நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்



மதிப்புறு முனைவர், கலைமாமணி லேனா தமிழ்வாணன்

M.A, D.Lit, Dip.in Journalism

படைப்பாளர், பதிப்பாளர்,
தலைவர் மணிமேகலைப் பிரசுரம்


முகவரி: 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017.

தொலைபேசி: 044 24342926, 24346082

மின்னஞ்சல்: manimekalaiprasuram@gmail.com

அலைபேசி: 9445004050

ஒரு கலையைக் கற்பதைவிட, அதைக் கற்பிப்பது மிகக் கடினம். பல்துறைக் கலைஞர்கள் பலரும், எனக்குச் சொல்லித்தரச் சொல்லி மட்டும் கேட்காதீர்கள். அது மட்டும் எனக்கு வராது என ஒதுங்கிக்கொண்ட வரலாறுகள் ஏராளம்.

ஒருநாள் மட்டும் பயிற்சி செய்தால் சைக்கிள் ஓட்டிவிடலாம். மூன்று நாள் பயிற்சி மேற்கொண்டால், மோட்டார் சைக்கிள் ஓட்டும் கலை கைவரப்பெற்றுவிடும். மூன்று மாதம் பயிற்சி பெறுங்கள். கணினிக் கலை உங்கள் கைவசம். ஒரு வருடம் பயிற்சி பெறுங்கள். எந்தக் கலையும் உங்கள் சொல்படி கேட்கும். எழுத்துக்கலை மட்டும் அப்படி அல்ல. சற்றே மலைப்பான விஷயம் இது.

எழுத வேண்டும் என்றால் கருவிலே 'திரு இருக்க வேண்டும். இது இல்லாவிடில் திருத்திரு'தான்.

ஆனால் இவ்வரிய கலையை முடிந்தவரை எளிதாக்கியிருக்கிறார். எங்கள் குடும்ப நண்பர் சௌந்தரநாயகி வைரவன், கணவர் தந்த ஊக்கத்தால் சிறுசிறு இணையக் கட்டுரைகளை எழுதி வந்த சௌந்தரநாயகி, இன்று சிங்கப்பூர் எழுத்துலக நாயகிகளுள் ஒருவராக அங்கீகாரம் பெற்றுள்ளது. அவரது படிப்படியான வளர்ச்சியைக் காட்டுகிறது.

சிங்கப்பூர் அரசு இவரது படைப்புகளை அங்கீகரித்துள்ள விதம். இதற்குத் தக்கதொரு சான்று.

தலைப்புகளில் படிப்படியாக, படிப்பவர்களிடம் நூலின் நிறைவில் நாழும் எழுத்தாளராகிவிட முடியும் என்கிற நம்பிக்கையை நன்கு ஊட்டியுள்

குறிப்பாக, நாநாம் தத்துவம் மிக அருமை. அதுவரை எந்த முன்னணி எழுத்தாளரும் சொல்லாத பதுமை; உத்தியும்கூட!

உங்களுடைய பார்வைப் பரப்புகளை அதிகமாக்குங்கள் என்கிறார். எழுத்தாளர் சுஜாதாவை மேற்கோள்காட்டி நிறையப் படிப்பது மிக அவசியம் என்கிறார். முற்றிலும்

writer யார் உங்களுக்குக் களமும் தளமும் தராவிடில் என்ன? Blog ஆகுங்வர்: இப்படி நீங்கள் எழுத்தாளராவதை யார் தடுத்துவிடமுடியும் என டானிக் தருகினர்.

மொழியைத் தவறின்றி எழுத வேண்டும் என்கிற இவரது உணர்த்தல் حال நிறைவர் சொல்லலாம்.

நாலைவிட வாழ்த்துரை பெரிதாகிவிடக் கூடாது. முடிக்கிறேன்.

இந்நூலைப் படிப்பவர்கள் நாமும் எழுதலாம் போலிருக்கே!" என நிச்சயம் ஊக்கம் பெறுவார்கள் இப்படிப் புறப்படும் துவர்கள் நூல் நாயகியின் கெழுக்கு நன்கு அணி சேர்ப்பார்க நல் வாழ்த்துகளுடன்!

வணக்கம்.
‘ஆச்சி வந்தாச்சு’ மதுரையிலிருந்து வெளிவரும் மாதப் பத்திரிகை.
இந்த இதழில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ‘நீங்களும் எழுத்தாளராகலாம்’ என்ற தொடர் கட்டுரையை எழுதினேன்.
அவைகளின் தொகுப்பே இப்புத்தகம்.

இந்தக் கட்டுரைகள் என் எழுத்து அனுபவம் மற்றும் நான் படித்த நூல்களின் மூலம் கிடைக்கப் பெற்றவை.

சிறுவயதிலிருந்தே என்னைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றிய பல கேள்விகளும், ஆதங்கங்களும், ஆச்சரியங்களும் இருந்துகொண்டே இருந்தன. அதற்கான பதில்களும், தீர்வுகளும் சிலமுறை கிடைத்தன; பலமுறை கிடைக்கவில்லை.

என் எழுத்துலகம் எனக்கு அவற்றிற்கு விடை தந்தது, விடை தருகிறது என்று சொல்லலாம். ஆக தொடர்ந்து, விடா முயற்சியோடு பலவற்றையும் எழுதி வரும் என்னுடைய ஏழாவது புத்தகம் இது.

இதற்குத் தோன்றா துணை நிற்கும் ஆண்டவனுக்கும், என் குடும்பத்தாருக்கும் நன்றி.

இந்தப் புத்தகத்தை வாசித்து ஒரு சாதாரண மனிதன், எழுதத் தொடங்கி, ஒரு கட்டுரையைப் படைப்பாரேயானால், அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி!

நன்றி!

திருமதி. சௌந்தரநாயகி வைரவன்
சிங்கப்பூர், 13.11.2020

இன்று உலகில் மக்களுக்கு எத்தனையோ கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன. முந்தைய காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான துறைகள்தான் இருந்தன. ஆனால் இன்றோ, எண்ணிலடங்கா துறைகளும், கணக்கிலடங்கா படிப்புகளும் உள்ளன.

சரி, செய்தித்துறையின் பங்கு இவ்வுலகில் என்ன? கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே ஒரு செய்தியை மற்றவருக்கு கொண்டு செல்வது என்பது இருந்து வந்துள்ளது. செய்தியை கொண்டு செல்லும் வழிகளும், அதற்கான கருவிகளும் பல பரிமாணங்களில் வளர்ந்து வருகின்றன.

விஞ்ஞான வளர்ச்சி அதிகம் இல்லாத கால கட்டத்தில், புறாவின் காலில் செய்தியை இணைத்து அனுப்பியதைப் பலரும் கேள்விப்பட்டிருப்போம். அரசர் காலத்தில் ஒரு பொது இடத்தில் தண்டோராப் போட்டு மக்களிடம் செய்தியைக் கொண்டு சென்றதையும் நாம் அறிந்திருப்போம்.

இந்த விஞ்ஞான காலத்தில் செய்திகள் ஒலி - ஒளி வடிவில் மக்களை சென்றடைகின்றன. ஆக “செய்தித்துறை” என்ற ஒன்று மிகப் பழமையான ஒன்று.

