தமிழ் மண்ணைவிட்டுச் சென்று அயல்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் என்றும் போற்றி வாழ்ந்து பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் - திருமதி. சௌந்திரநாயகியும், இவர் கணவரும். தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இவர்களைப் போன்றவர்களால், தமிழ் என்றும் வாழும். இந்நூலாசிரியை பன்முக ஆற்றல் கொண்டவர். மிகச் சிறப்பாக மேடையில் பாடக்கூடியவர்.
குடும்பப் பெண்கள் வீட்டின் கண்கள். ஒரு மெழுகுவர்த்தி பிறருக்கு வெளிச்சம் தருவதற்காக, தன்னையே உருக்கிக் கொள்வதைப்போல குடும்பப் பெண்களும், தன் குடும்பத்தின் நலனுக்காக தன்னை மாற்றிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்துபவர்கள். இத்தகைய சிறப்புக்குரிய பெண்கள் கோவிலில் வைத்துக் கும்பிட வேண்டியவர்கள் என்று நூலாசிரியர் குறிப்பிடு வதில் மிகையொன்றுமில்லை. மிகச் சரியானதே.
'எனது வீடு, எனது வாழ்வு' என்று மட்டும் வாழ்வது வாழ்க்கையல்ல. அறிவியல் வளர்ச்சி உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நாம் வீட்டிலிருந்தே உலக நடப்புகளை தினந்தோறும் நாளிதழ்கள், சான்றோர்கள், அறிஞர்கள் எழுதிய நல்ல நூல்கள் போன்றவற்றை வாசிப்பதன் மூலமும், பயனுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதன் மூலமும் நம் பொது அறிவை வளர்த்துக் கொண்டு நம்மை நாமே
மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். அப்படி நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளும்போது நம்மிடையே புத்துணர்வும், தன்னம்பிக்கையும் தோன்றும். நமக்காக மட்டும் வாழாமல் நம்முடைய சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும் என்ற நற்சிந்தனையும் ஆர்வமும் தோன்றும்.
வீடும் நாடும் முன்னேற, வளம் பெற, பல அரிய, புதுமையான கருத்துகளுடன் சிறப்பாக இந்நூலைப் படைத்துள்ள நூலாசிரியருக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிப்பகத்தார்
சிவம் இல்லையேல் சக்தி இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் உண்டு. ஒரு பெண் சரியாக இருந்தால்தான் குடும்பம் மேம்படும். இவற்றில் எது உங்களுக்கு சரி என்று படுகிறது? எனக்கு எல்லாமே சரி என்று தோன்றுகிறது!
இதற்குக் காரணம் குடும்பப் பெண் சத்தமில்லாமல் சாதனை புரிபவள்! ஒவ்வொரு பெண்ணும் என்றுமே குடும்பத்தை சரிவர நடத்தி அதில் வெற்றிகளைக் காண்பவர்கள்தான்.
பிரபல பேச்சாளர் திரு.சுகிசிவம் சொல்வதுபோல், ஒரு கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்துவது எளிது. ஆனால் ஒரு குடும்பத்தை நெளிவுசுளிவோடு, வளைந்துகொடுத்துப்போய் குடும்பம் நடத்துவது கடினம்.
இளம் பெண்களிடம் உங்களைக் கவர்ந்த பெண் யார்? என்று கேட்டால், ஏதோ ஒரு ஒலிபரப்புச் சாதனம் மூலம் அறிந்து கொண்ட 'மதர் தெரெஸா', 'ஜெயலலிதா' என்று சொல்வதை விடுத்து நம் அத்தை, பாட்டி, அம்மா என்று கையைக் காண்பித்தால் அது தகும்!
இந்தியாவையே ஆண்ட இந்திரா காந்தி, வீரவாள் எடுத்துப் போரில் ஜெயித்த ஜான்சி ராணி, பதக்கங்களை இந்தியாவிற்கு அள்ளிக்குவித்த தங்கமகள் பி.டி.உஷா இப்படிப்பட்டவர்கள்தான் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் என்பது அல்ல.
என்னைப் பொறுத்தவரை தம் குடும்பத்தை இந்தச் சமுதாயத்தின் ஓர் அங்கமாக ஆக்க தினமும் போராடிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் சாதனையாளர்களே! வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப்போல, ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை எத்தனை பிரச்சினைகள்? ஒரு நிர்வாகத்தை நடத்தும்பொழுது, எழுதிவைக்கப்பட்ட சட்டம் ஒன்று அதற்கு உண்டு. ஒரு நிர்வாகத்தோடு ஒருவருக்கு என்றுமே பிறப்பிலேயே ஏற்பட்ட ரத்த சம்பந்தம் கிடையாது. ஆக, அந்தக் கோணத்தில் நிர்வாகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதும் சுலபம்.
இப்படித் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னர் ஒரு நிறுவனத்தை நடத்தத் தகுந்தவர்கள் என்று அந்தப் பதவியில் அமர்த்தப் படுகிறார்கள். ஆனால் 'குடும்பப்பெண்' என்று பட்டம் வாங்கியிருக்கும் எண்ணற்ற பெண்கள் இதற்கான படிப்பை எந்தப் பள்ளிக்குச் சென்று படிக்கிறார்கள்?
ஆனால் அவர்கள் அழகாக குடும்பத்தை நிர்வாகம் செய்யும் அனுபவத்தில் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் எத்தனையோ? அந்த குடும்பப்பெண்ணுக்கு நுனிநாக்கில் ஆங்கிலம் பேசத் தெரியாது, மேடை ஏறி மணிக்கணக்கில் தத்துவம் பேசத் தெரியாது. அடுக்களையையும், குடும்பத்தையுமே வரையறுக்கப்பட்ட எல்லையாகக் கொண்டு, அதில் அவள் கற்றுக்கொண்ட பாடமெல்லாம் 'அனுசரித்துப் போ, அடக்கமாய் இரு, விட்டுக்கொடுத்துப் போ, துப்போடு வேலை செய், பாந்தமாய் இரு' என்பதுதான்.
ஆக, நிர்வாகம் செய்ய ஒரு பிரத்யேகப் படிப்பு படித்துத்தான் நிர்வாகிக்க வேண்டும் என்றில்லாமல், மேலே சொன்ன அடிப்படைப் பண்புகளையே முதலீடாகக்கொண்டு வெற்றிபெற்றுக் கொண்டிருப்பவர்கள் குடும்பப் பெண்கள். ஒரு மெழுகுவர்த்தி பிறருக்கு வெளிச்சம் தருவதற்காக, தன்னையே உருக்கிக் கொள்வதைப்போல குடும்பப் பெண்களும், தன் குடும்பத்தாரின் நலனுக்காக, தன்னையே மாற்றிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்துபவர்கள்தான். ஆக, என்றுமே குடும்பப் பெண்கள் கோவிலில் வைத்துக் கும்பிட வேண்டியவர்கள்தான்!
இப்படிப்பட்ட குடும்பப் பெண்கள், விஞ்ஞான வளர்ச்சி அதிகம் உள்ள இந்த காலத்தில், குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு, வீட்டில் இருந்தவாறே சாதனைப் புரிய அதிக வாய்ப்புகள் உண்டு. குடும்ப பெண்களாக, தம் குடும்பத்தை மேம்படுத்திய வர்கள் என்ற சிறப்போடு, இந்த சமுதாயம் சிறக்கவும் தம்மால் முடிந்தவற்றை செய்து மேலும் சிறப்படைய உள்ள வாய்ப்புகளைப் பற்றி அறிந்துக்கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.
இன்றைய தலைமுறையினர் கடல்கடந்து பல நாடுகளில் வாழ்கின்றனர். உள்நாட்டிலும், வெளிநாட்டுப் பொருளுக்குக் குறைவு ஒன்றும் இல்லை. விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு நாட்டின் பொருட்களை எளிதாக மற்றொரு நாட்டிற்குக் கொண்டு சேர்த்து விடுகிறது. காலமாற்றம் ஓரளவிற்கு மனமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பது, மக்களின் பொருட்கள் வாங்கும் எண்ணத்தில் பிரதிபலிக்கிறது!
அதன் விளைவு இன்றைய இளம் பெண்கள் இனம்புரியாமல் சாமான் வாங்கும் தன்மையை அதிகரித்துவிட்டிருப்பது என்பதும் உண்மை. முத்திரை பதித்த (Brand) என்று சொல்லப்படும் Hand Bag, செருப்பு, மூக்குக் கண்ணாடி மற்றும் வேறு அணிகலன்களைநாம் பயன்படுத்தினால், நாம் உயர்வான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்று அர்த்தமா? இல்லை, அதிக விலை கொடுத்து நாம் வாங்கும் அந்தப் பொருள்களுக்குத்தான் Resale Value (மறுவிற்பனை விலை) உண்டா?
முத்திரை பதித்த (Brand) பொருட்கள் மிக எளிதாகக் கிடைக்கிறது என்பதால் அதை வாங்கிவிட முடிகிறது.
ஆனால் அதை பயன்படுத்துவதாலேயே நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டதன் அறிகுறியாக ஒருவர் கணக்குவைத்து செயல்பட்டால், அது ஒரு பிற்போக்கான சிந்தனை; வருந்தத்தக்க ஒன்று.
அது ஒரு விதத்தில் நம் பொருளாதார முன்னேற்றத்தைக் குறிப்பதாக வேண்டுமானால் ஒரு குறியீடாகச் சொல்லலாம். ஆனால் நம் வாழ்க்கை முன்னேற்றப்பாதையில்தான் போய்க் கொண்டிருக்கின்றது என்று ஒருபொழுதும் சொல்லிவிட முடியாது. உண்மையில் பணத்தால் ஏற்படும் முன்னேற்றத்தைவிட மனத்தால் ஏற்படும் முன்னேற்றமே முன்னேற்றம்!
