகள், அதன் வழி பல படைப்புகள்.

1872ஆம் ஆண்டு முதல் மரபுக் கவிதைகள் சிங்கப்பூரில் படைக்கப்பட்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும்பாலும் இறைவனின் புகழ் கூறும் இஸ்லாமியக் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. நல்ல படித்த கவிஞர்களால் பாடப்பட்ட ஆரம்ப கால கவிதைகள் இறை உணர்வையும் சிங்கப்பூர் நகரையும் பிரதிபலித்தன என முனைவர் ஏ.ஆர். சிவகுமாரன் கூறுகிறார்.

கதை, கட்டுரை, கவிதை என அனைத்து விதமான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. சிங்கப்பூருக்கு ஏற்ற சூழலில் கரு அமையப் பெறும். மேலும் இலங்கையில் நடக்கும் அவலம், உலகமயமாவதால் ஏற்படும் நிலை, பொருளாதாரம் என பலவற்றைப் பற்றிய கவிதை, புத்தகங்கள் வெளிவருவதையும் பார்க்கலாம். ஆக பல கவிஞர்களும் கதையாசிரியர்களும் எழுத்தாளர்களும் உருவான வண்ணம் உள்ளனர்.

இவர்களை ஆதரிக்க தீவில் பல தமிழ் அமைப்புகள் உள்ளன. இவ்வமைப்புகள் தமிழின் பல பரிமாணங்களை வளர்த்து தமிழின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. இவ்வமைப்புகள் அனைத்து வயதினருக்கும் கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி, வினா - விடை போட்டி என நடத்தும். பொதுவாக இப்போட்டிகள் வார இறுதியில் நடைபெறும்.

இருப்பினும் காலை வேளையிலேயே பெற்றோர் குழந்தைகளை இப்போட்டிகளுக்கு அழைத்து வந்துவிடுவர். குழந்தைகளும் தங்கள் பள்ளிகளின் சீருடைகளில் வந்து தங்களின் பெயர்களைப் பதிவு செய்து தங்கள் தோழிகளுடன் தங்களது ஆசிரியர்களிடம் தங்கள் தேர்வுக்கு உரியவற்றை பயிற்சி செய்த வண்ணம் இருப்பர்.

தமிழின் மீது உள்ள ஆர்வமும், நாம் கற்றவற்றைச் செம்மையாக எழுதி நாம் முதல் பரிசை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் இந்தக் குழந்தைகளிடம் தெளிவாகத் தென்படும். மாறுவேடப் போட்டியில் பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர் மற்றும் பல அறிஞர்களின் வேடங்களில் சிறார்கள், சரவெடி போல அழகான தமிழில் வசனம் பேசி நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்வர். விளையும் பயிர் முளையிலேயே
தெரியும் என்பதற்கும் இச்சிறார்கள் எதிர்காலத்தில் நிச்சயம் தமிழை வாழ வைப்பார்கள் என்பதற்கும் இந்நிகழ்ச்சிகள் நமக்கு உறுதியளிக்கும்.

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் அறிஞர்கள், சான்றோர்களின் பட்டிமன்றங்கள், சிந்திக்க வைக்கும் சிறப்புப் பேச்சுகள், கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெறும். சிங்கப்பூரில் பொது போக்குவரத்து மிகவும் வசதியான ஒன்று என்பதால், இந்த நிகழ்ச்சிகளுக்கு அலைகடலென மக்கள் கூட்டம் திரண்டு வந்து, அரங்குகள் நிரம்பி இருக்கும். இரவு நேரங்களிலும் மக்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதால், பெண்கள் தனியாக இந்நிகழ்ச்சிகளுக்குச் சென்று வீடு திரும்ப வேண்டுமே என்கிற எந்த பயமுமின்றிச் சென்று வரலாம்.

தமிழ் அமைப்புகள், தமிழகக் காப்பியங்கள், இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டு, இராமாயணம், சிலப்பதிகாரம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து வினா - விடை நிகழ்ச்சிகளை நடத்துவதால் குழந்தைகள் இந்தக் காப்பியங்கள் மற்றும் இதிகாசங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் தமிழின் தொன்மையைப் பற்றி அறியவும் இவை பெரிதும் துணை புரியும்.

திரு.வி. கலியாணசுந்தரனார், நாமக்கல் கவிஞர் போன்றவர்களைப் பற்றி கட்டுரைப் போட்டிகள் நடைபெறும். இப்பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை அறியவும் அவர்களைப் போல படைப்புகள் படைக்கவும் இவை தூண்டுதலாக அமையப்பெறும்.

பெரியவர்களுக்குச் சிறுகதைப் போட்டி நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கும் மேலே கூறியுள்ள சிறுகதைப் போட்டியில் வெற்றி பெறும் பெரியவர்களுக்கும் இவ்வமைப்புகள் நடத்தும் விழாக்களில் அமைச்சர் ஒருவரை அழைத்துப் பரிசுகள் வழங்கப்பெறும்.

தேசிய நூலக வாரியம் தமிழ் வளர்ச்சியில் ஓர் அரிய பங்கை வகிக்கிறது. 2003-ம் ஆண்டு ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற நிகழ்ச்சியை நூலக வாரியம் நடத்தியது. இதில் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்துகொண்டன. ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வோர் அமைப்பும், தமிழில் வாசித்து 24 மணி நேரம் தமிழைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்து, மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

உள்ளூர்ப் படைப்புகள், பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புகள் தீவிலுள்ள அனைத்து நூலகங்களிலும் கிடைக்கப் பெறலாம்.

சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ் மாணவர்களிடையே, தமிழ் புழக்கம் குறைந்து வருவதைக் கண்டு, 'மெண்டரின் மொழி இயக்கம்' போன்று தமிழிலும் ஒரு இயக்கம் தொடங்கப்பட வேண்டும் என்று, 'தமிழில் பேசுவோம்' என்ற இயக்கம் தொடங்கி, 'தமிழில் பேசுவோம்' என்ற சுவரொட்டியை அச்சடித்து, பள்ளிகளுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கியது.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் 'தமிழ் மொழி மாதத்தில்' பல தமிழ் அமைப்புகளும் தங்களது பல்வேறு படைப்புகளைப் படைக்கும்.

தேசிய கலை மன்றம் (National Arts Council) இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சிறந்த சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்கும் தங்க முனை விருது வழங்கி கதை, கவிதை எழுதுபவர்களை ஊக்குவிக்கிறது.

மேலும் மாதந்தோறும் நடைபெறும் கவிச்சோலை, கவிமாலை போன்ற நிகழ்ச்சிகள் கவிதைகளையும் கவிஞர்களையும் போற்றுவதாக அமையும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பு கொடுக்கப்பட்டு, அந்தத் தலைப்பின் கீழ் கவிஞர்கள் அழகான கவிதைகளை வடித்து வாசிப்பர். சிறப்பான மூன்று கவிதைகளுக்குப் பரிசு வழங்கப்படும். மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருப்போரும் அவர்களுக்குப் பிடித்த, அவர்களை மிகவும் பாதித்த கவிதைகளைப் 'படித்ததில் பிடித்தது' அங்கத்தில் வாசிக்கலாம். ஒரு பேச்சாளரின் பேச்சும் இடம்பெறும்.

Toast Masters என்ற பேச்சாளர் மன்றம் மிகவும் பிரபலமான ஒன்று. உலகெங்கிலும் இந்த நிறுவனக் கிளைகள் உள்ளன. தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்தும் பேச்சாளர் மன்ற நிகழ்ச்சி (தமிழ்) மூலம் தமிழில் சரளமாகப் பேசவும் தமிழை நன்றாக உச்சரிக்கவும் வழி பிறக்கிறது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் 'முத்தமிழ் விழா' நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கு மரியாதை செய்யப்படும் விதமாக பாட்டு, நாட்டியம், நாடகம் நடைபெறும். சிங்கப்பூரில் இலக்கியத் தமிழை வளர்க்க உதவிய படைப்பாளர்களுக்கு 'தமிழவேள் விருது' வழங்கி முத்தமிழ் விழா நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படும்.