இவற்றோடு தற்பொழுது கணினி, கைபேசியின் பல அம்சங்களும் மக்களுக்கு ஒரு நொடியில் எண்ணற்ற செய்திகளைக் கொண்டு சேர்த்து விடுகின்றன. கணினிமயமாகி இருக்கும் இவ்வுலகில், செய்தித்துறை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. ஆக, எழுத விருப்பமுள்ளவர்களுக்கும், செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கும் இணையம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

செய்தித்துறை இல்லை என்றால் செய்தியே இல்லை. நாட்டில் நடப்பவற்றை அறிந்துகொள்ள மக்களுக்கு வாய்ப்பே இல்லை, வியாபாரி அவரின் பொருளை பெரிதாக விரிவடையச் செய்வது கடினம். புதிதாக வந்திருக்கும் ஒரு பொருளைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வது சுலபமல்ல. புதிய மருத்துவக் கண்டுபிடிப்பு, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் படிப்பு, புதிதாகத் தோன்றியிருக்கும் பழக்கவழக்கங்கள், இன்னும் எத்தனை எத்தனையோ நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளைப் பற்றி அறிந்து கொள்வது என்பது செய்தித்துறை என்ற ஒன்று இல்லாமல் சாத்தியமே இல்லை.

ஆக வீட்டின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கும் செய்தித்துறை ஆற்றும் பங்கு இன்றியமையாத ஒன்று.

எழுதுவது - நாம் அனைவரும் செய்வதுதான். ஆனால் ஏன் எல்லோராலும் எழுத்தாளர் ஆக முடிவதில்லை? ஒரு சிலர் மட்டுமே சிறந்த எழுத்தாளராக அடையாளம் காணப்படுவது எப்படி? அதற்குப் காரணம், எதையோ எழுதுவதற்கும் (கிறுக்குவதற்கும்), திறமையாகவும், நேர்த்தியாகவும் எழுதுவதற்கும் (கருத்தைச் சொல்வதற்கும்) அதிக வித்தியாசம் உள்ளது.

ஆக, ஒருவர் எழுத்தாளராக பிறப்பிலேயே உருவாகிறாரா? அல்லது உருவாக்கப்படுகிறாரா? எழுதுவது ஒரு வரமா? அல்லது நாளடைவில் ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கலையா? என்னைப்பொறுத்தவரை இரண்டுமே உண்மைதான்; சாத்தியம் தான். எழுத்து உலகம் என்பது, கடலைப்போல் விரிந்தது. வானத்தைப்போல் அகன்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி ஒரு தனி அடையாளமோ, அதைப்போல, ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு தனி அடையாளம் உண்டு. ஒவ்வொரு எழுத்தாளனும் கொண்டிருக்கும் அனுபவமும் வெவ்வேறு வகையானவையே.

ஆக யாராலும், ஒரு எழுத்தாளனுக்கு வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் இவைதான் என்று அறுதியிட்டு கூறுவது கடினம்.

ஆனால், சிலவற்றை மனதில் உள்வாங்கிக் கொள்வதன் மூலம், ஒரு மனிதன் தன்னை எழுத்தாளனாக உருவாக்கிக்கொள்ள முடியும்.

நிறைய எழுதினால் ஒருவர் சிறந்த எழுத்தாளன் என்று அர்த்தமாகிவிடாது. நாம் என்ன சொல்ல நினைக்கிறோமோ, அதை கச்சிதமாக, அடுத்தவர் மனதில் எளிதாகப் படிய வைத்துவிட்டால், அவரே சிறந்த எழுத்தாளர்.

ஒருவர் எழுதும் எழுத்து, மற்றவரின் ஐம்புலன்களுக்கும் விருந்தாக வேண்டும். சிரிப்பான சம்பவத்தை எழுதினால், தன்னை மறந்து ஒருவர் சிரிக்க வேண்டும். சோகத்தைச் சொன்னால், கண்ணீரில் தானாக கண்ணீர் வர வேண்டும். ஒரு இயற்கையை விவரித்தால், அந்தக்காற்றை ஒருவர் அந்த இடத்திற்குச் சென்று சுவாசித்ததைப் போல் எழுத்து அமைய வேண்டும். உணவை விவரிக்கும் பொழுது, நாக்கு அதை தானாக ருசிக்க வேண்டும். இப்படி ஒருவரின் எழுத்து அமையுமேயானால், அவரை மக்கள் எழுத்தாளன் என்று ஏற்றுக் கொள்வர்.

ஒருவன் தன்னை எழுத்தாளனாக வளர்த்துக் கொண்டால் அவரின் மனக்கதவு மட்டுமல்ல, வாழ்க்கைக் கதவும் பல வழிகளில் திறந்துவிடப்படும்.

இன்று ஒருவர் எழுதுவதற்கான தளங்கள் பல உள்ளன. எழுத்தாளர் ஒருவர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பார் எங்கும் இருக்கும் மக்களின் வீடுகளுக்கும் தம் எழுத்துக்கள் மூலம் செல்ல இயலும்.

ஒருவர் தன்னை முன்னிலைப்படுத்தாது, தன் எழுத்துக்களை முன்னிலைப்படுத்தி பாரபட்சமின்றி எழுதும்பொழுது, அவர் அனைவரும் மனதிலும் காலத்தைக் கடந்து நிற்க முடியும்.

ஏனென்றால் ‘கத்தி முனையைவிட பேனா முனை கூர்மையானது’.

எழுத்தாளனாக வரம் வாங்கி வந்திருக்கும் சிலர் இயற்கையிலேயே எழுதுவது எளிது. ஆனால் தன்னுள் மறைந்திருக்கும் எழுத்துக் கலையை ஒருவர் வளர்க்க ஆசைப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

நம் எண்ணங்கள்தான் ஒரு மனிதனையும், இந்தச் சமுதாயத்தையும் இயக்குகிறது. பெண்ணுரிமை, தனி மனித சுதந்திரம், ஒரு நாட்டின் விடுதலை, மதம், மொழி, உரிமை போன்ற எண்ணற்ற எண்ணங்கள் மக்களிடம் அன்றாடம் உதயமாகின்றன.

அந்த எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கும்பொழுது பலவற்றை செய்வதற்கு அது தூண்டுதலாக அமையும். ஆனால், ஒருவர் நினைப்பவற்றை எழுத்து வடிவில் கொண்டு வருவது மிக அரிது.

எழுத்தாளனா? அதெல்லாம் அறிவு ஜீவிகளின் சமாச்சாரம் அல்லவா? அனைவராலும் எழுத முடியுமா என்ன? பெரிய படிப்பாளிக்கள் செய்வதை, நாம் செய்ய நினைக்கலாமா? அதற்கெல்லாம் நல்ல அறிஞர், சான்றோராக இருக்க வேண்டுமே என்று யாருமே தப்புக் கணக்குப் போடாதீர்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு எழுத்தாளன் அவனை அறியாமலேயே ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான். அவன் உங்களுக்குள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று அடையாளத்தைக் கண்டுபிடித்து விடுங்கள். நீங்களும் எழுத்தாளராகி, நாளடைவில் அறிஞர், சான்றோர் என்ற பட்டியலில் இடம் பெறலாம்.

அப்படியா? ஆக நம்மை அறியாமலேயே நம்முள் ஒளிந்திருக்கும் எழுத்தாளனை எப்படி அடையாளம் காண்பது? அதற்கான முதல் படி ‘நான்’ என்ற சிறிய வட்டத்திற்குள் இருந்து வெளிவருவது.

நம்மைச் சுற்றி நடப்பவற்றின் மீது அக்கறை கொண்டு ‘நாம்’ என்ற எண்ணத்தோடு ஒரு பெரிய வட்டத்திற்குள் உங்கள் எண்ண ஓட்டத்தைச் செலுத்த விளையுங்கள்.

ஒரு சராசரி மனிதன், எழுத்தாளனாவதற்கான முதல்படி இதுவே.

'Observation' என்ற பழக்கம் நம்மிடையே வந்துவிட்டால், 'நான்' என்ற சிறிய வட்டத்தினுள் இருந்து 'நாம்' என்ற பரவலான சூழலுக்கு ஒருவர் வந்துவிடுவர். இதுவே ஒருவர் எழுத்தாளராகத் தன்னை உருவாக்கிக் கொள்வதற்கான முதல் படி.

ஒருவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்து, ஒரு சின்ன வட்டத்திற்குள் உலா வரும்பொழுது, மனம் விரிவடையவோ, நம் சிந்தனை விரிவடையவோ, நம்மைச் சுற்றி இருப்பதைப் பற்றி அறிந்து கொள்ளவோ எப்படி முடியும்?

தன் வாழ்க்கையை மட்டுமே நினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது உங்களுடைய எண்ணம் 'நான்' என இருக்கும். நம்மைச் சுற்றி நடப்பவற்றில் நீங்கள் கவனம் செலுத்தும்பொழுது, உங்களுடைய எண்ணம் 'நாம்' என்று விரிவடையும்.

சுருங்கச் சொன்னால் ‘நம்மைப் பற்றி நினைக்கும்பொழுது - 'நான்': நம்மைச் சுற்றி நடப்பவற்றை நினைக்கும் போது 'நாம்'.

ஆக, என் வேலையை நான் பார்க்காமல், ஊர் வேலையைப் பார்த்தால் என் குடும்பத்தைப் பிறகு யார் பார்ப்பது? என்ற எண்ணம் நம்மிடம் தோன்றுவது இயற்கை.

உங்கள் வேலையை விடுத்து மற்றவர்கள் மீது அக்கறை செலுத்தினால்தான், நீங்கள் எழுத்தாளன் என்ற போர்வைக்குள் உங்களைக் கொண்டுவர முடியும் என்பதல்ல. அன்றாடம் உங்கள் வேலைகளைச் சரிவரச் செய்துகொண்டே தாராளமாக நாட்டில் நடப்பவற்றின் மீதும் நீங்கள் கவனம் செலுத்த முடியும்.

இங்கே கவனம் செலுத்துவது என்பது, நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிப்பது. நம்மைச் சுற்றி நடப்பவற்றை நாம் கூர்ந்து கவனிக்கும்பொழுது, நம்மிடையே எத்தனையோவிதமான எண்ணங்கள், சிந்தனைகள், கேள்விகள் தோன்றும். அது எந்தவிதமான சூழலாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! சிந்தனையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

தாங்கள் எங்கு இருந்தாலும் சரி. வீடு, வெளி இடமோ அல்லது புது இடமோ. நீங்கள் பார்க்கும், கேட்கும் சம்பவங்களை மனக்கதவை திறந்து, உங்கள் பிரச்சனைகளை சில நிமிடங்கள் தள்ளி வைத்து, மனதை அங்கு நடக்கும் சம்பவத்தில் செலுத்தி கவனிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் ‘நான் என்ற எண்ணம் 'நாம்' ஆக மாறுவதற்கான முதற் படி அதுவே.

இப்படி செய்யும் பொழுது உங்கள் எண்ண ஓட்டம் வேறு விதமாகும். நீங்கள் உங்களுக்குளே ஒரு வித்தியாசத்தை உணருவீர்கள். நீங்கள் அப்படி பார்க்கும் பொழுது உங்களை அறியாமல் உங்களுக்குள் பல கேள்விகள் உதயமாகும்!

ஒரு உதாரணம், ஒரு பேருந்தில் நீங்கள் பயணம் செய்ய எண்ணுகிறீர்கள். அப்பொழுது உங்கள் எண்ண ஓட்டம் எப்படியிருக்கும்? பொதுவாக 'நான்' என்ற எண்ணம் மட்டும் இருக்கும்பொழுது பேருந்தில் ஏறுவதற்கு முன்னர், வீட்டில் நீங்கள் போட்ட சின்னச் சண்டை, நீங்கள் எடுக்க மறந்த ஒரு பொருள், நீங்கள் அணிந்திருக்கும் ஆடை சரியாக இருக்கிறதா? பேருந்து சரியான நேரத்திற்கு வந்து விடுமா? நாம் போகும் இடத்தில் மழை இருக்குமா? என்று உங்களைப் பற்றியே இருக்கும்.

‘நாம்' என்ற எண்ண ஓட்டத்திற்கு உங்கள் மனதைக்கொண்டு செல்ல, இதற்கு மாறாக தாங்கள் என்ன செய்ய வேண்டும்?

மேலே கூறியவை அனைத்து விதமான எண்ண ஓட்டம், பெரிய சிந்தனையோ காரியமானவையோ அல்ல என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

இதைவிடுத்து, பேருந்திற்குக் காத்திருக்கும்பொழுதோ, பேருந்தில் ஏறிய பிறகோ, மனதை அமைதியாக வைத்து, நீங்கள் இருக்கும் இடம் எப்படி இருக்கிறது? சுத்தமாக இருக்கிறதா? கலைநயத்தோடு இருக்கிறதா? என்று கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

அங்கேயிருக்கும் சக பயணிகளை அமைதியாகக் கவனியுங்கள். சிலர் சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருக்கலாம். சிலர் நிறைய நகைகளுடன் பணக்காரத் தோற்றத்துடன் இருக்கலாம். ஆனால் முகத்தில் சோகம் நிரம்பி இருக்கும். சிலர் குழந்தை குட்டியோடு வேகமாக, முன்னே இருப்பவர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு நடையைக் கட்டிக் கொண்டிருப்பர்.

இப்படி எத்தனையோ சம்பவங்கள் உங்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும். இதை ஆங்கிலத்தில் "Observe" என்று சொல்வோம் அல்லவா? அப்படி Observe செய்யுங்கள்.

இப்படிக் கூர்ந்து கவனிக்கும்பொழுது, உங்கள் மனதில் உங்களை அறியாமலே பல கேள்விகள் எழும், மனதில் பல சிந்தனைகள் உருவாகும்.

இப்படி அன்றாடம் உங்கள் வேலைக்கு நடுவில் உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஆக இப்படி தொடர்ந்து உங்களை சுற்றி நடப்பவற்றை கவனித்துக்கொண்டே வாருங்கள். (உ.ம்) நீங்கள் பார்த்த சம்பவம் கீழே விவரிக்கப்படும் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.

சம்பவம்: ஒரு தாய், தன் குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். இந்தச் சம்பவம் எல்லா ஊரிலும், எல்லா இடத்திலும் நடப்பதுதான். ஆனால் ஒரு சாதாரண மனிதனின் பார்வையிலும், ஒரு எழுத்தாளனின் பார்வையிலும் இந்த மாதிரி அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் கூட வெகு வித்தியாசமான கண்ணோட்டத்தில் அமையும்.

ஒரு சாதாரண மனிதன் அந்தத் தாய், அந்த குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக, ஒரு மேலோட்டமான எண்ணத்தோடு பார்ப்பார். ஆனால், ஒரு எழுத்தாளரின் பார்வையில், அவர் மனதில் அது எத்தனையோ விதமான எண்ணங்களை உருவாக்கும்.

அந்த பெண்ணின் குடும்பப் பின்னணி எப்படிப்பட்டது? அந்தத் தாயின் பொறுப்பு உணர்வு, குழந்தை சிறு வயதிலேயே பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம். அந்தக் குழந்தை, தாய்க்குச் செய்யவேண்டிய கடமையுணர்வு, இந்தச் சமுதாயத்தில் பள்ளிகளின் அவசியம், இளம் வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் - இன்னும் எத்தனையோ எண்ணங்கள் உருவாகும்.

ஆக 'Observation' என்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எல்லா மனிதனிடையே இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றக்கூடிய சக்தியை ஆண்டவன் இயற்கையிலேயே கொடுத்துள்ளான்.