அது என்ன மனத்தால் ஏற்படும் முன்னேற்றம்? அதை எழுத்திலோ, பேச்சிலோ அல்லது ஒரு வகுப்பிற்கு சென்று கணிதம், கணினிபோல் கற்றுக்கொள்ள முடியாது. இது ஒருவர் தினம் தினம் வாழ்க்கையில் பலவற்றின் மூலம் கற்றுக்கொண்டு ஏற்படும் ஒரு வளர்ச்சி.
ஆக, இரண்டாண்டு, ஐந்தாண்டு என்று ஒரு கால நிர்ணயித்தால் வருவது அல்ல. பல சோதனைக்கு மனிதன் தன்னை உட்படுத்தி, பலவற்றிலும் அடிபட்டு ஏற்படும் ஒரு வளர்ச்சிதான் இந்த 'மனத்தால் ஏற்படும் முன்னேற்றம்.'
Do not get carried away just by looking at the cover of the book என்பது ஒரு நல்ல பழமொழி. அப்படி ஒருவர் வைத்திருக்கும்/உபயோகப்படுத்தும் பொருளை, உடுத்தும் உடையை வைத்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து விட்டனர் என்று கருதுவதும் தவறு.
ஒருவர் வாழ்க்கையில் மனதளவில் முன்னேற நாம் இருக்கும் ஊரோ/நாடோ, பணமோ, படிப்போ, பதவியோ எதுவுமே ஒரு தூண்டுகோலோ, அல்லது தடையோ அல்ல. அது இவை அனைத் திற்கும் அப்பாற்பட்டது.
அந்தக் காலத்தில் பெண்கள் சேர்த்த சாமான் வகைகளுக்கு இன்று பல காரணங்களால், அது தேவையா? பாதுகாப்பது சாத்தியமா? என்று பரவலாக ஒரு நியாயமான போக்கும், கேள்வியும் நிலவி வருவது நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. அந்தக் கட்டாயமும் இப்பொழுது ஏற்பட்டு விட்டது.
இப்படி ஒரு சூழலில், என்றுமே விலைமதிப்புள்ள சாமான்களே தேவையா? என்று யோசிக்கும் வேளையில் ஒரு காசும் மதிப்பில்லாத வீணாடம்பரத்திற்கு இன்றைய பெண்கள் மதிப்புக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது, இதுதான் 'இரண்டும் கெட்டான் நிலையோ?' என்று சிந்திக்க வைக்கிறது.
பணத்தால் ஏற்படும் முன்னேற்றத்திற்குத் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளும் பெண்கள் மனத்தால் ஏற்படும் முன்னேற்றத்திற்கும் மதிப்புக் கொடுக்க தங்கள் எண்ணங்களைச் சிறிது மாற்றவேண்டும்.
அது பற்றி அடுத்த சில கட்டுரைகள் விளக்கும்.
நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது மிக அவசியம். அப்படி நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ளும்போது நம்மிடையே ஒரு புத்துணர்வும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.
இப்பொழுது மாணவ/மாணவிகள் பெறும் மதிப்பெண்கள் நம்மை அசரவைக்கிறது. வாழ்க்கையின் பொருளாதார மேம்பாட்டிற்காக பாடப்புத்தகத்தில் புதைந்து மதிப்பெண் எனும் புதையலை எடுப்பது மிக அவசியம்தான். அது ஒருபுறம் இருக்க, தன்னைச் சுற்றி நடப்பவற்றில் கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றே.
இது மாணவர்களுக்கு மட்டுமல்ல, இளம் பெண்களுக்கும் தான்.
விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்தக் காலத்தில் வீட்டிலிருந்து நாம் உலகில் நடப்பவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
மேம்போக்காக நாளிதழைப் புரட்டுவதாலோ, கணினியில் ஆனந்த விகடன், குமுதத்தைத் திறந்து, சினிமா செய்தியைப் பார்ப்பதாலோ, உலகத்தில் நடப்பவற்றை அறிந்துகொண்டு விட்டதாக அர்த்தம் கொண்டால் அது தவறு. தொலைக்காட்சியில் போகிற போக்கில் இரண்டு செய்தியைக் காதில் போட்டுக் கொண்டுவிட்டு, நாட்டில் நடப்பவற்றை நான் தெரிந்துகொண்டேன் என்று சொல்வதும் தவறு.
நம் வீட்டு வேலை/அலுவலக வேலை/சொந்த வேலை, சொந்தபந்தம் -இவற்றிற்கு இடையே நாட்டில் நிலவும் சூழலை அறியவும், நம்மைச் சுற்றி நடப்பதை அறிந்து கொள்ளவும் விழையுங்கள்.
'எனது வீடு, எனது வாழ்வு' என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா? தேசம் வேறல்ல, தாயும் வேறல்ல ஒன்றுதான். கடுகு போல் உன் மனம் இருக்கக்கூடாது. கடலைப்போல் விரிந்து இருக்கட்டும்' என்று 'அழகன்' படத்தில் வரும் இந்த வரிகளைப் பலமுறை உங்கள் மனங்களில் பதியவையுங்கள். உங்கள் தினசரி வாழ்க்கையில் நாட்டில் நடப்பதை அறிந்து கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அதற்கு ஒரு நாளில் ஒரு மணிநேரம் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தினசரி வாசிப்பதற்கு செலவிடுங்கள். ஒருமணிநேரம் சான்றோர்கள், அறிஞர்கள் நாட்டு நடப்பைப்பற்றி எழுதுவதை வாசிப்பதற்கும் நேரத்தைச் செலவிடுங்கள்.
அப்படி வாசிக்கும்பொழுது உங்கள் மனதை அதில் செலுத்துங்கள். அப்படி வாசித்த பின்னர் இந்த உலக மேம்பாட்டில் உங்களின் பங்கு என்ன? என்று யோசியுங்கள். உங்களின் சிறு பங்களிப்பை எப்படி நீங்கள் உங்கள் வாழ்வில் செலுத்தலாம் அதற்கான வழி என்ன? என்று சிந்தியுங்கள். உங்களின் திறமை என்ன? உங்களால் முடிந்தது என்ன? எவ்வளவு நேரம் பொது வாழ்க்கையில் ஈடுபட தங்களால் முடியும் என்று யோசியுங்கள். இப்படி நீங்கள் செய்ய விழையும்போது, தங்களிடமே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். உலக மேம்பாட்டில் தாங்களும் தங்கள் பங்கைச் செலுத்த முடியும் என்ற உற்சாகம் பிறக்கும். மனத்தால் ஏற்படும் முன்னேற்றம் அடைய இதுவே முதல்படி.
இதைத் தொடருங்கள். உங்கள் மனநிலையில் முன்னேற்றத்தை நீங்களே வெகு விரைவில் உணருவீர்கள்.
நம் அனைவருக்கும் முகத்தில் உள்ள கண், நெற்றி, புருவம், மூக்கு, வாய் இவை எந்த எந்தெந்த இடத்தில் இருக்க வேண்டுமோ, அந்த அந்த இடத்தில்தான் இருக்கிறது. யாராவது ஒருவருக்காவது மூக்கும், வாயும் இடம் மாறியிருக்கிறதா? இருக்கவே முடியாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளம், சாயல் வேண்டுமானால் ஒரே மாதிரி இருக்குமே தவிர, அச்சு அசலாக, இருவர் ஒரேமாதிரி இருப்பதே இல்லை.
அதேபோல்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், குணாதிசயங்களும்.
முக அமைப்பு ஒரே மாதிரி இருப்பினும் - ஒவ்வொருவரும் பெறும் விமரிசனங்கள் - எத்தனை எத்தனை? நல்ல திருத்தம்; மூக்கும் முழியுமாய் இருக்கிறாள்; ரொம்ப சமத்துவம்; லட்சணமேஇல்லை; அஷ்டலட்சணமும் பொருந்தி இருக்கிறது; ரொம்ப அழகுன்னு சொல்ல முடியாது, இருந்தாலும் பார்க்க எடுப்பாய் இருப்பாள் - இன்னும் இதில் விடுபட்டவை எத்தனையோ?
ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், ஒரே மாதிரிதான். 3 வயதாகும் பொழுது பாலர்பள்ளி, 5 வயதில் தொடக்கப் பள்ளி, 13 வயதில் உயர்நிலைப் பள்ளி, பின்னர் கல்லூரிப் படிப்பு, பின்னர் வேலை அல்லது திருமணம், பின்னர் கணவன், குழந்தை என்று நமக்கென்று பொறுப்புகள். ஆக, அனைவருக்கும் இதுதான் வரையறுக்கப்பட்ட வாழ்க்கைப் பாதை! இதில் யாரோ ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு.
அதேபோல் யாருக்கு என்ன குணமாக இருப்பினும், இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்று ஏதோ ஒரு விதத்தில் தங்கள் பங்கை இந்த உலகில் அனைவரும் செலுத்தி வருபவர்களே!
இருப்பினும், சிலர் மாமனிதர்களாக அனைவராலும் போற்றப்படுகிறார்கள்; சிலர் ஏதோ ஒரு விதத்தில் சாதனை புரிந்தவர்கள் எனக் கருதப்படுகிறார்கள்.
எத்தனையோ பேர் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து விடுகின்றனர்.
அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் வெற்றி வாகை சூடுவதற்கும், அடுத்தவர்கள் பயன்பெற ஏதாவது செய்வதற்கும், அடுத்தவர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கும் விரும்புபவர்களே
ஆனால் ஏன் அனைவராலும் அடுத்தவர் விரும்பும்/போற்றும் மனிதர்களாக வாழ முடியவில்லை? இதற்கு யார் காரணம்? வாழ்வில் வெற்றி பெற, நாம் காரணமா? அடுத்தவர் காரணமா? வாழ்க்கையில் முன்னேற நமக்கு வாய்க்கப்பெற்ற ஏதோ சரி இல்லை என்று சொல்பவர்கள்தான் அனேகம் பேர்.
ஆனால் அது முற்றிலும் தவறு.
