சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை

சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை



ஒரு தமிழ்ப் பெண் தம்முடைய திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் பணியாற்றும் கணவனுடன் வாழ்வதற்காக சிங்கப்பூருக்குப் பயணமாகிறார். 15 ஆண்டுகள் ஓடி விடுகின்றன. அந்த 15 ஆண்டுகளை அவர் எப்படி கழித்தார், தம்முடைய வாழ்க்கை அனுபவங்களை எப்படித் துய்த்தார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்னுடைய அன்பிற்குரிய சௌந்தரநாயகி எழுதிய இக்கட்டுரைத் தொகுப்பைப் படித்துப் பாருங்கள்.

தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சௌந்தரநாயகி சிங்கப்பூரின் கதையையும் சொல்கிறார். அது எப்படிப்பட்ட கதை? முன்னரும் பின்னரும் சிங்கப்பூருக்கு ஈடான ஓர் உதாரண நாட்டைச் சொல்ல இயலாது. 50 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் ஒரு சிறிய துறைமுக நகரமாக இருந்தது. இன்று சிங்கப்பூர் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ‘உலக நகரம்’ (International City) என்று பாராட்டப்படுகிறது. உலகின் பல நாடுகளைச் சார்ந்த மக்கள் - குறிப்பாக மிகத் திறமையானவர்கள் - தங்கள் பணி வாழ்க்கையை மனமுவந்து சிங்கப்பூரில் அமைத்துக் கொள்கிறார்கள். ஒழுங்கு, கட்டுப்பாடு, தூய்மையான சுற்றுச் சூழல், வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், உயர் கல்வி நிறுவனங்கள், உயர் மருத்துவமனைகள், கலைக் கூடங்கள் என்று மனிதனின் வேட்கைகளையும் கற்பனைகளையும் நிஜமாக்கியிருக்கும் நகர்- நாடு (City State) சிங்கப்பூர்.

வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர்களில் பலர் பெரிய மனப் போராட்டத்திற்கிடையே வாழ்கிறார்கள். தம்முடைய நாடு வெளிநாடா, தாய் நாடா என்ற கேள்விக்குப் பலர் பதில் தேடுகிறார்கள். தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். மனக்குரங்கு அடிக்கடி தாய்நாட்டுக்குத் தாவி விடுகிறது. இதனால் குடியேறிய நாட்டின் வரலாறு, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், அந்நாட்டு மக்களின் பண்பியல்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கு ஏற்படுவதில்லை. 20, 30 ஆண்டுகள் ஒரு வெளிநாட்டில் வாழ்ந்த போதும், ஒட்டாத வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

சௌந்தரநாயகி வித்தியாசமானவர்.

சிங்கப்பூரின் வரலாற்றை ஆர்வத்துடன் படித்து அறிந்திருக்கிறார். ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில் சிங்கப்பூரைப் பல முறை வலம் வந்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தையும் அனுபவித்திருக்கிறார். சிங்கப்பூரின் உணவுகளை ருசித்திருக்கிறார். அவர் போகாத - பொருள் வாங்காத - கடைகளே இல்லை என்பதைப் போல் கடைத் தெருக்களைச் சுற்றி வந்திருக்கிறார். குடியேறிய நாட்டை இப்படி அனுபவிப்பதற்கு ஓர் அரிய மனப்பான்மை வேண்டும். சௌந்தரநாயகிக்கு அந்தப் பரந்த, விரிந்த மனப்பான்மை இருக்கிறது.

சிங்கப்பூரில் சீன, மலாய், இந்திய இனத்தினர் இணக்கமாக வாழ்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மேற்கு நாடுகளின் மக்கள் (பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்) சிங்கப்பூரில் குடியேறத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படிப் பல இன மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் இந்திய மற்றும் இந்து கலாச்சாரம் எப்படி தழைக்கிறது என்பதையும் ஆசிரியர் விவரிக்கிறார். குறிப்பாகத் தமிழ் மொழி, தமிழர்களின் கலை மற்றும் கலாச்சாரம், தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, இரு இனத்தினரின் பொதுவான நம்பிக்கைகள் ஆகியவற்றை அறிந்து, உணர்ந்து, அனுபவித்து எழுதியிருக்கிறார்.

ஒரு காலத்தில் சிங்கப்பூர் பலருக்கு எட்டாக் கனியாக இருந்தது. எளிய வேலை வாய்ப்புகளைத் தேடி, வேண்டா வெறுப்பாக பலர் அந்த நாட்டுக்குச் சென்றார்கள். வசதி நிறைந்த சிலர் சிங்கப்பூரின் கடைத் தெருக்களால் ஈர்க்கப்பட்டுத் தங்களுக்குத் தேவையான, (தேவையில்லாத) ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்காகச் சிங்கப்பூருக்குச் சென்றார்கள். இன்று யாரும் சிங்கப்பூருக்குச் செல்லலாம் என்ற அளவுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன; பயணச் செலவுகள் குறைந்துவிட்டனர். சிங்கப்பூருக்குப் பயணிப்பதற்கு முன் அந்த நாட்டைப் பற்றிய ஒரு தமிழ் நூலைப் படிக்க விரும்புவோருக்கு சௌந்தரநாயகியின் இக்கட்டுரைத் தொகுப்பு மிகப் பயனுள்ள, விருப்பமான நூலாக அமையும். அது மட்டுமல்ல, சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக வாழ்பவர்களும் இந்நூலைப் படிக்க வேண்டும். அவர்கள் தெரிந்து கொள்ளாத செய்திகள், பார்த்திருக்காத இடங்கள், உணராத பண்பியல்புகள், துய்க்காத அனுபவங்கள் சிங்கப்பூரில் நிறைய, நிறைய உள்ளன என்பதை அவர்கள் அறிந்து வியப்படைவார்கள்.

சௌந்தரநாயகியின் எளிய தமிழ் நடை என்னைக் கவர்ந்தது. ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு தெளிந்த நீரோடை போன்ற எழுத்து படிப்பதற்குச் சுகமாக இருக்கிறது. படித்து முடித்தவுடன் மனம் நிறைந்திருக்கிறது.

சௌந்தரநாயகிக்கு என்னுடைய பாராட்டுக்களையும், நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ப.சிதம்பரம்

பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன்,

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் &

சிம் பல்கலைக் கழகம்

சிங்கப்பூர் இந்த உலக வரைபடத்தில் ஒரு சிறு புள்ளி, எனினும் நிலமகளின் திலகம் போலத் திகழ்வது. நாடாகவும் நகரமாகவும் கருதத் தக்க நற்பேறு உடையது. “உறு பசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு”, “ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே வேந்து அமைவில்லாத நாடு” என்னும் திருவள்ளுவர் கூறும் நாட்டிற்குரிய இலக்கணத்துக்கேற்ற பண்புடையது. அதாவது செல்வச் செழிப்பும், நல்ல நேர்மையான ஆட்சியும் சேர்ந்திருக்கும் சிறப்புடையது. நகரம் என்னும் நோக்கில் மேற்கத்திய நாகரிகமும், கிழக்கத்திய பண்பாட்டுக் கூறுகளும் இணைந்து இலங்கும் இயல்புடையது.

‘விழவறா மூதூர்’ என்று சங்க இலக்கியம் வருணிப்பதைப் போலப் பல்வேறு இனத்தவர், பல்வேறு சமயத்தினர் ஆண்டு தோறும் கொண்டாடும் விழாக்களால் அழகு பெற்று விளங்கும் ஆற்றலும் சிங்கப்பூருக்கு உண்டு. மேலும் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமமில்லை” என்னும் திருமூலர் கூற்றுக்கேற்பச் சமய நல்லிணக்கமும் இன நல்லிணக்கமும் ஒருசேரப் பெற்று விளங்கும் ஓங்கு புகழும் சிங்கப்பூருக்கு உள்ளது. எதிலும் உன்னதத்தையே இலக்காகக் கொண்டு உழைத்தால் உயர்ந்து உலகப் புகழ் பெற்றுத் திகழும் நாடு சிங்கப்பூர்.

தமிழை அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் தமிழை ஒலிக்கச் செய்ததுடன் தமிழ்க் கல்வி, இலக்கிய வளர்ச்சிக்குப் தன்னிகரற்ற உதவிகளைத் தந்து நிற்கும் நாடு சிங்கப்பூர். மண்ணில் மட்டுமின்றி விண்ணிலும் (சிங்கப்பூர் விமானம் வழி) தமிழை ஒலிக்கச் செய்த மாண்பும் சிங்கப்பூருக்கு உண்டு. ஆசியான் கூட்டமைப்பில் தமிழைக் கொண்டு நிறுத்தும் தன்மையும் சிங்கப்பூர்ுக்கே இருக்கிறது. சிங்கப்பூர் நாணயத் தாளில் ‘சிங்கப்பூரி’ எனத் தமிழில் எழுதப்பட்டிருப்பதையும் நாம் காண முடிகிறது. இப்போது சிங்கப்பூர் குடியரசின் அதிபர் மாண்புமிகு எஸ்.ஆர்.நாதன் ஒரு தமிழர். அமைச்சர்களில் பலர் தமிழர் என்ற சிறப்பும் இப்போது சிங்கப்பூருக்கு இருக்கிறது.

தூய்மையும், தூங்காத துறைமுகமும், இயற்கை எழிலும் கொண்டு பூந்தோட்டங்களால் பொலிவு பெற்று விளங்கும் பசுமை நகரமாகிய சிங்கப்பூரைப் பற்றித் திருமதி சௌந்தரநாயகி வயிரவன் எழுதிய ‘சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை’ என்னும் நூலைப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இவர் தமிழகத்தில் பிறந்து, அங்கே இளநிலைப் பட்டம் பெற்றவர். தகவல் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

சிங்கப்பூர் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழவேள் கோ.சாரங்கபாணியின் வலக்கரமாக விளங்கிய நாச்சியாபுரம் அருள் நெறிச் செல்வர் சண்முகனாரின் பேரனும், சிங்கையில் புகழ் பெற்ற மருத்துவரான திரு. வயிரவனின் மகனுமான வயிரவனை மணந்து சிங்கப்பூருக்கு வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை சிங்கப்பூரை நன்கு ஊன்றிப் பார்த்துள்ளார். அந்த ஆழமான பார்வையை இந்தப் நூலில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயற்குழு உறுப்பினராகவும், சமூக மன்ற நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட ஒருவராகவும், கலையார்வம் கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பலவற்றിൽ பங்குபெற்ற ஒருவராகவும், ஆய்வு நாட்டமிக்கவராகவும், நான் சௌந்தரத்தை அறிவேன். மேலும் ஆங்கில மொழியில் அவர் நடத்திவரும் இணைய இதழ் ஒன்றின் வாயிலாக அவரின் எழுத்தாற்றலையும் இதழியல் திறமையையும் நான் நன்கு அறிவேன். இவ்வாறு சௌந்தரம் தாம் பெற்ற அனுபவங்களையும் பலரைப் பேட்டி கண்டு அவர்கள் கூறிய கருத்துக்களையும் இந்நூலில் தொகுத்து வைத்துள்ளார். பார்த்தலும் வைத்தலும் இணைந்து இந்தப் பார்வை நூல் அமைந்திருப்பது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

சிங்கப்பூர் வரலாறு, சுற்றிப் பார்க்கும் இடங்கள், உண்டு சுவைப்பதற்கு உரிய இடங்கள், கண்டு மகிழ்வதற்குரிய காட்சிகள், பொருட்கள் வாங்குவதற்குகேற்ற கடைகள், வழிபாட்டுக்குரிய இடங்கள், தமிழ் மொழி கலாச்சாரம் நிறுவனங்கள் முதலாவற்றைப் பற்றி அறிவதற்குரிய தகவல் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. இறுதியில் சீனர்கள் தமிழர்கள் ஆகிய இரண்டு இனத்தாரிடையே காணப்படும் நம்பிக்கைகள், ஈடுபாடுகள் பற்றி இந்நூலாசிரியர் விளக்கி இருப்பதும் இந்நூலின் இன்னொரு சிறப்பாகக் கூறலாம். இந்த நூல் திருமதி சௌந்தரநாயகியின் முதல் நூல். எனினும் சிங்கப்பூரைப் பற்றிய பல செய்திகள் அடங்கிய கருவூலமாகத் திகழ்கிறது. இதனை எழுதி வெளியிடும் திருமதி. சௌந்தரநாயகிக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல பல நூல்களை இவர் எழுத வேண்டுகிறேன். இந்நூலைத் தமிழ் அன்பர்கள் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

சிங்கப்பூர்,

22.08.2008

சுப. திண்ணப்பன்

நா. ஆண்டியப்பன்

தலைவர்,

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயற்குழு உறுப்பினரான சகோதரி திருமதி. சௌந்தரநாயகி வயிரவன் அவர்கள் சிங்கப்பூரைப் பற்றி தினமணி கதிர், சிநேகிதி, ஆச்சி வந்தாச்சு போன்ற இதழ்களில் எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.

நவீன சிங்கப்பூர் உருவான விதம், பெருமைப்படத்தக்க அதன் மாபெரும் வளர்ச்சி, அரசாங்கத்தின் நேர்மை, செயல்பாடு, பார்க்க வேண்டிய சிறப்பான இடங்கள், மக்களின் பழக்க வழக்கங்கள், கலை, கலாாரம், கோயில்கள், திருவிழாக்கள், உணவகங்கள் என்று பெரும்பாலும் எல்லாவற்றைப் பற்றியும் திருமதி சௌந்தரம் எழுதியுள்ளார்.

செந்தோசா, ஜூரோங் பறவைப் பூங்கா, விலங்கியல் தோட்டம், பூமலை, சிங்கப்பூர் அறிவாலயம், சிங்கப்பூர் அறிவியல் நிலையம், பனி நகரம், அருங்காட்சியகம், பூகிஸ் ஜங்ஷன், போட் கீ, கிளார்க் கீ உள்ளிட்ட இடங்கள் பற்றி மிக விரிவாக விவரித்துள்ளார்.

சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் கலை, கலாச்சாரத்தில், வழிபாடுகளில் உள்ள பல பொதுவான பழக்க வழக்கங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது.

சிங்கப்பூரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு இந்த நூல் ஓர் அற்புதமாக வழிகாட்டி. தெரிந்தவர்கள்கூட அறியாத பல விவரங்கள் இந்நூலில் காணக்கிடக்கின்றன. மருத்துவமனை போன்றே செயல்படும் உணவகம் பலருக்குப் புதிய செய்தியாக இருக்கக்கூடும்.

நூலாசிரியர் தனது இணைய இதழுக்காக சிங்கப்பூருக்கு வருகை புரிந்த பல பிரபலங்களை நேர்காணல் கண்டுள்ளார். இந்திய நிதியமைச்சர் திரு. ப.சிதம்பரம், கவிப்பேரரசு வைரமுத்து போன்றவர்கள் நேர்காணல்களில் சிங்கப்பூரைப் பற்றிக் கூறிய கருத்துக்களும் நூலின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூரின் வரலாறு பற்றி, அது எவ்வாறு மலேசியாவில் இணைந்தது, அதிலிருந்து ஏன் வெளியேற்றப்பட்டது போன்ற விவரங்களை இன்னும் சற்று விரிவாக எழுதியிருந்தால் நூல் மேலும் சிறப்புப் பெற்றிருக்கும். அதேபோல், இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் குறிப்பிட்டிருக்கலாம்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதோறும் நடத்தும் கவிச் சோலை நிகழ்ச்சிக்குப் பொறுப்பு வகிக்கும் இருவரில் ஒருவரான திருமதி சௌந்தரநாயகியின் முதல் படைப்பு இது.

எல்லாரும் கட்டுரை எழுதிவிடலாம், ஆனால் அதைச் சுவையாக எழுதுவதற்குத் திறமை வேண்டும். அந்தத் திறமை திருமதி. சௌந்தரநாயகியிடம் ஓரளவு கைவரப்பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

அவர் இன்னும் சிறப்பான நூல்களை இயற்றி வெளியிட வேண்டும் என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

நா. ஆண்டியப்பன்

30.09.2008

சிங்கப்பூர் வசதி வாய்ப்பு மிகுந்த அழகான நாடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும் என்கிற நிலை மாறி, இன்று சிறுக சிறுக சேமித்தால், யார் வேண்டுமானாலும் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யலாம் என்கிற நிலைமை உள்ளது. அப்படி இந்தியாவில் வாழும் மக்களுக்கு எளிதாக எட்டக் கூடிய நிலையில் உள்ள நாடு சிங்கப்பூர்.

எண்ணற்ற மக்கள் சிங்கப்பூருக்கு வந்து செல்லும் பொழுது, எத்தனையோ பேர், 'சிங்கப்பூர் எப்படி இருக்கும்?', 'அங்கு தமிழர்கள் இருக்கிறார்களா?', 'கோயிலுக்கெல்லாம் அங்கே போக முடியுமா?' என்று கேட்பவர்களும் அதிகம் பேர்.

ஏழு வருட காலமாக நான் 'தினமணி கதிர், குமுதம் சிநேகிதி, ஆச்சி வந்தாச்சு போன்ற இதழ்களுக்கு சிங்கப்பூர் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறேன்.

ஒரு நிகழ்ச்சியில் 'கல்கண்டு' பத்திரிகையின் ஆசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. நான் இதுவரை எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

அந்தக் கட்டுரைகள் அவ்வப்போது எழுதியதால், அவற்றை ஒரு புத்தகமாகத் தொகுத்தால், எப்படி இருக்குமோ? என்ற எண்ணமும் என்னிடையே தோன்றியது.

Justice of Peace என்று பட்டம் வழங்கப்பட்ட ஜெ.பி. சண்முகம் செட்டியார் அவர்களின் பேரனும், சிங்கப்பூரில் நல்ல புகழ்ழ்பெற்ற மருத்துவரான டாக்டர் வயிரவ அவர்களின் மகன் வயிர.வயிரவன் அவர்களை 1993ஆம் ஆண்டு மணம் முடித்து 15 ஆண்டு காலமாக சிங்கப்பூரில் நான் வசித்து வருகிறேன். சிங்கப்பூரின் பொது வாழ்க்கை பற்றி சாதாரண மனிதன் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு தலைப்பின் கீழ் கட்டுரையாக ஏன் எழுதக்கூடாது? என்கிற எண்ணமும் என்னிடையே தோன்றியது.

ஆக, மேலே குறிப்பிட்டுள்ள பத்திரிகைகளில் வெளியான என் கட்டுரைகளுடன் சேர்த்து, சிங்கப்பூர் பற்றிய நடைமுறை தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட புத்தகம் இது.

ஆக, சிங்கப்பூர் நாட்டைப் பற்றி தெரிந்துகொண்டு, சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க இந்த புத்தகம் தூண்டுமேயானால், அதுவே இந்த புத்தகத்தின் வெற்றி.

தமிழ்வாணன் சகோதரர்களின் முதல் சந்திப்பே நீண்ட நாட்கள் அறிமுகம் உடையவர்களைப் போல, ஒரு நல்ல நட்பான சூழலை ஏற்படுத்தியது. சகோதரர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை, அவர்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை போன்றவை மேலும் அவர்களிடையே உள்ள என் மதிப்பைக் கூட்டியது. என் மீது நம்பிக்கை வைத்து, என் முதல் புத்தகத்தை அவர்கள் பிரசுரிக்க இசைந்ததற்கு அவர்களுக்கு என்னுடைய நன்றி!

இந்தப் புத்தகம் உருவானபொழுது, இதற்குப் பின்னால் உறுதுணையாக நின்று, பல வகையிலும் யோசனை கூறிய இருவரை நான் குறிப்பிட வேண்டும். ஒருவர் திரு. பொன் மகாலிங்கம் அவர்கள். மற்றொருவர் திரு. பெத்தாச்சி பிச்சப்பன் அவர்கள்.

நான் எழுதிய கட்டுரைகளை சிங்கப்பூர் பற்றி நன்கு அறிந்த ஒருவர் வாசித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தபொழுது, என் நினைவிற்கு சட்டென்று வந்த நபர், சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 செய்திப் பிரிவில் பணிபுரியும் பண்பாளர் திரு. பொன் மகாலிங்கம் அவர்கள்.

அடுத்தவர்களின் கருத்தை மதித்து நடப்பவர். மிகவும் எளிமையாக, தோழமையுடன் பழகும் ஒருவர். பெண்களை மதித்து நடக்கும் ஒரு சிறந்த மனிதர்.

மற்றொருவர், அமெரிக்காவில் வசிக்கும் என் சகோதரியின் கணவர் திரு. பெத்தாச்சி பிச்சப்பன் அவர்கள். ஐபிஎம் (IBM) நிறுவனத்தில் பணிபுரியும் திறமைசாமி; ஆனால் விமர்சனத்தை விரும்பாதவர். உலகப் புகழ் பெற்ற டியூக் பல்கலைக் கழகத்தின் பட்டதாரி; ஆனால் அடக்கமானவர். என் சகோதரியின் கணவர்; ஆனால் என் இரு சகோதரர்களைப் போல் என் மீது அதிக பாசம் கொண்டவர்.

நல்ல பல யோசனைகளை கூறி இந்தப் புத்தகம் சிறப்பாக வெளிவர உதவிய அவர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றி.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன் அவர்கள் ‘செய்வதை திருந்தச் செய்’ என்ற கூற்றுக்கு இணங்க செயல்படுபவர். அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு வாய்ப்பு. எதையும் திறம்படச் செய்ய நான் அவளிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை அளித்த அவருக்கு என் நன்றி!

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன் அவர்கள் ஒருவரை நன்கு பாராட்டி ஊக்குவிக்கும் ஒரு சிறந்த மனிதர்! சிங்கப்பூரில் தமிழ் தழைத்து வளர்வதற்கு பல வழிகளிலும் உதவி புரிபவர். ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் இவர், தமிழில் எந்த சந்தேகம் என்று அவரைத் தொடர்பு கொண்டாலும் தயங்காமல் அந்த சந்தேகங்களை உடனே தீர்த்து வைப்பவர். இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய திரு. சுப. திண்ணப்பன் அவர்களுக்கு என்னுடைய நன்றி!

நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் இல்லத்திற்கு அவரை நேர்காணல் காண்பதற்காக ஹைதராபாத்திற்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு வேளையும் சேர்ந்து உணவு உண்பார்கள். வெளியே சென்று வந்தால். அவரும் அவருடைய மனைவியும் அதைப் பற்றி அன்பாக விசாரிப்பார்கள். அவர்கள் சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்தபொழுது, அவர்களின் பல வேலைகளுக்கு இடையே, எங்கள் அழைப்பை ஏற்று, அவர்களது குடும்பத்தினருடன், எங்கள் வீட்டிற்கு வந்தது, அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தியது. அணிந்துரை அளித்த திரு. ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களுக்கு என்னுடைய நன்றி!

என்னை மிகவும் கவர்ந்த மாபெரும் மனிதர் இந்திய நிதியமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவர்கள். சிலருக்கு தபால் தலை சேமிப்பது ஒரு பொழுதுபோக்கு. ஒருசிலருக்கு பழைய தொலைதொடர்பு அட்டைகள் சேமிப்பது ஒரு பொழுதுபோக்கு.

இப்படி அனைவருக்கும் ஏதோ ஒரு வகை பொழுதுபோக்கு. என்னுடைய சிறந்த பொழுதுபோக்கு திரு. ப.சிதம்பரம் அவர்களைப் பற்றி வாசிப்பதே! என்னுடைய ஓய்வு நேரத்தில் இணையத் தளத்தில் திரு. ப.சிதம்பரம் அவர்களின் கட்டுரைகள், நேர்காணல்களை தேடி வாசிப்பது வழக்கம். அப்படி நான் இந்த உலகச் செய்திகளைப் பற்றி அறிந்து கொள்வது அவர் எழுதிய கட்டுரைகள், அவரின் நேர்காணல்கள், அவர் ஆற்றிய உரைகள் என்னும் ஜன்னல் வழியாகவே!

அவர் எழுதிய "A View from the outside; why good economics works for everyone" எனும் ஆங்கில கட்டுரை தொகுப்பை பலமுறை வாசித்து விட்டேன். எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பு ஏற்படாது. அவரே என்னுடைய சிறந்த வழிகாட்டி!

1984ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தியின் உரையை, காரைக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், மொழிபெயர்த்த திரு. ப.சிதம்பரம் அவர்களின் பேச்சு என்னை மிகவும் ஈர்த்தது. ராஜீவ் காந்தியை பார்க்கச் சென்ற நான் திரு. ப.சிதம்பரம் அவர்களின் ரசிகையாக திரும்பினேன்.

எனக்கு அப்பொழுது வயது பன்னிரண்டு (12). எப்படியாவது அவரை சந்தித்து உரையாடி விட வேண்டும் என்ற என்னுடைய 18 ஆண்டு கால கனவு 2002இல் நிறைவேறியது. சிங்கப்பூருக்கு ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த அவரை நேர்காணல் காணும் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்த சந்திப்பு என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.

அவரின் ஓயாத பணிக்கு இடையே என் கட்டுரை தொகுப்பை வாசிக்க அவருக்கு நேரம் கிடைக்குமா? என்ற கேள்வி பலமுறை என் மனதில் எழுந்தது. ஆனால் அவருடைய அணிந்துரையோடூயே என்னுடைய முதல் புத்தகம் வெளிவர வேண்டும் என்கிற தீராத தாகமும் என்னிடையே இருந்தது. என்னுடைய வேண்டுகோளை அவரிடம் எடுத்துச் சென்றேன்.

அணிந்துரை தருவதற்கு அவரும் இசைந்தார்! அழகான அணிந்துரையும் தந்துள்ளார்! திரு. ப.சிதம்பரம் அவர்களுக்கும் என்னுடைய நன்றி!

நான் பிறந்தது, வளர்ந்தது சின்ன நகரமான காரைக்குடியில். ஆனால் எங்கள் வீட்டில் பொது தேர்தல் சமயங்களில் அனல் பறக்கும் விவாதங்கள்; கிரிக்கெட் போட்டி நடக்கும் சமயங்களில் இந்தியா ஜெயிக்க வேண்டுமே! என்ற பிரார்த்தனைகள்; ஒரு புது சினிமா வெளிவந்தால், அதைப் பார்த்து விட்டு பல கோணங்களிலும் விமர்சனங்கள் என்று பரந்து விரிந்த உலகத்துடன் எனக்கு சிறு வயதிலிருந்தே நல்ல தொடர்பு இருந்தது!

நல்ல கட்டுப்பாடு நிறைந்த கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தேன்; ஆனால் விசாலமான மனம் படைத்த பெற்றோருக்குப் பிறந்தேன்.

என் தாயார் திருமதி. மீனாட்சி ஆச்சி அவர்கள் அந்தக் காலத்திலேயே பி.எஸ்சி. (B.Sc) பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி என்று நான்கு மொழிகளில் சரளமாக உரையாடக் கூடியவர். ஆனால் தன்னுடைய 4 குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒரு இல்லத்தரசியாக மட்டுமே வாழ்ந்து வருபவர்.

என் தந்தையார் மறைந்த திரு. சுப்ரமணியன் செட்டியார் அவர்கள், நல் ஒழுக்கத்துடன், கண்ணியமாக வாழ்ந்தவர். உயர்ந்த உள்ளம் படைத்தவர். என் பெற்றோர் எங்களை ஒரு நல்ல தோழர்களைப் போலவே நடத்துவார்கள். எங்களுடைய எந்த விருப்பத்திற்கும் தடை கிடையாது.

மேற்கத்திய உடை உடுத்த வேண்டுமா? உடுத்திக் கொள்; தோழிகளுடன் மும்பை செல்ல வேண்டுமா? செல்; பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டுமா? கற்றுக் கொள்; என்று எனக்கு என் பெற்றோர் முழு சுதந்திரம் கொடுத்திருந்தனர்.

ஆனால் என் வளர்ச்சியைப் பார்ப்பதற்கு என் தந்தைசார் எங்களுடன் அதிக நாள் வாழவில்லை. இந்தப் புத்தகத்தை என் மறைந்த தந்தையாருக்கே சமர்ப்பிக்கின்றேன்!

தாய்க்கு சேயைப் போல; கண்ணனுக்கு குழலைப் போல; மீனாட்சிக்கு கிளியைப் போல; என் கண்களுக்கு இமைகளாய் அமைந்த என் கணவர் திரு. வயி.வயிரவன் அவர்களே இந்த புத்தகம் வெளியிடுவதற்கு பக்க பலம். என் கணவரின் ஒத்துழைப்பிற்கு கோடான கோடி நன்றி!

இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களை தேர்வு செய்த என் அருமை மழலைச் செல்வங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி!

திருமதி. சௌந்தரநாயகி வயிரவன்,

ஆசிரியர்

சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் உள்ள ஓர் அழகிய சிறு தீவு. பார்க்கும் இடமெல்லாம் பசுமையும், தூய்மையும் நிறைந்த சிங்கப்பூர் ஒரு நவீன நவநாகரிக நாடு. 704.0 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு குட்டித் தீவு.

மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது. நாடு சிறியது என்றாலும், நல்ல திட்டங்களை வகுத்து அதைச் செயல்படுத்தியும், உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், திறமையாகச் செயல்படும் வல்லமையான நாடு சிங்கப்பூர்.

‘சிங்கப்புரா’ எனும் மலாய் சொல் வழக்கின் திரிபே சிங்கப்பூர் ஆகும். 13ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த ஒரு மலாய் ராஜகுமாரன், ஒரு சிங்கம் போன்ற உருவத்தைப் பார்த்ததாகவும், அதனால் சிங்கப்புரா என்று இத்தீவிற்குப் பெயர் வந்ததெனவும் நாம் அறிகின்றோம்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற சீன நூல்களில் சிங்கப்பூர் இருந்ததற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், பலரின் ஆட்சியில் சிங்கப்பூர் இருந்ததற்கான வரலாறுகளும் உண்டு.

கி.பி. 1819ஆம் ஆண்டு, சர் ஸ்டம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் எனும் ஆங்கிலேய அதிகாரி இங்கு வணிக நிலையத்தை நிறுவியதன் விளைவாக நவீன சிங்கப்பூர் உருவாகிற்று.

1965ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9ஆம் தேதி, சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடானது. 1959இல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மக்கள் செயல் கட்சி, இன்று வரை சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறது.

சுதந்திரம் அடைந்து தனி நாடான போது, சிங்கப்பூர் மிகக் குறைந்த இயற்கை வளம், குறைவான மக்கள் தொகை, மிகக் குறைவான உற்பத்தித் துறை என பல சவால்களை எதிர் நோக்கியிருந்தது.

நல்ல சிறந்த திட்டங்களை வகுத்து சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர் தற்போதைய மதியுரை அமைச்சர் திரு. லீ குவான் இயு அவர்கள். சிங்கப்பூரின் முதல் பிரதமரான இவர் 35 ஆண்டு காலம் பிரதமராகப் பணியாற்றிச் செல்வச் செழிப்பு மிக்க நாடாக சிங்கப்பூரை உருவாக்கினார்.

பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு 1961இல் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் (Economic Development Board)ம், 1961இல் ஜூரோங் தொழிற்பேட்டையும் (Jurong Industrial Estate), பயணத் துறையை மேம்படுத்தி, வேலை வாய்ப்பைப் பெருக்க 1964இல் சிங்கப்பூர் பயணத் துறை வாரியமும் தொடங்கப்பட்டன. இதன் மூலம் உற்பத்தித் துறை நல்ல வளர்ச்சி கண்டு, வேலைவில்லாத் திண்டாட்டம் தீர்ந்து, நாடு வெகு விரைவாக முன்னேறியது.

இன்று உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூரின் பிரதமர் திரு. லீசியன் லூங் அவர்கள் (திரு. லீ குவான் கியு அவர்களின் மகன்); அதிபர் திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள்.

சிங்கப்பூர் பொருளாதாரம், பெருமளவு வணிகத்தைச் சார்ந்தே உள்ளது. சேவைத் துறை, உற்பத்தித் துறை, சுற்றுலாத் துறை, கட்டுமானத் துறை, கப்பல் துறை போன்றவையும் வலு சேர்க்கின்றன. இங்கு விற்கப்படும் பொருட்களுக்கு ஏழு விழுக்காடு பொருள் சேவை வரி (Goods & Services tax) விதிக்கப்படும். சுற்றுலாற்காக சிங்கப்பூர் வரும் மக்கள் இதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

சிங்கப்பூர் திறந்த சந்தை ஆதலால், அனைத்து முத்திரை பதித்த பொருட்களும் இங்குவுக் கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு வங்கிகள் பல உள்ளன. இங்கு பங்குச் சந்தை, பணப் பரிவர்த்தனைகளும் நல்ல திடமான நிலையிலேயே உள்ளன. வெளிநாட்டு முதலீடுகளும் இங்கு அதிகம். இதற்கு முக்கிய காரணம் நாட்டில் நிலவும் சாதகமான பொருளியல் கொள்கையும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளையும், திட்டங்களையும் உடனே நிறைவேற்றும் அரசும்தான்.

சிங்கப்பூர் அரசாங்கம் மிகவும் கட்டுக்கோப்பானது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 84 பேர். தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்-1 (எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்). நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் -9 பேர்.

2006ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதியில் மட்டுமே எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் ஆக, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர்கள். இங்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் 21 வயது நிரம்பிய குடியுரிமைவாசிகள் வாக்களிக்கலாம்.

கூட்டணி ஆட்சியில் குழப்பம், அதனால் அரசு கவிலும் நிலை, வேலை நிறுத்தம், அரசுக்கு எதிராக வழக்கு என்று எந்தவொரு பேச்சுக்கும் இடமில்லை. ஆக, மக்களுடைய சக்தி வீணாகாமல், ஆக்கப்பூர்வமாக செயல் வடிவம் காண்பதால், எத்தனை சவால்கள் வந்தாலும் அதை எளிதாக வெற்றி காண முடிகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவரின் தொகுதியில் உள்ள அலுவலகத்திற்கு வாரம் ஒருமுறை சென்று அங்கு இருக்கும் மக்களின் குறைகளைக் கேட்பது வழக்கம். மக்களின் வீடுகளுக்கும் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் குறைகளைக் கேட்டு அறிவார். ஆக, அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே இங்கு நேரடி தொடர்பு உண்டு.

மேலும், ஒவ்வொரு பகுதியில் இருக்கும் சமூக மன்றங்களும், மக்களை அரசாங்கத்தோடு இணைக்க உதவுகின்றன. மக்களுக்கு சேவையாற்றும் வகையில் கருத்தரங்குகள், நடனம், பாட்டு, தியானம், தெக்வாண்டோ (தற்காப்புக் கலை), காற்பந்து, பலவகையான சமையல் வகுப்புகள், மருத்துவர்களுடன் கலந்துரையாடல், இலக்கிய சொற்பொழிவுகள் என பலவற்றை நடத்துவதோடு, தேசிய நாள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளையொட்டி கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான போட்டிகளையும் சமூக மன்றங்கள் நடத்துகின்றன. இவற்றை சமூக மன்றங்களில் அங்கம் வகிக்கும் பல இனக் குழுக்கள் பொறுப்பேற்று நடத்தும். இவற்றை நடத்த அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி வழங்கி உதவி செய்கின்றது.

சிங்கப்பூர் ஏறத்தாழ 4.8 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. விக்கிபீடியா இணையத் தளத்தின் கணக்கெடுப்பின்படி சீனர்கள் (75.2 சதவீதம்), மலாய்க்காரர்கள் (13.6 சதவீதம்) இந்தியர்கள் (8.8 சதவீதம்), மற்ற இனத்தவர் (2.4 சதவீதம்) ஆகிய நான்கு இனத்தவரின் நாகரிகம் உடைய நாடு சிங்கப்பூர். மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் அதிகாரத்துத்துவ மொழிகள்.

சிங்கப்பூர் நாணயம், கடைப் பலகைகள், பொது இடங்களில் இந்த நான்கு மொழிகளிலும் எழுதியிருப்பதைக் காணலாம். பள்ளிக் கூடங்களில் இந்த நான்கு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. மலாய் தேசிய மொழி. நாட்டுப் பண் மலாய் மொழியில்தான் பாடப்படுகிறது. சீனர்கள் அதிகமாகக் கொண்ட நாட்டில் நாட்டுப்பண் மலாய் மொழியில்!

இந்த நான்கு இனத்தவரிடமும் ஒற்றுமையை உண்டு பண்ண அரசாங்கம் பல வழிகளிலும் முயற்சிகள் எடுத்து வருகிறது. பள்ளிகளில் இன நல்லிணக்க நாள் (Racial Harmony Day) என்று உண்டு. அன்று அனைத்துக் குழந்தைகளும் அவரவரின் பாரம்பரிய உடை அணிந்து செல்ல வேண்டும்.

1964இல் சிங்கப்பூரில் இனக் கலவரம் நடந்தது. அது மேலும் நடக்காமல் தடுக்க, சிங்கப்பூரின் சுருங்கிய நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு வீடுமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை (Housing Development Board) வாங்குவார் இன விகிதாசாரப்படி இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒவ்வோர் அடுக்கு மாடிக் கட்டடத்திலும், நான்கு இனத்தவரும் வசிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு இனத்தவரின் சதவீதத்திற்குத் தகுந்தவாறு விகிதாச்சார முறைப்படி வீடுகள் விற்க முடிவு செய்யப்பட்டு அது இன்றும் நடைமுறையில் உள்ளது.

வீவகப் பேட்டை வீடுகளில் பல அடுக்கு மாடி கட்டடங்களில் 5 அறை, 4 அறை, 3 அறை கொண்ட வீடுகள், எக்ஸிக்யூட்டிவ் வீடுகள் என பல வகையான வீடுகள் இருக்கும். மேலும் உடற்பயிற்சிக் கூடம் (Gym), நீச்சல் குளம், நூலகம் என அனைத்து வசதிகளும் உடைய கூட்டு வளாக (Condominium) வீடுகள், தனி பங்களா வீடுகள் என பலவிதமான வீடுகள் உள்ளன.

வீவகப் பேட்டையில் வசிப்போரின் வசதிக்காக பல சௌகரியங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறியவர், பெரியவர் என அனைத்து வயதினரையும் கருத்தில் கொண்டு வீவகப் பேட்டை வீடுகளின் அருகாமையில் பல அடுக்குமாடி கார் நிறுத்துமிடம், விளையாட்டுப் பூங்கா, பழம், காய்கறி, மாமிசம் விற்கும் கடைகள், துணிக் கடை, பலசரக்குக் கடை, சாப்பாட்டுக் கடை என அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றை உள்ளடக்கிய ஈரச் சந்தை, 24 மணி நேர மருத்துவ நிலையம், மலிவான விலையில் பொருட்கள் வாங்க கடைகள் பல உண்டு. ஆக, வயதானவர்கள் கூட, யாருடைய உதவியுமின்றி அவர்களே தனியாக இயங்குவது எளிது.

ஜனநாயக ஆட்சி முறை பல நாடுகளில் வரமா? சாபமா? என்று யோசிக்க வைக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இடையே ஏற்றத்தாழ்வற்ற வாழ்க்கை முறையை, சிங்கப்பூரின் ஜனநாயக ஆட்சிமுறை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இங்கு அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும் ஒரே மாதிரியான மருத்துவச் சேவை. இங்கு மருத்துவ வசதி உலகத் தரம் வாய்ந்ததாக விளங்குகிறது. மருத்துவமனைகளில் அவரவர் வசதிக்கு ஏற்றவாறு உள்ள கட்டணத்திற்குரிய படுக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவச் சேவையே வழங்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல், SARS, கை, கால் வாய் புண் நோய் என்று எந்த மாதிரியான நோய் தலை தூக்கினாலும், அரசாங்கம் அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை விரைவாக எடுத்து விடும். சுகாதார அமைச்சிலிருந்து அதிகாரிகள் அடிக்கடி வீடுகளுக்கு வந்து பூச்செடி, வீட்டின் பின்புறம் மற்ற இடங்களில் தண்ணீர் தேங்கி அதனால் கொசு இருக்கிறதா என்று சோதனையிடுவர்.

மேலும், பல துறை மருந்தகங்களில் (Poly clinics) கட்டணச் சலுகையில் மருத்துவச் சேவை வழங்கப் பெறும். குழந்தைகளுக்குப் போடும் தடுப்பு ஊசியைப் பற்றியும், ஒருவரின் முன் பதிவைப் பற்றியும், தொலைபேசியில் நினைவுபடுத்துவர். நாம் நேரம் தவறிச் சென்றால், எவ்வளவு நேரம் கழித்து வந்துள்ளோம் என்பதையும் மின்னியல் அறிவிப்பு பலகை நமக்கு சரியாக எடுத்துக் கூறும். அரை மணி நேரம் தாமதமாக வந்துள்ளீர்கள் என்று தாமதமான நேரத்தை அது சொல்லും.

குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் பிறப்பு, அதன் வளர்ச்சி, எடை போன்றவற்றைக் குறிக்கும் கையேடு அந்தக் குழந்தையின் பெயரில் வழங்கப்படும். குழந்தைக்குப் போடப்பட்ட தடுப்பூசி, குழந்தையின் நலம் குறித்த விவரங்கள் அந்தக் கையேட்டில் இடம் பெறும்.

இங்கு அமைச்சர் முதல் சாதாரண மனிதன் வரை அவரவர் வேலையை சரிவர செய்தாக வேண்டும். சல்லாபம் தேடுபவர்களுக்கு சலுகையுமில்லை. எச்சவர்களை ஏய்ப்பவர்களும் இல்லை. உழைப்புக்குத் தகுந்த ஊதியம். ஊதியத்திற்குத் தகுந்த உயர்வு. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு இங்கு குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முறை.

3 வயதில் குழந்தை நர்சரி பள்ளியில் சேர வேண்டும். பாலர் பள்ளி 1, 2-ஐ அதே பள்ளியில் முடித்து, தொடக்க நிலை 1 முதல் 6 வகுப்பு வரை படிக்க தொடக்கப் பள்ளிக்குப் செல்ல வேண்டும். பாலர் வகுப்பு இரண்டில் குழந்தை படிக்கும் பொழுது தொடக்க நிலை பள்ளிக்கு பதிவு செய்ய வேண்டும். உடன் பிறந்தவர்கள் படித்தல், குடியுரிமை/ நிரந்தரவாசிகள், ஒரு கி.மீ., இரண்டு கி.மீ. தூரத்திற்குள் குழந்தையின் வீடு இருத்தல், பள்ளியில் தொண்டுழியம் செய்தவர்களின் குழந்தைகள் ஆகியவர்களுக்கு முதலில் பள்ளியில் இடம் கிடைக்கும்.

மீதி இருக்கும் இடத்திற்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அந்த வகுப்பிற்கான இடங்கள் நிரப்பப்படும். ஆக, அந்த வகுப்பிற்குத் தேவையான மாணவர்களைச் சேர்த்து முடித்தவுடன், விண்ணப்பித்து அந்தப் பள்ளியில் இடம் கிடைக்காதவர்கள், கல்வி அமைச்சு முடிவு செய்யும் பள்ளியில்தான் சேர வேண்டும்.