இப்பொழுது ஒரு பேனாவையும், பேப்பரையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பார்த்த அந்தச் சம்பவத்தை, ஒரு நண்பனிடம் சொல்வதுபோல் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதுங்கள்.

நீங்கள் பார்த்த அந்த சம்பவத்திற்கும், உங்களுள் உதயமான அந்த எண்ணத்திற்கு எழுத்து வடிவம் கொடுக்க நீங்கள் ஆயத்தமாகுங்கள். இதுவே நீங்கள் எழுத்தாளன் ஆவதற்கான முதல் படி.

5 'W's and one 'H'. '5 Ws - What, Where, Why, Who, When. One H - How? என்ன, எங்கே, ஏன், யார், எப்பொழுது, எப்படி - இவைதான் '5 Ws and one 'H'.

ஆக நீங்கள் பார்த்த சம்பவம் - 'ஒரு தாய் ஒரு குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது'. முதல்படியான சம்பவத்தைக் கூர்ந்து கவனிக்கக் கற்றுக்கொண்டு விட்டீர்கள். இப்பொழுது அந்தச் சம்பவத்திற்கு எழுத்து வடிவம் கொடுப்பதற்காக பேனா, பேப்பரை எடுத்து எழுதுவதற்கான இரண்டாவது படிக்கும் நீங்கள் தயார்.

இப்பொழுது, என்ன எழுத வேண்டும்? எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்ற தயக்கத்தை விடுத்து, கீழே உள்ளவற்றிற்கு பதில் சொல்ல / எழுத முற்படுங்கள்.

  1. என்ன நடந்தது? - தாய் தன் குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்
  2. எங்கே? - ஊர், எந்த இடம்?
  3. ஏன்? - ஏன் ஒரு தாய் குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்? உங்கள் எண்ணத்தை எழுதுங்கள்.
  4. யார்? - இந்தச் சம்பவத்தின் கதாபாத்திரங்கள் யார்? என்பதை விவரியுங்கள்.
  5. எப்பொழுது? - இந்த சம்பவம் நடந்தபொழுது, எப்படிப்பட்ட சீதோஷ்ண நிலை / சூழல் இருந்தது?
  6. எப்படி? - அவர்கள் உடுத்தியிருந்த உடை, அவர்கள் வைத்திருந்த பொருள் இவற்றைப் பற்றி எழுதுங்கள்.

இவற்றிற்கான பதிலை உங்களுக்குத் தெரிந்த நடையில், ஒரு நண்பரிடம் பேசுவதைப்போல் எழுதுங்கள். இப்படி எழுதி முடித்த பின்னர், வாசித்துப் பாருங்கள். நீங்களும் உங்களுடைய எண்ணங்களைப் பதிவு செய்திருப்பீர்கள்.

சரி இப்படி உங்கள் எண்ணத்தைப் பதிவு செய்வதால் ஒருவருக்கு என்ன பயன்? இதை சாதாரணமாக விவரிக்கும்பொழுது, அது சாதாரண சம்பவம் தான். ஆனால் உணர்வுப்பூர்வமாக, ஒரு சமுதாயப் பார்வையோடு, அதை பதிவு செய்யும்பொழுது, தனி மனித மேம்பாட்டைத் தவிர ஒரு சமுதாய மேம்பாடு அடைய வழிவகுக்கலாம்.

ஆதலால்தான் கத்திமுனையை விட பேனா முனை கூர்மையானது என்று சொல்கின்றனர்.

எதை வேண்டுமானாலும் நீங்கள் எழுதுங்கள். நீங்கள் பார்த்த ஏதாவது ஒரு சம்பவம், நீங்கள் கேட்ட ஒரு செய்தி, நீங்கள் அதிசயித்த ஒரு நிகழ்ச்சி, இவற்றில் எது உங்கள் ஞாபகத்திற்கும், கவனத்திற்கும் மீண்டும் மீண்டும் வருகிறதோ, எதை அடுத்தவரிடம் மீண்டும் மீண்டும் சொல்ல நினைக்கிறீர்களோ, அவை அனைத்தும் அடுத்தவர் விரும்பிப் படிக்கக்கூடிய ஒன்றுதான்.

ஆக ஓரளவு நீங்கள் உங்கள் சிந்தனைக்கு எழுத்து வடிவம் கொடுக்கக் கற்றுக்கொண்டு விட்டு, அடுத்த படிக்கு ஆயத்தமாகுங்கள்.

நான் முன்னர் கூறியதைப் போல, ஒரு தாய் பள்ளிக்கு குழந்தையை அழைத்துச் செல்லும் சம்பவம்; வெயிலில் வியர்த்துக் கொட்ட, அன்றாட வயிற்றுப் பிழைப்பிற்காக தலையில் காய்கறிகளை சுமந்து விற்கும் ஒரு பெண்மணி: இளங்கன்று பயமறியாது என்பதைப் போல, நண்பர்கள் கூட்டத்தோடு ஊர்தியில் வேகமாக பேருந்தைப் பாராமல், குறுக்கே ஓடித் திரியும் இளைஞர்கள் - இப்படி நீங்கள் அன்றாடம் சந்திக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியும் உங்கள் எழுத்திற்கு உரியவையே.

மேலும் நீங்கள் விடுமுறைக்கு உங்கள் உறவுக்காரர் வீட்டிற்குச் செல்கிறீர்களா? அவர் வீட்டில் வேலை செய்ய வரும் வேலைக்காரி, அவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இப்படி ஏதாவது உங்களுக்கு ஆச்சரியத்தையோ, வித்தியாசத்தையோ உண்டு பண்ணினால் அதையும் எழுதுங்கள்.

இப்படி நீங்கள் எழுத எழுத, உங்கள் சிந்தனையோட்டம் விரிவடையும். உங்கள் எழுத்து பலப்படும். பிரபல எழுத்தாளர் சுஜாதாவை நான் ஒருமுறை பேட்டி கண்டேன். சிறந்த எழுத்தாளராவதற்கு எது மிக முக்கியம் என்று கேட்டேன். அதற்கு அவர் "Key to Good writing is good reading".

ஆக தாங்கள் எதைப் பார்த்தாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதைப் போல, உங்கள் வாசிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எதை வேண்டுமானாலும் வாசியுங்கள். உங்கள் எழுத்து மேன்மையடைய வாசிக்கும் பழக்கம் இன்றியமையாத ஒன்று.

பொதுவாக நாம் எதையாவது அடுத்தவரைக் கேட்கவோ (வாசிக்கவோ) வாங்கவோ செய்ய வேண்டுமானால் அது அவர்களுக்குத் தேவையான ஒன்று என்றால் மட்டுமே அதை அவர்களிடம் கொண்டு செல்ல முடியும். ஆக ஒருவர் தன் துறையில் வெற்றி காண வேண்டும் என்று நினைத்தால், அதைப் பெற இருப்பவரின் தன்மையை அறிந்திருப்பது மிக இன்றியமையாத ஒன்று.

ஒருவன் சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்றால், எப்படிப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் ரசிப்புத்தன்மை அவர் வளர்ந்த, வாழும் சூழலைப் பொறுத்தே அமைகிறது. ஆக மனிதர்கள் பலவிதம் போல், வாசகர்களும் பலவிதம். இதைத்தான் ஆங்கிலத்தில் "Target Audience" என்று சொல்வர்.