பாரதியார், பாரதிதாசனார், திருவள்ளுவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், கவிஞர் கண்ணதாசன் போன்ற மாபெரும் சான்றோர்களைப் போற்றி அவர்களின் நினைவாக நிகழ்ச்சிகள் நடைபெறும். கண்ணதாசன் விழாவையொட்டி நடைபெறும் கண்ணதாசன் பாட்டுப் போட்டிகள் எல்லா வயதினருக்கும் நடக்கும். போட்டியில் கண்ணதாசனின் அருமையான வரிகளையும் ஆழமான அர்த்தம் கொண்ட அவருடைய கருத்துகளையும் கேட்க முடியும்.

மக்கள் கழக நற்பணிப்பேரவை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை உயர்நிலை கல்வி மாணவர்களுக்கு நடத்தும் 'சொற்களம்' நிகழ்ச்சி, மாணவர்களிடையே, சிந்தித்து தங்கள் வாதங்களை எடுத்துப் பேசுவதற்கு ஒரு நல்ல தளமாக அமைகிறது. இவ்வாறு சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகள் தங்கள் பங்கைச் செய்து தமிழை வளர்த்து வருகின்றன.

கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகள்:

'தமிழ்த் திருநாள் விருது' தமிழ்த் திருநாள் குழுவினரால் தமிழுக்கு தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தின் விருதான கலாச்சார விருது (cultural medallion award) இலக்கியம், கலை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தேசிய மேம்பாட்டுக் கழகம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சிறந்த புத்தகங்களுக்கு சிங்கப்பூர் இலக்கிய பரிசு (National Book Development Council Literature Prize) வழங்குகிறது.

தாய்லாந்து மன்னரால் வழங்கப்படும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையே வழங்கப்படும் தென்கிழக்காசிய இலக்கிய விருது. (South East Asia Write award)

தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய கலைமையமும் மாண்ட் பிளான்க் பேனா தயாரிப்பு நிறுவனமும் வழங்கும் Mont Blanc விருது.

தமிழகத்திலிருந்து ஒளிபரப்பப்படும் ஒளி அலைகள் எவ்வளவு தூரம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது கேள்வியே. ஆனால், மக்களுக்கு நல்ல தமிழ் சென்றடைய வேண்டும் என்பதில் சிங்கப்பூர் ஊடகங்கள் மிகவும் முனைப்போடு செயல்படுகின்றன. தமிழ்க் காப்பியங்கள் முதல் இன்று உலகத்தில் நடப்பவை வரை மக்களுக்கு சிங்கப்பூர் தமிழக ஊடகங்கள் கொண்டு சேர்க்கின்றன.

சிங்கப்பூரில் திரு.கோ.சாரங்கபாணி அவர்களால் தொடங்கப்பெற்ற 'தமிழ் முரசு' நாளிதழ் மட்டுமே ஒரே ஒரு தமிழ் நாளிதழ். மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள், இளையர்களுக்காக பயனுள்ள செய்திகளைத் தாங்கி இளையர் முரசு, மாணவர்களின் கதைகள், கட்டுரைகளை வெளியிடுவதற்காக மாணவர் முரசு, மேலும் இந்தியா, இலங்கை, சினிமா, உள்ளூர் உலகச் செய்திகளுடன் தமிழ் முரசு வெளிவந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தங்கமீன் எனும் இணையப்பத்திரிகை, உள்ளூர் மற்றும், வெளியூர் எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. நல்ல பயன்தரும் செய்திகளுடன் அது வெளிவந்து கொண்டிருக்கிறது.

1936-ல் தொடங்கப்பட்ட வானொலி, இன்று 24 மணி நேரம் ஒலிபரப்பப்படும் ஒலி 96.8 எஃப்.எம் என அழைக்கப்படுகிறது. இது மக்களை தீவில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுடன் இணைக்க முயல்கிறது. எளிமை யாக எப்படித் தமிழில் உரையாடுவது, தமிழ் மொழியை எப்படி உச்சரிப்பது, தமிழ் மொழியைப் பற்றி விளக்கிக் கூறும் நிகழ்ச்சிகளும் திருக்குறளைப் பற்றி விளக்கும் நிகழ்ச்சிகளும் மக்களிடம் தமிழ்மொழியின் மீது ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும். தேவையில்லாமல் இங்கு தொகுப்பாளர்கள், ஆங்கிலத்தில் உரையாடுவது கிடையாது. அவர்கள் நல்ல தமிழிலேயே உரையாட விழைகின்றனர்.

வசந்தம் சென்ட்ரல் ஒளி அலை நாடகங்கள், யார் அந்த ஸ்டார், சலங்கை ஒலி போன்ற கலையை வளர்க்க உதவும் நிகழ்ச்சிகளையும் சுட்டீஸ் க்ளப் போன்ற சிறுவர் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் ஒளிபரப்புகிறது. ஒரே குரல் போன்ற சமூகப் பார்வையுடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதோடு, சூப்பர் ஜோடி போன்ற சுவாரஸ்யமான குடும்பப் பிணைப்பை உண்டு செய்ய உதவும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புச் செய்கிறது. ஊர்க் குருவி எனும் நிகழ்ச்சி நேயர்களை, தமிழகத்தின் பல ஊர்களுக்கு அழைத்துச் செல்கையில், சமையல் சவால் நிகழ்ச்சி, மக்களுக்கு இனிய உணவு வகைகளை அறிமுகம் செய்கிறது. ஹலோ டாக்டர் எனும் நிகழ்ச்சி மக்களுக்கு உடல் உபாதைகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதாக அமைகிறது.

மேலும் சன் மற்றும் விஜய் சேனல்களும் சிங்கப்பூரில் ஒளிபரப்பப்படுகின்றன.

கலைக்கூடங்கள்

சிங்கப்பூரில் பல கலைக்கூடங்கள் தீவு முழுவதும் உள்ளன. தமிழ் அமைப்புகளும், ஊடகங்களும் எவ்வாறு தமிழை வளர்க்க உதவி புரிகின்றனவோ, அதேபோல கலைக் கூடங்களும் தமிழின் பாரம்பரியத்தையும் இதிகாசத்தையும் போற்றி நிகழ்ச்சிகள் படைக்கின்றன. இதன் வழியும் தமிழ் சிங்கப்பூரில் சீரும் சிறப்புமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்களைப் போல தமிழ்க் கலைக் கூடங்களும் பல குறிக்கோள்களுடன் நல்ல செய்திகளைத் தாங்கி நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன.

கலைப்பித்தர்கள் கழகம் 1963-ம் ஆண்டு முதல் மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றிவருகிறது.

இராமாயணம், மகாபாரதம், சிவகாமியின் சபதம் போன்ற இதிகாசங்களை நாட்டிய வடிவில் மக்களிடையே கொண்டு செல்ல முற்படுகின்றனர். இப்படிப் புதுமையான பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக Temple of Fine Arts எனும் கலைக்கூடம் ஹோலிப் பண்டிகையை ஒட்டி ஸ்வர் ரங்காலி (Swar Rangali) என்கிற ஒரு நிகழ்ச்சியை நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இனிமையான பக்திப் பாடல்களைக் கொண்டு படைத்தத்தைக் குறிப்பிடலாம்.

இளைய தலைமுறையினருக்கு இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி (Bhaskars Arts Academy) வனமஹோத்சவம் எனும் நாட்டிய நாடக நிகழ்ச்சியை அரங்கேற்றியது. மறைந்து வரும் நாட்டுப்புறக் கலைகளையும் இவர்கள் மீண்டும் மலரச் செய்கின்றனர். இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ‘இராமாயணா’ ‘இந்திரஜித்’ என்ற தலைப்பில் இயல், இசை, நாடகம் உள்ளடக்கிய தெருக்கூத்து அரங் கேற்றப்பட்டது.

சீனர்கள் விரும்பும் பரதநாட்டியம்

பத்து வருடங்களுக்கும் மேலாக பரதக் கலையைக் கற்றுவரும் திருவாங் சீ மெங் எனும் சீன ஆடவர், ‘ஒரு தாய் குழந்தையைக் கொஞ்சுவது, மழை பெய்வது, கிளி பேசுவது என எதுவாக இருந்தாலும் கையில் முத்திரை பிடித்து, முக பாவத்தில் கூற முடிவது, ஒரு தெய்விகக் கலை’ என வியக்கிறார்.