ஒருவரின் கற்கும் திறனைக் கொண்டு, உயர்நிலைக் கல்வியில் சாதாரண நிலை (5 ஆண்டு) வழக்க நிலை(4 ஆண்டு) என ஒருவர் உயர் நிலைக் கல்வியை முடிக்க வேண்டும். உயர்நிலைக் கல்வியில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து, பல்துறை தொழிற் கல்லூரி (Polytechnic) அல்லது 2 ஆண்டு (A level) தொடக்கக் கல்லூரியில் முடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் குடியுரிமை/இரண்டாம் தலைமுறை நிரந்தர வாசம் பெற்ற ஆண்கள் கட்டாய தேசிய சேவையை 2 ஆண்டு செய்ய வேண்டும். நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தேசிய சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவரவர் விருப்பப்படி பட்டப்படிப்புப் படிக்க பல்கலைக் கழகங்களுக்குச் செல்ல வேண்டும். இங்குள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், உலகத்தில் உள்ள சிறந்த பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

மேலும் பல அனைத்துலகப் பள்ளிகள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளும் இங்கு உள்ளன.

சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடு. இரவு நேரங்களில் கூட ஒருவர் எந்தப் பயமுமின்றி எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாக செல்லலாம். குடியுரிமை/ நிரந்தர வாசம்/ வேலை அனுமதி போன்ற அவரவருக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டையின் எண்ணை வைத்து ஒருவரின் முழு விவரத்தையும் பெற இயலும்.

சந்தேகத்திற்குரிய நபரைப் பார்த்தால் உடனே காவலியிடம் தெரிவிருங்கள் போன்ற வாசகங்கள் பொதுப் போக்குவரதிகளில் அடிக்கடி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்குமேயானால், உடனே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, அதற்கு சரியான தண்டனையும் உண்டு. நீதி மன்றங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆக, இங்கு மக்கள் எந்த மன உளைச்சலும், பயமுமின்றி அவரவர் வேலையைச் செய்வது சாத்தியம்.

நல்ல வசதி வாய்ப்பு மிக்க சிங்கப்பூருக்கு அதிகம் படிக்காதவர்கள் கூட கட்டுமானத் துறை, வீட்டு வேலை செய்ய இந்தியா, இலங்கை, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து வேலை அனுமதிச் சீட்டு பெற்று வந்து வேலை செய்கின்றனர். ஆக, இங்கு வீட்டு வேலை செய்வதற்கு பணிப் பெண்ணை அமர்த்திக் கொள்ளலாம்.

இங்கு பொதுப் போக்குவரத்து மிகவும் வசதியான ஒன்று. தீவு முழுவதும் சென்றடைய ஏதுவாக பெரு விரைவு ரயில்கள் (SMRT) உள்ளன. மிகவும் சுத்தமாக, விரைவாக, பாதுகாப்பாகவும் அவை இயங்குகின்றன.

அதுபோல வாடகை வண்டிகளில் எந்த ஒரு பயமுமின்றி, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒருவர் பயணம் செய்யலாம்.

நாம் செலுத்திய கட்டணத்தில் மீதி பத்து காசு இருந்தால் கூட அதை நம்மிடம் திருப்பித் தந்து விடுவார்கள்.

பேருந்துகளில் வழி நடத்துபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மின் அட்டை ஒன்றை வாங்கி, அதை பெருவிரைவு ரயில் நிலையங்களில் $10, $20 என்று கட்டணம் செலுத்தி நிரப்பிக்(Top-up) கொள்ள வேண்டும். நேரடியாக வங்கியோடு அதை இணைத்து, தானியக்க முறையிலும் (GIRO) பணம் நிரப்பிக் கொள்ளலாம்.

அந்த அட்டையைக் கொண்டே நாம் பேருந்துகள், பெரு விரைவு ரயில்களில் ரொக்கம் செலுத்தாமல் அந்த அட்டையில் நாம் முன்னதாக நிரப்பியிருக்கும் பணம் நம் பயணத்திற்கு தகுந்தவாறு கழித்துக் கொள்ளப்பட்டும், பயணம் செய்யலாம்.

எனவே ‘டிக்கெட், டிக்கெட்’ என்ற சத்தமுமிருக்காது. அந்த குரலுக்கு பதுங்குவோரும் இல்லை. சிங்கப்பூர் நல்ல தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட நாடு. இந்த மின் அட்டையை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவர் தீவு முழுவதும் சென்றடையலாம். இந்த அட்டையைக் கொண்டே தேசிய நூலகத்தில் புத்தகம் இரவல் வாங்கலாம். சில விரைவு உணவகங்களில் உணவும் உண்ணலாம். ஆக, நல்ல தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒற்றை அட்டையைக் கொண்டு பல வித்தை புரியலாம்.

ஒருவர் சிங்கப்பூரின் தொழில் நுட்ப வளர்ச்சியை எல்லாவற்றிலும் பார்க்கலாம். அவற்றில் ஒன்று இங்கு நடைமுறையில் உள்ள மின்னியல் கட்டண முறை (Electronic Road Pricing). போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் மின்னியல் கட்டண முறை பலகை மேலே நீளமாக பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல் இங்கு எல்லா வாகனங்களிலும் ஒரு கருவி பொருத்தப்பட்டு அதில் ரொக்க அட்டை (Cash Card) இணைக்கப்பட்டிருக்கும்.

மின்னியல் கட்டண முறை அமல்படுத்தப் பட்டிருக்கும் சாலைகளுக்குள் வாகனம் செல்லும்பொழுது, தானாக ரொக்க அட்டையில் நிரப்பப்பட்டிருக்கும் தொகையிலிருந்து அந்தந்த இடத்திற்குள் செல்வதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும்.

இந்த ரொக்க அட்டையில் ஒருவர் அவ்வப்போது பணம் நிரப்பிக் (Top up) கொள்ள வேண்டும். முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவே இந்த முறை அமலாக்கப் பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சாலை விதிகள், வாகனங்கள் சீராக இயங்க வழிவகுக்கிறது. தீவு முழுவதும் ஆங்காங்கே விரைவு சாலைகளும் உள்ளன.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் வைத்திருக்க மேலும் ஒரு முயற்சியாக, சொந்தமாக கார் வாங்க எண்ணுவோர் காரின் விலையோடு சேர்த்து, அந்த காருக்கு பத்து ஆண்டு காலம் செல்லுபடியாகும் வாகன உரிமைச் சான்றிதழ் (Certificate of Entitlment / COE) பெற வேண்டும். ஆக, இங்குக் கார்களின் விலை அதிகம். இந்த உரிதிக்கான கட்டணம், அந்தந்தக் காரின் அளவைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

பொதுப் போக்குவரத்து சிறப்பாகச் செயல்படுவதால், குறித்த நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்தத் தாமதமுமின்றி செல்ல முடியும். பேருந்துகளில் ஏற வேண்டும் என்றால், பேருந்து நிறுத்துமிடத்தில் நிற்பவர்கள் கையசைத்து நிறுத்தினால் மட்டுமே பேருந்து நிறுத்தப்படும். அதேபோல் நாம் இறங்க வேண்டிய இடம் வரும் முன் பேருந்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும். அழுத்தியவுடன் பேருந்து நிறுத்தப்படும். ரயில் நிலையங்களில் எத்தனை நிமிடத்தில் அடுத்த ரயில் வரும் என்கிற விவரம் மின்னியல் பலகையில் வெளிவந்த வண்ணம் இருக்கும்.

தேவையில்லாமல் போக்குவரத்து நெரிசலால் நேரம் செலவாவது மிகக் குறைவு. இதேபோல் வீதிகளில் மக்கள் நடமாட வசதியான நடைபாதைகள் அகலமாக போடப் பட்டிருக்கும். விளையாட்டு தடங்கள், பூங்காக்களில் பெரியவர்களை தள்ளிச் செல்லும் சக்கர நாற்காலி, குழந்தைகளை வைத்துத் தள்ளிச் செல்லும் வண்டிகளை ஏற்றி இறக்க ஏதுவாக நடை பாதைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இங்கு தட்ப வெப்ப நிலை மிதமான ஒன்று. வெயிலும், மழையும் மாறி மாறி இருக்கும். ஆதலால் கையில் பணம் இல்லாமல் மின் அட்டையை வைத்துக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஆனால் குடை இல்லாமல் செல்வது உசிதம் இல்லை.

சிங்கப்பூரில் முதலில் ஒருவர் பார்க்கும் இடம் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். உலகின் பல அழகிய விமான நிலையங்களில் இந்த சாங்கி விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையம் பல முறை விரைவான குடிநுழைவுச் சோதனைக்காக (Fast Immigration Clearance) முதல் பரிசை பெற்றிருக்கிறது. அத்தோடு பல பரிசுகளையும், பாராட்டுகளையும் அள்ளிக் குவித்திருக்கும் விமான நிலையம்.

முதலில் இந்த விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடனே 'வருக வருக' என்ற வாசகங்கள் தமிழில் அனைவரையும் வரவேற்கும்பொழுது, நம் நாட்டை விட்டு நாம் வெகு தூரம் பறந்துவந்து விட்டோமே என்கிற ஏக்கம் நம்மிடையே மறைந்து போகும். மூன்று முனையம் கொண்ட இந்த விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய உலகின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்லலாம். (பறக்கலாம்.)

விமான நிலையமே இவ்வளவு அழகாக இருக்கிறதே, இன்னும் நாட்டில் நமக்காக என்னென்ன காத்திருக்கிறதோ? என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு வருகிற கட்டுரைகள் பதில் சொல்லும்.

சென்னையிலிருந்து விமானம் ஏறினால் 4 மணி நேரத்தில் சிங்கப்பூர் வந்து விடலாம். சிங்கப்பூர் இந்திய நேரத்தை விட இரண்டரை மணி நேரம் முன்னதாகவே விழித்து விடுகிறது. இந்தியாவில் மணி 6 என்றால், சிங்கப்பூரில் மணி 8.30.

சிங்கப்பூர் சிறிய நாடேயாயினும், இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். கிழக்கும், மேற்கும் சந்திக்கும் இடம் சிங்கப்பூர். இந்த புவியியல் அமைப்பு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர ஒரு காரணம்.

சிங்கப்பூர் பயண வாரியத்தின் கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூருக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என நாம் அறிகின்றோம்.

ஒருவரின் விருப்பத்திற்கேற்ப சுற்றிப் பார்க்கும் இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். அறிவியல், வரலாறு, விஞ்ஞானம், தாவரவியல், மிருகங்கள் வாழும் வாழ்க்கை முறை,ிறுவிறு இராட்டினங்கள், வண்ண வண்ண பூங்காக்கள், அமைதியான கடற்கரை, விதவிதமான மீன்கள், அழகிய பறவைகள், வண்ண வண்ண விளக்குகளுடன் அமைந்த இசை அருவி, மக்களின் வாழ்க்கை முறை, அருங்காட்சியகம், தண்ணீர் சாகசம் என பல இங்கு உண்டு.

நீங்கள் இதில் எதை விரும்புபவராக இருந்தாலும் சிங்கப்பூருக்கு வரலாம். அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்

எல்லா இடங்களுக்கும் பொதுப் போக்குவரத்தில் எளிதாக செல்லலாம்.

செந்தோசா

பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் முதல் இடத்தை செந்தோசா பிடிக்கும். செந்தோசாவில் ஒருநாள் முழுக்க ஒருவர் செலவிடலாம். காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், சில இடங்கள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

செந்தோசா தீவிற்கு, மௌன்ட்ஃபேபர் என்ற இடத்திலிருந்து கேபிள் கார் என்றழைக்கப்படும் கம்பி வட வண்டி மூலம் செல்லலாம். கடல் பகுதியிலிருந்து நூறு மீட்டர் உயரத்தில் போடப்பட்டிருக்கும் கம்பி வடத்தில் செல்லும் கண்ணாடிக் கூண்டு போல் உள்ள வண்டியில் அமர்ந்து செல்லும் வழியில் சிங்கப்பூரின் அழகிய நிலப்பரப்பைக் கண்டு களிக்கலாம். இது ஒரு புதிய அனுபவமாகவும், இனிய அனுபவமாகவும் அமையும்.

செந்தோசாவிற்குள் நுழைவதற்கு நுழைவுக் கட்டணம் குறைந்த விலையில் இருப்பினும், ஒவ்வொரு இடங்களுக்குள்ளேயும் செல்வதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். நாம் பார்க்க வேண்டிய இடங்களை தேர்வு செய்து அதற்கான பேக்கேஜை எடுத்துக் கொண்டால் கட்டணம் சற்று குறையும்.

இது மிகப் பெரிய பரப்பளவில் அமையப் பெற்றுள்ளதால் இலவசமாக ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்வதற்கு பேருந்து, நகரும் ரயில்கள் (Train) உண்டு. நுழை வாயிலில் இருக்கும் வரைபடத்தை எடுத்து வைத்துக் கொண்டால் அது செந்தோசா தீவைப் பற்றிய முழு விவரத்தையும் விவரிக்கும்.

செந்தோசாவிற்குச் செல்பவர்கள் அனைவரும் பார்க்க ஆவலுடன் இருப்பது Underwater world. நகரும் வழித் தடத்தின் கீழ் நாம் சென்று கொண்டிருக்கும் பொழுது நமக்கு மேலே கண்ணாடிக்குள் 250 வகையான 2,500 விதமான மீன்களை இங்கு காணலாம்.

சில மீன்கள் கூர்மையான முகத்தை உடையவை, சில மீன்கள் பருமனாக இருக்கும். சில மீன்கள் நீள வாலை உடையவை. இந்தப் மீன்களைப் பார்க்கும்போது 'மீன்களில் இத்தனை வகை இருக்கிறதா?' என்ற பிரமிப்பு நம்மிடையே தோன்றுவதாக இருக்கும். அதேபோல Dolphin Lagoonல் dolphin-ஐ தொட்டுப் பார்க்கலாம்; உணவு ஊட்டலாம்; டால்ஃபின்ஸின் சாகச நிகழ்ச்சிகளும், கண்ணைக் கவரும் நடனங்களும் உண்டு.

Butterfly Park and Insect Kingdom எனும் வண்ணத்துப் பூச்சி பூங்காவில் அடர்ந்த பசுமையான புல்வெளியில் பலவகையான வண்ணத்துப் பூச்சிகளும் உலகின் அரிய வகை பூச்சிகளும் உள்ளன.

இப்படி மீன், டால்ஃபின், வண்ணத்துப் பூச்சி என்று அமைதியாகவும் நேரத்தை செலவிட முடியும். ஆரவாரமாக நேரத்தை கழிக்க வேண்டுமெ என விரும்பினால், செந்தோசா லூஜ் (Sentosa Luge) எனும் கோ - கார்ட் (Go Kart) பயணத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். இந்தப் பயணம் மிகவும் பாதுகாப்பானது. அதே நேரத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. 650 மீட்டர் தூர நீளமுள்ள ஒரு தளத்தில் வேகமாக வீசும் காற்றுக்கிடையே இதை ஓட்டிச் செல்வதே ஒரு தனி சுவாரஸ்யம்.

அதேபோல் தானியக்க இருக்கையில் ஒருவர் அமர்ந்து உரக்கச் சத்தத்துடன், பிரமிப்பூட்டும் திடீர் காட்சிகளை Sentosa 4-D magixல் கண்டு களிக்கலாம்.

சிங்கப்பூரின் சின்னமாகப் கருதப்படும் 37 மீட்டர் உயரம் உள்ள மெர்லயன் எனும் கடல் சிங்கம் முதல் பாதி சிங்கத்தின் உடலையும், பிற்பாதி மீன் வாலையும் கொண்டிருக்கும். இதன் வாயிற் பகுதிக்கு மேல் வரை மின் தூக்கியில் சென்று, சிங்கப்பூர் நகரத்தின் எழில்மிகு அழகைக் கணலாம்.

Images of Singaporeஇல் சிங்கப்பூரின் வரலாறு குறித்தும், வளர்ச்சிப் பாதைக்கு உதவியவர்களைப் பற்றியும், சிங்கப்பூர் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பற்றியும் விளக்கும் அம்சங்கள் இங்கு உள்ளன.

இரவு நேரங்களில் இயங்கும் Songs of the Sea அருவி விழும் பொழுது, பின்னால் அதற்கு ஏற்றாற் போல் இசை ஒலிக்கும். லேசர் எனும் ஒளிக்கற்றை முறையில் பல அழகிய வண்ணங்களில் பல விதமான படங்கள் வந்து போவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.

செந்தோசாவில் பல கடற்கரைகள் உண்டு. நாள் முழுக்க சுற்றிக் களைத்துப் போனவர்கள், இந்தக் கடற்கரையில் அமைதியாக ஓய்வெடுக்கலாம். குழந்தைகள் விளையாட சிறிய நீர்த் தேக்கங்கள், சிறு விளையாட்டுப் பூங்காக்களும் உண்டு. விடுமுறை நாட்களையும், பிறந்த நாட்களையும் நண்பர்களுடன் வந்து இந்தக் கடற்கரையில் செலவிடுவர். தங்கும் விடுதிகள் செந்தோசா தீவிற்குள்ளேயே உண்டு. இந்த விடுதிகளில் தங்கியும் ஒருவர் செந்தோசா தீவை ஆற அமர சுற்றிப்பார்த்து மகிழலாம்.

ஜுரோங் பறவைப் பூங்கா

இது 1971ஆம் ஆண்டு, 35 மில்லியன் வெள்ளி(சிங்கப்பூர்) உருவாக்கப்பட்டது. தென்கிழக்காசியாவின் பெரிய பறவைப் பூங்காவாகக் கருதப்படும் ஜுரோங் பறவைப் பூங்காவில் ஆயிரக்கணக்கான பறவைகள் உள்ளன. பறவை காய்ச்சல் பீதி பரவலாக இருக்கும்பொழுதும், இங்குப் பறவைகள் சரியான முறையில் பாதுகாக்கப்படுவதாகவும், அதனால் இங்கு சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் அறிகிறோம்.

5 வகையான 200-க்கும் மேற்பட்ட பெங்குயின் பறவைகள் இங்கு உள்ளன. அவை ஹம்போல்ட், ராக்ஹாப்பர், மார்கோனி, ஃபேரி மற்றும் கிங் பென்கியூன்களாகும். பெங்குயின் அணிவகுப்பு இங்கு பார்க்க வேண்டிய ஒன்று. பெங்குயின் பறவைகள் அழகாக அணிவகுத்து நடப்பதே ஒரு தனி அழகு.

பெலிகான் எனும் நாரை வகைகள் இங்கு நிறைய உண்டு. இவை நீருக்குள் வாழும் விதத்தைக் காணலாம். முப்பது மீட்டர் நீளம் உள்ள செயற்கையான நீர் வீழ்ச்சி இங்கு உள்ளது. விதவிதமான பறவைகள் இங்கு ரீங்காரமிட்டுப் பறந்து திரியும்.

மேலும் நாரை, கிளி, ஃபிளமிங்கோ போன்ற பறவைகளின் சாகச நிகழ்ச்சிகளும், பார்ப்பவர்களுக்கு விருந்தாக அமையும்.

இங்கு ஒருவர் நடந்தோ, நகரும் வண்டியிலோ சென்று பறவைகளைக் காணலாம்.

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம்

28 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் 1973ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு 315 விதமான விலங்குகள் உள்ளன.

இயற்கையான சூழலில் விலங்குகளை மிக அருகில் சென்று பார்ப்பதற்கு ஏதுவாக, பாதுகாப்பான சூழலில் இந்த விலங்கியல் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக, மிருகங்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டில்லாமல், மரம், செடி, மலைகளுக்கு இடையே உலவுவதை, தூங்குவதை, சாப்பிடுவதைப் பார்க்க முடிவது ஒரு தனிச் சிறப்பு.

இங்கு சில விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவதற்கு வாய்ப்புகளும் உள்ளன. Orang Utan எனும் மனிதக் குரங்கு இனத்திற்கு உணவு ஊட்ட வாய்ப்பு உண்டு. தொட்டுப்பார்க்கலாம்; அருகில் சென்று தைரியமும், விருப்பமும் இருப்பவர்கள் தங்களது மடியில் வைத்து புகைப்படங்களும் எடுத்துக் கொள்ளலாம்.

யானையின் சாகச நிகழ்ச்சிகளும் இங்கு உண்டு. யானையின் பல விளையாட்டுகளைப் பார்க்கலாம்; யானை மீது சவாரியும் செய்யலாம்.

இரவு நேர விலங்கியல் தோட்டம்

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திற்கு மிக அருகாமையில் உள்ளது இரவு நேர விலங்கியல் தோட்டம் (Night Safari). இங்கு இரவு நேரங்களில் மிருகங்கள் வாழும் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ள செயற்கை முறையில் தத்ரூபமாக இந்த விலங்கியல் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மரங்கள், செடிகள், அருவிகள், மலைகள் என அமைக்கப் பெற்றுள்ள இந்த இரவு நேர விலங்கியல் தோட்டம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. நாம் கேள்விப் படாத எத்தனையோ விதமான விலங்கினங்கள் இங்கு உண்டு. சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் மற்றும் இரவு நேர விலங்கியல் தோட்டத்திற்கும் சேர்த்து சலுகை விலையில் ஒருவர் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்கேப் தீம் பார்க்

விறுவிறு இராட்டினங்களில் ஒருவர் சுற்றி மகிழ இங்குச் செல்லலாம். இங்கு குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டுகளும் உண்டு. மிதமாக செல்லும் இராட்டினங்களும் உண்டு. அதே போல் தலைகீழாக செல்லும் இராட்டினங்களும் உண்டு. ஆக, அனைத்து வயதினருக்கும் ஏற்புடையது இந்த இடம். இதன் அருகாமையில் இருக்கும் Wild - Wild Wet என்கிற இடத்தில் தண்ணீர் விளையாட்டுகள் உண்டு.

சிங்கப்பூர் டிஸ்கவரி செண்டர் (அறிவாலயம்)

சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சி பற்றியும், சிங்கப்பூரின் இராணுவம் பற்றியும் இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் வரலாற்றை எடுத்துக் கூறும் அம்சங்களும் உள்ளன. சிங்கப்பூரில் தற்போது வாழும் வாழ்க்கை முறை பற்றியும், இங்கு விளக்கும் அம்சங்கள் உள்ளன.