நம் வாழ்க்கை நம் கையில்தான். நம் வாழ்க்கையை ஒரு பொழுதும் மற்றவர்கள் தீர்மானிப்பது கிடையாது. விழிப்புணர்வோடு, நம் திறமை, நாம் வாழும் சூழல், நம் தகுதி அறிந்து நாம் செயல்பட்டால், நம் வாழ்க்கை ஒருபொழுதும் மற்றவர் கையில் சிக்க வாய்ப்பே இல்லை!
நாம்தான் விதைக்கின்றோம், அதை நாம்தான் பின்னர் அறுவடை செய்கின்றோம். ஆக, நம் வாழ்க்கை நம் கையில். நம் வாழ்க்கைக்குப் பொறுப்பு நாம்தான். ஒருபொழுதும் பிறர் அல்ல என்பதைத் தெளிவாக மனதில் பதியவையுங்கள்.
'நாம் செய்த பாவம்; முன் ஜென்ம வினை; நம் மூதாதையர் து செய்த பாவம், அது இப்பொழுது தொடர்கிறது; கிரகம் சரி இல்லை; நம் ஜாதக பலன் ' இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இல்லாமல் இல்லை. இதை மறுக்கவும் முடியாது. இருப்பினும் இந்த சர்ச்சை மிகவும் ஆழமான ஒன்று. இந்த ஆழமான கடலுக்குள் சென்று அலசி ஆராய்வது மிகக் கடினம். எனவே, இதை ஒருபுறம் வைத்துவிடுவோம்.
வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமென்றால், ஒரு சராசரி மனிதனிடம் இருந்து மாறுபட வேண்டுமென்றால், முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்?
அதற்கு முதல் படி, நம் மனதை விசாலமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் 'Target' (இலக்கு) என்று ஒன்று வைத்து செயல்படுவோம் அல்லவா? அந்த 'Target' மிகப் பெரிய ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக, நம் சித்தி மகளோ, பெரியப்பா மகளோ, அடுத்த வீட்டில் வாழ்பவர்களுடனோ, நம்மை ஒப்பிட்டு அதன்படி செயல்பட்டால், நாமும் ஒரு சராசரி மனிதனாகத் தான் செயல்பட முடியும். இதற்கு மாறாக வாழ்க்கையில் சாதனை புரிந்த மாமனிதர்கள் யாரையாவது, மனதில் வைத்து அவர்கள் எப்படி அந்த இடத்திற்கு வந்தார்கள் என்று பார்த்து, அப்படி ஒரு பெரிய "Target'-ஐ அடைய வேண்டும் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்யும்பொழுது உங்கள் எண்ணம் மட்டுமல்ல, செயலும் விசாலமடையும். உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவு செயல்பட முற்படுங்கள். உங்கள் தகுதிக்கு மீறிச் சென்று வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்வதும் மிக முக்கியம்.
மனிதனுக்கு அவனை அறியாமலேயே அவனிடம் உள்ள சக்தி மிக அதிகம். இப்படி ஒரு 'Target'-ஐ பெரிதாக நாமே வைக்கும்பொழுது, நம்மிடம் நமக்குத் தெரியாமலே மறைந்திருக்கும் சக்தி ஆசையாக மாறி நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
நாம் நமக்கு எது உகந்த துறை என்று தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோமோ, அந்தத் துறையில் ஒவ்வொரு வருடமும் ஒரு படியைக் கடக்க வேண்டும் என்று மனதில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தடை இல்லாமல் வாழ்க்கை இல்லை. எந்தத் தடை வந்தாலும், அதை எப்படியாவது செய்து முடிக்கவேண்டும் என்று முனைப்போடு செயல்படுங்கள்.
பொதுவாக, யாருக்காகவும் எதையுமே யாராலும் எளிதாக விட்டுக்கொடுக்க முடியாது. சாதாரணமாக இருவரிடைய ஏற்படும் உப்புசப்பற்ற வாக்குவாதத்தில்கூட 'நாம் சொன்னதே சரி!' என்று நிரூபிக்க முடிந்தவரை மனம் பாடுபடும்.
இரண்டு சேலையில் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டுமானால் கூட, சேலையின் நிறம், தரம், அதன் தன்மை என பலவற்றைப் பார்த்து நமக்குக் கிடைத்தது சரிதானா? என மனம் பலமுறை யோசிக்கும்.
இப்படி ஒவ்வொரு நாளும் நடக்கும் சின்னச் சின்ன செயல்களிலிருந்து சொத்துகளைப் பங்கிட்டுக் கொள்வதுவரை எளிதாக யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க முடியாது!
ஆனால் எதையாவது யாருக்காகவாவது, எளிதாக நம்மால் உடனே விட்டுக்கொடுக்க முடியுமென்றால் அது நாம் பெற்ற பிள்ளைகளுக்காக மட்டும்தான் சாத்தியம். நம் பெற்றோர்களுக்குக் கூட நாம் எதையும் விட்டுக்கொடுக்க நினைப்பது குறைவுதான். ஆனால் நம் பிள்ளைகளுக்காக மட்டுமே நம் வேலை, விருப்பு, வெறுப்பு, வாழ்க்கை முறை என ஆரம்பித்து, தன்மானம் வரை எதை வேண்டுமானாலும் உடனே விட்டுக்கொடுக்கத் தயாராகி விடுவோம்.
பிள்ளை பள்ளியில் இருந்து வர ஒரு அரைமணி நேரம் தாமதமானால் மனம் பதறும்! விளையாடப்போன பிள்ளை சற்று சுணங்கினால் மனம் சஞ்சலமடையும்.
இப்படி நம் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத இடத்தைப் பிடிக்கும் பிள்ளையை (ஆண்பிள்ளையை) கூடப்பிறந்தவர்களுக்கு பிள்ளை இல்லை என்றால், நம் பிள்ளையை அவர்களுக்கு தத்துக் கொடுக்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. என் பிள்ளையை உங்களிடமே விட்டுவிடுகிறேன். அவனை நான் இனி சொந்தம் கொண்டாட மாட்டேன். இவன் இனி உங்களுடைய குழந்தை, இவன் இன்பம், துன்பம் இரண்டுமே உங்கள் கையில், இவன் இனி உங்களுடைய சொத்து என்று 'மிகப்பெரிய மனதோடு' எந்த ஒரு விலையும் மதிக்க முடியாத அந்தப் பிள்ளையை 'பிள்ளை விட்டுவிடும்' தாராளமான மிகப்பெரிய மனதிற்கு சொந்தக்காரர்கள் ஆகவும் சில நேரம் பெண்கள் ஆவதும் உண்டு.
ஒருமுறை என் தோழி என்னிடம் சொன்னாள், நாம் நன்றாக யோசித்துப் பார்த்தால், ஒரு பெண் தாயான மறு கணத்திலிருந்துஅவளுக்கு ஒருநாள்கூட ஓய்வு என்பதே இல்லை. வார இறுதி நாள், இன்று விடுப்பு என்று அவளுக்குக் கிடையாது. இரவு/பகல் என எந்நேரம் வேண்டுமானாலும் குழந்தை அழ அவளுக்கு 24 மணிநேரமும் 'on call/ on duty'யில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்! ஆக, அவள் தனக்கு என எதையும் வகுத்துக் கொள்ளாமல், குழந்தையை ஒட்டி தன் வாழ்க்கையை வரையறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும், சூழலும் ஏற்பட்டு விடுகிறது. நடைமுறையில் அதுதான் உண்மை.
அதனால்தான் ஒரு ஞானி சொல்கிறார், ஒரு ஆண்மகன் துறவறம் பூண்டால்கூட, தன் தந்தையை வணங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் என்றுமே தன் தாயின் பாதங்களை வணங்க வேண்டும். தாய் இறந்துவிட்டால் அச்சமயம் துறவறத்தைத் துறந்து, தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்வது அவசியம் என்று கூறுகிறார்.
இப்படி ஒரு பெண் இதிகாசம், வரலாறு என அன்றுமுதல் இன்றுவரை போற்றப்படுவதற்குக் காரணம் அவளை அறியாமலேயே அவளிடம் உள்ள சக்திதான்! இது ஒருபுறம் இருக்க, கூடப்பிறந்தவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது .இதற்கு என்ன காரணம்? உறவு முறிந்த குடும்பங்களையெல்லாம் அணுக்கமாக யோசித்தால் பாகப்பிரிவினை ஒரு காரணமாக இருக்குமென்றால், பெண்களுக்கு இடையே ஏற்படும்
உப்புசப்பற்ற காரணங்களால் உறவு முறிந்த கதை மறுகாரணமாக இருக்கும்!
'விட்டுக்கொடுத்து விட்டால் - உறவு முறிஞ்சுபோச்சு' என்ற வாக்கியத்திற்கு இடம் எங்கே இருக்கும். விட்டுக்கொடுத்துப் போங்க என்று சொல்வதும், மேடையில் பேசுவதும், இதைப்பற்றி எழுதுவதும் காலம் காலமாக நடந்து வருவதுதான்.
பெற்ற பிள்ளையை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் நமக்கு சின்ன சின்ன விஷயங்களை விட்டுகொடுக்க மனம் வராததும் காலம் காலமாக நடந்துவருவதும் உள்ளதுதான்!
மிக எளிதாக சிலவற்றை நம் மனதில் பதியவைத்தால் நம்மை அறியாமலேயே நாம் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்து மனநிம்மதியைத் தேடியவர்களின் பட்டியலில் இடம்பெற்று விடுவோம்; உறவுகளை கட்டிக்காத்த உன்னதர்கள் ஆகிவிடுவோம்.