கை, முகபாவம், உடலமைப்பின் மூலம் இக்கலையில் எண்ணற்ற செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்ல முடிவது, வேறு எந்தக் கலையிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் - அதுவே ஒரு சுவாரஸ்யம் என்கிறார் பரதநாட்டியம் பயிலும் மற்றொரு சீனப் பெண்மணியான கிரிஸ்டின் என்பவர். சிங்கப்பூரில் தமிழர்கள் அல்லாது சீனர்களும் இந்தியக் கலைகளைக் கற்று வருகின்றனர். ஆக சிங்கப்பூரில் பள்ளிகள், தமிழ் அமைப்புகள், ஊடகங்கள் யாவும் தமிழை வளர்ப்பதால் இங்கு தமிழ் மொழி வளர்ந்து வந்துள்ளது; வளர்கிறது; எதிர் காலத்திலும் வளரும் சாத்தியங்களே மிக அதிகம்.

1960 களில், சிங்கப்பூர் பொருளியல் நன்கு வளர்ச்சி அடையத் தொடங்கியவுடன், பல துறைகளிலும் வேலை வாய்ப்புகள் பெருகின. நல்ல வளர்ச்சியடைய கூறுகள் நிரம்பிய நாடாக சிங்கப்பூர் விளங்கியதால் தமிழகத்திலிருந்து அதிகமானோர் சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்தனர். அப்பொழுது வங்கிகளிலும் ஆசிரியர் பணியிலும் அதிக வேலை வாய்ப்புகள் இருந்தன.

1965-ல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து தனி நாடானதும், அதன் தாராள பொருளாதாரக் கொள்கையின் மூலம், பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள் பல தங்கள் கிளைகளை சிங்கப்பூரில் திறந்தன.

ஆக, நாளுக்குநாள் சிங்கப்பூருக்கு வேலை தேடி வரும் தமிழர்களின் எண்ணிக்கை கூடியது.

இப்படி தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் பல சமூகத்தினர் சிங்கப்பூர் வந்து நிரந்தரவாசம் / குடியுரிமை பெற்றிருந்தாலும் தங்கள் கலாச்சாரம், பேச்சு வழக்கு மறக்காமல், மாறாமல் வாழ்ந்து வருகின்றனர்.

சிங்கப்பூர், அதன் மக்கள் அனைவருக்கும் சம உரிமை கொடுத்து ஏற்றத்தாழ்வு அற்ற ஒற்றுமையான வாழ்க்கை வாழ வழிவகுத்துள்ளதைப்போல, அவரவரின் தனித் தன்மையுடன், பழக்க வழக்கங்களை மேற்கொள்ளவும் வழி வகுக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலத்தினர் சிங்கப்பூர் வந்து வேலை செய்கின்றனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் என காசி முதல் இராமேஸ்வரம் வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர்.

சிங்கப்பூரை தமிழர்கள் அதிகம் விரும்பக் காரணம்:

சிங்கப்பூர் நாட்டின் புவியியல் அமைப்பு, நாட்டில் நிலவும் சீதோஷ்ண நிலை, அதிகம் பேரை சிங்கப்பூர் ஈர்ப்பதற்கு ஒரு காரணம். தமிழ் மொழி இங்கு ஆட்சி மொழியாக இருப்பதும் அதன் வழி தொடர்ந்து பல நன்மைகள் இருப்பதுவே சிங்கப்பூர் நாட்டை பலர் விரும்புகின்றனர். வேகமாக உலகமயமாகி வரும் பொழுதும், இணையம் பல மாற்றங்களையும் புதுமைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதும் நம் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், மொழி இவற்றை மறவாமல் தங்கள் குழந்தைகள் வளர வேண்டும் என்பதே அனைத்து பெரியவர்களின் விருப்பம். எத்தனையோ நாடுகளில் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் பொழுதும், ஒரு சில நாடுகளில் மட்டுமே குழந்தைகள் பள்ளிகளில் தமிழைக் கற்க முடியும்.

பொதுவாக வெளிநாடுகளில் இந்தியர்கள் வாழும் பொழுது வறுமை எனும் பிடியிலிருந்து தப்பித்து விட முடியும். ஆனால் தாய் நாட்டின் ஈரத்தைப் பல நேரங்களில் தொலைத்துவிட நேரும். தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்கும் ஒரு நாட்டில், தமிழும் அதைச் சார்ந்த துறைகளும் அந்நாட்டில் வாழும் தமிழர்களின் பலமாக அமைந்துவிடும். ஆக, அந்த நாடு நம் தாய்நாட்டில் வாழ்வதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி வாழ்வின் ஈரத்தைத் தொலைத்துவிடாமல் வாழ வழிசெய்யும்.

நம் உணவு, பாரம்பரிய உடை, காய்கறி, பருப்பு, தானியம், தமிழகத்தின் பிரத்யேக பொருட்கள் என கடுகளவும் நம் கலாச்சாரம் குன்றாமல், நம் மொழியை மறக்காமல் வாழ்வதற்கு சிங்கப்பூரில் வழிகள் இருப்பதனால் பலரும் சிங்கப்பூரை தங்களது இருப்பிடமாக அமைத்துக் கொள்வதில் அதிக நாட்டம் காட்டுகின்றனர். சுருங்கச்
சொன்னால், இந்தியாவில் இருப்பதைப் போன்ற உணர்வு சிங்கப்பூரில் வாழும் பொழுது இருக்கும்.

சிங்கப்பூரில் வாழ்வதால் ஏற்படும் நன்மைகள்!

இப்பொழுது சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே விமானப் போக்குவரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் வாரம் 3 முறை இந்தியாவிற்கு இருந்த விமான சேவை இன்று ஒரு நாளில் பல விமான சேவையாக மாறியுள்ளது. சென்னையைத் தவிர திருச்சி, மதுரை, கோவை என்று நேரடியாக சிங்கப்பூரிலிருந்து பயணம் செய்ய வசதி வாய்ப்புகள் உண்டு. ஆக, காலை பலகாரத்தை சிங்கப்பூரில் சாப்பிட்டுவிட்டு விமானம் ஏறினால் 4 மணி நேரத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை சென்று மதிய உணவிற்கு தங்கள் ஊருக்குச் சென்று விடலாம். இப்பொழுது உள்ள மலிவுக் கட்டண விலை, விமானங்களில் பயணிக்கும் நாளுக்கு சில மாதங்கள் முன்னரே டிக்கெட் வாங்கிவிட்டால் மலிவான விலையில் நாம் பயணம் மேற்கொள்ளலாம். ஆக ஒரு வருடத்தில் பல முறை இந்தியா சென்று திரும்புபவர்கள் உண்டு. வார இறுதியில் ஏதாவது விசேடம் என்றால், அலுவலகத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கும் பட்சத்தில், விடுமுறை கிடைக்காவிட்டால், சனி, ஞாயிறு மட்டும் இந்தியா சென்று விசேஷத்தில் கலந்துகொண்டு திரும்புபவர்களும் உண்டு. எனவே, கூப்பிடும் தூரத்தில் தமிழகம் இருப்பது போன்ற ஒரு உணர்வே சிங்கப்பூரில் வாழும்பொழுது ஒருவருக்கு ஏற்படும்.

தொலைத் தொடர்பு அட்டைகள்' வழி இந்தியாவிற்குத் தொடர்பு கொள்வது மிகவும் எளிது. அதிக செலவு இல்லாமல் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் இந்த அட்டைகளை ஒருவர் தங்கள் பைகளில் வாங்கிப் போட்டுக் கொண்டு விட்டால் போதும், எப்பொழுது வேண்டுமானாலும் ஊருக்கு அழைத்து வீட்டில் என்ன சமையல் என்பது முதல் குழந்தைகள் செய்த சிறு சிறு குறும்புகள் வரை ஆசை தீர உரையாடி மகிழலாம்.