சிங்கப்பூர் சயின்ஸ் செண்டர் (அறிவியல் நிலையம்)

இங்கு அறிவியல் தொடர்பான நூற்றுக்கணக்கான அரும் பொருட்கள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அறிவியல் பிரியர்கள் மட்டுமின்றி அனைவரும் பார்க்க வேண்டிய இடம். அறிவியலைப் பற்றி தெரிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பவர்களுக்குக் கூட அறிவியல் மீது ஆர்வத்தை உண்டு பண்ணும் இடமாக இது இருக்கிறது.

பள்ளி, கல்லூரி செல்பவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை, பலருக்கும் அறிவியலில் ஆய்வு செய்ய இது மிகவும் ஏற்ற இடம். இங்கு உலகின் மிகவும் உயரிய தொழில் நுட்பத்துடன் விளங்கும் 'ஆம்னிப் பளானிட்டோரியல் திரையரங்கு' உள்ளது. பளானிட்டோரியம் (கோளரங்கம்) தொடர்பான காட்சிகளும், ஆம்னிமாக்ஸ் படங்களும் இங்கு திரையிடப்படுகின்றன.

ஸ்நோ சிட்டி (பனி நகரம்)

சுத்தத்திற்கு நற்பெயர் தேடிக்கொண்ட சிங்கப்பூரில் தூசிக்கு இடமுமில்லை. தட்ப வெப்ப நிலையும் மிதமான ஒன்று என்பதால் பனிப் பொழிவிற்கும் வேலையில்லை. ஆனால் நொடியில் ரெடி என்று சொல்வதைப் போல் எதுவாக இருந்தாலும் அதற்கு நொடிப் பொழுதில் செயல் வடிவம் கொடுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம், பனி சாகசத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக -5 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பத்தில் ஸ்நோ சிட்டி எனும் இடத்தை அமைத்துள்ளது.

இங்கு பனிச் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை விளையாடி மகிழலாம். ஒருவர் மீது ஒருவர் பனியை வீசியும் விளையாடலாம்.

இதற்குள் செல்வதற்கான ஏற்ற உடை, காலணி மற்ற அத்தியாவசியமானவற்றை நுழைவாயிலிலேயே ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.

டிஹெச்எல் பலூன்

-5 டிகிரி செல்சியஸ் பனியில் விளையாட பனி நகரம். பல மீட்டர் உயரத்திற்கு மேலே பறந்து, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சிங்கப்பூரை காண ஆசை என்றால் புகீஸ் என்ற இடத்தில் இருந்து இயக்கப்படும் டிஹெச்எல் பலூனில் (DHL Baloon) பறந்து பார்க்கலாம்.

சிங்கப்பூர் பூமலை (Singapore Botanic Gardens)

பல்லாயிரக்கணக்கான தாவரங்களைக் கொண்ட இந்தப் பூமலை 147 ஆண்டு பழமை வாய்ந்தது. சிங்கப்பூரின் தேசிய மலரான ஆர்கிட் மலர்கள் இங்கு எண்ணற்ற வகையில் உண்டு. இங்கு பல புதுமைகளைச் செய்ய முற்படுகின்றனர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இங்குள்ள ஒவ்வொரு அழகிய ஆர்கிட் மலர் வகைக்கு உலகப் பிரபலங்களின் பெயர்கள் சூட்டப் பட்டிருக்கிறது. டயானா, எலிசபத் ராணி, க்ளோரியா அரோயா, கோஃபி அன்னான், அமிதாப்பச்சன் போன்றவர்களுடைய பெயர்களிலும் ஆர்கிட் மலர்கள் உண்டு.

இயற்கைச் சூழல்

அமைதியான இயற்கைச் சூழலில் மரம், செடிகளுக்கு இடையே உலா வரவும், சல சலவென்று இயங்கும் சிங்கப்பூரில் ஒரு மாற்றத்தைத் தேடி இயற்கையோடு இயைந்து இருக்கவும் இங்கு இடங்கள் பல உண்டு.

புக்கிட் தீமா வனப் பகுதியில் (Bukit Timah Reserve) இயற்கையோடு உறவாட நல்ல வாய்ப்பும் உண்டு. ஆங்காங்கு திரியும் குரங்குகளும் உண்டு. இதேபோன்ற சூழலைக் கொண்ட மற்றுமொரு இடம் மெக்ரிッチி நீர்த் தேக்கப் பகுதி (Macritchie Nature Reserve).

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் (East Coast Park) சைக்கிள் ஓட்டவும், காலார நடை பயிலவும் நல்ல வாய்ப்பு உண்டு. இளைஞர்கள் ஒன்றுகூடி கொண்டாட்டங்கள் நடத்துவர். வெஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் (West Coast Park) Barbecue செய்து உண்ண இடங்கள் உண்டு.

அருங்காட்சியகங்கள்

இங்குள்ள ஆசிய நாகரிக அரும் பொருடகம் (Asian Civilizations Museum) தென்கிழக்காசிய கலாச்சாரத்தைப் பறைசாற்றும். சிங்கப்பூர் தேசிய அரும் பொருரகத்தில் சிங்கப்பூரின் உணவு, உடை, கலாச்சாரம், வரலாறு என அனைத்துப் பரிமாணங்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம். சீனர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது ‘சீனா டவுன் மரபுடைமை நிலையம்.’ அதே போல் மலாய் கலாச்சாரத்தை அறிய உதவுகிறது ‘மலாய் மரபுடைமை நிலையம்.’

மற்ற வகையான நகர் உலா (City Tour)

ஹிப்போ உலா (Hippo Tour) என்பது இரண்டு அடுக்கு பேருந்தில் சென்று சிங்கப்பூரின் மையப் பகுதியில் உள்ள இடங்களைப் பார்க்கலாம். சிங்கப்பூர் நாட்டில் நடப்பவை குறித்து, அதன் வரலாறு குறித்து வர்ணனை செய்யப்படும்.

இதேபோல் வாத்து உலா (Duck Tour) என்று ஒன்று உண்டு. பாதி தூரம் நிலப்பரப்பில் சென்று பின்னர் தண்ணீரில் சென்று மீதி தூரம் திரும்ப நிலப்பரப்பில் வந்து சேரும். ஹிப்போ உலாவில் இருப்பதைப் போன்ற வர்ணனை இதிலும் இடம் பெறும். இப்படி நீரிலும் நிலத்திலுமாக பயணம் செய்வது ஓர் இனிய அனுபவமாக அமையப் பெறும்.

மேலும் சாதாரண பேருந்துகளிலும் அரை நாள் நகர் உலா (City Tour) செல்லலாம்.

இரவு நேர கேளிக்கைகள்

'கிளார்க் கீ' மற்றும் 'போட் கீ' எனும் இடங்கள் இரவு நேர கேளிக்கைகளுக்குப் பெயர் போனவை. இங்கு ஏராளமான இரவு நேர விடுதிகள், டிஸ்கோடெக்ஸ், மதுபானக் கூடங்கள், உடம்புபிடி நிலையங்கள், Spa போன்ற இடங்கள் உண்டு. இரவு நேர கேளிக்கை விரும்பிகள் இங்கு விடிய விடிய நேரத்தைச் செலவிடலாம்.

இப்படி கரோக்கே, மதுபானக் கூடங்கள் ஆகியவற்றுடன் தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உடம்புப் பிடி நிலையங்கள் தீவு முழுவதும் உண்டு.

மற்றவை

மேலும் உருட்டுப் பந்து, ஸ்நூக்கர் போன்ற உள்ளரங்க விளையாட்டுக்களும் இங்கு ஏராளம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க உள்ள இரண்டு ஒருங்கிணைந்த உல்லாசத் தலங்கள் (Integrated Resorts) மேலும் அதிகமான மக்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. அவற்றுள் Casino எனும் சூதாட்டக் கூடமும் உள்ளது.

ஆக, சிங்காரச் சிங்கப்பூர் இன்னும் பல புதுமைகளை எதிர்நோக்கியிருக்கிறது.

*பொருள்கள் வாங்க எண்ணுவோரின் 'சொர்க்க பூமி' சிங்கப்பூர். சிங்கப்பூரில் என்ன வாங்கலாம்? என்று கேட்போருக்கு, எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதுதான் பதில். அதேபோல் உணவு வகைகளில் எத்தனை விதமோ, அத்தனை விதமான உணவு வகைகளும் இங்கு உண்டு.

மலிவான விலையில் பொருட்கள் வாங்க $1 கடைகளும் உண்டு. முத்திரை பதித்த பொருட்கள் விற்கப்படும் பேரங்காடிகளும் ஏராளம். $2 கொடுத்து திருப்தியாகச் சாப்பிடக் கூடிய உணவங்காடிகளும் உண்டு, வகை வகையாகப் பரிமாறப்படும் சொகுசு உணவங்காடிகளும் உண்டு.

ஆக, சிங்கப்பூரில் சுற்றிப் பார்க்கும் இடங்கள் எல்லாத் தரப்பினருக்கும், வயதினருக்கும் எப்படி ஏற்றதோ, அதேபோல உணவும், ஷாப்பிங்கும் எல்லா வயதினருக்கும் ஏற்றதே.

தீவு முழுவதுமே உணவகங்களும், கடைகளும் ஏராளம் உண்டு. அவற்றுள் சென்னையில் உள்ள அண்ணா சாலையைப் போன்றது இங்குள்ள ஆர்ச்சட் ரோடு (Orchard Road). சிராங்கூன் ரோட்டில் (Serangoon Road) திரும்பிய இடமெல்லாம் தமிழர்கள். கேட்பதெல்லாம் தமிழ்! கடைகளில் ஒலிப்பதெல்லாம் அப்பொழுது திரையரங்குகளைக் கலக்கிக் கொண்டிருக்கும் திரைப்படப் பாடல்கள். இந்தியாவிலிருந்து வரவழைக்கப் படும் காய்கறிகளை சமைத்துச் சாப்பிடும் அதிர்ஷ்டம் உடையவர்கள் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள்.

செய்தித் தாள்களில் எந்தக் கடையில் எவ்வளவு மலிவு விற்பனை, எந்தெந்தப் பொருட்களை கழிவு விலையில் வாங்கலாம் என்பாவற்றைப் பற்றி விளம்பரம் செய்யப்படும். அப்படிச் செய்யப்படும் கடைகளில் ஓயாத மக்கள் வெள்ளம் அலை மோதுவது அன்றாடக் காட்சி!

இப்படி பொருட்களை வாங்குவதற்காகவே சிங்கப்பூருக்கு வரும் உலகப் பணக்காரர்களும் உண்டு.

அரப் ஸ்ட்ரீட் (Arab Street)

சிங்கப்பூரின் மையப் பகுதியில் உள்ள அரப் ஸ்ட்ரீட் கடைகளில் unique என்று சொல்லப்படும் வித்தியாசமான கலை நயமிக்க பொருட்களை வாங்கலாம். இவ்வீதியில் கம்பளக் கடைகள் அதிகம். $150 முதல் $50,000 வரையிலான அழகான தரமான கம்பளங்களை வாங்கலாம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், காஷ்மீர் போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டு விற்கப்படுபவற்றை ஒருவரின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கும் சேவையும் உண்டு.

துருக்கியில் செய்யப்பட்ட மேஜை விரிப்புகள் மெத்தை உரைகள், விரிப்புகள், வீடுகளில் மாட்டப்படும் திரைச் சீலைகள், கோப்பை (காபி கப்), தட்டுகள் முதலியவற்றை வைப்பதற்கு ஏற்றாற் போல் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சிறிய, பெரிய கம்பளங்களும் கிடைக்கப் பெறலாம்.

Ceramic தட்டுகள், சட்டிகள் (Bowls), கண்ணாடியிலான வண்ண வண்ண விளக்குகள், ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் பளபளப்புத் துணிகளும் விதவிதமாக உள்ளன. பெண்கள் சிறு குழந்தைகளுக்கு ஏதுவாக கொரியா, சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் அழகிய உடுப்புகள் தைக்கக் கூடிய துணிகளை மீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஒரு மீட்டர் $15 முதல் $60 வரை கிடைக்கப் பெறலாம். அனைத்து வண்ணங்களிலும் இதே போன்று துணி வகைகள் தாய்லாந்துப் பட்டிலும் இங்கு உண்டு.

இதே போன்று மூங்கில் செய்யப்பட்டுள்ள கைவினைப் பொருட்கள், குப்பைக் கூடைகள், நாற்காலிகள், குடை வைக்க ஏதுவான மூங்கில் சாமான்கள், சின்னச் சின்ன பூக்கூடைள் பல அளவுகளில் உண்டு.

Belly Dance என்றழைக்கப்படும் நடனம் ஆடும் பெண்கள் அணியும் சின்னச் சின்ன பாசிகளைக் கொண்ட காதணி, அவர்கள் இடுப்பிலும் கைகளிலும் கட்டிக் கொள்ளும் நீள மணிகளைக் கொண்ட ஆபரணங்கள், அவர்கள் அணியும் உடப்புகள், தலையில் சிறு சிறு தங்க நிறம் கொண்ட காசுகளை கோர்த்தது போல் உள்ள கவசங்கள், இவர்கள் அணியும் தனித்துவமிக்க காலணிகள், அழகிய பின்னல் வேலைப்பாடுகளைக் கொண்ட உடைகள் விற்கும் கடைகளும் உண்டு.

இங்கு விற்கப்படும் வலை போல் இருக்கும் அழகிய துணிகளை வாங்கி, சிறிய மூங்கில் கூடைகளில் சிறுசிறு பரிசுப் பொருட்களை அதில் போட்டு, அந்தத் துணிகளைக் கொண்டு மூடி, ஒரு புதுவிதமாகப் பரிசுகளை கொடுக்கலாம்.

கிளார்க் கீ / போட் கீ

இரவு நேர கேளிக்கைகளுக்கு மிக மிக உகந்த இடம். பகலை விட இங்கு இரவு நேரம் மிகவும் வேகமாக இயங்கும். ஆக இங்கு விடிய விடிய கொண்டாட்டமும், குதுகலமுமாக இருக்கும். இந்த இடத்தில் மதுபானக் கூடங்கள், டிஸ்கோடெக், கடல் உணவு உண்ணும் கடைகளும் உண்டு. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆடிப் பாடி பொழுதை கழிக்கின்றனர். எங்கு திரும்பினாலும் நடனம் ஆடும் இளம் பெண்கள், இளஞ்ஜோடிகள், நண்பர் கூட்டம். குடும்பமாகவும், சிறு குழந்தைகளை அழைத்து வருவதற்கும் இது அவ்வளவு உகந்த இடமாகத் தோன்றவில்லை.

கிளப் ஈடன் (Club Eden), பீன்ஸ் டாக் கஃபே (Beans Talk Cafe), தி காமன் ப்ளேஸ் (The common place), கியூடோ ரெஸ்டொரண்ட் (kyoto Restaurant) என்று பல கடைகள் உண்டு. இங்குள்ள கடல் உணவு தயாரிக்கப்படும் கடைகளின் காரமான நண்டு (Chilly Crab), லப்ஸ்ட்டர் சாலட் (Lobster Salad), ஹர்வஸ்ட் கோல்்ட் டிஷ் (Harverst Cold dish), கறுமிளகு நண்டு (Black Pepper crab) என்று எவ்வளையோ வகை.

தாய்லாந்து, இத்தாலிய உணவகங்களும் இங்கு உள்ளன.

சிங்கப்பூர் ஆற்றின் கரையில் இந்தக் கடைகள் அமையப் பெற்றுள்ளதால், அமைதியான காற்றுக்கிடையே, வேலை களைப்புத் தீர ஒருவர் இளைப்பாறலாம். வெளிநாட்டினரும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

புகிஸ் ஜங்ஷன்

இந்தக் காலத்து இளைஞர்கள் தங்கள் கைகள், காதுகளில் அணிந்திருக்கும் வினோதமான அணிகலன்களைப் பார்த்து, 'இவற்றையெல்லாம், எங்கே தான் வாங்குகிறார்களோ?' என்று யோசித்தால், அது புகீஸில் இருக்கலாம். ஆக, இளைஞர்கள் புதுமையானவற்றை வாங்குவதற்கு ஏற்ற இடம்! விதவிதமான காலணிகள், உடைகள், அணிகலன்கள் இங்குக் கிடைக்கும்! அதுவும் மலிவான விலையில்!

இங்கு சிறு சிறு கூடாரம் போல் வண்டிகள் அமைத்து அழகிய சிறிய பரிசுப் பொருட்கள் விற்கப்படும். ரோஜாப் பூ, கார், கிட்டார் வடிவில் நம் சுண்டு விரல் அளவில் அழகிய $1 bottleகள் விற்கப்படும். இதில் நமக்குப் பிடித்த வாசனைத் திரவத்தை நிரப்பி வாங்கிக் கொள்ளலாம்.

இப்படி ஏதாவது வித்தியாசமான பொருட்களை வாங்க 'புகীஸ்' வரலாம். மேலும் இங்கு உள்ள Tea shake hut எனும் உணவகத்தில் வித்தியாசமான தேநீர் அருந்தலாம். சுக்கு தேநீர், ஏலக்காய் தேநீர் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த உணவகத்தில் Peppermint Tea, Honey Tea, Peach Tea, Jelly Tea என்று பல வகை உண்டு. $ 3.50 முதல் $ 5.50 என்ற விலையில் இவற்றை நாம் சுவைக்கலாம்.

சைனா டவுன்

சிங்கப்பூரின் மையப் பகுதியில் இந்த சைனா டவுன் அமையப் பெற்றுள்ளது. லிட்டில் இந்தியா எப்படி இந்தியாவை நினைவுபடுத்துமோ, அதேபோல சைனா டவுன் சீனாவை நினைவூட்டும். இங்கு சீன மூலிகைகள் (Herbs), சீன மருந்துகள் விற்கும் கடைகள் ஏராளம்.

தூக்கமின்மை, கை, கால் வலி, நெஞ்சு வலி, அஜீரணம், ரத்த அழுத்த நோய், இனிப்பு நீர் போன்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவற்றைக் குணப்படுத்தக் கூடிய மூலிகைகள் இங்கு விற்கப்படுகின்றன.

ஃபெங்சுயி என்றழைக்கப்படும் சீன வாஸ்து பொருட்கள் பல வண்ணங்களிலும், அளவிலும், விலையிலும் உள்ளன. சிரிக்கும் புத்தா, வயிற்றைள்ளிக் கொண்டு ஆசி புரியும் புத்தா, பண மூட்டையுடன் நிற்கும் புத்தா என்று அவை இருக்கின்றன.

$1 கடைகள், $10 க்கு 3 சாமான்கள் விற்கக்கூடிய கடைகள் இங்கு உண்டு $1 கடைகளும், $10 க்கு 3 சாமான்கள் விற்கப்படும் கடைகள் தீவு முழுவதுமே உண்டு. வெகு விரைவில் நிலையங்களிலும் இப்படி கடைகள் ஏராளம்! ஆக, இந்த இடம் தான் சிங்கப்பூரில் பொருட்கள் வாங்க சிறந்த இடம் என்று குறிப்பிட்டுச் சொல்வது மிக மிக கடினம்.. சிங்கப்பூரின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒருவர் நல்ல பொருட்களை வாங்கிக் குவிக்கலாம்.

ஆர்ச்சட் ரோடு

இங்கு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் பேரங்காடிகள் பல உண்டு. இங்கு பொருட்கள் வாங்காவிட்டாலும், Window shopping செய்வதற்காகவாவது ஆர்ச்சர்ட் ரோடு (Orchard Road) க்கு ஒருவர் நிச்சயம் செல்ல வேண்டும். ஆர்ச்சர்ட் ரோடைச் சுற்றியும் நிறைய பேரங்காடிகள் உள்ளன. அனைத்து விதமான முத்திரை பதித்த பொருட்களும் இங்குக் கிடைக்கப் பெறலாம். Plaza singapura (ப்ளாசா சிங்கூரா), நீ ஆன் சென்டர் (Ngea Ann Centre), சென்டர் பாயின்ட் (Centre Point), ராபின்சன்ஸ் (Robinsons), ஸ்பெஷலிஸ்ட் ஷாப்பிங் சென்டர் (Specialist shopping centre), டக்காஷீமயா (Takashimaya) போன்ற பேரங்காடிகள் பிரபலமானவை.

சிராங்கூன் ரோடு

இந்த சிராங்கூன் ரோடில் தான் லிட்டில் இந்தியாவும் முஹமது முஸ்தாஃபா பேரங்காடியும் உள்ளது. இந்த சிராங்கூன் ரோதிலும், அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் நம் சாப்பாட்டுக் கடைகள், பலசரக்கு கடைகள், துணிக் கடைகள், நகைக் கடைகள், பூக் கடைகள் நிரம்பி வழியும்.

ஆனந்த பவன், சரவண பவன், கோமள விலாஸ், மெட்ராஸ் உட்லண்ட்ஸ் போன்ற உணவகங்களும், வட இந்திய உணவகங்கள், அஞ்சப்பர், தந்தூரி (Tandoori) என மாமிச வகைகள் கிடைக்கப் பெறும் உணவகங்களும் இங்கு உண்டு.

மலிவான விலையில் மின்னியல் பொருட்கள் இங்கு விற்கப்படும். சிங்கப்பூர் வந்து சென்ற நினைவாக சிங்கப்பூரின் சின்னம் பொறிக்கப்பட்ட பேனா, கடிகாரம், சாவிக் கொத்துச் சங்கிலி, மெர்லயன் போன்றவற்றை ஒருவர் இங்கு வாங்கலாம்.

இங்கு நகைக் கடைகளில் மும்பை டிசைன், கல்கத்தா டிசைன், MRT டிசைன், சீனா டிசைன் என்று பல வகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் ஆன நகைகள் விற்கப்படுகின்றன. சிங்கப்பூரில் தங்கம் வாங்காமல் ஊர் திரும்புவர்கள் அரிது! எல்லாக் கடைகளையும் முதலில் பார்த்து, விலை விசாரித்து விட்டு பின்னர் வாங்குவதே உகந்தது.