ஆக எழுதுவதற்கு முன்னர், நம்முடைய Target Audience யார்? அவர்களுக்கு எது அந்தச் சமயத்தில் தேவை என்பதை அறிந்து வைத்துக்கொண்டு, அதற்கு ஏற்றார்போல் எழுத விளையும் தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் எழுதத் தொடங்கி இருக்கும் ஒருவருக்கு, நான் எழுத்தாளனா? நான் சொல்ல நினைப்பதை மக்களிடம் சரியாகத்தான் சொல்கிறேனா? நான் எழுதுவது சரியா? என்ற பல சந்தேகம் மிக்க கேள்விகள் எழுந்து கொண்டிருக்கும். அப்படி ஒரு சமயத்தில் நம்முடைய வாசகர்கள் யார் என்ற முக்கியமான ஒன்றை அவர்களால் எப்படி நிர்ணயிக்க முடியும்?

சரி. ஓரிரு மாதம் வெள்ளோட்டம் பார்த்து விட்டீர்களா? அதுதான் எழுத்து வெள்ளோட்டம்! உங்களுக்குள் மறைந்திருக்கும் ஒரு எழுத்தாளரை இப்பொழுது கண்டுபிடித்திருப்பீர்களே? சரி! வாழ்த்துக்கள்.

உங்களுடைய எழுத்துக்களை யார் வாசிக்கப் போகிறார்கள்? என்ற ஒரு முக்கியமான அம்சத்தைத் தேர்வு செய்யவேண்டிய கட்டத்திற்கு தாங்கள் இப்பொழுது வந்துவிட்டீர்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் "Target Audience" என்று சொல்வர்.

நீங்கள் எதை எழுதப் போகிறீர்கள் என்பதை யார் வாசிக்கப் போகிறார்கள் (Target Audience) என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும். Target Audienceஐ முடிவு செய்வது என்பது மிகச் சுலபம். பொதுவாக ஒரு குடும்பத்தில் யார் அங்கத்தினர்? அம்மா, அப்பா, ஆண் மற்றும் பெண் குழந்தைகள், தாத்தா, பாட்டி சராசரியாக இவர்களை ஒன்றுசேர்த்ததுதான் ஒரு குடும்பம்.

இந்தக் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வயது வித்தியாசம் உண்டு. ஆங்கிலத்தில் "Demographics" என்று அதைச் சொல்வார்கள். அதாவது, வயதைப் பொறுத்து, அவர்களது தேவையை நிர்ணயிப்பது.

ஆண், பெண் இருபாலாரும் ஒரு குடும்பத்தில் அடக்கம். அதாவது, இருபாலருக்கும் அவர்களது ஆசைகள், தேவைகள் வெவ்வேறு. ஆக இதைக் கருத்தில்கொண்டு அவர்களது தேவையை நிர்ணயிப்பது ஒரு அம்சம். அதைத்தான் ஆங்கிலத்தில் "Gender Consideration" என்று சொல்வர்.

இப்படியொரு சிறுகுடும்பத்தையே அடிப்படையாக வைத்து, மேலே குறிப்பிட்ட Demographics / Gender இவற்றைக் கொண்டு, நீங்களே ஒரு மனிதனின் தேவையை மிகச் சுலபமாக வரையறுத்துக் கொள்ளலாம்.

முதலில் தாத்தா - 70 வயதை எட்டிய ஒரு ஆண். தாத்தாவிற்கு எது தேவையாக இருக்க முடியும்? நீங்கள் மலிவு விற்பனையில் வாங்கிய புடவை பற்றியோ, முந்திரி, நெய் போட்டுச் செய்த ஒரு வட இந்தியச் சாப்பாட்டைப் பற்றியோ நீங்கள் எழுதினால் இவர்களுக்கு அது தேவையா? இதை அவர்கள் விரும்பி வாசிப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள்!

ஆக இப்படி ஒருவர் இருக்கும் ஊர், அவரின் வயது, அவரின் வருமானம், அவர்களின் படிப்பு இவற்றைக்கொண்டு Target Audience ஐ முடிவு செய்ய வேண்டும். 70 வயது தாத்தாவிற்கு உடல் நலத்தைப் பேணுவது எப்படி? அருகில் இருக்கும் தியான வகுப்பு, ஓய்வுக் காலத்தில் சேமிக்கும் முறை, இவற்றை ஆராய்ந்து எழுதினால், அவர்கள் அதை விரும்பிப் படிப்பார்கள்.

இவற்றை அதே குடும்பத்தில் இருக்கும் 16 வயது சிறுவன் விரும்பி வாசிப்பானா? நிச்சயமாக இல்லை. IPL Cricket, புதிதாகச் சந்தையில் வந்திருக்கும் Handphone, அந்த ஊரில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் Fast Food Restaurant, மேல் படிப்பிற்கான வாய்ப்புகள், இப்படிப்பட்டவையே இந்த வயதினருக்குத் தேவை. இவற்றைப்பற்றி எழுதினால் அவர்கள் விரும்பி வாசிப்பார்கள். இவைதான் அவர்களுக்குத் தேவையும் கூட.

இப்படி ஒவ்வொரு வயதினருக்கும் அதாவது, வயது, இருக்கும் ஊர், அவர்களின் வசதிவாய்ப்பு, ஆண், பெண்பாலர், அவர்களின் படிப்பு இவற்றைச் சற்று ஆராய்ந்து விட்டு பின்னர் அவர்களுக்கு ஏற்றவாறு உங்கள் எழுத்துக்களை நீங்கள் எழுத முற்படுவது மிக மிக இன்றியமையாத ஒன்று.

அப்படி நீங்கள் Target Audience யார் என்பதை நிர்ணயம் செய்யாது, எவ்வளவு ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும், ஆராய்ச்சிகள் பல செய்து எழுதினாலும், அதற்கு நிச்சயம் வரவேற்பு இருக்காது.

ஒருவர் எழுத்தாளராவதற்கு என்றுமே ஆண்டவன் வரம் கொடுக்க வேண்டும். கணினி அதிக வளர்ச்சி அடையாத காலம் வரை ஒருவர் எழுத்தாளர் ஆவதற்கு ஆண்டவனோடு சேர்ந்து பூசாரியும் வரம் கொடுக்க வேண்டியிருந்தது.

நான் இங்கே ‘பூசாரி’ என்று குறிப்பிடுவது ‘செய்தித்தாள் மற்றும் பத்திரிகையின் ஆசிரியரை’. அந்த ஆசிரியர் உங்கள் எழுத்துக்களை ஆமோதிக்காவிட்டால் (வரம் கொடுக்காவிட்டால்) உங்கள் எழுத்துகளுக்கு அதோகதிதான். மற்றவர்கள் உங்கள் படைப்புகளை அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லை.

ஆனால் கணினி நம் அனைவர் வாழ்விலும் இடம்பெற்றுவிட்ட இந்தக் காலத்தில், உங்கள் எழுத்துகள் / படைப்புகளுக்கு நீங்களே ராஜா, நீங்களே மந்திரி! ஆண்டவன் வரம் கொடுத்தால் போதும், பூசாரிக்கு இங்கு வேலை இல்லை. ஆக, வேறு என்ன வேண்டும் உங்களுக்கு? இனி... நீங்களும் எழுத்தாளர் தான்!

இப்பொழுது ‘Blog’ என்ற ஒன்று இணையதளத்தில் மிகப்பிரபலம். எந்த ஒரு செலவும் அதிகம் இல்லாது, எளிதாக இந்த Blog தொடங்குவதற்கு நீங்கள் பழகிக்கொள்ளலாம். இப்பொழுது அனைத்துப் பெரும் பகுதியான இல்லங்களிலும் கணினி இருக்கிறது. இணையத்தொடர்பு பெற்றுக்கொண்டு விடுங்கள்.

உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் ‘Blog’ எப்படி ஆரம்பிப்பது? என்று கேளுங்கள். ‘இக்காலத்துக் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் தெரிகிறது பாருங்களேன்?’ என்று புருவத்தை நீங்கள் உயர்த்தும் அளவிற்கு அவர்கள் ‘Blog’ ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்து விடுவார்கள்.