நாம் வீட்டுக்கு வெளியே சென்றால் சேலை கட்டிய தமிழ்ப் பெண்கள், நம் வீடு இருக்கும் பகுதியில் தமிழர்கள் நடத்தும் சிறு கடைகள், நம் வீட்டின் அருகாமையில் இருக்கும் ஈரச்சந்தை, விளையாட்டுப் பூங்கா என எங்கு சென்றாலும் தமிழ் முகங்களையும், தமிழர்களையும் பார்க்க முடியும். வெளிநாடுகளில் வசிக்கும்பொழுது, நம் தாய்நாட்டை விட்டு வேறு எங்கோ வந்து, பொருளாதாரத்திற்காக, நாம் பலவற்றை இழப்பதைப் போன்ற ஒரு உணர்வு ஒருவரிடம் ஏற்படுவது மிக இயற்கை. ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும்பொழுது இப்படிப்பட்ட ஏக்கம் நம்மிடையே மறைந்து போகும்.

நல்ல வசதியான வாழ்க்கை முறை!

சிங்கப்பூர் உலகத் தரம் வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் மிகவும் கட்டுக்கோப்பானது. விதிமுறைகளை சரியாகப் பின்பற்றி, முறையாக நடக்கும் அரசாங்கம். ஆக, சிங்கப்பூரில் மக்கள் லஞ்சம், ஊழல் ஏதுமின்றி உழைப்புக்குத் தகுந்த ஊதியம் பெற்று, ஊதியத்துக்குத் தகுந்த வாழ்க்கை வாழ முடியும்.

இங்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அழகாகப் போடப்பட்டிருக்கும் சாலைகளில், குறித்த நேரத்திற்கு நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றுவிட முடியும். இப்படி நாட்டில் நிலவும் வசதியான சூழலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்றில் நல்ல தண்ணீர், தூசி இல்லாத சூழல், தங்கு தடையற்ற மின்சாரம் என்று அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் நிறைய உண்டு. இங்கு வீடுகளில் குழாய்களில் 24 மணி நேரமும் தண்ணீர் வரும். அதுவும் சுத்தமான தண்ணீர். சிங்கப்பூரில் வீதிகளின் ஓரங்களில் புல்வெளிகள் அமைக்கப்பெற்றிருப்பதால், வீடுகளில் காற்று அடித்து தூசு அப்புவது கிடையாது. ஆக வீதிகள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அதேபோல வீட்டிற்குள்ளேயும் சுத்தத்தைக் கடைப்பிடிக்கலாம்.

பல அடுக்குமாடி வீடுகளில் இங்கு மக்கள் வசிப்பதால், அனைத்து வீவகப்பேட்டை வீடுகளிலும் மின் தூக்கிகள் இருக்கும். மேலும் கடைகள், அலுவலகங்களில் மின் தூக்கிகள் இயங்கிய வண்ணம் இருக்கும். ஆக வருடத்தின் 365 நாளும் 24 மணி நேரமும் மின்சாரம் இன்றியமையாத ஒன்று.

உலகின் உயர்தரமான வாழ்க்கை நம் தமிழ்க் கலாச்சாரத்தோடு கிடைப்பது சிங்கப்பூரை அதிக மக்கள் விரும்புவதற்கு முக்கிய காரணம்.

வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஈரச்சந்தையில் காய்கறி, பழம், 24 மணி நேர மருந்தகம், துணிக்கடை போன்றவை மேலும் அன்றாட வாழ்க்கையை சுலபமாக்கும். ஆக, நல்ல தரமான வாழ்க்கை வாழ அதிகம் வசதி படைத்திருக்க வேண்டும் என்பதோ, பூர்வீக சொத்து இருக்க வேண்டும் என்பதோ கிடையாது.

குறைந்த சம்பளம் பெறுபவராக இருப்பினும், நல்ல வசதியான வாழ்க்கை வாழ முடியும் என்பது பலர் சிங்கப்பூரை விரும்புவதற்கு ஒரு காரணம்.

மேலும் சிங்கப்பூரின் பாடத்திட்டம் பலரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

குழந்தைகள் நன்கு சிந்தித்துப் பாடத்தைப் புரிந்து கொண்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். ஆக, சிங்கப்பூரில் சிறந்த கல்வி கற்கவும் அதன் வழி நல்ல வேலைவாய்ப்பு பெறவும் முடியும். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியென்றால், உலகெங்கிலும் அங்கீகாரம் உண்டு.

சிங்கப்பூரில் இந்திய சர்வதேசப் பள்ளிகள் பல உண்டு. வேலை நிமித்தமாக சில ஆண்டுகள், சிங்கப்பூர் வந்து தங்கி விட்டு இந்தியா செல்ல நேருமேயானால், குழந்தைகளின் படிப்பு, மாறி மாறி படிக்கும்பொழுது பாதிக்கப்பட்டு விடும் என்கிற பயம் இல்லாமல் ஒரே பாடத்திட்ட முறையில் சர்வதேசப் பள்ளிகளில் படிக்கும் அதே படிப்பை ஊரில் சென்றும் படிக்க முடியும். இப்படிப்பட்ட சூழல் நிலவுவதும் இந்தியர்கள் / தமிழர்கள் எந்த தயக்கமுமின்றி சிங்கப்பூரை தேர்ந்தெடுக்க ஒரு காரணம்.

சிங்கப்பூர் பொருளாதாரம் நல்ல வலுவான நிலையிலேயே உள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் எந்தவொரு சவாலாக இருந்தாலும், அதை உடனுக்குடன் சரிசெய்து விடுவதால் பொருளாதார தடுமாற்றம் ஏற்பட்டு ஒருவரின் வேலை பறிபோய் விடுமோ? நாம் தாய்நாடு திரும்பிவிட வேண்டியது தானோ? என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாட்டில் நிலவும் பொருளாதார கொள்கை அனைவருக்கும் ஏதோ ஒரு வேலையை ஈட்டித் தர உதவும். இங்கு பல நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தங்கள் கிளைகளை அமைக்க முன் வருகின்றன. ஆதலால் வேலைவாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

சிங்கப்பூரில் படிப்பு, சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்தும் உலகத்தரம் வாய்ந்த ஒன்றாக விளங்குவதைப் போல மருத்துவ வசதியும் உலகத்தரம் வாய்ந்த ஒன்றே! மருத்துவமனைகளில் அவரவர் வசதிக்கு ஏற்றவாறு உள்ள கட்டணத்திற்குரிய படுக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவ சேவையே வழங்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல், சார்ஸ், கை, கால் வாய்ப்புண் நோய் என்று எது தலைதூக்கினாலும் அரசாங்கம் அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை விரைவாக எடுத்து விடும். சுகாதார அமைச்சில் இருந்து அதிகாரிகள் அடிக்கடி வீடுகளுக்கு வந்து பூஞ்செடி, வீட்டின் பின்புறம், மற்ற இடங்களில் தண்ணீர் தேங்கி அதனால் கொசு இருக்கிறதா என்று சோதனையிடுவர்.

மேலும், பலதுறை மருந்தகங்களில் கட்டணச் சலுகையில் மருத்துவ சேவை வழங்கப் பெறும். குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பு ஊசியைப் பற்றியும் ஒருவரின் முன்பதிவைப் பற்றியும் தொலைபேசியில் நினைவுபடுத்துவர். நாம் நேரம் தவறிச் சென்றால், எவ்வளவு நேரம் கழித்து வந்துள்ளோம் என்பதையும் மின்னியல் அறிவிப்புப் பலகை நமக்குச் சரியாக எடுத்துக் கூறும். அரை மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறீர்கள் என்று தாமதமான நேரத்தை அது சொல்லும். நல்ல தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நாடு சிங்கப்பூர் என்று நான் முதலிலேயே கூறியிருந்தேன். இந்த வளர்ச்சி சிங்கப்பூரின் ஒவ்வொரு இடத்திலும் பார்க்கலாம்.

பக்திக்குப் பஞ்சமும் இல்லை

சிங்கப்பூரில் கேளிக்கைகளுக்கு எந்த ஒரு குறையும் இல்லாதது போல் பக்திக்கும் பஞ்சமும் இல்லை. சிங்கப்பூர் தீவு முழுவதும் பல கோயில்கள் இருப்பதால், துர்க்கா பூஜை, பிரதோஷம், இராகுகால பூஜை, கார்த்திகை, சஷ்டி என்று அனைத்து விசேஷங்களிலும் ஒருவர் கலந்துகொள்ள முடியும். அதுவும் பல இடங்களில் ஒருவர் வீட்டிலிருந்தே நடந்து செல்லும் தூரத்தில் கோயில்கள் இருக்கும்.