முகமது முஸ்தஃபா பேரங்காடி

இந்த முகமது முஸ்தஃபாவை பார்ப்பதற்காகவே ஒருவர் சிங்கப்பூர் வர வேண்டும். பிறந்த குழந்தை நாளுக்கு நாள் எப்படி வளருமோ, அப்படி நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு, தற்போது மிகப் பெரிய பேராடிகளுள், ஒன்றாக Mohammad Mustafa and Samsudin (P) Ltd உள்ளது.

24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்தக் கடையில் ஒரு நாள் முழுக்க ஒருவர் செலவிடலாம். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதில் பலவகை இங்கு இருக்கும். எல்லா விலைகளிலும் பொருட்கள் உண்டு. அவரவர் பண வசதிக்குத் தகுந்தவாறு ஒருவர் பொருட்களை இங்கு வாங்கலாம் என்றால் அது மிகையாகாது.

மற்றவை

KFC, Mcdonalds, Burger King. Bread Talk போன்ற விரைவு உணவங்காடிகள் தீவு முழுவதும் உண்டு. Subway, Jack's Place, Pizza hut, Cheers போன்ற விரைவு உணவங்காடிகளும் இங்கு பரவலாக உள்ளன.

சிங்கப்பூரின் 'ஆரம் உணவகம்’

லைஃப்ரேண்ட்ஸ் லிமிடெட்டின் உயர் அதிகாரியான கிளமென்ட் லீக்கு ஓர் ஆசை. தன் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான சூழலில் அமர்த்தி உணவு பரிமாற வேண்டும் என்று. அதன் விளைவாகத்தான், சிங்கப்பூரின் கிளார்க் கீயில் உள்ள 'ஆரம் உணவகம்.' ஆரம் என்றால் லத்தின் மொழியில் தங்கம் என்று பொருள்.

வாழ்க்கையில் புதிய அனுபவத்தைத் தேட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் 'ஆரம்.' காரணம் மருத்துவமனைச் சூழலில் ஆரம் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் உணவை உண்டு மகிழலாம்.

மருத்துவமனை என்றாலே பலருக்கு மயக்கம் வரும். மகிழ்ச்சியாக இருக்க மக்கள் செல்லும் இடம் - உணவகங்கள். மருத்துவமனை தோரணையில் உணவகமா? என்று புருவத்தை உயர்த்துபவர்களுக்கு மேலும் ஒரு செய்தி.

இந்த ஓட்டலுக்குள் நம்மை முதலில் வரவேற்பது சவக் கிடங்கு போல் உள்கட்டமைப்பு உடைய வரவேற்பறை! முற்றிலும் மாறுபட்ட உணவகம் இது என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. இங்கு திரும்பினாலும் இந்த உணவகத்தில் தங்க நிறம் தென்படும்.

வாடிக்கையாளர்கள் இங்கு உட்கார்ந்து சாப்பிடுவது எதில் தெரியுமா? சக்கர நாற்காலியில்! அப்படியானால் உணவு பரிமாறப்படும் மேசை, எப்படி இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள். உணவு பரிமாறப்படும் மேசை, அறுவை சிகிச்சை செய்யப் பயன்படுத்தப்படும் சில்வர் மேசையைப் போலவே உள்ளது.

ஆக, மருத்துவமனை போல வடிவமைக்கப்பட்ட உணவகத்தில் உணவு பரிமாறப்படும் பொருட்கள் எப்படி இருக்கிறது? என்று கேட்பவர்களுக்கு பதில், ஊசி போடப் பயன்படுத்தப்படும் 'ஸிரிஞ்ஜ்' சில உணவுகளுடன் கொடுக்கப்படுகிறது என்பதுதான்.

சரி, உள்கட்டமைப்பு ஒவ்வொன்றும் மருத்துவமனையை நினைவுபடுத்துகின்றன. சாப்பாடாவது பஜ்ஜி, போண்டா, ரசம், சாம்பார் என்று இருக்குமா? என்று பார்த்தால், அதுதான் இல்லை.

எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு விஞ்ஞான ரீதியான உணவு வகைகள் பரிமாறப்படுவது இங்கு தனிச் சிறப்பு!

எட்வர்ட் வோன் தலைமையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஸ்பானியர்களின் ஆம்லெட், ஐசேடெனிக் வைச்சி காவியர் போன்ற உணவு வகைகள் இங்கே பிரபலம்!

பழக்கங்கள் மாறி மாறி வரும் இந்த உலகில், பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையே! மக்கள் புதியவற்றை உரசிப் பார்க்க தயங்குவதும் இல்லை.

மாலை நேரத்தில் மட்டும் செயல்படும் இந்த உணவகத்தில், புதிய சூழலில் உணவை ருசிப்பதற்கு, மக்கள் ஆர்வமாக வருகின்றனர்.

இப்படி மாறுபட்ட சூழலில் மேலும் பல உணவகங்கள் உண்டு. தைவான் நாட்டில் 'தி டாய்லட்' என்ற பெயரில் அமைந்திருக்கும் உணவகம், கழிவறை போன்ற உள்கட்டமைப்புக்க கொண்டது.

தாய்லாந்தில் 'தி ஜெயில்' எனும் உணவகம், சிறைச்சாலை போன்ற கட்டமைப்பு கொண்டது. இங்கு வரும் வாடிக்கையாளர்களின் கைகளில் விலங்குமிடப்பட்டு, உணவு உண்ண அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இது என்ன விபரீதமா? வினோதமா? என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் பார்க்கும் பார்வையில் தான் பதிலிருக்கிறது.

உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிறு புள்ளி. இந்தச் சிறிய நாட்டில் தமிழர்கள் நான்கு சதவீத்தினர் வசிக்கின்றனர். சிங்கப்பூரில் ஏறத்தாழ 26 கோயில்கள் (நகரத்தார் சங்கம் (சிங்கப்பூர்) விவர கையேடு -2005ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி) உள்ளன. முன்னேறிய தொழில் நுட்பத்துடன் விளங்கும் நவீன சிங்கப்பூரில் ஒரு புறம் எண்ணற்ற வகையில் குதூகலமும், கொண்டாட்டமும். மறுபுறம், விரதம், பால்குடம், காவடி, கும்பிடு தண்டம், விளக்கு பூஜை என்று பக்திப் பரவசம்.

மாரியம்மன் என்று எடுத்துக் கொண்டால் மஹா மாரியம்மன், சவுத் பிரிட்ஜ் மாரியம்மன் கோயில்கள், காளியம்மன் என்று எடுத்துக் கொண்டால் வீரமா காளியம்மன், வடபத்திர காளியம்மன், வைராவிமட காளியம்மன், ருத்ர காளியம்மன் கோயில்கள்; முனீஸ்வரர் என்று எடுத்துக் கொண்டால் தர்ம முனீஸ்வரர் ஆலயம், குயீன்ஸ் டவுன் முனீஸ்வரர் ஆலயம்; பிள்ளையார் என்றால் செண்பக விநாயகர் ஆலயம், லயன் சித்தி விநாயகர் ஆலயம்; சிவன் என்றால் கேலாங் சிவன், பொத்தோங் பாசிர் சிவன், சிவகிருஷ்ண ஆலயம், அரச கேசரி சிவன் ஆலயங்கள்; முருகன் என்றால் யுரோங் முருகன் கோயில், டேங் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்கள்.

இப்படி எத்தனையோ கோயில்கள்! ஒவ்வொரு கோயில் உருவானதற்கு தனிப்பட்ட பின்னணி உண்டு. ஸ்ரீ தெண்டாயுத பாணி கோயில் 4..4.1859இல் கட்டப்பட்டதாக அதன் கல்வெட்டு மூலம் நாம் அறிகின்றோம்.

நகரத்தார்கள் ஆதியில் சிங்கப்பூர் ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் வேல் வைத்து வழிபட்டு வந்தனர் என்றும் பின்னர் 1859இல் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் கட்டப்பட்டது என்றும் நாம் அறிகிறோம்.

சிங்கப்பூர் செல்வச் செழிப்பு மிக்க நாடு என்பதை இந்தக் கோயில்கள் பறைசாற்றும். ஒவ்வொரு கோயில் நிர்வாகத்தினரும் போட்டி போட்டுக்கொண்டு கோயில்களைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்கின்றனர்.

உயரமான ஆஞ்சநேயர் சிலை, உயரமான பிள்ளையார் சிலை, தங்கக் கொடி மரம், சொர்ண அங்கி என்று ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒரு புதுமையைச் செய்ய முற்படுகின்றனர்.

மக்கள் மிகுந்த பக்தியுடன் கடவுளை வேண்டி உபயம் செய்வர். ஆக, கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் விதவிதமான பிரசாதங்களும் வழங்கப்படும்.

இந்தியாவிலிருந்து பூஜைகள் செய்ய ஐயர்கள் மற்றும் பண்டாரங்கள், தவில், நாதஸ்வரம் வாசிக்க வித்வான்கள், திருமுறைகளை ஓத ஓதுவார்களும் வரவழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் கோயில்களில் இருக்கும் தங்குமிடங் களில் தங்கி இருப்பார்.

லட்சக்கணக்கில் செலவு செய்து ஒவ்வொரு கோயிலின் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. கோயில் சிற்ப வேலைப் பாடுகள் செய்வதற்காக ஊரிலிருந்து சிற்பிகள் வரவழைக்கப் பட்டு, நுணுக்கமான அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகளை அவர்கள் உருவாக்குகின்றனர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடக்கும் மண்டலாபி ஷேகத்தில் பிரபலமான கலைஞர்களின் படைப்புகள் இடம் பெறும். ஆக, கலை செழித்து வளர இக்கோயில்கள் பெரிதும் உதவுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளும் இம்மண்டலாபிஷேகங்களில் நடைபெறும்.

ஏறத்தாழ சிங்கப்பூரின் பெரும்பகுதியான பகுதிகளில் கோயில்கள் உள்ளன. பிரதோஷம், பௌர்ணமி பூஜை, செவ்வாய்க் கிழமை இராகு காலத்தில் துர்க்கையம்மன் பூஜை, சுக்ல சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி என அனைத்து விசேடங் களும் ஐதீகத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேபோன்று தீபாவளி, பொங்கல், வருடப் பிறப்பு போன்ற விசேட நாட்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அர்ச்சனை செய்ய வேண்டுமென்றால், நாம் கோயிலுக்குச் சென்று, அர்ச்சனைச் சீட்டை வாங்கிக் கொடுத்து விட்டால் போதும். கோயிலிலேயே வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து நமக்கு அர்ச்சனை செய்து தந்து விடுவர். நம் வேலை மிகச் சுலபம்!

மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் 5 கால பூஜை நடைபெறும். சிவன் ராத்திரியை முன்னிட்டு, சில கோயில்கள் பக்தர்களை ஒரு பேருந்தில் அழைத்துச் சென்று ஒவ்வொரு கால பூஜையையும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வர்.

வினாயகர் சதுர்த்தி அன்று வினாயகர் கோயில்களில் விசேஷமாக இருக்கும். சஷ்டி, திருக்கார்த்திகை, மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற விசேடங்கள் முருகன் கோயில்களில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். இராமர் கோயில் களில் வைகுண்ட ஏகாதசி அன்று கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு பூஜைகளும் உண்டு.

மேலும் ஸ்கந்த ஹோமம், பிரம்ம உற்சவம், ப்ரத்யங்ரா ஹோமம், கணபதி ஹோமம், ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துதல், சுமங்கலி பூஜை, சந்தனக் காப்பு என பலவிதமான ஹோமங்களும், வழிபாடுகளும் பரவலாக அனைத்துக் கோயில்களிலும் நடைபெறும்.

சாய் பஜன், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி, வாழும் கலை, வாழ்க வளமுடன், போன்ற வழிபாடுகளும், தியானங்களும் இங்கு நிறைய உண்டு.

இங்கு பொதுப் போக்குவரத்து வசதியான ஒன்று என்பதால், வயதானவர்கள் கூட யாருடைய உதவியுமின்றி, கோயில்களுக்குச் சென்று நல்ல பொழுதாகக் கழிக்கலாம்.

இந்தக் கோயில்கள் இந்துக் கலாச்சாரத்துடன் வாழ்வதற்கு பெரிதும் துணைபுரிகின்றன. வெளிநாட்டில் வாழ்ந்தால் கூட, ஒருவர் நம் பாரம்பரிய உடை அணியவும், தமிழ்க் கலாச் சாரத்தை மேற்கொள்ளவும் இக்கோயில்கள் வழிவகுக்கின்றன.

பூஜை வழிபாடுகள் மட்டுமின்றி, இங்கு கோயில்கள் மக்களின் நலன் கருதி, வேறு பல பயனளிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.

டெப்போ ரோட்டில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில் ஹத்த யோகா, குண்டலினி யோகா வகுப்புகள், தேவார வகுப்புகள், குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள், கர்நாடக சங்கீதம், பரத நாட்டிய வகுப்புகள், சத்யசாய் எட்யூகேர் நிலையத்துடன் சேர்ந்து நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுக்கும் வகுப்பு (4 முதல் 14 வரையிலான குழந்தைகளுக்கு) போன்றவற்றை நடத்தி வருகிறது.

மேலும் வாரம் ஒருமுறை வயதானவர்களுக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் உள்ளன. ஆன்மீக சொற்பொழிவுகளும் இங்கு நடைபெறும்.

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் முத்தமிழ் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி வழங்கி, நாட்டில் நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெற உதவுகின்றனர்.

சிலோன் ரோட்டில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் 40 ஆண்டுகளாக ஸ்ரீ செண்பக விநாயக ஆலய சைவ சமயப் பள்ளியை நடத்தி வருகின்றனர். இதில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு சைவ சமயம், திருமுறைகள், சைவ சித்தாந்தம், பேச்சு, நாடகம், தலைமைத்துவம் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இங்கு உள்ள நூலகத்தில் 1,800க்கும் மேற்பட்ட சைவ சித்தாந்த மற்றும் திருமுறை தொடர்பான நூல்கள் உள்ளன.

தமிழை சிறந்த இடத்திற்குக் கொண்டு செல்ல பல வழிகள் மேற்கொள்கின்றனர். அதற்காக தமிழ் இசை விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இப்படி மக்கள் நலன் கருதி பல கோயில்கள் தங்கள் பங்கை ஆற்றி வருகின்றன.

இனி, சிங்கப்பூரில் நடைபெறும் புகழ் பெற்ற விழாக் களைப் பற்றிப் பார்ப்போம்.

சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா

(இது ‘குமுதம் சிநேகிதி’ பத்திரிகையில் 16-31, 2008 அன்று வெளியானது)

சிங்கப்பூரின் மையப் பகுதியான ரிவர் வேலியில் அமைந்துள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தத் தைப்பூசத் திருவிழாவில் சிங்கப்பூர் தமிழினமே ஒன்று கூடி விடும். மூன்று நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திற்கு, ஒரு மாத காலம் முன்னதாகவே கோயில் நிர்வாகினர் வேலைகளைத் தொடங்கி விடுவார்கள்.

காவடி எடுப்பது, பால் குடம் எடுப்பது, முருகனுக்கு நேர்ந்து கொண்டு பாதயாத்திரை செய்வது, முடி இறக்குவது, வேல் குத்தி பவனி வருவது என்று தமிழர்கள் பரவசத்துடன் தங்கள் பக்தியை இங்கு நடக்கும் தைப்பூசத் திருவிழாவின் போது கடவுளுக்குக் காண்பித்து விடுவார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை விழா சிறப்பாக நடக்க உதவுவார்கள். தமிழர்கள் மட்டுமின்றி மற்ற இனத்தவரும் இதில் பங்கு கொண்டு தைப்பூசத் திருவிழாவை சிறப்பிப்பது, முருகக்ககடவுள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பறை சாற்றும்!

முதல் நாள் புனர்பூசத்தன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து சைனா டவுன் கியொங்சியோக் சாலையில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு அதிகாலையில் முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் ஜம்மென்று பவனி வருவார்.

மாலையில் காவடி பூஜை முடிந்து, நகரத்தார் காவடியும், தண்டாயுதபாணி வீற்றிருக்கும் வெள்ளி ரதமும் மீண்டும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு இரவு பத்து மணியளவில் வந்து சேரும். ஆங்காங்கே குளிர் பானங்கள், கடலை, முறுக்கு, மிட்டாய், ரொட்டி போன்றவற்றை பக்தர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள்.

சட்டத்தின் ஆட்சியைச் சரியாகப் பின்பற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று, அந்தச் சாலையில் தான் காவடியும், ரதமும் சிங்கப்பூரில் பவனி வரும். காவல்துறையினர் வழி முழுவதும் நின்று ஊர்வலத்தைக் கண்காணிப்பார்கள்.

மக்கள் பக்திப் பரவசத்துடன் முருகப் பெருமானின் பெருமைகளைப் போற்றும் பாடல்களைப் பாடிக் கொண்டே ரதத்தின் பின்னால் செல்வார்கள்.

தைப் பூசத்தன்று பகல் 12 மணி முதல் அலகு காவடிகள், பால்குடம் போன்றவை சிராங்கூன் ரோட்டில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும். புனர்பூசத்தன்று இரவு ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலுக்கு வந்து சேர்ந்த நகரத்தார் காவடி, தைப்பூசத்தன்று விடியற் காலையில் பால் குடத்துடன் ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலைச் சுற்றி, சாலையின் வழியே ஊர்வலமாக வந்து தண்டாயுதபாணி கோயில் சன்னிதியில் செலுத்தப்படும்.

கோவிலுக்கு வரும் ஆண் குழந்தைகள் வேலுக்குப் பால் அபிஷேகம் செய்வதிலும், சாப்பாடு பரிமாறுவதிலும் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கவே கண் கோடி வேண்டும்! பெண்கள் சிறு சிறு குழுக்களாகக் கோயிலைச் சுற்றிலும் அமர்ந்து அர்ச்சனை மற்றும் பால் அபிஷேகத்திற்கான சீட்டுகளை விற்பார்கள். ஆண்கள் வருகின்ற பக்தர்களையும், காவடி பால் குடங்களையும் ஒழுங்குபடுத்தி, அன்னதானம் வழங்கும் இடம், முடி இறக்கும் இடம் போன்றவற்றில் கூட்டத்தைச் சரிப்படுத்தி பொறுப்புடன் அங்கே பணியாற்றுவார்கள்.

பகல் 12 மணி முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்படும். அன்று இரவு 12 மணிக்குள் அனைத்துக் காவடிகளும் பால்குடங்களும் கோயிலைச் சென்றடையும். மூன்றாம் நாள் ஏலம் மற்றும் மகமைக் கூட்டம் நடைபெறும்.

பின்னர் இடும்புக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மொத்தத்தில் பழனியில் நடக்கும் தைப்பூசத்திற்குப் போய் வந்த திருப்தியைத் தந்து விடும் சிங்கப்பூர் தைப்பூசம். இதேபோல் பத்து நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரில் நவராத்திரி திருவிழா

நவராத்திரி திருவிழா நடக்கும் அந்த பத்து நாட்களும் ஒரே கோலாகலம்தான்! சுவாமி கொலுவில் இருப்பார். இராஜாங்கம், வெண்ணெய் தாழி, மார்க்கண்டேயர், வேணுகானம், கண்ணப்ப நாயனார், ஊஞ்சல், பிட்டுக்கு மண் சுமத்தல், காளிங்கநர்த்தனம் போன்ற அலங்காரங்களில் ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்டு, கோயில்களில் சுவாமி காட்சியளிப்பார்.

அனைத்துக் கோயில்களிலும் விதவிதமான பிரசாதங்களும் வழங்கப்பெறும். 9 நாட்கள் கொலுவிலிருந்த சுவாமி பத்தாவது நாளான மாநோன்பு அன்று அம்பு போடுவார். அன்று சந்தைக்கு சென்று நாம் பூ, பழம் வாங்கினால், சீனர்கள் கூட 'உங்கள் கோயிலில் 9 நாட்களும் விசேடம் அல்லவா?' என்று கேட்பர். நவராத்திரி அவ்வளவு பிரசித்தம் இங்கே!

ஆக, ராத்திரி ஆனாலே, கோயில்களில் விசேஷம் களை கட்டியிருக்கும். தீவு முழுவதும் உள்ள கலைப் பள்ளികളുടെ மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர்.

இந்தக் கலைகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த மாணவர்கள் கூட தங்கள் அச்சத்தைத் தவிர்த்து, மேடையேறி தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்த நவராத்திரி திருவிழா ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையப் பெறுகிறது. இதில் சீனர்களும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர் என்பது மற்றுமொரு செய்தி.

தீ மிதித் திருவிழா

சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்று சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயில். இக்கோயிலில் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தீ மிதித் திருவிழா மிகவும் பிரபலமான ஒன்று.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் இந்தத் தீமிதித் திருவிழாவைக் காண, பலர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப் புருக்கு வருகை புரிகின்றனர்.

தீ மிதித் திருவிழாவையொட்டி பக்தர்கள் கையில் வேப்பிலை மற்றும் எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, மஞ்சள் நிறத்தில் உடையணிந்து குளித்து விட்டு, ஈர உடையோடு ஒரு முறை அல்லது மூன்று முறை கும்பிடு தண்டவம் செலுத்துவர்.

மேலும் சிலர் அங்கப் பிரதட்சணம் செய்வர்; சிலர் மாவிளுக்கு வைப்பர். இன்னும் சிலர் பால் குடம் எடுப்பர்.

மற்ற இனத்தவரும் கலந்து கொள்ளும் இந்தத் தீ மிதித் திருவிழாவில், கனல்களைக் கொண்டு தீக்குழியில் தீ சுவாலை எரியும். காலை 4 மணி முதல் 11 மணி வரை, பக்தர்கள் தீக் கனலில் நடந்து சென்று அவர்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றுவர்.

இப்படி பல விசேடங்களுக்கும், பிரார்த்தனைகளுக்கு இடையே, குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும், தேவார திருவாசகப் பாடல்களைக் கற்று இறைவனோடு இயைந்து வாழ முற்படுகின்றனர்.