நம் உறவினர்கள் நம்மை மதிக்காமல் செய்கிறார்களோ என்று நம்மிடையே ஒரு எண்ணம் உதயமாகும்போது நிச்சயமாக நம்மை மதிக்காமல் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை; அவர்களுடைய இந்த நடவடிக்கைக்கு ஏதோ நம்மிடம் சொல்ல முடியாத காரணம் இருக்கலாம். நாம் இதை கண்டுகொள்ளாமல், பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டால், சூழ்நிலை மாறும்பொழுது அது சரியாகிவிடும் என்று மனதை சமாதானப்படுத்துங்கள். சரிதான் என்று அதை அப்படியே விட்டுவிடும்பொழுது, நம் மனம் அதை விரைவில் மறந்துவிடும். உறவில் விரிசல் ஏற்படாது. நம் உறவுமுறைப் பெண்கள் கடைக்குப் போனதை என்னிடம் சொல்லவில்லை, விசேஷ வீட்டில் என்னிடம் பேசாமல், மற்றவர்களிடமெல்லாம் பேசினாள்; மகளுக்கு செய்த நகையைஎன்னிடம் காண்பிக்கவில்லை; அவள் வாங்கியதை அவளுக்குக் கொடுத்ததை என்னிடம் காண்பிக்கவில்லை. இப்படிப்பட்ட பல காரணங்கள் (உப்புசப்பில்லாத) தான் சிறு சிறு மனவிரிசலில் ஆரம்பித்து 'நீ செய்தாயல்லவா, அதற்கு பதில் நான் செய்வேன்' என்று விட்டுக்கொடுக்கும் தன்மை நம்மிடம் குறைந்து கடைசியில் உறவு முறிந்துபோகும் அளவிற்கு வந்துவிடுகிறது.
நன்றாக யோசித்துப் பார்த்தால் 'இதெல்லாம் ஒரு matter-ஆ'; நம் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடக் கூடியவையா? ஒன்றுமே இல்லையே!
'ஏதோ அவர்களுக்கு அந்த நேரத்தில், அவர்களின் மனநிலை... அப்படிச் செய்து விட்டார்கள்... நாம் இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என்று Easy going வழியை பின்பற்றினால் இந்தச் சிறு விஷயங்கள் சிறு விஷயங்களாகவே மறைந்துபோகும். மேலும், பூதக்கண்ணாடியோடு, சிறுவிஷயங்களைப் பார்த்தால் அது பெரிதாகத் தெரியும். Positive thinking உடன் பிரச்சினையை அணுகினால் - அது காணாமல்போகும்.
பிள்ளைக்காக எதையுமே விட்டுக்கொடுக்க முடியும். பெற்றெடுத்த பிள்ளையையே பிறருக்கு விட்டுக்கொடுக்க முடியமென்ற ஆற்றல் படைத்த பெண்களால், சிறு விஷயங்களைப் பொறுக்க முடியாமல் உறவு முறிந்துபோவது என்பது வருத்தத்திற்குரியது.
'நம் பலத்தை உணருங்கள் -விட்டுக்கொடுங்கள் - உறவுகள் மேம்படும்!'
பெண்கள் வீட்டின் கண்கள்; நம் இன்றைய தலைமுறையினர் இந்த வாக்கியத்திற்கு பங்கம் விளைவித்து விடவில்லை. நம் பாரம்பரியமிக்க தமிழ்ச் சமுதாயத்தின் தற்போதைய போக்கு சமுதாயத்தை சிறிதளவு ஆட்டம் காணவைக்கிறது என்பதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என்று அக்காலத்து பெண்கள், தன் கணவனுடன் மனமுறிவு வந்தாலும் கடைசி வரை அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது 'மணமுறிவு' என்ற சொல் அதிகம் கேட்கப்படுகிறது.
இருப்பினும் மணமுறிவு என்பது சிறிதளவில் ஆங்காங்கே தான் நடைபெறுகிறது. எதையுமே முளையிலேயே கிள்ளிவிடவேண்டும். முளையில் கிள்ளி எறியப்படாத ஒன்று விரைவாகப் பரவுவதற்கு வாய்ப்பு மிக அதிகம்.
மணமுறிவு எந்த அடிப்படையில் நடக்கிறது. ஆண்மகனோ, பெண்மகளோ வாழத் தகுதி இழக்கும் காரணத்தினால்தான் அதிகமான மணமுறிவுகள் நடைபெறுகின்றன. ஒப்புக்கொள்ள முடியாத காரணத்திற்காக ஏற்படும் மணமுறிவு ஒரு சிலவே.
எழுதுவதிலும், பேசுவதிலும் இதைத் தடுத்துவிடலாம் என்றால் நாம் அதைச் செய்யலாம். ஆனால் இந்த இரண்டு தளங்களும் தூண்டுதலாக அமையப்பெறலாமே தவிர, தீர்வு காணக்கூடிய தளங்கள் அல்ல.
பெரும்பாலான திருமணங்கள் வெற்றிப்பாதையில் தான் போய்க்கொண்டிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் ஆத்ம திருப்தியுடன், 'குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக எத்தனை பேர் தங்கள் குடும்பப் பாதையில் செல்கின்றனர்?
'விதை விதைத்து, மரங்கள் வளர்ந்து தோட்டம் செழிக்க வேண்டும். 'அன்பை' விதைத்து, ஆலமரம்போல் குடும்பங்கள் தழைத்து வளரவேண்டும்.
நல்ல அன்போடு, விட்டுக்கொடுத்து, நல்ல எடுத்துக்காட்டாக வாழும் குடும்பம் எங்களுடையது என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்? நமக்கும், நம் குடும்பத்தினருடைய விருப்பு வெறுப்பிற்கும் கொடுக்கும் மதிப்பைவிட சமூகத்திற்காக நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் தன்மைதானே அதிகம்!
முற்போக்கு சிந்தனையுடைய இளைஞர்கள் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் வழிமுறைகளுக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் இடையே ஏற்படும் உரசலை புரிந்துகொள்ள வழி தெரியாமல் சிலர் மணமுறிவிற்காக துணிந்து விடுவதும் ஒரு காரணம்.
ஒரு குடும்பம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் கணவன் - மனைவியிடையேயும், குடும்பத்தார் அனைவரிடமும் பரஸ்பர அன்பு என்பது மிக முக்கியம். அக்காலத்துப் பெண்கள் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள் இருந்து குடும்பத்தை நடத்துவதில் சாதனை புரிந்து வருபவர்கள் என்றால், இக்காலத்தில் பெண்கள் படித்து, பட்டம் பெற்று, வேலைக்குச் சென்று பணம் ஈட்டும் நிலைக்கு வளர்ந்திருக்கின்றனர். தன் சொந்தக் காலில் நின்று தன் வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை.
அதற்காக படித்த பெண்கள், சம்பாதிக்கும் எண்ணத்தால், உடனே விவாகரத்து செய்துவிடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு தவறு.
ஆணுக்குப் பெண் அடிமை என்று இருந்தது ஒரு காலம். ஆனால் இந்தக் காலத்தில் அதே மனப்பான்மையோடு பெண்களை அணுகினால், 'அடிமை நாங்கள் இல்லை' என்று எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சிறிதும் யோசிக்காமல் சொல்லி விடுகின்றனர்.
ஆணுக்கு உள்ள உரிமை ஆணுக்கு என்றால் பெண்ணுக்கு உள்ள உரிமை பெண்ணுக்கு என்ற எண்ணத்தில் செயல்படும் காலம் இது! ஆக, பெண்களுக்கு உள்ள மரியாதையைகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்களிடம் மட்டுமல்ல, குடும்பத்தாரிடமும் வளரவேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் உரசல் சர்வசாதாரணமாக ஆரம்பமாகும்.
நான்கு பேரைப் பார்த்து ஒவ்வொரு நாள்பொழுதும் செல்லும் பொழுது நான்கையும் பெண்கள் கற்றுக் கொள்கின்றனர். பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வரும் பெண்கள் நல்லவற்றை உள்வாங்கிச் செயல்படுத்தவும், கெட்டவற்றை விட்டுத் தள்ளவும் இயற்கையிலேயே கற்றுக்கொள்வர். எனவே, குடும்பத்தில் பெண்கள் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லவந்தால் 'திமிரு' என்று ஒதுக்கித் தள்ளாமல் அவர்கள் எண்ணத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
தம் மனைவி/மருமகளை அடக்கி வைக்காவிட்டால், அவர்கள் நம் கைமீறிப் போய்விடுவார்கள் என்று ஆண்கள் நினைத்து, அந்த எண்ணத்தில் காயை நகர்த்தினால் அங்கும் ஒரு பூகம்பம் வெடிக்க ஆரம்பிக்கும். மனைவி/மருமகள் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களுக்கு அவர்களது வாழ்க்கை முக்கியம். மன நிம்மதி முக்கியம். குடும்பத்திற்கு அடங்காமல் போய் அவர்கள் சாதிக்க நினைப்பது என்னவாக இருக்க முடியும்? அவர்கள் கைமீறிப் போய் சாதிக்கப்போவது ஒன்றும் இல்லை.
ஆக, மரியாதை, அன்பு, நம்பிக்கை இவற்றை மறக்காமல் குடும்பத்தினரிடையே பரஸ்பரமாகப் பகிர்ந்தாக வேண்டும். ஒரு சாம்பாருக்கு முக்கியம் எது? உப்பா? புளியா? சாம்பார்தூளா? என்றால் எதை விட்டுக்கொடுக்க முடியும்? ஒரு சாம்பாருக்கே அந்தந்த அளவிற்குத் தேவையானவற்றை சரியாக சேர்க்கவேண்டுமானால் குடும்பம் செழித்து வளர சிலவற்றை சரியான அளவில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றல் அது மிகையாகாது.
விஞ்ஞான வளர்ச்சி உலகத்தை வெகுவாக மாற்றியிருக்கிறது. ஆனால் மனிதனின் மனம் சுருங்கிவிட்டதால் சீரழிவு ஏற்படுவதை தடுத்தாக வேண்டும்! மனித மனம் விஞ்ஞான வளர்ச்சிபோல் வளர மரியாதை, அன்பு, நம்பிக்கை இவற்றை மூலப்பொருளாகக் கொண்டு மனதை ஆரோக்கியமாக வைத்தால், சமூகத்திற்காக பெருமைப்படுவதை விடுத்து மனநிம்மதியோடு, குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக வாழமுடியும்.