முன்கூறியது போல, இங்கு சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி ஒளி அலைகள் ஒளிபரப்பப்படுவதால், ஊர் செய்திகள், ஊரில் நிலவும் நிலவரம் போன்றவற்றையும் ஊர் தொலைக்காட்சித் தொடர்களையும் மக்கள் கண்டு களிக்கலாம். தமிழ்த் திரைப்படங்கள் அனைத்தும் சிங்கப்பூரில் திரையிடப்படும். இன்னும் சொல்லப்போனால், சில படங்கள் ஊரில் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்னரே இங்கு திரையிடப்பட்டு விடும். ஆக அவரவரின் விருப்பப்படி, அவரவர்களின் ஹீரோக்கள் நடித்த படங்களை சிங்கப்பூரில் காண முடியும்.

இப்படி சிங்கப்பூரில் சுத்தம், தூய்மை, சுகாதாரம், தமிழ், நம் கலாச்சாரம், கோயில், திருவிழாக்கள், நல்ல கல்வி, சிறந்த மருத்துவசேவை, திடமான பொருளியல் என அனைத்தும் ஒன்று சேர ஒரே நாட்டில் இடம் பெற்றிருப்பதே இந்தியர்கள் / தமிழர்கள் சிங்கப்பூரை விரும்பக் காரணம்.

உலகத்தின் முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் நாடு சிங்கப்பூர். அதன் தொடர் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் நாட்டு மக்களின் உழைப்போடு வெளிநாட்டினர் பங்களிப்பும் உண்டு. அந்த வகையில் வெளிநாட்டினர் பலருக்கும் சிங்கப்பூரில் பல துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.

அப்படி நம் இந்திய, தமிழர்கள் பொறியாளர்களாக, ஆசிரியர்களாக, கணக்காளர்களாக, மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக, வங்கியாளர்களாகப் பல துறைகளிலும் வேலை பார்த்து வருகின்றனர். இந்தியத் தமிழர்கள் சிங்கப்பூரில் கால் பதிக்காத துறைகளே இல்லை. இவர்கள் நல்ல கல்வித் தகுதியின் அடிப்படையில் சிங்கப்பூர் வந்து வேலை செய்வதால், இவர்கள் தங்கள் குடும்பங்களுடன் குடியேறி, வீடு வாங்கி, தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி நண்பர்கள் கூட்டம், குடும்பம் என வாழ்ந்து வருகின்றனர்.

பெரிய கல்வித் தகுதியிருந்தால்தான் சிங்கப்பூர் நாட்டிற்கு விமானம் ஏற முடியும், சிங்கப்பூர் நாட்டைப் பார்க்க முடியும், பணம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணினால் மிகத் தவறு. அதிகம் படிக்காதவர்களும் சிங்கப்பூர் நாட்டிற்கு வந்து வேலை செய்து பணம் சம்பாதிக்க முடியும்.

தமிழகத்தின் பல பகுதிகளும், இன்றும் முன்னேறிக் கொண்டிருக்கும் பட்சத்தில் அதிகம் படிக்காத பின்தங்கிய மக்கள் அன்றாட தேவைகளைத் தவிர ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்று எண்ணினால், அவர்கள் ஆவலாக எதிர்நோக்கி இருக்கும் நாடுகள் துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளே.

பல சமயங்களிலும் தமிழகத்தில் வானம் பொய்த்துவிடும். நிலங்கள் வானம் பார்த்த பூமியாகிவிடும். அப்பொழுது மக்களும் வறண்டு போய்விடுகின்றனர். நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே இருக்கட்டும். தம் வாழ்க்கை செழிக்க வானத்தில் பறக்கும் விமானங்களில் ஏறி பயணிக்க எத்தனையோ வருடங்களுக்கு முன்பே தமிழன் பழகிவிட்டான்.

இப்படி இன்று பல தமிழர்கள் அநேக பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் வந்து வேலை செய்கின்றனர். இவர்கள் கட்டுமானத் துறைகளில் வேலை செய்வதற்காகக் குறிப்பிட்ட வருடங்களுக்கு சிங்கப்பூர் வந்து தங்கி, வேலை அனுமதிச் சீட்டு பெற்று வேலை செய்யும் தமிழர்கள். பங்களாதேஷ், இந்தோனேசியா, இந்தியா, நேபாள், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலிருந்து அதிகம் பேர் சிங்கப்பூர் வருகின்றனர். ஆண்கள் கட்டுமானத்துறை வேலைகளுக்காக சிங்கப்பூர் வருவதைப்போல் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்கள் பல நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர் வருகின்றனர்.

சிங்கப்பூரில் பணிப் பெண்களை அமர்த்திக்கொள்ள விரும்பினால் அரசாங்கத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் Levy என்று சொல்லப்படும் தொகையைக் கட்டிவிட்டு (இந்த Levy ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டும்) பணிப் பெண்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம். பெரும் பகுதியான வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், வீட்டு வேலைகள், குழந்தைகள், வீட்டில் இருக்கும் பெரியவர்களைக் கவனித்துக் கொள்ள பணிப் பெண்களை அமர்த்திக்கொண்டால் ஒருவர் அவரது அலுவலக வேலையைச் செய்வது மிக எளிது.

தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனின் சம்பாத்தியம் குடும்பத்தை நடத்தப் போதவில்லை. கணவன் வேலைக்குச் சென்றாலும், குடும்பத்தை நடத்த காசு தருவதே இல்லை. அவர் குடிப்பதற்கே அவர் சம்பாதிக்கும் பணம் போதவில்லை. குழந்தைகளையாவது நன்றாக வளர்த்து விட வேண்டும். இப்படிப் பல காரணங்களுக்காக பணிப்பெண்களாக வேலை செய்ய சிங்கப்பூர் வரும் பெண்களும் (குடும்பத் தலைவிகளும்) உண்டு.

‘எங்கள் அப்பா சரியில்லாததால், என் திருமணம் மற்றும் என் அக்கா, தங்கையின் திருமணத்திற்கு, சிங்கப்பூர் மாதிரி நாடுகளுக்கு வந்தால்தான் நாலு காசு கிடைக்கும். நகை, பணம், சாமான சேர்க்க முடியும்’ எனும் காரணங்களுக்காக வரும் இளம் பெண்களும் உண்டு. இப்படி வேலை அனுமதிச்சீட்டு பெற்று வேலை செய்வதற்காக தமிழகத்திலிருந்து வரும் ஆண்களும் பெண்களும் சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்காக உதவும் தமிழர்களில் ஒரு பகுதியினர் ஆகிவிடுகின்றனர்.

இப்படி சிங்கப்பூருக்கு வேலை செய்ய வரும் பெண்கள் அங்கு அவரவர் ஊர்களில் இருக்கும் ஏஜெண்டுகளைத் தொடர்பு கொண்டு அவர்கள் கூறும் அறிவுரையின்படி ஏற்பாடுகள் செய்து சிங்கப்பூர் நாட்டிற்கு வர வேண்டும். சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்யும் சூழலை அவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் ஓரளவிற்காவது அவர்களுக்கு உரையாடத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் ஒரு பரீட்சை இங்கு அவர்களுக்கு வைக்கப்படும்.