சிங்கப்பூரில் தேவார வகுப்புகள்

(இது ‘தினமணி’ பத்திரிகையில் 21.12.2003 அன்று வெளியானது)

தமிழ் மொழியில் இறைவனைப் பற்றிக் கூறும் பக்திப் பாடல்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. அவை எல்லாவற்றுள்ளும் தலை சிறந்ததாக விளங்குவது தேவார திருவாசகப் பாடல்கள். வேதத்தின் சாரமே திருமுறைப் பாடல்கள். இறைவனை நேராக கண்டு அனுபவித்து அருளிய இந்த அருட்பாடல்கள் மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்தவை.

கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வணிகம் முதலிய துறைகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மக்கள் தங்கள் வழிபாட்டு நெறிகளை மறவாமல் இவற்றை ஓதி உணர்ந்து வாழ்வது பாராட்டுத்தக்கது.

இசையோடு ஓத வேண்டிய இத்தோத்திரங்களை சிங்கப்பூரில் பல கோயில்களில் அதற்காகவென்றே வரவழைக்கப்பட்டிருக்கும் திருமுறைவாணர்கள் ஓதுகின்றனர். இவர்கள் குழந்தைகளுக்கும் இத்தோத்திரங்களைக் கற்பிக்கின்றனர்.

தேவாரத்தின் பெருமையை நன்கு உணர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தேவார வகுப்புகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் தேசிகர் எஸ்.வைத்திய நாதன், "1999ல் இக்கோயிலில் 3 குழந்தைகள் மட்டுமே தேவார வகுப்பில் இருந்தனர். இப்பொழுது 60 குழந்தைகள் பயில்கிறார்கள்" என்று கூறுகிறார்.

குறுகிய காலத்தில் இவ்வளவு குழந்தைகள் கற்றுக் கொள்ளக் காரணம் என்ன என்று பெற்றோர்களை விசாரித்தோம்.

லதா பாலகிருஷ்ணன்

பிரார்த்தனை நேரத்தில் இறையுணர்வோடு இயைந்து நிற்கத் தேவாரம் உதவுகிறது. சமஸ்கிருதம், தெலுங்கு என எத்தனையோ மொழிகளில் தோத்திரங்கள் இருந்தாலும் நம் தாய் மொழியில் இப்பாடல்கள் இருப்பதால் பொருள் உணர்ந்து அதை அனுபவித்துப் பாட முடிகிறது.

சமணர்கள் நாவுக்கரசரை நடுக்கடலில் தூக்கி எறிந்தனர். அப்போது, 'சொற்றுணை வேதியன்' என்ற தேவாரப் பாடலைப் பாடிய அவர் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையை அடைந்தார். இந்த நிகழ்வைக் கூறி என் ஐந்து வயது மகனுக்கு இத்தேவாரத்தைக் கற்பித்தேன். நாங்கள் ஒரு சமயம் இந்தியாவிற்கு விமானத்தில் பயணம் செய்தபோது பலத்த காற்றால் விமானம் மேலும் கீழும் ஆடியது. என் மகன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. உடனே சொற்றுணை வேதியன் பாடலைப் பாடினான். பாடிய சிறிது நேரத்தில் விமானம் சரியாகப் பறக்க ஆரம்பித்தது. என் கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது. எந்த நிலையிலும் பிரச்சினைகளைச் சமாளிக்க நமக்குச் சிவன் அருள் புரிவார் என்ற நம்பிக்கை அந்தப் பிஞ்சு உள்ளத்தில் பதிந்திருந்தது தெளிவாயிற்று," என்றார் திருமதி. லதா பாலகிருஷ்ணன்.

தேவகி இராமனாதன்

தேவாரப் பாடல்களின் மகிமையை நன்கு உணர்ந்திருந்த நான், என் மகனை மூன்று வயதிலேயே தேவார வகுப்புகளுக்கு அனுப்பினேன். நல்ல உச்சரிப்பு, எழுத்துப் பிழையின்றி எழுதுவது, அடுக்கு மொழி வசனம், கவிதை நடையில் எழுதுவது போன்றவை தேவாரம் கற்பதால் சுலபமாக வருகிறது. இவ்வகுப்புகளுக்குத் தொடர்ந்து செல்வதால் கர்நாடக இசையும் பயிலத் தொடங்கியுள்ளான். சினிமாப் பாட்டில் கூட ராகம், தாளம் இவைகளைக் கண்டுபிடித்து விடுகிறான். எல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது என்றார் திருமதி. தேவகி இராமனாதன்.

உமா கணேசன்

கடவுளின் அருள் பெற்ற நால்வர் பாடிய பாடல் தேவாரம். ஆகவே எனக்குத் தேவாரத்தில் மிகுந்த நம்பிக்கை. இவ்வகுப்புகளில் சேர்ந்த பின் என் குழந்தையின் தமிழ் நன்கு வளர்ந்துள்ளது. இப்பாடல்களைக் கற்றதால் வெற்றி கிடைப்பது நிச்சயம். மன அமைதி, கடவுள் நம்பிக்கை, சந்தோஷமிக்க மனம் ஆகியவை இப்பாடலைக் கற்பதால் கிட்டுகின்றன. இதை விடாது கற்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார் திருமதி. உமா கணேசன்.

சிங்கப்பூரில் திருமுறைகளை வளர்ப்பதிலும், குழந்தைகளை ஊக்குவிப்பதற்காகவும் 23 ஆண்டுகளாக ஆண்டு தோறும் 3 நாள்கள் திருமுறை மாநாடு நடக்கிறது.

இதில் பாட்டு, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மற்றும் நாடகங்கள் முதலியன இடம் பெறுகின்றன. 3ஆவது நாள் முடிவில் 63 நாயன்மார் குருபூஜையும் நடக்கிறது.

ஆக, சிங்கப்பூரில் பக்தி மணம் கமகம் என்று பல வழிகளிலும் வீசிக் கொண்டிருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன்னர், மீனவ நண்பர்கள் சிலர் எதேச்சையாக, கடற்கரையில் கண்டெடுத்த இந்திய, புத்த, டவ்யிஸ்ட் சிலைகள் இன்று சிங்கப்பூர் லோயாங் பகுதியில் மும்மதங்கள் சங்கமிக்கும் இடமாக, ஒரே கூரையின் கீழ் சீன, புத்த, இந்திய கோயில்களை உள்ளடக்கிய ஓர் இடமாக மாறியிருக்கிறது.

இதனோடு ஒரு முஸ்லீம் மசூதியும் இருக்கிறது. பல சமயங்களின் சங்கமமாக விளங்கும் “லோயாங் துவா பெக்காங் கோயில்” இருபத்து நான்கு மணி நேரமும் திறந்தே இருக்கிறது என்பது மற்றொரு செய்தி.

இப்படி ஒரு எண்ணம் உண்டானது எப்படி? என்று நிர்வாகிகளில் ஒருவரான திரு. பால் டானை கேட்டதற்கு, "எதேச்சையாக நாங்கள் கண்டெடுத்த அந்தச் சிலைகளை அப்படியே அழிந்து போவதற்கு விட்டுவிட்டு வர எங்களுக்கு மனமில்லாமல், அவற்றை ஒரே இடத்தில் ஒரு வித்தியாசமான முறையில் கோயில் அமைப்பதற்கு முடிவு செய்தோம்.

கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வர ஆரம்பித்தனர். அனைத்து மதத்தினரும் வந்து, அனைத்து தெய்வங்களையும் வழிபட்டது, அனைவரிடமும் ஒரு புதுமையான உணர்வை ஏற்படுத்தியது என்பதை எங்களால் உணர முடிந்தது.

நாளடைவில், அதிகமான வெளிநாட்டினரும் இங்கு வரத் தொடங்கினர். சில நாட்களில் ஏறத்தாழ ஐந்து முதல் பத்து பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். ஆதலால் ஒரு பெரிய இடத்தில் இந்தக் கோயிலைக் கட்ட நாங்கள் முடிவு செய்தோம்" என்றார்.

1996ஆம் ஆண்டு ஒரு தீ விபத்தில் அந்தச் சிறிய இடம் சேதமடைந்ததால், சுமார் 2,566 மீட்டர் சதுர பரப்பளவில் இந்தப் புதிய கோயில் கட்டப் பெற்றது. இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், தங்கள் குறைகள் நன்கு தீர்க்கப்படுவதாக நம்புவதால், மனமுவந்து, விரும்பி அவர்கள் தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றன.

ஒரு புதிய கோயில் கட்ட வேண்டும் என்று கூறிய உடனே, பல பக்தர்களும் நல விரும்பிகளும் 'மடை திறந்த வெள்ளமெென' தங்களது காணிக்கைகளைச் செலுத்த, எந்தச் சிரமமும் இல்லாத 'துவா பெக்காங் ஆலயம்' கட்டப் பெற்றது.

வார நாட்களில் ஏறத்தாழ 300 பேரும், வார இறுதியில் 2,000 பேரும் வந்து தரிசிக்கின்றனர். இங்கு உள்ள இந்தக் கோயிலில் விநாயகரே முதற் கடவுளாக வீற்றிருக்கிறார். துர்க்கையம்மன், சுப்பிரமணியமும், மகாலாட்சுமி சன்னிதிகளும் உள்ளன. இங்கு வீற்றிருக்கும் விநாயகர் 2 மீட்டர் உயரமுடைய சிலை.

இங்கு வரும் பக்தர்கள் எந்த மதத்தினராய் இருப்பினும் வித்தியாசம் ஏதும் இல்லாது அனைத்து தெய்வங்களையும் சென்று அவரவருக்கு தெரிந்த விதத்தில் கடவுளை தரிசிக்கின்றனர்.

அந்தந்தக் கடவுளுக்கு உள்ள விசேஷங்களும், பூஜைகளும் தங்கு தடையின்றி, தனிச்சிறப்புடன் நடைபெற்று வருகிறது என்பது ஒரு சிறப்பு. தமிழ் விசேஷங்களில் விநாயகர் சதுர்த்தி இந்தக் கோயிலில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலப் புத்தாண்டின் பொழுது பால் குடம் எடுத்து பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றன.

மேலும் பல விசேஷங்களைச் செய்வதற்கு கோயில் நிர்வாகம் உரிய நடைமுறைகளை எடுத்து வருகிறது. சீன, புத்த, மலாய், இந்து என முறையே அமையப் பெற்றிருக்கும் இந்தக் கோயில் சன்னிதிகளின் வாயில் அனைத்திலும், சீனர்கள் ஊதுவத்தியைப் போல் ஏற்றி வைக்கும் “ஜாஸ்டட்டிக் தொட்டிகள்” வைக்கப்பட்டுள்ளன. ஆக, அனைத்து மதப் பக்தர்களும் “ஜாஸ்டட்டிக் கை’ ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.

கோயிலில் சுவாமிகளை தரிசித்துக் கொண்டிருந்த பக்தர் ஒருவரிடம் அவர் அந்தக் கோயிலுக்கு வரும் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர் “பொதுவாக கோயில்கள் மிகவும் புனிதமான இடங்கள். ஆனால் இங்கு அனைத்து மதங்களின் தெய்வங்களும் சங்கமித்திருப்பதால் எல்லாவிதமான மந்திரங்களும் ஒன்று சேரும்பொழுது, நம்முடைய குறைகள் எளிதாக தீர்க்கப்பட்டு விடு”வதாக அவர் நம்புவதாக கூறினார்.

ஆக, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பழமொழியை மெய்ப்பிப்பதாக உள்ளது “சிங்கப்பூரில் உள்ள லோயாங் துவா பெக்காங் ஆலயம்.

உலகெங்கிலும் தமிழார்வலர்கள் தமிழை வளர்க்கவும், போற்றவும் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்துள்ளது; தமிழ்ப் படைப்பாளர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. எண்ணற்ற வகையிலும், பரிமாணங்களிலும் தமிழ்ப் படைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும், நடைமுறையில் தமிழ் மக்கள், தமிழைக் கையாளும் விதத்தையும், தமிழின் மீது ஒருவருக்கு இருக்கும் பற்றையும் பாதிக்கும்படியான சூழ்நிலை நிலவுகிறது. தமிழகத்திலிருந்து ஒளிபரப்பப்படும் ஒளி அலைகளில் பேசப்படும் தமிழ், மேற்குத்திய பழக்க வழக்கங்களில் அதிக மோகமுடைய இளைஞர்கள், ஆங்கிலத்தில் உரையாடுவதில் அதிக விருப்பம் - இப்படித் தமிழக்கு எதிரான போக்கு நிலவி வருவது 5,000 வருட பழமை வாய்ந்த தமிழ் மொழி எதிர்காலத்தில் பழக்கத்தில் இருக்குமா? இல்லை கொஞ்சம் கொஞ்சமாக மறையுமானு? என தமிழார்வலர்களை அச்சம் கொள்ளச் செய்வதாக உள்ளது.

இதற்கு மாறாக பல ஆண்டுகளாக கடல் கடந்து சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள், தங்கள் மொழி, கலாச்சாரத்தை மறவாமல், 'தமிழ் தான் தமிழனுக்கு மிகப் பெரிய அடையாளம்' என்று எண்ணி வாழ்வதை பார்க்கும்போது, பாராட்டாமல் இருக்க முடியாது.

காலம் மாற மாற ஒருவரின் பழக்க வழக்கங்களும் காலத்தையொட்டி மாறுவது இயல்பு. அதேபோல, நாடு விட்டு நாடு சென்று பல தலைமுறைகளாக வாழும்போது, அவர்களுக்கென ஓர் அடையாளம் கிடைத்து விடுகிறது.

இப்படிச் சிங்கப்பூர் தமிழர்களுக்கென்று ஒரு தனி அடையாளம் உண்டு. அவர்களுக்கென்று ஒரு பேச்சு வழக்கும் உண்டு. வயதானவர்கள், ஆங்கிலம் கலக்காமல் சுத்தத் தமிழில் உரையாடுவதைப் பார்க்க முடியும். இவர்கள் ஆங்கிலத்தை விட மலாய் மொழியில் சரளமாக உரையாடுவார்!

சிங்கப்பூரில் வாடகைக் கார் ஓட்டுவோர், ஈரச் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள், துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்போர் என யாவரும் ஆங்கிலத்தில் உரையாடுவர். அதற்கு இங்கு Singlish என்று சொல்வர். அதாவது Singapore english ன் சுருக்கமே Singlish. Speak good english movement என்கிற ஓர் இயக்கம், சரியான ஆங்கிலத்தில் மக்கள் உரையாட வேண்டும் என்கிற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்த் தமிழர்கள் சாதாரணமாய் பேசும்போது கூட ‘சாப்பிட்டீங்களா?’ என்று கேட்பதற்கு ‘பசியாறீட்டிங் களா?’ என்பார்கள். ஒருவர் வீட்டிற்குச் சென்றால், ‘என்ன Drinks சாப்படுறீங்க?’ என்று கேட்பதற்கு, ‘என்ன தன்னி சாப்படுறீங்க?’ என்பார்கள். ‘இந்த dressஐ நீங்க use பண்றீங்களா?’ என்பது சாதாரண வழக்கு. ஆனால் அதை சிங்கப்பூர் தமிழர்கள், ‘இந்த உடுப்பை நீங்க பாவிக்கிறீங்களா?’ என்பார்கள்.

ஆனால், இளைஞர்கள் பலர் தமிழை விட ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகிற பொழுதும், தமிழின் மீது இளைஞர்களுக்கு ஒரு நாட்டத்தை ஏற்படுத்த, தமிழார்வலர்கள் பலர் பல முயற்சிகள் மேற்கொள்ள்கின்றனர்.

நான்கு, ஐந்து தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் உண்டு. பெரும் பகுதியான பெண்கள், வீட்டில் ‘சாரோங்’ என்றழைக்கப்படும் கைலியும், சட்டையும் அணிந்திருப்பர். கீழே ஈரச் சந்தைக்கு செல்லும் பொழுது கூட சாரோங் அணிந்து கொண்டே சென்று விடுவர்.

சிங்கப்பூரில் பெற்றோர் வீட்டிற்கு அருகில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு வாங்கும் பிள்ளைகளுக்கு சலுகைகள் உண்டு. ஆக பெற்றோர் வீட்டிற்கு அருகாமையிலேயே பிள்ளைகள் வசிப்பது வழக்கம். பெரும்பகுதியான ஆண்களும், பெண்களும் வேலைக்குச் செல்வதால், தாத்தா, பாட்டி பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வர்.

இனி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பார்ப்போம்.

தமிழர்களுக்கே உரிய சாப்பாட்டு வகைகளான சாம்பார், பச்சடி, பொரியல் என்று செய்வதுடன், மலாய் உணவுகளான சாம்பால், ரொட்டி, பரோட்டா, மீ-சியாம் (ஒரு வகையான Noodles) மற்றும் தவ்வு (Soya) போன்றவையும் இவர்களின் அன்றாட உணவு வகைகள்.

சிங்கப்பூர்த் தமிழர்களின் வீடுகளில் தினமும் மாமிச வகையில் ஏதாவது ஒன்று இருக்கும். இங்கு ஒரு காலிஃப்ளவரின் விலை $4. ஒரு கோழியும் அதே விலைக்கு வாங்கலாம். ஆக, மலிவான விலையில் வீட்டிற்கு அருகே இருக்கும் ஈரச் சந்தைகளில் விதவிதமான மீன் வகைகளும், கோழி, நண்டு, இறால் என மாமிச வகைகள் கிடைப்பதும், இங்கு இருப்பவர்கள் தினமும் மாமிச வகைகள் சமைத்து உண்ண காரணமாக இருக்கிறது.

இந்தியாவிற்கு இதுவரை நான் சென்றதே இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. இந்தியாவிற்கு சுற்றுலா மட்டுமே செல்பவர்களும் உண்டு. அவர்கள் பல தலைமுறைகளாக சிங்கப்பூரிலேயே வசிப்பதால், சுவாமி தரிசனம் செய்யவோ, விதவிதமாக சேலை, துணிமணி, நகைகள் வாங்கவோ மட்டும் இந்தியா சென்று திரும்புபவர்களும் உண்டு.

இந்தியாவுடனான தொடர்பு இவர்களுக்கு குறைவாக இருப்பினும், குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடுவது, தாய் மாமன் மடியில் வைத்து குழந்தைகளுக்கு முடியிறக்கி, காது குத்துவது, கண்ணேறு வராமல் வீட்டில் பூசணிக்காய் கட்டுவது, தீயது ஏதும் வராமல் தடுக்கந்திரித்து கையில் கயிறு கட்டுவது, நல்ல நேரம் பார்த்து எந்தக் காரியத்தையும் செய்யத் தொடங்குவது என்று தமிழர்களின் பொதுவான வாழ்க்கை முறையோடு இவர்கள் ஒத்து வாழ்கின்றனர்.

ஆனால் பூனை குறுக்கே சென்றால், நாம் போகும் காரியம் கெட்டு விடும் என்று யாருமே சாத்திரம் பார்க்க முடியாது. அதற்குக் காரணம் நம் ஊர்களில் 'கா கா' என்று பார்க்கும் இடமெல்லாம் காக்கைகள் கத்தித் திரிவதைப் போல, வீதிகளில் இங்கு எங்கு திரும்பினாலும் பூனைகளைப் பார்க்கலாம். ஆனால், சிங்கப்பூரில் காக்கைகளைப் பார்ப்பதே அரிது. Crow trap என்று சொல்லப்படும் காக்கை கூண்டுக்குள் காக்களைப் பிடித்து அடைத்து விடுவர்.

திருமணங்கள் இங்கு ஜாதி வித்தியாசத்தைத் தாண்டி பொதுவாக பெரும்பகுதி தமிழர்களிடையே நடைபெறுகிறது. இதில் காதல் திருமணங்கள்தான் அதிகம்! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மற்ற இனத்தவரை திருமணம் செய்து கொள்வதை பெரிதும் வரவேற்கா விட்டாலும் அப்படி நடக்கும் திருமணத்தை எதிர்ப்பதும் அரிது!

குழந்தை பிறந்தவுடன் 16ஆம் நாள் வீட்டில் கோழி சமைத்து ஒரு சிறிய விசேடம் நடத்துகின்றனர். முப்பதாம் நாள் பெரியாச்சிக்கு (அநேக கோயில்களில் பெரியாச்சி சன்னிதி இருக்கும்) நன்றி செலுத்தும் விதமாக அபிஷேகம் செய்து, கறுப்பு சேலை வாங்கி சாத்தி, அம்மன் கோயிலில் குழந்தையை போட்டு எடுப்பர்.

அதேபோல் பெண் குழந்தையின் பூப்பெய்தலையும் உறவினர்கள் ஒன்று கூடி தண்ணீர் ஊற்றி, 16ஆம் நாள் ஐயரை அழைத்து புண்ணியானம் செய்து, உறவுக்காரர்கள் விதவிதமாக இனிப்பு வகைகள் செய்து, எடுத்து வருவது, அந்த பெண்ணை அலங்கரித்து சடங்கு சுற்றி, பரிசுகள் கொடுப்பது என்று கொண்டாடுகின்றனர்.

திருமணத்தின் பொழுது, பூ, பழம், பேரீச்சம்பழம், தேங்காய், புடவை, நகை என்று பையன் வீட்டார் அவரவர் வசதிக்கு ஏற்றவாறு கொண்டுவந்து மேள தாளத்துடன் மணவரைக்கு வந்து மாப்பிள்ளை பெண் கழுத்தில் தாலி கட்டுகிறார்.

ஒருவர் இறந்து விட்டால், 16ஆம் நாள் அன்று புண்ணியானம் செய்து, சிவன் கோயில்லில் உறவுக்காரர்கள் அனைவரையும் அழைத்து விளக்குப் பார்த்து ஆத்ம சாந்திப் பூஜை நடத்துகின்றனர்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளையும் சிங்கப்பூர்த் தமிழர்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தீபாவளியನ್ನು முன்னிட்டு வருடா வருடம் வீட்டிற்கு வெள்ளை அடித்து புதுப்பித்து, புதிய இருக்கைகள் வாங்கி, வீட்டைப் புதுமையாக்கி தங்கள் உள்ளத்தையும் புதுமையாக்க முற்படுகின்றனர்.

கைமுறுக்கு, நெய் முறுக்கு என முறுக்கு வகைகளையும் மற்ற பலகாரங்களையும் ஒரு மாதத்திற்கு முன்பே செய்யத் தொடங்குவர். தீபாவளி அன்று அரசு விடுமுறை ஆதலால், தன் சீன, மலாய் நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து உபசரிப்பார்.

59 வயது நிரம்பிய இல்லத்தரசி சாத்தாம்பா, சிங்கப்பூரில் வசிக்கும் 2ஆவது தலைமுறையினர். தீபாவளி கொண்டாடப்படும் தத்துவம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டதற்கு 'கிருஷ்ணராளால் நரகாசுரன் கொல்லப்பட்டதால் நாம் தீபாவளி கொண்டாடுகிறோம்' என்று கூறினார். ஆதலால் நரகாசுரனை நினைத்து, முதலில் தீபாவளி அன்று படையல் படைத்து வழிபட்ட பிறகே எண்ணெய் தேய்த்து குளித்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவோம் என்றது சற்று வித்தியாசமாக இருந்தது.

பொதுவாக தங்களுக்கு ஏதாவது ஒன்று பிடித்து விட்டால் விலைப் பட்டியலை திருப்பிப் பார்க்காமல் வாங்கும் இயல்புடையவர்கள் சிங்கப்பூர் தமிழர்கள். சாதாரண நாட்களை விட தீபாவளி சமயத்தில் கடைகள் அறுபது சதவீதம் கூடுதலாக விற்பனை ஆகிறது என்று தேக்கா வட்டார துணிக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளி சிங்கப்பூர் தமிழர்களின் மனதில் தனிச் சிறப்பைப் பெற்றிருப்பது இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதேபோல் தீபாவளியை முன்னிட்டு இவர்கள் விதவிதமான நகைகளையும் வாங்குகின்றனர்.

இங்கு வீதி கூட்டி துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் கூட தங்க வளையல்கள், சங்கிலிகள் அணிந்திருப்பதைப் பார்க்க முடியும்.

இங்கு தமிழ்ப் பாடம், பள்ளிகளில் முறையாக ஒரு பாடமாகவே கற்பிக்கப்படுகிறது. தமிழில் நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடக்க நிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் உயர் தமிழ் கூடுதலாக எடுத்து படிக்கும் வாய்ப்பைப் பெறுவர்.

சிம் தனியார் பல்கலைக் கழகம் இளநிலை தமிழ் பட்டப் படிப்பை வழங்குகிறது. சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத்தில் தமிழ் படிப்பை விருப்பப் பாடமாக படிக்கலாம். Centre for Language studies, தமிழ் அல்லாதவர்கள் சேர்ந்து தமிழை கற்க வாய்ப்பிருக்கிறது. இதில் ஒரு வகுப்பில் 15 முதல் 20 மாணவர்கள் படிப்பர் என்று தெரிய வருகிறது.

தேசியக் கலை மன்றம் (National Arts Council) இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சிறந்த சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்கும் தங்க முனை விருது வழங்கி கதை, கவிதை எழுதுபவர்களை ஊக்குவிக்கிறது.

சிராங்கூன் ரோட்டில் அமையப்பெற்றுள்ள உமறுப் புலவர் தமிழ் நிலையத்தில் தமிழ் பயிலரங்குகள், சிறப்பு தமிழ் வகுப்புகள், கவிதை இலக்கண வகுப்புகள், கட்டுரை, கதை, கவிதை என பலவிதமான தமிழ் தொடர்பான கருத்தரங்குகளும் வகுப்புகளும் நடைபெறும்.

மேலும், தேசிய நூலக வாரியமும் தமிழ் மொழியை சிங்கப்பூரில் வளர்க்க உதவி புரிகிறது. 2003ஆம் ஆண்டு 'வாசிப்பை நேசிப்போம்' என்ற நிகழ்ச்சியை நூலக வாரியம் நடத்தியது. இதில் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு மணி நேரம் ஒவ்வொரு அமைப்பும், தமிழில் வாசித்து, 24 மணி நேரம் தமிழைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்து, மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

உள்ளூர் படைப்புகள், பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புகள் தீவிலுள்ள அனைத்து நூலகங்களிலும் கிடைக்கப் பெறலாம்.

சிங்கப்பூரில் தமிழ்ச் செய்திகளைத் தாங்கி வரும் ஒரே நாளிதழ் தமிழ் முரசு. மாணவர்களுக்கான மாதிரி வினாத் தாள், இளையவர்களுக்காக பயனுள்ள செய்திகளைத் தாங்கி இளையர் முரசு, மாணவர்களின் கதைகள், கட்டுரைகளை வெளியிடுவதற்காக மாணவர் முரசு, மேலும் இந்தியா, இலங்கை, சினிமா, உள்ளூர், உலகச் செய்திகளுடன் தமிழ் முரசு வெளி வந்து கொண்டிருக்கிறது.

மேலும் 24 மணி நேரம் ஒலிபரப்பப்படும் ஒலி 96.8 fm. மக்களை தீவில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுடன் இணைக்க முயல்கிறது. அதேபோல் வசந்தம் சென்ட்ரல் ஒலி அலை நாடகங்கள், செய்திகள், யார் அந்த ஸ்டார்? சூப்பர் ஜோடி போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், காண்போம் கற்போம், வேட்டையாடு விளையாடு போன்ற சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் ஒளிபரப்புகிறது.

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் அறிஞர்கள், சான்றோர்களின் பட்டி மன்றங்கள், சிந்திக்க வைக்கும் சிறப்புப் பேச்சுகள், சினிமா கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறும்.

இப்படி, தமிழ் சிங்கப்பூரில் செழித்து வளர்ந்து வரும் வேளையில், மேலும் தமிழை வாழவைக்கவும், அதற்கு மெருகூட்டவும் தமிழ்க் கழகங்களும், கலைக்கூடங்களும் பல நிகழ்ச்சிகளைப் படைத்து உதவி புரிகின்றன.

கவிச்சோலை, கவிமாலை போன்ற நிகழ்ச்சிகள் கவிஞர்களையும், கவிதையையும் வளர்த்து வருகின்றன. கவிஞர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கின்றனர். இலக்கணத்தைப் பற்றிய வகுப்பு கவிச்சோலையில் நடைபெறும்.

பாரதியார், பாரதிதாசனார், திருவள்ளுவர், பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரனார், கவிஞர் கண்ணதாசன் போன்ற மாபெரும் சான்றோர்களைப் போற்றி அவர்களின் நினைவாக நிகழ்ச்சிகள் நடைபெறும். இவற்றையொட்டி பொதுமக்களுக்கும், மாணவ மாணவியருக்கும் கதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறும். இதில் பரிசு பெறுவோருக்கு அந்தந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்துப் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த அறிஞர்களைப் பற்றியும், இந்திய காப்பியங்களான இராமாயணம், சிலப்பதிகாரம், மகாபாரதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வினா - விடை நிகழ்ச்சிகள், கட்டுரைப் போட்டிகள் நடைபெறும். ஆக, மாணவர்கள் இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இந்தப் போட்டிகள் அமைகின்றன.

இந்தியாவிலிருந்து வருகை புரியும் சிறந்த பேச்சாளர்கள், அறிஞர்கள் இந்தப் நிகழ்ச்சிகளில் சிறப்புரையாற்றுவர்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் 'முத்தமிழ் விழா' நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கு மரியாதை செய்யப்படும் விதமாக பாட்டு, நாட்டியம், நாடகம் நடைபெறும்.

சிங்கப்பூரில் தமிழை வளர்க்க உதவிய தமிழறிஞர்களுக்கு 'தமிழ்வேள் விருது' வழங்கி முத்தமிழ் விழா நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படும்.

தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் நடத்தும் பேச்சாளர் மன்ற நிகழ்ச்சி மூலம் தமிழில் தாராளமாகப் பேசவும், தமிழை நன்றாக உச்சரிக்கவும் வழி பிறக்கிறது.

எண்ணற்ற பட்டி மன்றங்கள், கலந்துரையாடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் என்று வாரா வாரம் ஏதாவது ஒரு தமிழ் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடந்த வண்ணம் இருக்கிறது.

இங்கு உள்ள 'எஸ்பிளேனேட்' எனும் கலைக்கூடம் அனைத்து வசதிகளையும் உடைய கூடம். இங்கு பிரபலமான கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதேபோல் 'விக்டோரியா தியேட்டர்' என்ற கூடமும் அனைத்து நவீன வசதிகளையும் படைத்தது.

தமிழ்க் கலைகளை வளர்க்க சிங்கப்பூரில் நிறைய கலைக் கூடங்கள் உள்ளன.

இப்படித் தமிழ் இலக்கியங்கள் வளர்வதைப் போலவே, தமிழ்க் கலைகளும் பல குறிக்கோள்களுடனும், நல்ல செய்திகளைத் தாங்கி நிகழ்ச்சிகள் படைத்து சிறப்பாகச் சிங்கப்பூரில் தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கலைக்கூடங்களில் பரதநாட்டியம், கதக், கதக்களி, வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், தபாலா, சிதார், பியானோ, கிடார், கீ போர்ட் மேலும் பல கலைகள் கற்பிக்கப்படுகின்றன.

இராமாயணம், மகாபாரதம், சிவகாமியின் சபதம் போன்ற இதிகாசங்களை நாட்டிய நாடக வடிவில் மக்களிடையே கொண்டு செல்ல முற்படுகின்றனர்.

பல புதுமையான நிகழ்ச்சிகளை அவர்கள் படைக்கின்றனர். Temple of Fine Arts கலைக்கூடம் ஹோலி பண்டிகையை ஒட்டி 'ஸ்வர்-ரங்காலி' (Swar Rangali) என்கிற நிகழ்ச்சியை நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இனிமையான பக்திப் பாடல்களைக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை உருவாக்கினர்.

தியாகராஜ ஆராதனை விழாவில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடப்படும்; பாபநாசம் சிவன் நினைவாக அவர் இயற்றிய பாடல்களில் போட்டிகளும் நடைபெறும்.

இப்படி கலைகளைக் கற்பித்தோடு மட்டும் அல்லாது, ஒவ்வொரு குழந்தையின் கற்கும் திறனை மதிப்பிட வருடா வருடம் தேர்வு நடத்தி சான்றிதழ்கள் வழங்கி உற்சாகப்படுத்துகின்றனர். எட்டு வருடம் ஒருவர் கற்றபின் அவருக்கு டிப்ளமோ பட்டம் அந்தப் பாடத்தில் வழங்கப்படுகிறது.

58 வருட பழமை வாய்ந்த இந்திய நுண்கலைக் கழகத்தில் ஏறத்தாழ 1,400 மாணவர்கள் கற்கின்றனர். சிங்கப்பூரில் இந்தியக் கலையை வளர்க்க உதவி தனி முத்திரை பதித்தவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 'கலா ரத்னா' விருது வழங்கி சிறப்புக்கின்றனர்.

பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாதமி (Bhaskar's Arts Acadamy) என்ற கலைக்கூடம் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களை அழைத்து பயிலரங்குகள் நடத்துகிறது. அண்மையில் கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பத்மபூஷண் ஸ்ரீ கவலம் நாராயண பணிக்கரின் மகன் கவலம் ஸ்ரீகுமார் அவர்களின் இசைப் பயிலரங்கு நிறைவேறியது. ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுடன் இணைந்து அவர்கள் நடத்திய பயிலரங்கில் சீர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இளைய தலைமுறையினருக்கு இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், 'வன மஹோத்ஸவம்' எனும் நாட்டிய நாடக நிகழ்ச்சி 2006ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.

மறைந்து வரும் நாட்டுப்புறக் கலைகளையும் இவர்கள் மீண்டும் மலரச் செய்கின்றனர். இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு 'இராமாயணா', 'இந்திரஜித்' என்ற தலைப்பில் இயல் இசை நாடகம் உள்ளடக்கிய தெருக்கூத்து அரங்கேற்றப்பட்டது.

ஆக, 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்ற புகழ்பெற்ற பாலகி திருமதி. எம்.எஸ்.சுப்புலெட்சுமி பாடுவதைப் போல சிங்கப்பூரில் தமிழும், கலையும், கலாச்சாரமும் எந்தக் குறையுமின்றி நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

சீனர்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள சில நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பொதுவானவை. கலாச்சார வலிமை மிக்க இந்த இரு இனங்களும் மிகவும் பழமையானது. தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் சீனர்களுக்கு சீனப் புத்தாண்டு மிக முக்கியம். ஒரே ஒரு வித்தியாசம். சீனர்கள் தங்கள் புத்தாண்டை 15 தினங்கள் கொண்டாடுகின்றனர். இந்த 15 தினங்களில் முதல் இரண்டு தினங்கள் சிங்கப்பூரில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பண்டிகையை ஒட்டி சீனர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களெல்லாம் ஒருவர் பார்த்தால், 'அட, இவர்க்கும் நம்ம மாதிரியே நம்பிக்கைகளா?' என்று தோன்றும்.

நல்ல நாட்களிலும், மாலை நேரங்களிலும், விளக்கேற்றும் வேளையில் திறந்த வாசல் வழியாக, லட்சுமி இல்லத்திற்குள் வருவாள் என்பது தமிழர்களின் நம்பிக்கை. சீனர்களும் தங்கள் புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் வரும்) வீட்டின் கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைப்பர். அப்படிச் செய்தால் அதிர்ஷ்டக் காற்று கதவைத் தட்டும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

தமிழர்கள் எப்படி ஒரு பண்டிகைக்கு முன்னரே வீட்டை சுத்தம் செய்து விடுகிறார்களோ, அதேபோல சீனர்களும் புத்தாண்டு பிறக்கும் முன்னரே, வீட்டைப் பெருக்கி துடைத்து துப்புரவு செய்து விடுவர். புத்தாண்டு அன்று இப்படி வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தால், அதிர்ஷ்டம் வீட்டை விட்டுப் போய் விடுமாம்!

புத்தாண்டுக்கு முன் வீட்டை அவர்கள் பெருக்கும் போது கூட வீட்டு வாசல் நோக்கிப் பெருக்காமல், வீட்டின் உட்புறம் நோக்கிப் பெருக்கி குப்பையை வீட்டின் பின்புரமாக அகற்றுகின்றன. வீடு சுத்திகரிக்கும் பொருட்களையும் வீட்டின் பின்புறத்தில் வைத்து விடுவர்.

புத்தாண்டு அன்று ஒருவர் என்ன செய்கிறாரோ அதையே வருடம் முழுவதும் செய்வர் என்று தமிழர்களைப் போலவே சீனர்களும் நம்புகின்றனர். அதற்கு சில உதாரணமாக தமிழர்கள் எப்படி அமங்கலமான காரியங்கள், எதிர்மறையான சொற்கள், கோபப்படுதல், அழுதல், ஆத்திரப்படுதல், கடன் வாங்குதல், கொடுத்தல் போன்றவற்றைப் புத்தாண்டு மற்றும் நல்ல நாட்களில் தவிர்த்து விடுவரோ, அதேபோல சீனர்களும் தவிர்த்து விடுவர்.

அன்று குழந்தைகள் தாங்க முடியாத குறும்பு செய்தால் கூட கடும் சொற்களால் திட்டவோ, அடிக்கவோ செய்யாமல் பொறுமையாக இருப்பார். புத்தாண்டு ஆயิற்றே, அன்று போய் குழந்தைகளை அடிக்கலாமா? என்று நினைப்பர்.

உடம்பு சரியில்லாத நோயாளிகள் கூட அழகாக உடை உடுத்தி வீட்டு முகப்பில் வந்து அமர்ந்திருப்பர்.

தமிழர்கள் கருப்பு நிறத்தை அதிர்ஷ்டக் குறைவான நிறமாகக் கருதுவதைப் போலவே சீனர்களும் கருதுகிறார்கள். சிவப்பு நிறமே சீனர்களின் மங்கள நிறம். சீனர்களின் வீடுகளில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் காகிதங்கள் ஒட்டப்பட்டிருப்பதையும், பொம்மைகள் தொங்கவிடப் பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்தி சிவப்பு காகித உறைகளில் பணம் வைத்து (Hong Bao) பரிசளிப்பார்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் முக்கியம் என்பதைச் சீனர்களும், தமிழர்களைப் போலவே உணர்ந்து செயல்படுவதற்கு இது ஒரு சான்று.

முந்தைய காலங்களில் ஜோதிடர்கள் குறிப்பிடும் நாட்களில் நேரங்களில் தான் எந்தவொரு காரியத்தையும் செய்வார்களாம். ஜோதிடர்கள் எந்தத் திசைகளில் சென்றால் நல்லது என்று சொல்கிறார்களோ, அந்தத் திசைர்தான் பயணம் செய்வார்களாம்.

கணினியமாகி வரும் இந்தக் காலத்தில், இளைஞர்களுக்கு ஜோதிடம், வாஸ்து, மூட நம்பிக்கை போன்றவற்றின் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பது ஒரு கேள்வியே.

வேகமாக உலக மயமாகி வரும் இந்தக் காலக் கட்டத்தில், ஒரு இனம் மற்ற இனத்தைத் தழுவி வாழ்வதற்கு பல சான்றுகளைக் கூறலாம். சிங்கப்பூரில் சீனர்கள் தமிழ்க் கடவுளை வழிபடுவது, நம் கலைகளை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வது, நம் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சீனர்களுக்குத் தமிழினத்தின் மீது ஈடுபாடு வர, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் உண்டு. அது எதுவாக இருப்பினும், அவர்களின் நம்பிக்கையும், ஈடுபாடும் அசைக்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்பது மட்டும் உறுதி.

சீனர்களுக்கு நம்பிக்கை தரும் விநாயகர்

நம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் இங்கு மிகவும் பிரபலம். வாடகைக் கார் ஓட்டும் சீனர்கள் சிலர் தங்கள் கார் களில் பிள்ளையார் படம் வைத்திருப்பதைக் காணலாம். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் கற்பக விநாயகரை வழிபடுகின்றனர்.

நான் ஒருமுறை நீண்ட தூரத்திற்கு வாடகைக் காரில் செல்ல நேரிட்டது. ஒருவருக்கு அவருடைய தாய்மொழி இனியமானது என்பதை நன்கு உணர்ந்திருந்த அந்த ஓட்டுநர், நான் காரில் ஏறியவுடனே, தமிழ்ப் பாடலை ஒலி நாடா மூலம் ஒலிக்கச் செய்தார்.

பொதுவாகத் தமிழர்களைக் கண்டால், சீனர்கள், அவர்களுக்குத் தெரிந்த தமிழில், "வாங்க", "வணக்கம்", "சாப்பிட்டிங் களா?", "என்ன அக்கா?" என்று கேட்பது வழக்கம். அதுபோல நமக்குத் தெரிந்த சீனச் சொற்களை நாம் உச்சரிக்க... அது ஒரு நட்பான சூழலை உண்டாக்கும்.

நான் அன்று சந்தித்த சீன வாகன ஓட்டுநரும், அப்படி தமிழ்ச் சொற்கள் சிலவற்றைப் பேசத் தொடங்கி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் வரலாற்றில் வந்து முடித்தார். அவரின் அண்டை வீட்டுக்காரர்கள் தமிழர்கள் என்றும், அவர்கள் மூலம் பிள்ளையார்பட்டி விநாயகரைப் பற்றி தெரிந்து கொண்டதாகவும் கூறிய அவர், தனக்கு ஏற்பட்ட தொடர் கஷ்டங்களில் இருந்து விடுபட கற்பக விநாயகர் அருள் புரிந்தார் என்றார்.

பிள்ளையார்பட்டி பிள்ளையார் மலைக்குடவரைப் பிள்ளையார், அவர் வலம்புரி விநாயகர் என்று பல விளக்கங்களை அவர் கூற, எனக்கு மிகுந்த ஆச்சரியம். சீனர்கள் பிள்ளையாரை 'எலிஃபண்ட் காட்' (Elephant God) என்று அழைக்கின்றனர். 'கணேஷா' என்பதே அவர்கள் விநாயகருக்குச் சூட்டியிருக்கும் செல்லப் பெயர். அந்த ஓட்டுநர் இது 'என் கணேஷா', 'பிள்ளையார்பட்டி கணேஷா' என்று பரவசத்துடன் பேசுவதைக் கேட்க முடிந்தது.

சீனக் கடவுளை வழிபடுவது, அவர்களது பழக்கவழக்கங்களை மேற்கொள்வது, அவர்களது பண்டிகைகளைக் கொண்டாடுவது என்கின்ற போதிலும் சீனர்களில் சிலர், தமிழ்க் கடவுள்கள் மீது, குறிப்பாக விநாயகர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள லயன் சித்தி விநாயகர் கோவிலில் நான் சந்தித்த 'சீ போ சாய்' என்கிற சீனர், குவியலாய்க் கிடந்தடைந்த தேங்காய்களை அள்ளிப் போடுவதிலிருந்து, ஹோமத்திலிருந்து தூங்களைப் பூசிக் கொள்வது வரை மிகுந்த பக்தியுடன் விநாயகரை வழிபடுவதைக் கண்டு அவருடன் பேசினேன்.

'ஒருமுறை என் சகோதரிக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்து வலியால் துடித்துக் கொண்டிருந்தார். என் சகோதாரியைப் பார்க்க எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என் நண்பர்கள் சிலர் விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள். பக்தர்களின் குறைகளை தீர்க்க வல்லவர் என்று கூறினர். ஆக, மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் கூறியதைப் போல விநாயகருக்கு ஒரு ஹோமம் நடத்தினேன். ஹோமத்தின் தூள்களை எடுத்துச் சென்று, என் சகோதரிக்கு வலி எடுத்த இடத்தில் தடவினேன்.