குடும்பத்தை வளைந்துகொடுத்துப்போய் சாதனை படைக்கும் அக்காலத்துப் பெண்களைப்போலவே, இக்காலத்துப் பெண்களும் வீட்டிலும், வெளியிலும் சாதனை புரிவார்கள்! இப்படி ஒரு சூழல் வளர்ந்தால், மணமுறிவு என்கிற வார்த்தைக்கு நம் சமுதாயத்தில் அர்த்தம் இல்லாமல் போகும்!
இக்காலத்தில், பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்கு நிகராகப் பெண்பிள்ளைகளை வளர்க்கின்றனர். மிக்க மகிழ்ச்சி. எகிறும் தங்கவிலை, மிரட்டும் சீதனம், இருப்பினும் பல லட்சங்கள் செலவழித்து பெண்குழந்தைகளை மேல்படிப்பு படிக்கவைப்பதற்கு பெற்றோரின் மனநிலை தயார். இதுவும் நல்ல செய்தியே! அடுப்படியும், குடும்பமுமே பெண்களின் வரையறுக்கப்பட்ட எல்லையாக இருந்த காலம் இனி இல்லை. நாட்டு எல்லையை விட்டுப் பறக்கவே பெண்கள் தயாராகிவிட்ட காலம் இது. ஆக இக்காலத்துப் பெண்கள் நல்ல படிப்புப் படிக்கின்றனர்.
நாட்டில் நிலவும் பொருளியல் கொள்கை, நல்ல இளைஞர்களுக்கு வேலை செய்யவும், பொருள் ஈட்டவும் பல வழிகளில் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிற காலம். மேலும்,நாட்டில் நடப்பவற்றை படம்பிடித்துக் காட்ட 24 மணி நேர தொலைக்காட்சி வேறு!
இக்காலத்துப் பெண்கள் அதற்கு ஈடுகொடுக்கின்றனர். இதுவும் வரவேற்கத்தக்கதே. ஆக, நாட்டிற்கு நல்ல செய்தி. ஆனால் வீட்டிற்கு எவ்வளவு தூரம் நல்ல செய்தியாக உள்ளது?
அந்தக் காலத்தில் பெண்களுக்கு திருமணம் செய்தால் மறுவருடம் பேரனா? பேத்தியா? என்று கேட்டனர். ஆனால் இன்றோ இந்த வருடம் திருமணம்; மறுவருடம் பேரன்/பேத்தி அல்லது விவாகரத்தா? என்ற நிலை. இது எவ்வளவு ஒரு வேதனையான விஷயம்.
ஒரு குழந்தையை மேல்படிப்புப் படிக்கவைத்து பட்டதாரியாக்குவதற்கு பெற்றோர் கொஞ்சமா சிரமப்படுகின்றனர்? காலையில் ஒரு வகுப்பு, மாலையில் இரண்டு வகுப்பு: வார இறுதியில் நண்பர்கள் வீட்டிற்கு Project Work செய்வதற்கு அழைத்துச் செல்ல வேண்டும்; அசுர வளர்ச்சி அடையும் கணினியில் நம் குழந்தையின் கவனத்தை ஈர்த்தது எது என்று தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
3 வயது வரை குழந்தைக்கு ஊட்டிவளர்த்தால் அது நியாயம். ஆனால் இன்றோ, குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை நாம் நம் குழந்தை சாப்பிட்டுவிட்டார்களா? அல்லது பாடப்புத்தகத்தில் புதைந்துவிட்டார்களா? என்று பார்க்க வேண்டிய நிலை. இதோடு நின்றுவிட்டதா? வைரம், வெள்ளி, தங்கம் என்று அனைத்து உலோகங்களும் குழந்தைகளின் திருமணத்திற்கு சேர்த்தாக வேண்டும்.
இப்படி நாம் ஆளாக்கும் பெண்குழந்தைகள் நாட்டிற்கு ஏற்ற சூழலில் இருப்பதுபோல வீட்டிற்கும் ஏற்ற குத்துவிளக்காக வளர்க்க நாம் அவசியம் முற்பட வேண்டும்.
பெண்கள் கட்டிசமத்திகள். கட்டிசமத்திகள் பெற்ற கட்டித் தங்கங்கள் என்றும் கட்டித்தங்கங்களாக மாசு குறையாமல் வாழ என் பார்வையில் இதோ சில யோசனைகள்:
'அவன் அசையாமல் அணுவும் அசையாது' - கடவுள் மீது நம்பிக்கை - தன்னம்பிக்கை. மனிதனின் உழைப்பும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றுசேரும்போது, மனிதன் வெற்றியடைகிறான். கடவுள் கையை நீட்டி அழைக்கிறார். அதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது மனிதனின் கடமை. அவர் கையைப் பிடித்துக்கொண்டு ஏறுபவர்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஏற மறுப்பவர்களை இருக்கும் இடத்திலேயே விட்டுவிடுகிறார்....
'எந்த ஒரு மனிதன் மற்றவர்களையும் மனிதர்களாக நினைக்கின்றானோ அவனே மனிதன்.' குறையும் நிறையும் கலந்தவர்களே மனிதர்கள். மனிதர்களைக் குறைநிறையோடு ஏற்றுக்கொள்ளக் காற்றுக் கொள்ளுங்கள். 'நிறையப் புத்தகங்களை வாசியுங்கள் - மனிதர்களை அல்ல. மற்றவர்களின் கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.
பணம் வாழ்க்கைக்குத் தேவை. வாழ்க்கையே பணம் அல்ல. மனிதனின் பணத்தைப் பார்க்காது மனத்தைப் பாருங்கள். பணம் மட்டும் ஒரு மனிதனின் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுகோல் அல்ல. பணத்தை ஈட்டும் வேளையில் பாசத்தை விலைபேசி விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
சிரிப்பு
ஒரு பெண்ணுக்கு அவசியம் புன்னகை. பொன்னகை அல்ல. மனிதனின் முகத்தில் ஒரு முக்கியமான அணிகலன் புன்னகை. விலைமதிக்க முடியாத புன்னகை - விலையே இல்லாமல் கிடைக்கக் கூடியது. சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் அடுத்தவரை நேசிக்கிறோம் என்று வலிமையாக, ஆனால் எளிமையாகச் சுட்டிக் காண்பிக்கக் கூடியது 'புன்னகையே!'
வாழ்க்கை
வாழ்க்கை வாழ்பவர்களுக்கே. மாற்றம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கை அல்ல! கரடுமுரடான பாதையைத் தாண்டிப் பல திருப்பங்களைச் சந்தித்து நாம் எங்குச் செல்ல நினைக்கிறோமோ, அங்கே நம் வாழ்க்கை நம்மை இட்டுச் செல்கிறது. நம் எண்ணம்போல் நம் வாழ்க்கை அமைகிறது. சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன், வாழும் வரை வாழ்க்கை.
வெற்றி
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று வெறி உடையவர்களுக்கே வெற்றி வந்து சேர்கிறது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். தன்னம்பிக்கையோடு முயன்றால், வெற்றி நிச்சயம்! ஒருவனுடைய வெற்றியும், தோல்வியும் அவனுடைய முயற்சியாலேயே, அடுத்தவர்கள் எவ்விதத்திலும் காரணம் அல்ல. தேவையானவற்றுக்கு மீண்டும் மனக்கதவைத் திறந்து நேர்வழி சென்றால், அது வெற்றிநடையே!
தோல்வி
தோல்வியே வெற்றிக்கு முதல்படி! வாழ்க்கையில் தவறி விழுவது வாழ்க்கையில் ஒரு விளைவே தவிர அது முடிவு அல்ல. தோல்விக்குப்பின் உதிக்கும் ஒரு சிந்தனை, வெற்றியை அள்ளித் தெளிக்கவல்லது. வாழ்க்கையில் தவறி விழவே கூடாது என்பதல்ல. விழும்போதெல்லாம் எழுந்து வெற்றிநடை போட வேண்டும் என்பதை நம் மனதில்கொள்ள வேண்டும்.
பயம்
பயம் என்பதே ஒரு பேய். பயம் நம் தன்னம்பிக்கையை அழித்துவிடும். பயம் என்ற பேய் நம்மை பிடித்துக்கொண்டால் நாம் ஒரு நடைப்பிணம். நாம் தெளிவாக இருந்தால், பயம் நம்மை அணுகாது.
நம் வாழ்க்கையில் எதை நோக்கி நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம்? பணம், வசதியான வாழ்க்கை - இவற்றிற்காகவா? அல்லது மனநிம்மதிக்காகவா? இப்படி ஒரு கேள்விக்கு பதில் கிடைப்பது மிகக் கடினம். பணமும் வேண்டும், மனநிம்மதியும் வேண்டும். பணம் சம்பாதிக்கவும், மனநிம்மதியைத் தேடியும் சரியான பாதை எது என்று தீர யோசித்து, நம்மை நாமே பல சோதனைக்குள் உள்ளாக்கி ஒரு பாதையைக் கண்டுபிடித்து அதில் பயணிக்கிறோம். சரியாக வகுக்கப்பட்ட பாதையில் நடக்கும்பொழுது, ஒரு கட்டத்தில் பணம் சம்பாதித்துவிட முடிகிறது. அதைத் தொடர்ந்து வரும் வசதியான வாழ்க்கையும் பெற்றுவிட முடிகிறது. அப்படி இருக்கும்பொழுது மனநிம்மதி தானாக வந்துவிட வேண்டும்அல்லவா? ஆனால் 'I am very happy', எனக்கு என்ன குறை என்று யாராலும் சொல்ல முடியவில்லை. 'குறையொன்றும் இல்லை. மறைமூர்த்தி கண்ணா' என்று சொல்லுமளவுக்கு சகல சௌகரியங்களும் - அதாவது அனைத்தையும் பெற்று மனநிம்மதியோடு வாழ்வது ஒரு சிலருக்கு மட்டுமே முடியும்.