அந்தப் பரீட்சையில், அவர்கள் குழந்தைகளை, பெரியவர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும், வீட்டில் தங்களின் உரிமையாளர்கள் இல்லாதபொழுது யாராவது வந்தால் என்ன செய்வது. தொலைபேசியில் உரையாடுவது எப்படி? அதிகம் தண்ணீர் செலவிடாமல் இருப்பது எப்படி? மின்சாரத்தை சிக்கனமாகச் செலவிடுவது எப்படி? வீதிகளில் சாலைகளைக் கடப்பது எப்படி? பெரியவர்களிடம் எப்படி உரையாடுவது, பெரியவர்களை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வது, சமையல் செய்வது போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்களுக்குப் பரீட்சை வைத்து அதில் தேர்வானவர்களுக்கு மட்டுமே வேலை அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. மேலும் இங்கு அடுக்குமாடி வீடுகளில் இவர்கள் வேலை செய்வதால் இவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பாக எப்படி ஜன்னல், கதவுகளைத் துடைப்பது போன்றவற்றைப் பற்றியும் இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இப்படி தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வருபவர்களில் பத்தில் ஐந்து பேரே இந்தப் பரீட்சைகளில் தேர்வாகும் தகுதி பெற்றிருப்பதாக நீண்ட நாட்களாகச் சிங்கப்பூரில் பணிப்பெண் ஏஜென்சி நடத்தும் திருமதி பத்மா கூறுகிறார். சிங்கப்பூர் அரசாங்கத்தின் விதிப்படி இந்தப் பெண்கள் குறைந்தது எட்டாவது வரை படித்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் குறைந்தது பத்தாவது படித்திருந்தால்தான் இந்தத் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற முடிவதாகவும் அவர் கூறுகிறார்.

அதே சமயத்தில் பர்மா, பிலிப்பைன்ஸ் இந்தோ னேசியா, ஸ்ரீலங்கா சிங்களர்கள் போன்றவர்கள் பெரும் பகுதியானவர்கள் முதல் முறையிலேயே இந்தத் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

ஜூன் 2012 முதல் இந்தப் பரீட்சை எழுத வேண்டியது இல்லை என அவர் தெரிவிக்கிறார்.

தமிழகத்திலிருந்து வந்து தேர்ச்சி பெற்று வேலை செய்பவர்களுக்கு மாதம் சிங்கப்பூர் வெள்ளி 300 முதல் 350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, இவர்களின் முதலாளிகள் இவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து, இவர்கள் ஊர் சென்று திரும்பலாம். மாதம் ஒருமுறை அல்லது இருமுறை இவர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும்.

இப்படி சிங்கப்பூர் வந்து வேலை செய்வதാൽ இவர்களுக்குப் பல நன்மைகள் இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். முதலில் சுத்தமான சூழலில் இருப்பதே புதுத் தெம்பாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள், விரும்பும் மற்ற அம்சங்கள் நல்ல சுத்தமான தண்ணீரும் தங்கு தடையற்ற மின்சாரமும் நம் ஊர்களில் எவ்வளவு கஷ்டப் பட்டுப் பாத்திரம் கழுவினாலும் பாத்திரங்கள் இங்கு உள்ளதைப் போல சுத்தமாக இருப்பது கிடையாது என்கிறார்கள்.

அதேபோலதான் வீடு கூட்டிச் சுத்தம் செய்வதும்.இங்கு சாலைகளில் அதிகம் தூசு இல்லாததால் வீடுகளிலும் தூசு படிவது கிடையாது. மேலும் இங்கு உள்ள நல்ல தண்ணீரும் கழுவும் திரவியங்களும் இவர்களது வேலையைச் சுலபமாக்கி விடுகின்றன. மேலும் இங்கு வீடுகள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருப்பதால், வேலைகளை சுலபமாக குறைந்த நேரத்திலேயே முடித்துவிடவும் முடிகிறது. மைக்ரோ வேவ் அவனில் சாப்பாட்டைச் சூடு செய்வதாலும் துவைக்கின்ற மெஷின் போன்ற இயந்திரங்களாலும் மிகவும் எளிதாகவே இவர்களது வேலை முடிந்து விடுகிறது.

மாதம் ஒருமுறை இவர்களுக்கு விடுப்பு கிடைக்கும் சமயத்தில், தங்களது தோழிகளுடன் வெளியே செல்வது, சினிமா பார்ப்பது, கடை வீதிகளைச் சுற்றி வருவது என்று அவர்களது பொழுதைக் கழிக்கின்றனர். மேலும் நான் ஏற்கெனவே கூறியது போல இந்தியாவிற்குத் தொலைபேசியിൽ உரையாடுவதற்குத் தொடர்பு அட்டைகள் எளிதாகக் கிடைப்பதால் அந்தத் தொலை தொடர்பு அட்டைகள் மூலம் தங்கள் குழந்தைகளுடன், குடும்பத்தினருடன் தினமும் உரையாட முடியும். அதனால் குழந்தைகள் என்ன செய்கின்றனர். எப்படி இருக்கின்றனர் என்ற விவரம் தெரிய வருவதால் கவலையில்லாமல் தங்கள் வேலையில் கவனம் செலுத்த முடிகிறது.

தங்கள் தாய் அல்லது அக்கா, தங்கைகள் குழந்தைகளை நன்றாக ஊரில் கவனித்துக்கொள்ளும் பட்சத்தில் இவர்கள் நிம்மதியாகத் தங்களது வேலையில் கவனம் செலுத்தி, பணம் சம்பாதித்து தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் நகைகள் சேர்த்து, நல்ல எதிர்காலத்திற்கான வழியைத் தேட முடிகிறது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சரியான ஆள் இல்லாத பொழுதுதான் இவர்களின் வாழ்க்கை 'ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்' என்றது போல் ஆகிவிடுகிறது. நல்ல வீடுகளில் இவர்களுக்கு வேலை கிடைத்து விட்டால், அந்த வீட்டு நபர்களின் அன்பைப் பெற்று, அந்த வீட்டு நபர்களில் ஒருவராக இருக்கும்பொழுது இவர்களின் பாரம் மேலும் குறைந்து விடுகிறது.

கட்டுமானத் துறையில் வேலை செய்வதற்காக சிங்கப்பூர் வரும் ஆண்கள் தேர்ச்சி பெற்றவர்கள்/தேர்ச்சி பெறாதவர்கள் (skilled/unskilled) என இரு தரப்பினர் வருகின்றனர். தமிழகத்தில் சென்னை மற்றும் பல ஊர்களில் இப்படிப் பல கிளைகளில் தேர்ச்சி பெறும் மையங்கள் உள்ளன. இவர்கள் 50,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை செலுத்தி அங்கு தேர்ச்சி பெற்றுச் சான்றிதழ் பெற முடியும். சிங்கப்பூரில் பள்ளிக்கூடம், வீடு, பேட்டை வீடுகள், தொழிலகங்கள், மின்தூக்கி மேம்பாடு, பூங்காக்கள் கட்டுவதற்கு இவர்கள் பெரும்பாலானோர் வருகின்றனர்.

இங்கு கம்பிகட்டுவது, மின்சார வேலைகள், தரைகளில் கற்கள் பதிப்பது, ப்ளம்பிங் (Plumbing) வேலை செய்வதில் சான்றிதழ் பெற்றவர்கள் வந்து வேலை செய்ய வாய்ப்பு உள்ளது. சான்றிதழ் பெறாதவர்கள் (unskilled) பூந்தோட்டம், செடிகள் நடுவது shipyard போன்ற வேலைகள் செய்வதற்கு வரலாம்.

இப்படி சிங்கப்பூர் வருவதால் தோற்றம், பணம், வசதி அனைத்திலும் ஒரு மாற்றம் ஏற்படுவதாக இங்கு வந்து வேலை செய்யும் பலரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும் பழகிக் கொள்கின்றனர். நல்ல ஆடை உடுத்தவும், எப்படி எல்லோருடனும் பேசுவது, எப்படி ஒழுங்காக நடந்துக்கொள்வது எப்படிச் சாப்பிடுவது என்பது போன்ற பலவற்றையும் கற்று வாழ்வதால் அவர்களின் தோற்றத்தில் நல்ல ஒரு மாற்றம் ஏற்படுவதாகத் தெரிய வருகிறது.

சிங்கப்பூரின் தேக்கா வட்டாரத்தில் வார இறுதி நாட்களில் கட்டுமானத் துறையில் வேலை செய்பவர்கள் கூடி இருப்பார். அன்று பார்த்தாலே ஊர் வட்டார வழக்குகளில் உரையாடியவாறு நண்பர் கூட்டங்களைக் காணலாம். அதுவும் சிங்கப்பூர் தோரணைக்கு ஏற்றவாறு. இவர்கள் தங்குமிடங்கள் சிங்கப்பூரின் புறப்பகுதியில் இருப்பதால், வார இறுதியில் விடுப்பு கிடைக்கும்பொழுதுதான் தம் நண்பர்கள், தங்களைப் போலவே இங்கு வந்து வேலை செய்யும் தம் உறவினார்கள்,தம் ஊர் மக்கள் என்று ஒன்றுகூடி, தங்கள் ஊர்ச் செய்திகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிந்து கொள்வர். இவர்கள் இப்படி தேக்கா வரும்பொழுது ஊர் காய்கறி, ஊர் சாமான்கள் ஊருக்கு, குழந்தை குடும்பத்திற்கு அனுப்ப வேண்டிய சாமான்களை வாங்கிச் செல்வர்.