இல்லையென்றால் எல்லா ஊர்களிலும் ‘Blog’ ஆரம்பிப்பது எப்படி? போன்ற வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படி எளிதாக ஓரிரு தினங்களில் நீங்கள் ‘Blog’ ஆரம்பிக்கக் கற்றுக்கொண்டு விடலாம்.

“blog” இல் எவ்வளவு எழுதலாம்? மேலும் பத்திரிகை, செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி இவற்றில் உங்களுடைய எழுத்து மற்றும் படைப்புகளை எப்படி இடம்பெறச் செய்யலாம்?

Sender & What - Receiver என்ற கோட்பாட்டில் நீங்கள் எதை, யாருக்காக எப்படிச் சொல்ல வேண்டுமோ, அப்படிச் சொன்னால் தான் நீங்கள் சொல்ல நினைப்பதை, சொல்ல வேண்டிய இடத்தில் அர்த்தமுள்ள ஒன்றாகச் சொல்ல முடியும்.

அதைப்போல மற்றொரு விஷயம் கருத்திற்கொள்ள வேண்டிய ஒன்று. எந்தத் தருணத்தில் (Season) எதை எழுத வேண்டும் என்பது.

(உ.ம்) தீபாவளி சமயத்தில் புதிய பலகார வகைகள், தீபாவளியைக் கொண்டாட வேண்டிய வழிமுறைகள், புதிதாக வந்திருக்கும் துணி வகைகள், இவற்றைப் பற்றி எழுத வேண்டும். கோடை காலத்தில் கோடையைச் சமாளிக்கும் வகைகளை எழுத வேண்டும். இப்படி அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றார்போல் உங்கள் தலைப்பைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

ஆக Target Audience மற்றும் Season இவற்றை வரையறுத்துக்கொண்டு நீங்கள் யாருக்காக எதை எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். ஒருசிலரால், எல்லா வயதினர் தரப்பினருக்கும் எழுத முடியும். ஒருசிலரால் சில தரப்பினருக்கு மட்டுமே ஏதுவாக எழுத முடியும். உங்களுக்கு எது சாத்தியம் என்பதைத் தேர்வு செய்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் எழுத முற்படுங்கள்.

ஆக யாருக்காக, எதை, எப்பொழுது எழுத வேண்டும் என்பதை அறிந்து கொண்ட, தாங்கள் எப்படி எழுதுவது? என்ற முக்கியமான கட்டத்திற்கு வந்து விட்டீர்கள். சுவையாக நீங்கள் கருத்தைச் சொன்னால்தான் உங்களை உண்மையான எழுத்தாளர் என்று மக்கள் ஏற்றுக்கொள்வர். அதுவும் எளிதே. தொடர்ந்து வாசியுங்கள்.

நீங்கள் இப்பொழுது எழுதுவது என்பது என்ன? அதன் அடிப்படைக் கூறுகள் என்ன? செய்தியின் செய்தித்துறையின் அவசியம் என்ன? என்பதை அறிந்து கொண்டீர்கள். சரி நாம் சொல்வதை மற்றவர்களுக்குப் புரியும்படி ரசிக்கும்படி அவர்கள் மனங்களில் எப்படிப் பதியச் செய்வது? எளிதுதான். ஆனால் எளிதாக கருத்துக்களைக் குழப்பமில்லாமல் - தெளிவாக எழுதுவது எளிதல்ல. அதற்கு சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வது இன்றியமையாதது.

சரி நாம் எதற்காக எழுதுகிறோம்? பொதுவாக நம்முடைய கருத்துக்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளவோ, சமூகத்தில் ஒரு மாற்றத்தையும், சமூக சிந்தனையைத் தூண்டவோ தான் பல கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

ஆக நாம் ஒரு கருவை மனதில் வைத்திருப்போம். அது என்ன? அதனால் வரும் நன்மை, தீமை என்ன? அதில் பின்விளைவுகள் என்ன? இவற்றை நம் புரிதலுக்கு ஏற்றவாறு நமக்கு அது என்ன என்பது தெளிவாகத் தெரியும். இதை மற்றவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? அந்த சம்பவத்தை / நம் கருத்தை மற்றவர்களுக்குத் தெளிவாக குழப்பமில்லாமல் புரியும்படி சொன்னால்தான் வாசகர்கள் அவற்றை விரும்பி வாசிப்பார்கள். அப்பொழுதுதான் அந்தக் கருத்து, செய்தி போய் சேரும்.

ஆக சிறந்த எழுத்து என்பதன் அடிப்படை நான்கு:

  1. தெளிவு: நாம் சொல்ல நினைப்பதை, நிறைய எழுதாமல் குறைந்த வார்த்தைகளைக் கொண்டு அழகாகவும் தெளிவாகவும் எழுத வேண்டும்.
  2. புரியும்படி எழுதுவது: நாம் சொல்ல நினைக்கும் கருத்தை, குழப்பமில்லாமல் மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படி அந்தக் கருத்தை எழுத வேண்டும்.
  3. திறமையாக எழுதுவது: எழுதும்பொழுது சரியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். தவறான கருத்தை எழுதினால் நாம் சொல்லும் கருத்தே மாறிவிடும்.
  4. எளிமையாக எழுத வேண்டும்: கடுமையான சொற்கள், கடுமையான வரிகள் யாரும் அறிந்திராத வார்த்தைகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். எளிமையாக ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் எழுத வேண்டும்.

நாம் ஒரு தனி மனிதனுக்கோ, நமக்கு நாம் எழுதவில்லை. பல சூழலில் பலதரப்பட்ட மக்களும் நம்முடைய கருத்தை வாசிக்கப் போகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு எழுத்தாளர் இலக்கணம்; அவற்றின் கூறுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தவறான இலக்கணம் நம் எழுத்தில் இருந்தால் நம்மை சிறந்த எழுத்தாளராக இந்தச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. சராசரியாக ஒரு மனிதன் 5000 முதல் 6000 வார்த்தைகள் தான் அறிந்திருப்பார். பிரபல ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியருக்கே 30,000 வார்த்தைகள் தான் தெரிந்திருந்ததாக நாம் அறிகிறோம்.

மேலும் நாம் சொல்ல/ எழுத விளையும் தலைப்பைப் பற்றி (Subject) நன்கு புரிதல் வேண்டும். நமக்கே அது சரியாகத் தெரியாவிட்டால் பின்னர் நாம் எவ்வாறு அவற்றைப் பற்றி தெளிவாகப் பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியும்?

மேலும் பெரிய நீண்ட வாக்கியமாக எழுதாமல் சின்னச் சின்ன வாக்கியங்களாக எழுத வேண்டும். பத்திகள் சிறந்த கட்டுரையின் ஒரு முக்கியமான அம்சம். ஒவ்வொரு செயலும் கருத்தும் ஒவ்வொரு பத்தியில் இருந்தால் தான் வாசிப்பவர்களுக்கு சலிப்புத் தட்டாமல் இருக்கும். அப்பொழுதுதான் அந்தக் கட்டுரைக்கு சுவாரஸ்யம் கூடும்.

நாம் எழுத நினைக்கும் தலைப்பைப் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி வாசித்தால் அதில் அவர்கள் கையாண்டிருக்கும் நெளிவுசுளிவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆக நிறைய வாசிப்பதன் மூலம் நல்ல எழுத்து எப்படி அமையும் என்பதைப் பற்றி உணர்ந்து கொள்ள முடியும்.

“அந்த வெயிலிலும் வறுமையிலும் புடவை எடுக்க கடைக்குச் சென்ற விமலா, கலாச்சாரத்தை காக்க நினைக்கும் பெண்மணியே.”