வாழ்க்கையில் ஏற்றம் - இறக்கம்; இன்பம் - துன்பம் இவை இரண்டறக் கலந்து இருப்பதுதான் இயற்கை. இருப்பினும் எல்லாரையும்போல ஒரே மாதிரியான வாழ்க்கை வாழும் சராசரி மனிதனாக இருப்பதற்கு பதில் அனைவரது மனதையும் கவரும் ஒரு அற்புத மனிதராக வாழ்ந்தால் எப்படி இருக்கும்? பணத்தால் வரும் சந்தோஷத்தைவிட, அடுத்தவர் மனதைக் கவர்ந்து பிறரின் அன்பிற்கு நாம் பாத்திரமாகும்பொழுது கிடைக்கும் மனநிம்மதி மிகப் பெரிது. அப்படி ஒரு மனநிம்மதியைத் தேட இதோ சில யோசனைகள்:
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பெறும் திருமணங்கள், இருமனம், ஒருமனமாகாமல் பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது. "தாலி பெருகிவிட்டதே ' என்பர் நம் பெண்கள். ஆனால் இளம்பெண்கள் இன்று சின்ன சின்ன கஷ்டங்களைக்கூட தாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கட்டிய தாலிக்கு அர்த்தம் என்ன? என்கிறார்கள். திருமணமாகப்போகும் இளம் பெண்கள் சிலவற்றை தெளிவாக தங்கள் மனங்களில் பதித்துக்கொண்டால், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் உண்மையை உணர்வர். இதோ அதற்கான சில யோசனைகள்:
'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.' இவை தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான, பழக்கப்பட்ட மிகவும் விருப்பமான சொற்றொடர். பதினாறு பேறுகளைப் பெற்று ஒருவர் வாழ்ந்தால் தான் அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பது தமிழர்களின் பொதுவான நம்பிக்கை. அழகு, அன்பு, பொறுமை, அடக்கம், கல்விச்செல்வம், சந்தான செல்வம் என வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது இந்தப் பதினாறு பேறு.
என்னைப் பொறுத்தவரை ஒருவருக்குக் கிடைக்கப்பெறும் செல்வங்களுள் சந்தான செல்வம் - அதாவது குழந்தைச் செல்வமே தலையாய செல்வம்; கிடைப்பதற்கரிய செல்வம். அந்தக் காலத்தில் ஒரு தம்பதியினர் பத்துக் குழந்தைகளை பெற்றுக் கொள்வது மிகவும் சாதாரணம்.
ஆலமரம் போல குடும்பங்கள் தழைத்துவளர்ந்தன. ஒருவருக்கு அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா, சித்தப்பா, மாமா என்று சொல்லிக்கொள்ள அத்தனை சொந்தங்களும் இருந்தன.
ஆனால் இன்று ஒருவருக்கு பத்துக் குழந்தைகள் என்றால் 40 வயதை ஒட்டிய தம்பதியினருக்கு பத்தாவது குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால், அதுதான் அடுத்த நாள் அனைத்து பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக இருக்கும்! விஞ்ஞான வளர்ச்சி உலகத்தை மட்டும் சுருக்கிவிடவில்லை. குடும்பங்களையும் சேர்த்துத்தான் சுருக்கிவிட்டிருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு தற்பொழுது சராசரியாக இரண்டு குழந்தைகள் தான்! ஆக, தற்பொழுது ஒருவருக்கு தன் சொந்த சித்தி, மாமா, பெரியம்மா, அத்தை என்று ஒருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. மற்ற உறவுமுறைகள் எல்லாம், தூரத்து உறவுகளோ அல்லது - ஒன்றுவிட்ட உறவுகளோதான்.
அந்தக் காலத்தில் சொந்தங்கள் அனைத்தும் ஒரே வீட்டில் * கூட்டுக் குடும்பமாகவோ அல்லது கூப்பிடும் தூரத்திலோ வசித்து வந்தனர். ஆக, குடும்பங்கள் அடிக்கடி ஒன்றுகூடி மகிழ்ந்தன. ஒரு பக்கத்துக் கடைக்கு செல்ல வேண்டுமானால் கூட ஒன்றாக குழந்தைகளை சேர்த்து, கைகோர்த்து கடைக்குச் செல்வர். கடலைமிட்டாய் வாங்கினால்கூட அதை 'காக்கா கடி கடித்து கொடுத்து கடலைமிட்டாயை மட்டுமல்லாது, தன் அன்பையும் -பங்கிட்டுக் கொள்வர்.
பெரிய வீடுகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் சேர்த்து அடுக்களையில் பெரியவர்கள் சோறு பொங்கும்பொழுது, இங்குகுழந்தைகள் ஒன்றுசேர்ந்து
'கூட்டாஞ்சோறு' பொங்கி, பகிர்ந்து உண்ண வேண்டும் எனும் பழக்கத்தை கற்றுக்கொள்வர்.
நான், என் தம்பி, என் அக்கா எனும் சுயநலத்தை விடுத்து அனைவருடனும் ஒன்றுகூடி பெருந்தன்மையோடும், விட்டுக் கொடுக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொள்வர்; பத்துப்பேர் கூடி விளையாடும்பொழுது, ஒருவருக்கு ஒன்று கிடைக்கும். மற்றவருக்கு அது கிடைக்காமல் போகலாம். சரிதான் என்று தன் மனதை தானே சமாதானம் செய்துகொள்ளும் இயல்பும் வருவது இயற்கை.
இப்படி குழந்தைகள் தாமாகவே பல குழந்தைகளுடன் சேர்ந்து அரிய பல பண்புகளை கற்றுக்கொண்டனர். இன்று நகரங்களில் திரும்பிய இடமெல்லாம் தென்படும் 'Self Development Courses' போன்ற வகுப்புகளுக்கு அன்று தேவையில்லாமல் இருந்தது.
கூட்டுக் குடும்பங்கள் மாறி இன்று தனிக்குடித்தனம். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை எப்படி சுருங்கி விட்டதோ அதேபோல குழந்தைகளின் பழக்க வழக்கங்களும் சுருங்கி விடுகின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையே.காலத்திற்கு ஏற்ப ஒருவர் தம்மை தயார்ப்படுத்திக் கொள்வது மிக அவசியம்.
ஆக, அந்தக்காலம்போல இப்பொழுதும் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துதான் நற்பண்புகளை கற்றுகொள்ள வேண்டும் என்பது கிடையாது. அது சாத்தியமும் இல்லை. அந்தக் காலத்தில் பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லவில்லை. இன்று பெரும்பாலானபெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். குழந்தைகள் அனைத்தையும் கற்று திறமையானவர்களாக வாழவேண்டும்; நற்பண்புகள் நிறைந்த சிறந்த குடிமகனாக திகழவேண்டும் என்பதில் இந்தக் காலத்து பெற்றோர் முனைப்போடு செயல்படுகின்றனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கணினிமயமாகி வரும் இந்தக் காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டி, குடும்பத்தையும் நிர்வகிக்கும் பெரிய பொறுப்பை வகிக்கின்றனர். விமானப் போக்குவரத்து பயணிக்கும் நேரத்தை சுருக்கி குடும்பங்களை வெவ்வேறு நாடுகளில் இன்று குடியமர்த்தியுள்ளது. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று மக்கள் தங்கள் குடும்பங்களுடன் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பெரியோர்களுடன் குழந்தைகள் சேர்ந்து வளர்வதும் குறைந்து வருகிறது. ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பெரியவர்களாக, பெற்றோர்களாக, நண்பர்களாக அனைத்துமாகி அவர்களிடம் நற்பண்புகளை புகட்ட வேண்டிய சூழல் இன்று நிலவுகிறது.
குழந்தைகள் உறவுக்காரர்களுடன் சேர்ந்து நாளுக்கு நாள் தாமாக கற்றுக்கொண்டவற்றை பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக இன்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. விஞ்ஞானம் அதிகம் வளர்ச்சியடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் அதிகம் சிந்திக்கும் திறன் பெற்றுள்ளனர்.
பெற்றோர்களுக்கு அறிமுகம் இல்லாத, தெரியாதவற்றைக் கூட குழந்தைகள் அறிந்து வைத்திருக்கும் சூழல் இன்று நிலவுகிறது. அடித்துத் திருத்தாமல் அணைத்துத் திருத்தினால் மட்டுமே பெற்றோர், நல்ல நண்பர்களாக இருக்கமுடியும். குழந்தைகளைத் தன் வழியில் கொண்டுவர முடியும். 'நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும்' என்கிற அதிகாரப் பேச்சுகள் மலையேறிவிட்டன.
வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு தற்பொழுது குழந்தைகளுடன் செலவிடும் நேரமும் மிகக் குறைவு. ஆக, இன்றைய பெற்றோர் ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாகவும், ஆற்றலுடனும் செய்து குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. வேகமாக வளரும் இந்த உலகத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் செய்பவற்றை பழமையுடன் புதுமையாகச் செய்வது இன்றியமையாதது.
'இன்றைய சூழலில் பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை எப்படிச் செலவிட வேண்டும்? புதுமையாக ஒவ்வொன்றையும் செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் முறையை எப்படிப் பின்பற்ற வேண்டும்' என்பவற்றைப் பற்றிப் பார்ப்போம். பழமையுடன் புதுமையையும் குழந்தைகளிடம் கொண்டுசெல்ல வருகிற சில கட்டுரைகள் பதில் சொல்லும்.
ஒரு குழந்தை எவ்வாறு தம் மொழியைத் தானே கற்றுக் கொள்கிறதோ, தன் தாயை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறதோ, அதைப்போல தன் பெற்றோர் என்ன செய்கின்றார்களோ, அதை மிகவும் இயற்கையாகவே உள்வாங்கிக் கொள்கின்றனர். குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பது, குடும்பம், பள்ளி மற்றும் சமுதாயம். 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பது ஒரு பிரபலமான பழமொழி. ஐந்து வயதிற்குள் மனதில் படிவது மிக எளிதாக, பச்சைமர ஆணி போல் குழந்தைகள் மனதில் படிந்துவிடுகிறது.