இதே போன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் வலியில் துடித்துக் கொண்டிருக்க, என் சகோதரிக்கு வலி குறைந்தது அந்த விநாயகரின் அருளால் தான் என்ற நம்பிக்கை என்னுள் பிறந்தது. அன்று முதல் நான் விநாயகரின் தீவிர பக்தன். எனக்கு எந்த பிரச்சினை வந்தாலும், அதை விநாயகரிடமே விட்டுவிடுவேன்' என்று சிரிக்கிறார். இந்த நாத்திகனாய் இருந்து ஆத்திகனாய் மாறிய சீ போ சாய்.

வாரத்தில் இரு நாட்கள் 108 பிரகாரம் சுற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ள இவர், "கணேஷாய நமஹ" என்கிற மந்திரத்தை தினமும் மூன்று முறை பாராயணம் செய்வாராம்.

எனக்கு இந்தப் பொருள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தையைப் போல, 'நான் இப்படித்தான் விநாயகரை வழிபடுவேன்' என்று ஒரு முறையை இவர் கடைப்பிடிக்கிறார். பூ, பழம், தேங்காய், தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழம், எலுமிச்சம் மாலை, அருகம்புல் இவையே இவரின் தனிப்பட்ட வழிபாட்டுப் பொருட்கள். இவற்றை ஒரு தட்டில் வைத்து அர்ச்சகரிடம் அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டுமாம். அர்ச்சகர் மந்திரம் சொல்லும்போது, இவர் கையை அந்த தட்டில் வைத்து, கடவுளிடம் என் தேவைகளைக் கூறி வழிபடுவேன் என்கிறார்.

மேலே உள்ள பொருட்களின் பெயர்களை சீனம் கலந்த தமிழில் அவர் கூறியது, அவரின் உண்மையான பக்தியை எடுத்துக் கூறியது.

இவரைப் போலவே நான் சந்தித்த மற்றொரு சீன பக்தை திருமதி. சங் கா சின். தமிழ் முகங்களுக்கு நடுவே, ஒரு வெள்ளை ரோஜாவாக 108 பிரகாரம் சுற்றி வருவதைக் கண்டு, இவர் விநாயகரைத் தேடி வருவதற்கான காரணம் என்ன என்பதை அறிய முற்பட்டேன்.

திருமதி. சங் கா சின் என்னைப்பார்த்து இந்திய முறைப்படி கைகூப்பி வணங்கி, அவர் விநாயகர் பக்தியானது எப்படி என்று கூறினார்.

'1994ஆம் ஆண்டு, எனக்கு 36 வயது இருக்கும் பொழுது, புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த என் கனவில் ஒரு கருப்பு உருவம் யானை போல் தோற்றம் கொண்டது அடிக்கடி வந்து சென்றது. அதைப் பற்றி எனக்கு அப்பொழுது ஒன்றும் தோன்றவில்லை.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னரும் அந்த யானை போன்ற உருவம் மீண்டும் என் கனவில் தோன்றியது. அது என்ன என்று அப்பொழுது ஊகிக்க முடியவில்லை. என் இந்திய நண்பர்களிடம் அதைப் பற்றி கூறினேன். அவர்கள் விநாயகரை வழிபட இது ஒரு அறிகுறி என்று கூற, கீ யோங் செக் சாலையில் உள்ள லயன் சித்தி விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வழிபடத் தொடங்கினேன்.

அதுவே என்னுடைய முதல் அனுபவம். விரைவிலேயே புற்று நோயிலிருந்து குணமடைந்தேன். ஆக, விநாயகர் மீது எனக்கு அதிக நம்பிக்கை பிறந்தது' என்கிறார் திருமதி. சங் கா சின்.

இவருடைய கணவருக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட பொழுது, குடும்பமே விநாயகருக்கு 108 பிரகாரம் செல்ல ஆரம்பித்து, இப்பொழுது வாராவாரம் திருமதி. கா சின்னின் குடும்பத்தினர் ஞாயற்றுக் கிழமைகளில் விநாயகர் கோயிலில் ஆஜர் ஆகி விடுகின்றனர்.

இவர்களைப் போல் இப்படி எத்தனையோ சீனர்கள், இவர்கள் இருவரே! சீனர்கள். 108 பிரகாரம் சுற்றுவது, அர்ச்சனை செய்வது, பாலாபிஷேகம் செய்வது, ஹோமத்தில் கந்து கொள்வது, தேங்காய் உடைப்பது என்று நம்பிக்கையுடன் தமிழ்க் கடவுள்களை வழிபட்டு வருகின்றனர்.

சீனர்கள் விரும்பும் மீன் தலைக் கறி

பொதுவாக, சீன உணவுகள் இந்திய உணவுகளை விட காரம் குறைவாகச் சமைக்கப்படும். சீன உணவு வகைகள் நிறத்திலும், மணத்திலும், சுவையிலும் இந்திய உணவுகளை விட மாறுபடும். என்னுடைய சீன நண்பர்கள் இந்த வேறுபாடுதான் அவர்கள் இந்திய உணவு உண்ண காரணம் என்று சொல்வர்.

தமிழர்கள் பயன்படுத்தும் சாம்பார்த் தூள், மசாலாத் தூள், வரமிளகாய், புளி போன்றவற்றை சீனர்கள் அவர்கள் சமையலில் பயன்படுத்துவது கிடையாது. காரத்திற்கு அவர்கள் மிளகையே உபயோகப்படுத்துகின்றனர். இந்தியர்கள் எண்ணெயில் பொரித்து எடுத்து உண்பது போல் சீனர்கள் அதிகம் எண்ணெயில் பொரித்தெடுப்பது கிடையாது.

சூப், வேக வைக்கப்பட்ட பச்சைக் காய்கறிகள், வேக வைத்த கோழி, மீன், வாத்து முட்டை, நூடுல்ஸ் (Noodles) போரிட்ஜ் என்றழைக்கப்படும் கஞ்சி, போன்றவையே சீனர்களின் முக்கிய உணவு வகைகள். பெரும்பகுதி உணவில் சோயா சாஸ், ஆய்ஸ்ட்டர் சாஸ், தொமேட்டோ சாஸ் போன்றவை சேர்க்கப்படும்.

பெரும்பாலமான சீனர்களின் வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், அவர்கள் தங்கள் வீடுகளில் அதிகம் சமைப்பதில்லை.

சீனர்கள் வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகள் அனைத்தையும் விரும்பி உண்ணும் பொழுதும், ரேஸ் கோர்ஸ் ரோட்டில் அமையப் பெற்றுள்ள முத்து உணவகத்தின் (Muthu's Curry) 'மீன் தலைக் கறி' சிங்கப்பூர் சீனர்களை வெகுவாகக் கவர்ந்த உணவாக இருக்கிறது.

மிக அழகிய உள்ளமைப்புடன் இயங்கும் முத்து உணவகத்தில், மீன் தலைக்கறி, நண்டு, இறால், கோழி என்று சுவைத்துக் கொண்டிருந்த சீனர்களில் ஒருவரான திரு. டான் என்பவரைச் சந்தித்து, "எங்களது இந்திய உணவு உங்களுக்கு, பிடிப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டேன்.

"உங்களது இந்தியச் சாப்பாட்டில் உள்ள காரமும், சுவையும்தான்" என்றார்.

மற்றொரு சீனரான திரு. லோ ஹாங், வாரத்தில் ஒரு முறை முத்து உணவகத்தின் மீன் தலைக் கறி சுவைப்பதற்கு, தவறுவதில்லை என்றார்.

மக்கள் நுகர்வோர், திரு. ஜாக்கி ஹாங், ஜப்பான், தைவான், நாடுகளிலிருந்து வரும் நண்பர்களை முத்து உணவகத்திற்கு கட்டாயம் அழைத்து வருவதாகக் கூறினார்.

இப்படி எண்ணற்ற சீனர்களை கவர்ந்திருக்கும் மீன் தலைக் கறி எப்பொழுது செய்யப்பட்டது? என்று முத்து உணவுவ உரிமையாளர், திரு. காசியை கேட்டதற்கு, '1969ல் என் தந்தையார் மறைந்த ஐயாக்கண்ணுவால் முத்து உணவகம் தொடங்கப்பட்டது. அப்பொழுது சில உணவகங்களில் மட்டுமே மீன் தலைக் கறி பரிமாறப்பட்டது. 1970களில் சீனர்களை கவர்ந்திழுக்க என் தந்தையார் மேற்கொண்ட முயற்சியால் மீன் தலைக் கறி, சீனர்களின் சுவைக்கு ஏற்ப சமைத்துப் பரிமாறப்பட்டது.

ஆக முப்பது வருடங்களுக்கு மேலாக எங்கள் கடைக்கு வரும் சீன வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்கள் கடையின் 75 சதவீதம் வாடிக்கையாளர்கள் சீனர்கள்தான்" என்றார் திரு. காசி.

மீன் தலைக் கறி சீனர்களிடையே மிகவும் பிரபலமாக விளங்கும் உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

சீனர்களும், இந்தியக் கலைகளும்

அன்று சனிக்கிழமை இரவு. வாட்டர்லூ ஸ்திரீட்டில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, காரில் ஏற முற்பட்டேன். கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் நித்ராலயா கவின் கழகத்தில், சின்னஞ் சிறு குழந்தைகள் ஸ்ருதி பெட்டியுடனும், தங்கள் கால்களில் சலங்கையுடனும் செல்வதைக் கண்டேன். சற்று முன்பு தரிசித்த கிருஷ்ணரே நேரில் வந்ததைப் போல் எனக்குள் ஓர் உணர்வு.

சட்டென்று ஏதோ ஒன்று என்னைத் திசை திருப்பியது. அந்த தமிழ் சிறார்களுக்குிடையே, இரண்டு சீனப் பெண்கள்? அதுவும் பரத நாட்டிய உடையிலேயே? இந்திய கலைகள் மீது அவர்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? இனி, நான் அவர்களுடன் பேசியது.

திருமதி. ஐ வீ ஹுவா (40 வயது)

இவரின் கணவர், மகள் இருவருமே இந்தியக் கலைகளின் ரசிகர்கள். பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மகளின் ஆசையே தாய் பரத நாட்டியம் கற்றுக் கொள்ளக் காரணம். மேலே (Balley) நடனம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்ட இவருக்கு, உடல் வாகு ஒத்துழைக்கவில்லை. ஆனால் பரத நாட்டியம் கைகொடுத்திருக்கின்றது. சில வருடங்கள் இவர் பரத நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், `இவரை நடனமாடச் சொல்லிப் பார்ப்பார்களாம். இந்திய நடனத்தை கற்று நீ என்ன செய்யப் போகிறாய்? என்ற கேள்வி ஒருபொழுதும் எழுந்ததில்லை' என்கிறார் இவர்.

கிறிஸ்டின் (44 வயது)

ஆயுர்வேத வகுப்புகள் நடத்துவதற்கு, வருடத்தில் இரு முறை சென்னை செல்வது, இவரது வழக்கம். அப்படிச் செல்லும்போது இவருக்கு பரதக் கலை மீது ஈடுபாடு வர, 3 வருடமாக இவர் பரத நாட்டியம் கற்றுக் கொள்கிறார். "இந்த வயதில் கற்றுக் கொள்வதில் எந்த ஒரு சிரமமும் இல்லை. கை, முகபாவம், உடலமைப்பின் மூலம் இக்கலையில் எண்ணற்ற செய்திகளை மக்களிடேயே எடுத்துச் செல்வது, வேறு எந்த கலையிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம். அதுவே ஒரு சுவாரஸ்யம்" என்கிறார் இவர்.

வாங் சீ மெங் (37 வயது)

இவர் பத்து வருடங்களுக்கு மேலாக பரத கலையைக் கற்று வருகிறார். பத்து வருட அனுபவம், இவருக்கு மேடையில் ஆடும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. எதேச்சையாக இவர் தொலைக்காட்சியில் பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றைக் கண்டு, அது இவருக்கு மிகவும் பிடித்து விட, விரைவிலேயே நடனம் கற்கத் தொடங்கி இன்று ஒரு சிறந்த நடனக் கலைஞராக விளங்குகிறார்.

ஒரு தாய் குழந்தையைக் கொஞ்சுவது, மழை பெய்தது, கிளி பேசுவது என எதுவாக இருந்தாலும் கையில் முத்திரை பிடித்து, முக பாவத்தில் கூற முடிவது, ஒரு தெய்வீக கலை என்று வியக்கிறார். தொடர்ந்து பரத கலையைக் கற்று நன்கு தேர்ச்சி பெற்று, ஆழக் கடலில் முத்தெடுக்க இவரின் மன நிலை தயார்.

பெங் சூ கோ

55 வயது நிரம்பிய இந்தச் சீன மாது, ஒரு கர்நாடக சங்கீதப் பாடகி! சீனர்கள் நடனம் ஆடுவது எளிது. ஆனால் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு கீர்த்தனைகளை ஒரு சீனப் பெண்மணி பாடுகிறார் என்றால் அவரை பாராட்டியே தீர வேண்டும்.

ஆங்கிலத்தில் இவர் வார்த்தைகளை எழுதி வைத்து அதை உடனுக்குடன் மனப்பாடம் செய்து, அவற்றை அடிக்கடி பாடிப் பார்க்கிறார். நவராத்திரி சமயங்களில், கோயில்களில் குழுவில் சேர்ந்து மேடைக் கச்சேரிகள் செய்கிறார். மேல் ஸ்தாயியில் பாடும் பொழுது கடினமாக இருப்பதால், அதை சரி செய்ய இவர் பிராணாயாமமும் கற்று வருகிறார். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம், இவர் பாடிக் கொண்டே இருப்பதால், ஒவ்வொரு நாளும் பாடும் பொழுது, எளிதாக உணர்வதாக இவர் கூறுகிறார்.

ஆக, 'சீனர், தமிழர், மலயா மக்கள் அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்' என்கிற 'ப்ரியா' படப் பாடலை மெய்ப்பிப்பதாக உள்ளது.

நூலாசிரியரின் இணையப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள பிரபலங்களின் சிங்கப்பூர் பற்றிய கருத்து (www.onlinevoice.info)

(நேர்காணல் மற்றும் நிகழ்ச்சிகள்)

திரு. மாலன் - 2001 (பத்திரிகையாளர்)

சிங்கப்பூரில் தமிழும், தமிழ் சார்ந்த துறைகளின் நிலை பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

சிங்கப்பூரில் தமிழ் கடந்த காலத்தில் எவ்வளவு பிரகாசமாக இருந்ததோ, அதேபோல எதிர்காலத்திலும் நிச்சயமாக பிரகாசமாக இருக்கும். தற்பொழுது, சிங்கப்பூர் தமிழர் ஒரு தொலைநோக்கோடு, தமிழ் வளர்ச்சி குறித்து சிந்திக்க வேண்டும். தமிழனின் அடையாளமாக மட்டும் தமிழ் மொழியை உணர்ச்சிபூர்வமாகக் கையாளாமல், தமிழ் மொழியை வைத்து வளர்ச்சியடைய முற்பட வேண்டும். இப்பொழுது இணையம் மூலம், பல வழிகளில் ஒருவர் வளர்ச்சிடைய வாய்ப்புகள் அதிகம். சிங்கப்பூர் தெற்காசியாவின் இணையத்தின் மையமாக விளங்க அதிக வாய்ப்புகள் உண்டு. அவற்றை சிங்கப்பூர்த் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திரு. ப.சிதம்பரம் - 2002 (இந்திய நிதி அமைச்சர்)

உங்களை மிகவும் கவர்ந்த தலைவர் யார்?

என்னை மிகவும் கவர்ந்த தலைவர்களில் திரு. லீ குவான் இயூ அவர்களும் ஒருவர். ஒரு தொலைநோக்கோடு, சிங்கப்பூரை ஒரு செல்வச் செழிப்பான நாடாக உருவாக்கிய அவருடைய வாழ்க்கையிலிருந்து ஒருவர் நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

டாக்டர் கலைஞர் கருணாநிதி - 2002 (தமிழக முதல்வர்)

சிங்கப்பூருடன் உங்களுடைய அனுபவம் பற்றி...

சிங்கப்பூர் அரசாங்கத்தின் கட்டுக்கோப்பான விதிமுறைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. நான் சிங்கப்பூரில் அதிக நாட்கள் செலவிட்டதில்லை. ஆனால் கோலாம்பூரில் நான் அதிக நாட்கள் இருந்திருக்கிறேன். அந்த மக்கள் என் மீது அதிகப் பாசம் வைத்திருப்பது போலவே, நானும் அவர்கள் மீது அதிகப் பாசம் வைத்துளேன்.

நித்தியஸ்ரீ மகாதேவன் - 2002 (பாடகி)

சிங்கப்பூர் ரசிகர்களைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

சிங்கப்பூருக்கு நான் இருமுறை சென்றுள்ளேன். சிங்கப்பூர் மக்கள் தோழமையுடன் பழகக்கூடிய நல்ல ரசிகர்கள். கச்சேரியைப் பற்றிய அவர்களுடைய கருத்தை உடனே என்னிடம் தெரிவித்ததும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிங்கப்பூரில் நிறைய நல்ல வளர்ந்து வரும் பாடகர்கள் உள்ளனர். அவர்கள் மேலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சந்திரபாபு நாயுடு - 2003 (முன்னாள் ஆந்திரப்பிரதேச முதல்வர்)

சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பற்றி தாங்கள் வியக்கும் அம்சங்கள் யாவை?

சிங்கப்பூர் சிறிய நாடேயாயினும், திறமையாக செயல்படும் நாடு. நல்ல திட்டங்களை வகுத்து அவற்றை முறையாகப் செயல்படுத்தி உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு நாட்டையும், மக்களையும் செழிப்பாக வைத்திருக்கின்றனர். இவற்றை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.

அமிதாப்பச்சன் - 2004 (சிங்கப்பூர் சுற்றுலாத் துறையும், தேசிய பூங்காத் துறையும், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பெயரில் 'டென்ட் ரோபியம் அமிதாப்பச்சன்' என்ற ஆர்க்கிட் செடியை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில்)

திரு. லிம் அவர்கள், நான் தோழமையுடன், எளிமையாக, யாரும் எளிதில் அணுகக் கூடியவர். சிரித்த முகத்துடன் இருப்பவர்' என்றார். நான் சிங்கப்பூரில் சந்தித்த மக்களிடமிருந்து தான் இவற்றை கற்றுக் கொண்டேன். சிங்கப்பூரர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள். அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள்.

வைரமுத்து - 2004 (கவிஞர், பாடலாசிரியர்)

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வாழ்க்கையில் பெற்றதென்ன? இழந்தது என்ன?

மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முக்கிய காரணம் பொருளாதாரம். அப்படி ஒருவர் வெளிநாட்டில் வாழும்போது, அவர்கள் வறுமையை வென்று விடுகின்றன. தாய்நாட்டின் ஈரசத்தைத் தொலைத்து விடுகின்றன. இதில் பெற்றோர்கள் தப்பித்து விடுகின்றன. குழந்தைகள் மாட்டிக் கொள்கின்றன. உலகமயமாக்கி வரும் இந்தக் கால கட்டத்தில் இவை தவிர்க்க முடியாத ஒன்று.

கமல்ஹாசன் - 2004 (நடிகர்)

(தேசிய பல்கலைக் கழக ஏற்பாட்டில் நடைபெற்ற ‘உலக அரங்கில் தமிழ்’ நிகழ்ச்சியில் ஆற்றிய உரையிலிருந்து.)

நேற்று சிங்கப்பூரிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் ஒளி அலையில் பள்ளிக் குழந்தைகள் பங்கு பெற்ற 'சொற்களம்' நிகழ்ச்சியைப் பார்த்தேன். கடல் கடந்து வாழும் பொழுதும், நல்ல உச்சரிப்புடன் அவர்கள் சிறந்த தமிழில் உரையாடுவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

குமரி அனந்தன் - 2005 (அரசியல்வாதி இலக்கியவாதி)

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மீது பற்று உள்ளது என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சுத்த தமிழில் 'அணிமணி' என்று எழுதியிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதே சமயத்தில் தமிழகத்தில் Jewellery என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆதலால், அவர்களுக்கு தமிழ் மீது உள்ள பற்று மீது எந்தச் சந்தேகமும் இல்லை.

சுஜாதா - 2006 (எழுத்தாளர்)

சிங்கப்பூரில் தமிழ் மற்றும் தமிழர்களின் நிலையை பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

சிங்கப்பூரில், தமிழுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் நிச்சயமாக உண்டு. கடந்த காலங்களில் தமிழ் சிங்கப்பூரில் செழித்து வளர்ந்திருக்கிறது. எதிர்காலத்திலும் தமிழ் சிறப்பாக வளரும் சாத்தியங்கள் உள்ளன. என்னுடைய ஒரே ஒரு அக்கறை என்னவென்றால் தற்பொழுது தமிழகத்திலிருந்து ஒலிபரப்பப்படும் ஒலி அலைகளும், தமிழ் சினிமாக்களும் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் பொழுது, சிங்கப்பூர் தமிழனின் தனித்தன்மைகள், கலாச்சார, பேச்சு வழக்கு, சற்று மாறுபடும். அப்படி மாறும்போது, இலங்கைத் தமிழர்களுக்கே உரிய தனிப்பட்ட பேச்சு வார்த்தை, கலாச்சாரம் இருப்பதைப் போல, 'சிங்கப்பூர்த் தமிழன்' என்கிற அடையாளம் குறைய வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு நடந்து விடாமல் சிங்கப்பூர் தமிழர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஹரிணி - 2007 (பாடகி)

2001ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு ஒரு நிகழ்ச்சியில் பாட வந்திருந்தேன். உங்களுக்கு யார் பாட வேண்டும் என்று படைப்பாளர் ரசிகர்களிடம் கேட்டதற்கு "ஹரிணி, ஹரிணி" என்று என் பெயரை அழைத்தனர். அது ஒரு இனிமையான அனுபவம்.

Have a question about the books?
Feel free to connect with the author.

+ 0065 96510427

Send me a message