ஆக இப்படி முதல் பத்தியை ஒருவர் ஆரம்பித்தால், எத்தனை அர்த்தங்கள் இதற்குள் இருக்கிறது என்று பாருங்கள். எத்தனை அம்சங்கள் அதற்குள் அடங்குகிறது என்று பாருங்கள்:

  1. அது ஒரு வெயில் காலம்
  2. அவள் ஒரு ஏழைப் பெண்மணி
  3. தீபாவளிப் பண்டிகைக் காலம் அது
  4. வெயில், வறுமை என்று அனைத்தையும் தாண்டி, நம் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் பெண்மணி
  5. பள்ளிக்குச் சென்று பட்டம் வாங்கினாளோ இல்லையோ ஆனால் தமிழன் என்கிற அடையாளம் குறையக்கூடாது என்று நினைக்கிற பெண்மணி
  6. ஒரு மனிதனுக்கு கலாச்சாரம் மிக முக்கியம் என்பதை வலியுறுத்த நினைக்கும் அவளது வாழ்க்கைத் தரம்

இப்படி எத்தனை அம்சங்கள் இதில் அடங்கி உள்ளது என்று கூர்ந்து வாசியுங்கள். ஆக முதல் பத்தியில் சொல்லும் கருத்து, சமூக சிந்தனையை எளிதாகவும், இனிமையாகவும், குழப்பாமலும் இருக்க வேண்டும். இப்படியொரு கட்டுரையின் முதல் பத்தி அமையுமேயானால் மக்கள் நிச்சயம் அக்கட்டுரையை விரும்பி வாசிப்பார்கள்.

மேலும் அக்கட்டுரையின் தலைப்பு பொருத்தமான ஒன்றாக இருக்க வேண்டும். கட்டுரையின் தலைப்பு, முதல் பத்தி இவை இரண்டும் கட்டுரையின் இரு கண்களைப் போன்றது. இவற்றைத் தெளிவாக ஒருவர் முடிவு செய்துவிட்டு இவற்றிற்கு ஏற்றார்போல் தொய்வில்லாமல் தொடர்ந்து கட்டுரையைக் கொண்டு செல்ல வேண்டும்.

பின்னர் வருகிற பத்தியில் ஒரு கருத்திற்கு ஒரு பத்தி என்கிற வகையில் கட்டுரையை அமைத்துக் கொள்ள விளையலாம். அவள் நடந்து சென்ற வீதியில் அவள் பார்த்த காட்சிகள், கடையில் கடைக்காரர் கையாளும் வியாபார உத்தி, அங்கு வந்து இறங்கி இருக்கும் புடவையைக் கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரம் - இப்படி எத்தனை விதமாக வேண்டுமானாலும் ஒருவர் தம் கட்டுரையை எடுத்துச் செல்லலாம்.

எதை எழுதினாலும் அதில் கருத்து இருக்க வேண்டும். சமூக சிந்தனை இருக்க வேண்டும். குழப்பாமல் சுவாரஸ்யமாக எழுத வேண்டும்.

கட்டுரையின் முதல்பத்தி, நாம் என்ன எழுத விளைகிறோம் என்பதை வாசகர்களுக்குத் தெளிவாக விளக்குவதாக அமைய வேண்டும் என்பதை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். அதைத் தொடர்ந்து வரும் மீதி பத்திகளும் தெளிவாக அமைந்தால்தான் அந்தக் கட்டுரை முழுவதும் சிறப்பாக அமையப் பெறும். அதற்கு நாம் எவற்றை நினைவில் கொள்ள வேண்டும்?

இதற்குச் சுருங்கப் பதில் சொல்ல வேண்டுமானால், “ஒவ்வொரு கருத்தும் (கட்டுரையின்) ஒவ்வொரு பத்தியில் இடம் பெற வேண்டும்” என்பதுதான். அதற்கான விளக்கத்தை விரிவாக, உதாரணங்களுடன் தொடர்ந்து பார்ப்போம்.

நீங்கள் நவராத்திரி கொலுவிற்கு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்கிறீர்கள். அதை ஒரு கட்டுரையாக எழுத விரும்புகிறீர்கள். இப்படி ஒரு கட்டுரையை யார் விரும்பிப் படிப்பார்? எந்தச் சமயத்தில் எழுத வேண்டும்? அதற்கான தலைப்பு எப்படி அமைய வேண்டும்? முதல் பத்தியை எப்படி அமைப்பது? கட்டுரையை எப்படி ரசித்து எழுதுவது போன்ற அம்சங்களையும் நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.

இப்பொழுது நாம் இந்தக் கட்டுரையின் தலைப்பிற்கு கீழ் எப்படி எழுதுவது என்பதைப் பார்ப்போம். நவராத்திரிக்கு நாம் கோவிலுக்குச் சென்றால், அங்கு எவற்றையெல்லாம் பார்ப்போம்? அவற்றை முதலில் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இவைதான் நம் பெரும்பாலோர் கண்ணுக்கும், கருத்துக்கும் தட்டுப்படும்:

சுவாமி, கோவிலில் நிரம்பி இருந்த கூட்டம், அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சி, மக்கள் அணிந்திருந்த உடை, ஆபரணம், நவராத்திரியின் சிறப்பு, சுவாமிக்குச் செய்யப்பட்ட அலங்காரம், அங்கு வழங்கப்பட்ட பிரசாதம்.

ஆக இப்படி எவற்றைப் பற்றி எழுத நினைக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக ஒரு தாளில் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். ஆக நீங்கள் பட்டியலிட்டிருக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்து. ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு பத்தியில் அமைய வேண்டும். இப்படி அமைந்தால்தான் அந்தக் கட்டுரை உங்கள் வாசகர்களைக் குழப்பாமல், நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்தை அவர்கள் உள்ளங்களில் பதிய வைக்கும். உங்களுக்கும் அந்தக் கட்டுரை எழுதுவது சிரமமில்லாமல், எளிமையாகவும் அமையப் பெறும்.

அடுத்து நீங்கள் பட்டியலிட்டிருக்கும் கருத்துகளில், எது மிக முக்கியமானதோ, அதை முதலில் எழுதுங்கள். உங்கள் கட்டுரையின் தலைப்பிற்கும், உங்கள் வாசகர்களுக்கும் ஏற்றவாறு, அந்தக் கருத்துகளின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அவற்றை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு, இந்தக் கட்டுரையில் எது முதல் கருத்தாக அமைய வேண்டும்?

  • முதலில் நவராத்திரி - இதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
  • எந்தக் கோவிலுக்கு நீங்கள் சென்றீர்கள்?
  • அங்கு என்ன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது?
  • சாதாரண நாட்களுக்கும், நவராத்திரிக்கும், தங்களுக்குக் கோவிலில் என்ன வித்தியாசம் தெரிந்தது?
  • அங்கு வந்திருந்த மக்கள், அவர்களின் ஆடை அணிகலன்கள்
  • அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சி
  • கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மக்களுக்கு ஏற்படும் நன்மை
  • அங்கு வழங்கப்பட்ட பிரசாதம்
  • நவராத்திரி நம் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க எப்படி உதவுகிறது?

இவ்வாறாக முக்கியமான கருத்துகளின் அடிப்படையில் பட்டியலிடுவதை ஆங்கிலத்தில் "Inverted Pyramid" என்று பத்திரிகைத் துறையில் சொல்வர். இப்படி கட்டுரையின் ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு கருத்தை முன்னிறுத்தி, அவற்றை விளக்குவதாக அமைய வேண்டும்.

ஆக கட்டுரையின் முடிவு, நம் எண்ணம் என்ன? என்பதைப் பிரதிபலித்து மிக முக்கியமாக ஒரு சமூக சிந்தனையோடு அமைய வேண்டும். இப்படி ஒரு கட்டுரை அமையுமேயானால், வாசகர்கள் நாம் விவரிக்கும் கோவிலுக்கே சென்று வந்ததைப் போன்று உணர்வர்.

யார் எதை எழுதினாலும், அவற்றை மக்கள் விரும்பி வாசித்து விடுவார்கள் என்றால், இன்று அனைவருமே எழுத்தாளர்கள்தான்! ஆனால் ஏன் எழுத்துத்துறையில் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருக்கின்றனர். இதற்குக்காரணம், நாம் சொல்ல நினைப்பதை சுவாரஸ்யமாகப் பலராலும் சொல்ல முடியாததால்தான் எழுத்துத்துறைக்குள் அதிகம் பேர் நுழைவதில்லை.

நாம் அன்றாடம் பேசும்பொழுதும், அப்படித்தான் ஒரு சிலரை “நல்லாப் பேசுவான்! கேட்டுக்கிட்டு இருக்கலாம்ப்பா! சுவாரஸ்யமா இருக்கும்” என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.

அதேபோல்தான் எழுத்துத்துறைக்கும் சுவாரஸ்யம் என்பது மிக இன்றியமையாதது. நாம் ஒன்றை எழுதினால், வாசகர் அந்த இடத்திற்குச் சென்று விட வேண்டும். அப்படி அவர்களை நாம் அழைத்துச் செல்லும்பொழுது அவர்களை ரசனையோடு, நெளிவு சுளிவோடு, அமைதியாகவும், அழகாகவும் எடுத்துச் செல்ல வேண்டும்.

அவர்களை அழைத்துச் செல்லும் பாதையில் அவர்களிடம் நாம் பல கேள்விகளையும் கேட்க வேண்டும்; அவர்களை யோசிக்க வைக்க வேண்டும். பின்னர் அவர்கள் சிந்திக்கும்படியும், சிரிக்கும்படியும் அவ்வப்பொழுது அவர்களுக்கு விடையையும், கொடுத்துக்கொண்டே அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்கள் உங்களை உண்மையிலேயே விரும்பி, உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டே பயணிப்பார்கள்.

மேலும் ஒரு சந்தையைப் பற்றி நீங்கள் ஒரு பத்திரிகைக்கு எழுத விரும்பினால், சிறிதுநேரம் அதற்காக ஒதுக்கி, ஒரு அரை மணி நேரம் அந்தச் சந்தைக்குச் சென்று அதை நீங்களே நேரில் சென்று பாருங்கள். அங்கு இருக்கும் வியாபாரிகள், அங்கு வரும் மக்கள், அவர்கள் பேசிக்கொண்டதில் உங்களுக்கு எது சுவாரஸ்யமாக இருந்ததோ அதைக்குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களிடம் அவற்றைப் பற்றி விசாரித்துக் குறிப்புகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் உங்கள் கட்டுரையை எழுத ஆரம்பியுங்கள்.

நம் சமையலில் உப்பு மற்றும் சீனி எப்படியோ, அதே போலத் தான் ஒரு கட்டுரைக்கு இலக்கணமும், இலக்கியமும்! நாம் செய்யும் அனைத்து உணவு வகைகளிலும், எப்படி கட்டாயம் உப்பு மற்றும் சீனி அளவாக இடம் பெறுமோ அதே அளவிற்கு, இலக்கணம் இடம் பெற வேண்டும். நம் விருப்பத்திற்கு அதை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. ஏனென்றால் இலக்கணம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட விதி. நாம் அதில் நம் கற்பனையையோ, ஜோடனையையோ ஒருபொழுதும் திணிக்க இயலாது.

“இலக்கணம் என்பது நம் தொடக்கப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு அடிப்படையான பாடம். அதுதான் Noun, Verb, adjectives, என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பெயர்ச்சொல், வினைச்சொல் விதிமுறை.

ஒரு எழுத்தாளராக விரும்புபவர்கள்; சரியாக இந்த விதிமுறைகளை பள்ளிக்குழந்தையைப் போல், இணையத்தைத் தட்டியோ, அல்லது தொடக்கப் பள்ளி பாடப் புத்தகத்திலிருந்தோ அவசியம் திரும்பப் பார்த்து, அவற்றை மீண்டும் ஒருமுறை Revise செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இலக்கணம் தவறினால் அது ஆதியிலேயே சான்றோர், அறிஞர்களால் நமக்கு வரையறுக்கக் கொடுக்கப்பட்ட “விதிமுறைகளை” நாம் சரியாகப் பின்பற்றாததன் அறிகுறி. அது தவறு. ஆக ஒரு எழுத்தாளன் அந்தத் தவற்றை ஒருபொழுதும் செய்தல் கூடாது. இலக்கணம் கட்டுரையில் தவறாக இருந்தால் பல நேரங்களில் உங்கள் கருத்துக்களே தவறாக வாசகர்களிடம் சென்றடைந்து விடும்.

இலக்கணத்தைப் போலத்தான் “நிறுத்தற்குறிகள்” என்று சொல்லப்படும் “Punctuations”. Punctuations என்பதும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. இவையும் கற்பனையில் உதிப்பவை அன்று! ஆக இவற்றை ஒரு வாத்தியாரிடமோ, அல்லது புத்தகங்களைப் படித்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் எழுதும்பொழுது எந்த இடத்தில் Comma (,) போட வேண்டும், எந்த எந்த இடத்தில் Semi Colon (;) போட வேண்டும், எந்த இடத்தில் புள்ளி (.) வைக்க வேண்டும் என்பதை அறிந்து இருத்தல் முக்கியம்.

ஒருமையில் ஒரு வாக்கியத்தை எழுதினால், அந்த வாக்கியம் ஒருமையில்தான் முடிய வேண்டும். அதாவது, “சீதா அவளுடைய புத்தகத்தைக் கொடுத்தார்கள்” என்பது தவறு. “சீதா அவளுடைய புத்தகத்தைக் கொடுத்தாள்” என்பது சரி.

இதேபோல் இறந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் போன்ற விதிமுறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் “Tense”, இதற்கு ஒரு (உ-ம்):

  • சரி - நான் நேற்று சென்றேன்.
  • தவறு - நான் நேற்று செல்வேன்.

ஆக “இலக்கணம்” என்ற முக்கிய அம்சத்தை எழுத்தாளராக விரும்புபவர்கள் சரியாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆக உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் எழுத்தாளனை நம்புங்கள்; கண்டுபிடியுங்கள். சிறு சிறு துணுக்குகளையும், 4 அல்லது 5 வரிகளில் எழுதிப் பாருங்கள். அப்படியும் உங்கள் எழுத்துலகத்திற்குள் நுழையலாம். எழுதுவதற்கு வயது வரம்பில்லை; எதற்கும் முடிவும் இல்லை. ஆக எழுத ஆரம்பியுங்கள். வாழ்த்துகள்!

நூலாசிரியரைப் பற்றி:

திருமதி. சௌந்தர நாயகி வைரவன் University of South Australia பல்கலைக்கழகத்தில், தகவல் மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். இதுவரை தமிழில் நான்கு புத்தகங்களையும், ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

‘Online Voice’ எனும் இணையதளப் பத்திரிகையையும் (http://www.onlinevoice.info) ‘Sing-Ind’ எனும் பத்திரிகையை (http://www.thesingind.com) எனும் இணையதளத்திலும் நடத்தி வருகிறார். இவர் ‘கலாமஞ்சரி’ தமிழிசைப் பரப்பு மன்றத்தின் நிறுவனரும் ஆவார். இவர் சிங்கப்பூர் குடியுரிமைவாசி.