ஆக, பெற்றோரைப் பார்த்து குழந்தை கற்றுக்கொள்வது முதல்படி. நம்மையறியாமலே நாம் செய்பவற்றை குழந்தை கற்றுக்கொள்வதை நாம் ஒருபோதும் அறிவதில்லை. நாம் பலவருடம், பல சந்தர்ப்பங்களில் கற்றுக்கொண்டவற்றை எதுவுமே அறியாத குழந்தையிடம் உடனேயே எதிர்பார்ப்பது, பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. நாம் சொல்லிக்கொடுத்த உடனேயே குழந்தை கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று நினைப்பது நம்முடைய அறியாமை.
அது என்னவென்றே தெரியாத குழந்தை நாம் புதிதாக ஒன்றை சொல்லிக்கொடுக்க நினைக்கும்பொழுது, அதை ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள முயல்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று ஆவலாக யோசிக்கின்றது. சொன்னவுடனேயே, குழந்தை கற்றுக்கொள்ளாவிட்டால், நாம் ஆத்திரம் அடைந்து குழந்தைகளை அடித்துவிடுகிறோம்.
அப்படி நடக்கும்பொழுது நாம் கற்றுகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் குறைந்து, ஒருவிதமான பயம் உண்டாகிறது. நாம் சமாதானமாகி மீண்டும் கற்றுக்கொடுக்க முயலும்பொழுது, குழந்தை முறுக்கிக்கொண்டு மீண்டும் நம்மிடம் கற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மீது ஒருவித வெறுப்பு மட்டும் ஏற்படாது, அது என்ன என்று நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்கிற ஏமாற்றமும் குழந்தைகளிடம் உண்டாகிறது. எனவே, பெற்றோர் குழந்தையின் ஆர்வத்தை அறிந்து, அவர்கள் கற்றுக்கொண்டு விடுவர் என்று நம்பினால் நமக்கும் அலுப்பில்லை, குழந்தையின் கற்கும் திறமும் ஆர்வமும் மேலும் வளரும்.
ஆக, குழந்தைகளிடம் மிகத் தேவை பொறுமை. குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோரின் செயலாலே; தன்மையுடன் அவர்களை வளர்ப்பதும் பெற்றோரின் கைகளிலே. பொதுவாக நான்கு பேருக்கு நடுவில் நம் குழந்தை சொல்லும் கதையையோ, பாட்டையோ, 'என் பொண்ணு ரொம்ப நல்லாபாடுவா தெரியுமா? செல்லம், ஆண்டி, அங்கிளுக்கு பாடிக் காட்டு' என்று சொல்ல, அப்பொழுதுதான் குழந்தை வாயை கையில் வைத்துக்கொண்டு கூனிக்கொண்டு, 'நான் மாட்டேன்... ம்... ஹ்ம்...' என்று அடம்பிடிக்கும்.
எப்படியாவது நம் குழந்தை பாடிக் காண்பித்துவிட வேண்டும்; 'அடடா உங்க குழந்தை பிரமாதமா பாடுறா! ஒரு எதிர்கால பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவாகியாச்சு!' என்று அவர்கள் சொல்ல,நாம் அதைக் கேட்டுவிட வேண்டும் என்று பெற்றோர் ஒரு கணக்குப் போட, அங்கு நடப்பதோ வேறு.
நம் குழந்தைக்குக் கொடுக்கும் மரியாதையைவிட நம் சந்தோஷத்திற்கும், நான்கு பேருக்கு நடுவே நம் கௌரவத்திற்கும் நாம் கொடுக்கும் மதிப்பே, உண்மையில் சொல்ல வேண்டுமானால், அதிகம். வந்தவர்கள் சென்றவுடன் ஏதோ நடந்துவிடக்கூடாத ஒன்று நடந்துவிட்டது போல நாம் நம் தலையெழுத்தை நினைத்து, அலுத்துக்கொண்டு நொந்து நூலாகி குழந்தையை திட்டும்பொழுது பாதிக்கப்படுவது நம் குழந்தையின் தன்னம்பிக்கை! இப்படிச் செய்யும்பொழுது குழந்தை நாம் ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல் உணரலாம்.
ஆக, யாராவது வீட்டிற்கு வந்தால், அவர்களைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற ஆவல் குறைந்து, தன் அறைக்குள்ளேயே அடைந்துகொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம். எனவே, குழந்தையின் மனதைப் புரிந்து, எது தேவை, எது தேவையில்லை என்பதை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டியது இன்றியமையாத ஒன்று.
இதற்கு மாறாக சில பெற்றோர் வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் 'என் குழந்தை நாலும் தெரிந்த வல்லவன்' என்ற தொனியில் குழந்தைக்குத் தெரிந்தவற்றைப் பாடவோ, பேசவோ சொல்ல, குழந்தை தன் வயதுக்கு மீறிப் பேசும். அப்பொழுது உள்ளூர ரசித்துக்கொண்டு, சும்மா ஒரு பேச்சுக்கு ஏய் அப்படி யெல்லாம் பேசக்கூடாது என்று செல்லமாக திட்டிவிட்டு விடுவதும்-தவறு.
அடித்துத் திருத்தாமல், குழந்தைகளை அழைத்து அமைதியாகப் பேசினால், கதைகளையோ அல்லது உண்மைச் சம்பவங்களையோ எடுத்துக்கூறி திருத்தினால், அறிவுரை கூறினால், 'இன்றைய குழந்தைகள், நாளைய தலைவர்கள்' என்ற வாக்கியம் உண்மையாகும்.
"விதை விதைத்தவன் விதை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்' என்பது பழமொழி. நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்ய முடியும்? நம் குழந்தைகளிடம் நாம் 'மரியாதை' என்ற அடிப்படையில் சில நற்பண்புகளை விதைத்தால், பிற்காலத்தில் நமக்கு மட்டும் அல்லாது நாட்டிற்கே நல்ல குடிமகன்களாக நாம் அவர்களை உருவாக்கலாம். இந்த நற்பண்புகளை அவர்களிடம் கொண்டு வருவதற்கு நமக்கு அதிக நேரம் பிடிக்காது; அதிகம் செலவாகாது; கடின உழைப்பு தேவைப்படாது; மிகவும் எளிமையானது. இதோ உங்கள் பார்வைக்குச் சில:
இன்று குழந்தைகளின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடும் பழக்கம் நம்மிடையே நிலவுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையே! ஆனால் வருடா வருடம் ஒரே மாதிரி, கேக் வெட்டி, மிட்டாய் கொடுத்து, கோவிலுக்குச் சென்று கொண்டாடுவதில் என்ன சுவாரஸ்யம்? எதையுமே அர்த்தமுள்ளதாக ஆக்க நாம் ஏன் விழையக் கூடாது?
எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும், அர்த்தமுள்ளதாகவும் உங்கள் குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாட இதோ சில யோசனைகள்:
தற்பொழுது ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்றாகிவிட்டது. பெற்றோர் இருவருக்கும் வேலை, தனிக்குடித்தனம். மிகுதியான நேரத்தில் கணினி, தொலைக்காட்சி, கைத்தொலைபேசியில் வரும் விளையாட்டுகள் இவையே குழந்தைகளின் உற்ற நண்பர்களாகிவிட்ட ஒரு சூழல். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளிடம் எவ்வாறு குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து, பகிர்ந்து, மகிழ்ந்து வாழவேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் இன்றியமையாத கடமையாகிவிட்டது.
பொதுவாக வீட்டிற்கு வருபவர்களை 'வாங்க' என்று சொல்வதற்கும், 'என்ன சாப்பிடுறீங்கன்னு கேள்' என்று கேட்பதற்கும், ஆண்டி, அங்கிள் பார்த்து பதில் சொல்லு என்று குழந்தைகளிடம் சொல்லி அவர்களை பழக்கப்படுத்த பொதுவாகஎந்தப் பெற்றோரும் தவறுவதில்லை. இந்த அடிப்படைப் பண்புகளைத் தாண்டி குழந்தைகளிடம் இளம் வயதிலேயே, அன்பெனும் விதையை பெற்றோர் விதைக்க வேண்டும். அதன் முதல்படியாக கூடப்பிறந்தவர்களுடன் பாசமாக இருக்கவும், வளர்ந்துவரும்பொழுது போட்டி, பொறாமைகளை தவிர்க்கவும், 'பிறக்கும்பொழுது அண்ணன், தம்பி, பத்து வயதில் பங்காளி' என்கிற வாக்கியத்தைப் பொய்யாக்கவும், பெற்றோர்கள் சிலவற்றை எளிமையாகப் பின்பற்றுவது மிக மிக நல்லது.
விட்டுக்கொடுக்கும் பழக்கம், ஒருவரை ஒருவர் மதிக்கும் பழக்கம், பாராட்டும் பழக்கம் இவை நம் கூடப்பிறந்தவர்களிடத்தில் ஒருவருக்கு முதலில் வரவேண்டும். பொதுவாக இரண்டாவது குழந்தை பிறக்கும்பொழுது அதிக சந்தோஷம் அடைவதும், அதேசமயம் அதிக பொறாமைப்படுவதும் முதல் குழந்தையே.
அந்தக் குழந்தையின் சந்தோஷத்தை வளர்த்து தம்பி/தங்கையிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதும், அல்லது அந்தக் குழந்தைகளிடம் வளரும் பொறாமையைக் களைய எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் விட்டுவிடுவதும் பெற்றோர்களின் கைகளிலேயேதான் உள்ளது. பின்வரும் இவ்வழிகளை பின்பற்றுவதன் மூலம் நம் குழந்தைகளிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதும், அவர்களிடம் ஒருவரையொருவர் மதிக்கும் தன்மையை உண்டுபண்ணுவதும் பெற்றோருக்கு சாத்தியம். இப்படிச் செய்வதன் மூலம் அந்தக் குழந்தைகளிடம் தாம் மூத்த குழந்தை என்பதும், நம் தம்பி தங்கைகளை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியும் ஏற்படும்.