"முதல் இரண்டு மாதங்கள் வேலை பழகும் வரை கடினமாக இருக்கும். ஆனால் பழகிவிட்டால் நாமும் மற்றவர்களைப் போல நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்த்து நிலம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது" என்று கட்டுமானத்துறைக்கு வேலைக்கு வந்திருக்கும் ஒருவர் கூறுகிறார்.

இப்படி ஐந்து வருடம், பத்து வருடங்கள் வந்து தங்கி வேலை செய்பவர்களும் இருக்கின்றனர். 'குழந்தைகள் ஆசையாக ஏதாவது வாங்க வேண்டும் என்று கேட்டால், இந்தியாவில் சம்பாதிக்கும் பணம் சாப்பாட்டிற்கே சரியாகப் போய் விடுவதால், உடனே எதையுமே வாங்க முடியாது. ஆனால் சிங்கப்பூரில் சம்பாதிக்கும்போது எந்த ஒரு யோசனையுமில்லாமல், உடனே வாங்கிக் கொடுக்க முடிகிறது' என்றும் அவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு வெளிநாட்டுத் துணிமணிகள், மிட்டாய், ரொட்டி, சிறு குழந்தைகளுக்கு மாவு டின் போன்றவற்றை இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கூரியர் மூலம் அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இப்படி வந்த காரணத்தை சிறந்த முறையில் பயன்படுத்துபவர்களும் உண்டு. வழிதவறிச் சென்று விழி பிதுங்குவர்களும் இல்லாமல் இல்லை. கட்டுப்பாட்டோடு வாழ்ந்தால் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் அவர்கள் கையில். தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிகளுக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். தன் மனைவி, குழந்தைகளுக்கு தங்க நகைகள் வாங்கிக் கொடுக்க வேண்டும், சமுதாயத்தில் வசதி வாய்ப்புகளுடன் வாழ வேண்டும் என்கிற எண்ணத்துடன், குடும்பம், மனைவி, குழந்தை அனைவரையும் விட்டுவிட்டுத் தன்னந்ததனியாகக் கடினமாக உழைக்கும் இவர்களின் தன்னம்பிக்கையும் மனஉறுதியும் உழைப்பும் பாராட்ட வேண்டிய ஒன்றே.

உலகின் பல கலாச்சாரங்களில், சீனம் மற்றும் தமிழ்க் கலாச்சாரம இரண்டும் மிகவும் பழமை வாய்ந்தவை. இவர்களின் பழக்க வழக்கங்களும் கலாச்சாரமும் வலிமையான ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு எவ்வளவு முக்கியமோ, அதேபோல சீனர்களுக்கு அவர்களின் சீனப் புத்தாண்டு மிக முக்கியம். சிங்கப்பூரில் சீனப் பெருநாள் என்பது மிகவும் முக்கியமான பண்டிகை. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் சீனப் பெருநாளின் முதல் இரண்டு தினங்கள் சிங்கப்பூரில் பொது விடுமுறை. பல சீனக் குடும்பங்களில் சீனப் பெருநாளை குடும்பத்தினருடன் கொண்டாட வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்து செல்பவர்களும் உண்டு. சீனப் பெருநாளை ஒட்டி சைனா டவுன் அலங்கரிக்கப்படும். விதவிதமான அலங்கார பொருட்கள், ஆடைகள், சாமான்கள் மலிவு விற்பனையில் கிடைக்கப்பெறலாம். அலுவலகத்தில் வேலை செய்வோர் சிலர் விடுப்பு நாட்களைச் சேமித்து சீனப் பெருநாளை ஒட்டி விடுப்பு எடுத்து, ஆனந்தமாக சீனப் பெருநாளுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்வர்.

இப்பண்டிகையை ஒட்டி சீனர்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை எல்லாம் ஒருவர் பார்த்தால், 'அட, இவர்களுக்கும் நம்ம மாதிரியே நம்பிக்கைகளா?' என்று தோன்றும்.

நல்ல நாட்களிலும், மாலை வேளைகளில், விளக்கேற்றும் வேளையில் திறந்த வாசல் வழியாக, இலட்சுமி இல்லத்திற்குள் வருவாள் என்பது தமிழர்களின் நம்பிக்கை. சீனர்களும் தங்கள் புத்தாண்டு தினத்துன்று (ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் வரும்) வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைப்பர். அப்படிச் செய்தால் அதிர்ஷ்டக் காற்று கதவைத் தட்டும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

தமிழர்கள் எப்படி ஒரு பண்டிகைக்கு முன்னமே வீட்டைச் சுத்தம் செய்து விடுகிறார்களோ, அதேபோல் சீனர்களும் புத்தாண்டு பிறக்கும் முன்னரே, வீட்டைப் பெருக்கித் துடைத்து துப்புரவு செய்துவிடுவர். புத்தாண்டு அன்று இப்படி வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தால், அதிர்ஷ்டம் வீட்டை விட்டுப் போய்விடுமாம்.

புத்தாண்டுக்கு முன் வீட்டை அவர்கள் பெருக்கும்போது கூட் வீட்டு வாசல் நோக்கிப் பெருக்காமல், வீட்டின் உட்புறம் நோக்கிப் பெருக்கி குப்பையை வீட்டின் பின்புறமாக அகக்குகின்றனர். வீடு சுத்திகரிக்கும் பொருட்களையும் வீட்டின் பின்புறத்தில் வைத்துவிடுகின்றன.

புத்தாண்டு அன்று ஒருவர் என்ன செய்கிறாரோ அதுவே வருடம் முழுவதும் அவர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் என்று தமிழர்கள் நம்புவது போலவே சீனர்களும் நம்புவர். அதற்குச் சில உதாரங்களாகத் தமிழர்கள் எப்படி அமங்கலமான காரியங்கள், எதிர்மறையான சொற்கள், கோபப்படுதல், அழுதல், ஆத்திரப்படுதல், கடன் வாங்குதல், கொடுத்தல் போன்றவற்றைப் புத்தாண்டு மற்றும் நல்ல நாட்களில் தவிர்த்துவிடுவாரோ, அதேபோல சீனர்களும் தவிர்த்துவிடுகின்றன.

அன்று குழந்தைகள் தாங்கமுடியாத குறும்பு செய்தால் கூட கடும் சொற்களால் திட்டவோ, அடிக்கவோ செய்யாமல், பொறுமையாக இருக்கவே நினைக்கின்றனர். புத்தாண்டு ஆயิற்றே! அன்று போய் குழந்தைகளை அடிக்கலாமா? பரவாயில்லை என்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் தங்கள் கவனத்தைச் செலுத்தி விடுகின்றன.

தமிழர்கள் தங்கள் வீட்டில் உடம்பு சரியில்லாமல் இருப்பவர்களைக்கூட அந்தி சாயும் நேரத்தில் எழுந்து உட்கார வைப்பர்.முடியாதவர்கள், வயதானவர்கள் யாராக இருப்பினும் விளக்கேற்றி சாமி கும்பிடும்பொழுது எழுந்து உட்காருவது தமிழர்கள் வழக்கம்.

அதேபோலதான், சீனர்களிலும், உடம்பு சரியில்லாத நோயாளிகள் அழகாக உடை உடுத்தி, வீட்டு முகப்பில் வந்து அமர்ந்திருப்பர்.

நிறங்களும் சீன - தமிழர் கலாச்சார ஒற்றுமையின் மற்றெொரு மொழி சாராம்சம். தமிழர்கள் கருப்பு நிறத்தை அதிர்ஷ்டக் குறைவான நிறமாகக் கருதுவதைப் போலவே சீனர்களும் கருதுகிறார்கள். சிவப்பு நிறமே சீனர்களின் மங்கள நிறம். சீனர்களின் வீடுகளில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் காகிதங்கள் ஒட்டப்பட்டிருப்பதையும் பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

சீனப் பெருநாளன்று தாங்கள் உடுத்தும் உடையில் கருப்பு நிறத்தைத் தவிர்த்துவிடுகின்றன சீனர்கள். தமிழர்கள் சந்தோஷமான நிகழ்வுகளுக்குக் கருப்பு அல்லாத நிறமும் துக்க நிகழ்ச்சிகளுக்குக் கருப்பு நிற உடை உடுத்துவதும் வழக்கம்.

தமிழர்களுக்குப் பெரியவர்களின் ஆசீர்வாதம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல சீனர்களுக்கும் பெரியவர்களின் ஆசீர்வாதம் முக்கியம். நல்ல நாள் - பெரிய நாளன்று தமிழர்கள் வீடுகளில் பெரியவர்கள், சிறியவர்களை வாழ்த்திப் பணம் கொடுப்பதுபோலவே, சீனர்களும் சிவப்புக் காகிதப் பையில் வெள்ளி (சிங்கப்பூரில் பணத்தை இவ்வாறு குறிப்பிடுவர்) வைத்து, நீடூழி வாழவும் அனைத்து நலன்களும் செல்வங்களும் பெற்று வாழவும் வாழ்த்திக் கொடுப்பர். இந்தச் சிவப்புக் காகித உறைகளுக்கு Hong Bao என்று பெயர். சிங்கப்பூரில் சீனர்கள் மட்டுமின்றி தமிழர்கள் வீட்டிலும் Hong Bao என்ற இந்த பைகள் இருக்கும். எந்த ஒரு விசேஷத்திற்குச் சென்றாலும் இந்த Hong Bao பைகளில் சிங்கப்பூர் வெள்ளியை வைத்துக் கொடுப்பது வழக்கம்.

சீனர்களும் தமிழர்களைப் போல சகுனம் பார்ப்ப்பர். முந்தைய காலங்களில் ஜோதிடர்கள் குறிப்பிடும் நாட்களில், நேரங்களில்தான் எந்தவொரு காரியத்தையும் செய்வார்களாம். ஜோதிடர்கள் எந்த திசைகளில் சென்றால் நல்லது என்று சொல்கிறார்களோ, அந்த திசையில்தான் பயணம் செய்வார்களாம்.

கணினி மயமாகிவரும் இந்தக் காலத்தில் இளைஞர்களுக்கு ஜோதிடம், வாஸ்து, மூடநம்பிக்கை போன்றவற்றின் மீது எவ்வளவு நம்புகிறார்கள் என்பது ஒரு கேள்வியே.

மேலும் இறந்தவர்களை நினைத்து தமிழர்கள் படையல் படைத்து வழிபடுவதைப்போல் சீனர்களும் ஆகஸ்ட்,

செப்டம்பர் மாதங்களில் இறந்தவர்கள் மீண்டும் இவ் உலகத்திற்கு வந்து அவர்களுக்கு விருப்பமானதை உண்டு செல்வர் என்பது நம்பிக்கை. இந்தக் காலத்தில் சீனர்கள் இதை ஒரு விசேஷமாகவே கொண்டாடுவர். தமிழர்களைப் போலவே சீனர்களும் மறுபிறவி உண்டு என்பதை நம்புகின்றனர்.

வேகமாக உலக மயமாகி வரும் இந்தக் காலத்தில் ஓர் இனம் மற்ற இனத்தைத் தழுவி வாழ்வதற்குப் பல சான்றுகளைக் கூறலாம். சிங்கப்பூரில், சீனர்கள் தமிழ்க் கடவுளை வழிபடுவது, நம் கலைகளை ஆர்வத்துடன் கற்றுக்கொள்வது, உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

சீனர்களுக்குத் தமிழினத்தின் மீது ஈடுபாடு வர ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் உண்டு. அது எதுவாக இருப்பினும் அவர்களின் நம்பிக்கையும் ஈடுபாடும் அசைக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது என்பது மட்டும் உறுதி.

தாய் நாடு, அண்டை நாடு என எந்த நாட்டிலும் இல்லாத அளவு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவுகிறது.

விண்ணிலும் (விமானம்) மண்ணிலும் (நாடாளுமன்றம்) தமிழைக் கேட்கலாம், தமிழர் ஒருவர் நாட்டின் அதிபராக இருந்திருக்கிறார்; மந்திரிகளில் சிலர் தமிழர்கள்; பாலப் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் மொழியைக் கற்க வாய்ப்பு; முதுகலைப் பட்டம் மட்டுமல்ல... முனைவர் பட்டமும் பெற முடியும்; தமிழ் மொழியைத் தாலாட்டி சீராட்ட பல அமைப்புகளும்; எண்ணற்ற வகையில் தமிழ்ப் படைப்புகளும்; ஒளியிலும் ஒலியிலும் அழகிய தமிழ் மகளாக வலம் வந்து கொண்டிருக்கும் தமிழ்.

சான்றோர்கள் - அறிஞர்களுக்கு வருடம் தோறும் எடுக்கும் விழாக்கள், கடல் கடந்த எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழ் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை, தமிழகத்தை விஞ்சும் அளவுக்கு கமகமக்கும் பக்தி மணம், தமிழர்களுக்குண்டான விசேடங்கள் அனைத்தையும் கொண்டாட வசதி வாய்ப்பு, தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை, தமிழ்க் கலைஞர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட விருதுகள், சிறப்பாக செயல்படும் தமிழ் அமைப்புகளுக்கு அரசாங்கத்தின் உதவித்தொகை, தமிழ்க் கவதை வாசிக்கலாம், தமிழ்க் கலையைக் கற்கலாம், இதற்கும் மேலாக தமிழ் இங்கு ஆட்சி மொழி.

அனைத்து விதங்களிலும் தமிழ் போற்றப்படுகிறது. இப்படி சிங்கப்பூரில் தமிழ் சிறப்பாக வாழ்வதற்கும் வளர்வதற்கும் எல்லாவிதங்களிலும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாதது. ஆக, சிங்கப்பூர் தமிழ் மொழி வளர்ச்சியில் அரசாங்கத்தின் பங்கு போற்றத்தக்கது.

BIBLIOGRAPHY:

  • http://en.wikipedia.org/wiki/Tamils-inSingapore
  • http://www.streetdirectory.com/travel-guide/singapore/facts-old-singapore/354/the-founding-of-singapore8217s-tamil-schools.php
  • http://onlinevoice.info/tamil-classical-language-dr-sp-thi-nappan/
  • Dr. A.R.Sivakumaran, Marabu Kavithai, History of Singapore Tamil Literature An Introduction 1872-2010, Association of Singapore Tamil Writers, 2011
  • Mr. Doorai Manickam, Illakiyam Valartha amaippukal, History of Singapore Tamil Literature An Introduction 1872-2010, Association of Singapore Tamil Writers, 2011
  • M.Elias, Tamila Vel Saarangapani, 1998
  • Krishnan, R.B. Indians in Malaysia: A pageant of Greater India. Singapore : The Malayan Publisher, 1936
  • Mahajani, Usha. The Role of Indian Minorities in Burma and Malaya. New York: Wora and Co-publishers private Limited, 1960
  • palaniappan A, 'Arulmigu Thendayuthapani Temple', In Sri Thendayuthapani Kumbabishega Souvenior, 1996, pp
  • Ramanathan Chettiar, History of Nattukottai Chettiars, Chennai, Meyyappan Pathipakam, 1953
  • Sandhu, K.S, 'Indian immigration and settlement in Singapore in Indian Communities' in Sandhu K.S. & Mani A (eds), Indian Communities in South East Asia, Singapore, Institute of South East Asian Studies, 1993, reprint 2006 pp714-783
  • Soundara Nayaki Vairavan, Singapore oru mulumaiyana paarvia, Chennai, Manimekalai prasuram, 2008
  • Dr. SP. Thinnappan and Mrs Soundara Nayaki Vairavan, Nagarathars in Singapore, Singapore, Navaso Pte Ltd, 2010
  • Tamil Murasu dated 1.9.2010

Have a question about the books?
Feel free to connect with the author.

+ 0065 96510427

Send me a message