அந்தக் காலத்தில் சடுகுடு ஆடுவது, துள்ளிதிரிந்து மான் போல குதித்தாடி விளையாடுவது என்ற சூழல் மாறி கணினி, கைத்தொலைபேசியில் விளையாட்டுகளை விளையாடுவது என்று தொழில்நுட்பத்தின் ஆட்சியில் ஒருவர் வாழும் காலம் இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் குடும்பப் பெண்கள் தங்களது பொழுதையெல்லாம் தொலைத்து விடுகின்றனர். என்பது பரவலான ஒரு கருத்து. ஆனால் குழந்தைகளும் தங்கள் பள்ளிக்கூடம், படிப்பு தவிர தங்கள் பொழுதையெல்லாம் கணினியிலும், தொலைபேசியிலும் தொலைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
தற்பொழுது குழந்தைகள் மனம்விட்டு வீட்டிற்கு வரும் உறவுக்காரர்களுடன் உரையாடுவது குறைந்துகொண்டே வருகிறது.உறவுக்காரர்கள் வீட்டிற்குச் செல்வது, அனைவருடனும் அமர்ந்து கலகலப்பாகப் பேசுவது, எண்ணங்களை பகிர்ந்துகொள்வது போன்ற பழக்கவழக்கங்களும் குறைந்துகொண்டே வருகின்றன . குழந்தைகளிடம் குறைந்துவரும் மற்றொமொரு பழக்கம் தானாக விரும்பி புத்தகம் வாசிப்பது.
இன்றைய சூழலில் பள்ளிகளில் பல புத்தகங்களை வாசித்து, அன்வழி பரீட்சையில் கேள்விகளுக்கு பதில் அளித்து, மதிப்பெண் X பெறும் சூழல் உள்ளது. அதற்குத் தேவையானவற்றை 'Online Search' செய்தும், சில புத்தகங்களை எடுத்து அந்தப் பாடத்திற்குத் தேவையானவற்றை மட்டும் படிக்கும் பழக்கமும் நிலவுகிறது.
ஆக, நாட்டு நடப்பைப் பற்றியும் வாழ்க்கைக்குத் தேவையான வற்றையும் குழந்தைகள் விரும்பிப் படிப்பது மிக அவசியம். மேற்கூறிய குறைகளைத் தவிர்க்கவும், சமூகத்தில் நல்ல குடிமகன்களாக திகழவும் பலவிதமான புத்தகங்களையும் விரும்பி வாசிப்பது மிக முக்கியம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோர்களின் கடமை. குழந்தைகள் அவர்களாக விரும்பிப் புத்தகம் வாசிக்க பெற்றோர் வழிசெய்ய வேண்டும். விரும்பி தானாகச் செய்யாமல், திணிக்கப்படும் எதுவும் நீண்ட நாட்கள் பழக்கங்களாக மாறுவது மிகக் கடினம். எனவே, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த இதோ சிறு எளிய வழிகள்:
நல்ல திரைப்படம்; நல்ல இசை; பாட்டு; அழகான ஓவியம்; நளினமான நடனம்; குலுங்க குலுங்க சிரிக்கவைக்கும் நகைச்சுவை - இன்னும் எத்தனை, எத்தனையோ நம்மைச் சுற்றி இருக்கின்றன!
ஒரு கோவிலுக்குச் சென்றால், பிள்ளையாரைக் கொட்டிக் கொண்டோம், அர்ச்சனை செய்தோம், பேசாமல் சாமியைக் கும்பிடு என்று பிள்ளைகளிடம் சொன்னோம், வந்தவர்களைப் பார்த்து மரியாதை நிமித்தமாக தலையசைத்தோம் என்று இல்லாமல், அங்கு சுவாமிக்கு செய்திருக்கும் அலங்காரங்களையும், எத்தனை வண்ணங்களில் அழகான பூக்களைக்கொண்டு அலங்காரம்செய்திருக்கின்றனர், சுவாமிக்கு அழகாக மடிசாரோடு கட்டியிருக்கும் சேலை, இப்படி ஒவ்வொன்றையும் ரசியுங்கள்.
கோவில்களில் செய்திருக்கும் நுணுக்கமான சிற்பங்களைப் பற்றி குழந்தைகளிடம் விளக்குங்கள். விஞ்ஞான வளர்ச்சி, போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் கலையுணர்வோடு செதுக்கப்பட்டிருக்கும் சிற்பிகளின் அபூர்வத் திறனை விளக்குங்கள். அந்தக் காலகட்டத்தில் ஆண்ட மன்னர்கள், வரலாறையும், புராணங்களையும் ஆயிரமாயிரமாண்டு நிலைத்து நிற்குமளவிற்கு செதுக்கியிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதையை அறிய முற்படுங்கள். அவற்றைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
மேலும், இப்படி நேரம், பணம், திறமையை அற்புதமாக அவர்கள் சிற்பங்கள் வழியாக வெளியிட அவர்களிடம் உதித்த அந்த சிந்தனையைப் பாராட்ட குழந்தைகளிடம் கற்றுக்கொடுங்கள்.
அதேபோல் நல்ல சினிமாவில் அந்த இயக்குநர் உருவாக்கியிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி குழந்தைகளுடன் சேர்ந்து ரசித்துப் பாருங்கள்.
ஒரு இசைகருவியைப் பார்த்தால் மனதை மயக்கும் எண்ணற்ற ஆயிரக்கணக்கான கீதங்களை அது உள்ளடக்கியிருக்கும் தன்மையைப் பார்த்து அதிசயுங்கள்.
இப்பொழுது எல்லா நாடு/ஊர்களிலும் எண்ணற்ற வகையில் கலைக்கூடங்கள் இருக்கின்றன. கலையை விரும்பும்குழந்தைகளுக்கு ஏதோ ஒரு கலையைக் கற்றுக் கொடுங்கள். நடனம், பாட்டு, ஓவியம் அனைத்திலும் தெய்வீகம் நிறைந்திருக்கிறது.
இப்படி ஒரு கலையை நாம் கற்றுக்கொள்ளும் பொழுது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
பல்லாண்டுகளாக உள்ள இந்த தெய்வீகக் கலைகள் குழந்தைகளிடம் புத்துணர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும்.
இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாவதால், இப்படிப்பட்ட கலைகள் நல்ல ஒரு மாறுதலை ஏற்படுத்தவும். அவர்களின் மனச்சுமையை எளிதாகவும் ஆக்கமுடியும்.
இந்தக் கலைகள் அவர்களிடம் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக்கும்.
நல்ல கலைஞனாவது ஆண்டவன் கையில். ஆனால் நல்ல ரசிகனாக இருப்பது, நம் கையில்தான்.
ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதனின் உறுப்புகளுள் நம் இஷ்டத்துக்கு ஒருவரால் கூட்டவோ, குறைக்கவோ முடியும் என்றால் அது ஒன்றே ஒன்று - 'நம் தலைமுடி.' நன்றி செலுத்தும் விதமாக நம் உடம்பில் இருந்து கடவுளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அதுவும் 'தலைமுடி'தான்.
'எனக்கு வயதாகி விட்டது' என்று நாம் சொல்லாமலே நம்மை மாட்டிவிடுவதும், வெள்ளையாகிவரும் நம் தலைமுடி தான். அப்படி நரைத்தாலும், நினைத்தால் உன் சொல்லுக்கும், செயலுக்கும் நான் அடக்கம் என்று மிகுந்த தன்னடக்கத்துடன் நம் டை, மருதாணிக்குக் கட்டுப்பட்டு திரும்ப கறுப்பு நிறத்திற்கே மாற்றிக்கொள்ளும் தன்மைகொண்டதும் நம் 'தலைமுடி'தான்.
நீ வேண்டாம் என்று நாம் எவ்வளவு வெட்டித் தூக்கி எறிந்தாலும், நன்றி விசுவாசத்தோடு மீண்டும், வட்டியோடு சேர்த்து நம் தலையில் வளர்வதும் 'தலைமுடி'தான்.
இப்படிப்பட்ட முடியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவும், பராமரிக்கவும் இதோ சில குறிப்புகளும், எளிதான யோசனைகளும்:
நகை பெண்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த ஒன்று. வைரம், தங்கம் முதலியவற்றை வாங்குவதோடு தற்பொழுது நவரத்தினக் கற்கள் கொண்ட நகைகளையும் பெண்கள் விரும்பி வாங்குகிறார்கள். அணிந்தும் கொள்கிறார்கள். எகிறும் தங்க விலையும் நாட்டில் நிலவும் திருட்டு பயமும் பெண்களை One gram gold, 18kg விலை குறைந்த முத்து, பவள நகைகள் என அவர்கள் கவனத்தை அதன் பக்கம் சற்று திசைதிருப்பியும் வைத்திருக்கிறது.
எது எப்படியோ இந்தக் காலத்துப் பெண்கள் தங்கம், வைரம், Silver dipped in gold (வெள்ளி நகையில் தங்கம் நனைத்தது) என்று விதவிதமான நகைகள் அவர்களை அழகுபடுத்திக் கொண்டிருக் கின்றன
நகைகளை எப்படிப் பாதுகாப்பது? எப்படி அணிந்து கொள்வது? இதோ சில தகவல்கள்:
ஆள் பாதி, ஆடை பாதி. அழகாகப் பிறப்பது நம் கையில் இல்லை. ஆனால், அழகாகத் தோற்றமளிக்க பொருத்தமான உடை உடுத்திக் கொண்டால், அழகாகத் தோற்றமளிக்க நம்மால் முடியும். அதற்குச் சில யோசனைகள்: